'நிழல், அம்மா' கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் செயல்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும் கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்த ஒன்றைச் சுட்டும் நம்பிக்கையும் தென்படும் கவிதைகள் என்றும் வகை பிரிக்கலாம். முதல் வகைக் கவிதைகள் ஓசை ஒழுங்கும் சந்தமும் கொண்டதாகவும், இரண்டாம் வகைக் கவிதைகளில் உரைநடையின் தீவிர நெடியையும் உணர்கிறேன். ஓசை ஒழுங்கும் சந்தமும் எனக்கு முன்னர் பரிச்சயமில்லாதவை, என் இயல்புக்குள் மிகச் சமீபத்தில் இணைந்தவை என்பதால் எனக்கு முதல் வகைக் கவிதைகளின் மேல் சார்பும் கனிவும் உள்ளது. பற்றுக்கோடாக மாறியிருக்கும் தொடர்ந்து கேட்கும் இசை காரணமாக இருக்கலாம். தெளிவு, அறிதல், விடுதலை ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கும் உரைநடைக் கவிதைகளில் இருக்கும் கலங்காத தன்மை மிகவும் தற்செயலானது; அது அநித்யமானது; அரிதானது. அதனால் அதை ஒருபோதும் நம்பவேண்டாம் என்று வாசகர்களிடமும் என்னிடமும் சொல்லி தெளிவுபடுத்திக் கொள்வதே பொறுப்பும் பொறுப்புத