Sunday, 26 May 2013

நகுலனின் தனித்திணை- அய்யப்ப பணிக்கர்

தமிழில்: ஷங்கர்

(சினிமா இயக்குநர் மற்றும் நண்பருமான தி.ஜா.பாண்டியராஜன் நகுலன் குறித்து எடுத்த விரைவில் வெளிவர இருக்கும் ‘நினைவுப்பாதையில் மஞ்சள் பூனை ஆவணப்படத்தில், நகுலனின் ஆளுமை மற்றும் படைப்புகள் குறித்து மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கர் ஆங்கிலத்தில் பேசியது. நகுலனின் எழுத்துக்கள் பற்றி அவர் பேசிய சூழல் இப்போதும் மாறவில்லை என்ற நிலையில்...)

திரு.டி.கே.துரைசாமி, எனக்கு 45 ஆண்டுகளாக நண்பர். நான் அவரை முதலில் சந்தித்தபோது நகுலன் என்ற பெயரில் அறியப்படவில்லை. அவர் முதலில் ஆங்கிலத்தில்தான் அதிகமாக எழுதி வந்தார். மும்பையிலிருந்து வெளிவந்த இதழ் அது என்று நினைக்கிறேன். தாட் என்ற இதழில் அவர் தொடர்ந்து கவிதைகளை எழுதிவந்தார். அவரது ஆங்கில எழுத்துக்களை பிற இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பெரிதாகப் பொருட்படுத்தாதது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அப்போதே அவரது ஆங்கில எழுத்துகள் குறித்து பார்த்தசாரதி போன்றவர்களுடன் பேசியுள்ளேன். ஆனால் அதற்கு போதிய கவனம் கிடைக்கவில்லை. அவரது ஆங்கிலக் கவிதைகள் இப்போது தொகுக்கப்பட்டு புத்தகவடிவில் வந்தால் அதைப் புதிய வெளிச்சத்தில் வாசிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம்.
பிறகு அவர் தமிழில் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர் அவருக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைத்ததென்று கருதுகிறேன். அவர் இப்போது தமிழில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
நான் அவரை 1960 இல் முதல்முறையாகச் சந்தித்தேன். குருக்ஷேத்திரம் என்னும் நெடுங்கவிதை வெளியான பிறகு அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். கோட்டயத்திலிருந்து வந்த பத்திரிக்கை ஒன்றில் அது வெளியாகியிருந்தது. அந்தக் கவிதையை மொழிபெயர்க்க விரும்புவதாக கூறினார். நான் உடனடியாக சம்மதித்தேன். அந்தக் கவிதை அப்போது மலையாளத்தில் கூட பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்குப் பிறகு அவர்தான் குருக்ஷேத்திரத்தை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார். தற்போதும் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பு தான், பிற ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதற்கு ஆதாரமாகப் பயன்படுகிறது. இப்படியாக அவர் எனக்கு சிறந்த நண்பராகவும், நல்ல புரிதல் உணர்வு கொண்ட மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.

அவரது கவிதைகளை எழுத்து பத்திரிக்கை பிரசுரிக்கத் தொடங்கியபோது, நாங்கள் 50களிலும்,60களின் ஆரம்பத்திலும் எழுதத் தொடங்கியிருந்த கவிதை வடிவத்திற்கு ஒருவகை ஏற்பு உருவாகத் தொடங்கியது. அவரது கவிதைகள் என் மீதும் எனது எழுத்துகள் மீதும் வலுவான தாக்கம் செலுத்தியிருக்கின்றன. அவர் நிச்சயமாக ஆங்கிலத்திலும் ஏற்பையும், அங்கீகாரத்தையும் மெதுவாகவாவது பெற்றிருக்க வேண்டும். பெங்குயின் புக் ஆப் இந்தியன் பொயட்ரி இன் இங்கிலீஷ் போயம்ஸ் என்ற நூலை அதின் ஜஸ்வால் தொகுத்தபோது நகுலன் மொழிபெயர்த்த ஷண்முக சுப்பையாவின் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் நகுலனின் கவிதைக்கு இடம் கிடைக்கவில்லை.  இப்படியாக ஆங்கில உலகில் ஒருவகை அநீதி அவரது கவிதைகளை மதிப்பிடுவதில் நடந்தது. அவரது கவிதைகள் முதலில் வெளியானபோது நம்மால் மதிப்பிட முடியவில்லை. வாசகர்களால் தாமதமாக வாசிக்கப்பட்டு காலம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சிறந்த உதாரணம் நகுலன். அவர் அந்த தடைகளைக் கடந்தார்.

நான் அவரது தமிழ்க் கவிதைகளை 1960களின் ஆரம்பத்திலேயே கேட்டுள்ளேன். நகுலனின் குரல் தனித்துவமானது.  
 ஒரு அந்தரங்கமான, வாக்குமூலத்தன்மை வாய்ந்த கவிதைகள் அவருடையது. அவரது அந்தரங்க உலகம் சார்ந்து இருக்கும். அப்படியான ஒரு உலகம் அப்போது இந்திய ஆங்கில எழுத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திருவனந்தபுரம் இந்திய ஆங்கில எழுத்துலகில் அதிகம் இடம்பெறவும் இல்லை. திருவனந்தபுரத்தில் இருந்து ஆங்கிலத்தில் எழுதியவர்களின் முக்கியமானவர் நகுலன்தான்.  அவர் படிப்படியாக ஆங்கிலத்தில் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்தினார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்று தனது படைப்பாற்றல் முழுவதையும் தமிழில் எழுதுவதிலேயே செலவிட்டார்.

வாழ்க்கை தொடர்பாகவும், கவிதை தொடர்பாகவும் அவருக்கு இருந்த அணுகுமுறையும், கவிதை குறித்த அணுகுமுறையும் மிகவும் அசிரத்தையானது, கவனமற்றது போன்று தோற்றம் கொடுப்பது. அப்படித் தோன்றுமாறு தான் அவர் எழுதினார். சம்பிரதாயமாக பல எழுத்தாளர்களையும் போல கம்பீரமான, உறுதியான குரலில் அவர் படைப்புகள் பேசுவதில்லை. அவர் தன்னைப் பற்றி கூர்ந்த விமர்சனம் கொண்டவர்.

எழுத்தாளர்களின் மத்தியில் அந்தக் குணம் அபூர்வமானது. பெரும்பாலான எழுத்தாளர்கள் மற்றவர்கள் பற்றி கூர்ந்த விமர்சனத்துடன் இருப்பார்கள். ஆனால் அவர்களைப் பற்றி அவர்களுக்கு எந்த சுயவிமர்சனமும் இருக்காது. அப்படியான விமர்சனம் இல்லையெனில் நிழல்கள் போன்ற நாவலை எழுதமுடியாது.

அசிரத்தையான எழுத்து போன்ற தோற்றத்தில் அவர் சிரத்தையுடன் தனது அனுபவங்களை வித்தியாசமான வடிவங்களில் கவிதைகளாக வடித்தவர் அவர். தமிழ்நாட்டில் கல்கி மற்றும் குமுதம் படித்து வளர்ந்தவர்களுக்கு அவரைப் படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கு மேலும் காலம் எடுக்கும். தமிழ்நாட்டில் நகுலன் எழுத்துகளுக்கு பரவலான வாசிப்புத்தளம் இருக்கிறதா என்று எனக்கு இன்னும் சந்தேகமாகவே உள்ளது. ஆனால் இன்னமும் அவர் வித்தியாசமான எழுத்தாளராகவே இருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். விமர்சகர்களும், அறிஞர்களும் அவரை ஏற்றுக்கொண்டாலும் அவர் எப்போதும் தனியாகவேதான் இருப்பார். பிறரின் புகழ் அபிப்ராயங்களில் மின்னாமல், எந்த சமயத்திலும் விலகிநின்று தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்டு தன்னை எப்படி சிதறடித்துக் கொள்வது என்பது அவருக்குத் தெரியும். பாராட்டுகளிலிருந்தும், கரகோஷங்களிலிருந்தும் விலகிப் போவது எப்படி என்று அவர் அறிவார் . அந்தக் குணம் வேறு எந்த இந்திய எழுத்தாளர்களுக்கும் வாய்க்காதது என்று நிச்சயமாக நம்புகிறேன். வருங்காலத்தில் அவரது படைப்புகள் ஆங்கிலத்தில் அல்லது பிற மேலை மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்பதில் எனக்கு உறுதி உள்ளது.  அப்போது அவருக்குத் தற்போதுள்ளதை விட கூடுதலான புகழும் அங்கீகாரமும் கிடைக்கும்.

அவருக்கேயுரிய தனித்திணை அவரது எழுத்து. நகுலன் வெறுமனே கதைகளையோ, சம்பவங்களையோ சொல்வதில்லை. தமிழில் ஆதிக்கம் செலுத்திய போக்கை அவர் பின்பற்றவில்லை.  அதனால் தான் தற்போதும் அவர் சவாலான எழுத்தாளராக இருக்கிறார். எதிர்காலத்திற்குரிய எழுத்தாளர் அவர்.
இன்னும் ஒரே ஒரு விஷயம்தான் சொல்லவேண்டும். எந்த மொழியில் அவர் முதலில் அங்கீகாரம் பெறுவதற்குத் தவறினாரோ, அதற்குக் காரணமும் அவரது எழுத்தின் தனித்துவம்தான். அவரது எழுத்துகள் மந்தையோடு செல்லக்கூடியதாக இல்லாமல் தனித்துவத்துடன் இருந்தன. அதற்காகத் தான் அவர் நகுலன் என்ற பெயரையும் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தற்போது நகுலன் என்ற பெயர் அனைவரிடமும் அங்கீகாரம் பெற்ற பெயராக மாறியிருக்கிறது. நகுலன் என்ற பெயர்தான் தனக்கு துரைஸ்வாமி என்ற பெயரை விடப் பொருத்தமானது என்று அவர்தான் முதலில் உணர்ந்திருக்க வேண்டும். நகுலன், தமிழில் மாபெரும் கவிஞராகவும், எழுத்தாளராகவும் நினைவுகூரப்படுவார்.
டி.கே.துரைசாமி, திருவனந்தபுரத்தில் உள்ள மர் இவார்னியஸ் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தார். அவர் சம்பிரதாயமான விரிவுரையாளர்களைப் போலன்றி மாணவர்களிடம் தனிவகையான ஈர்ப்பை தன்பாணியில் உருவாக்கியிருந்தார். ஆனால் அவருக்கு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து சரியான முறையில் மரியாதை கிடைக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். அவரை நன்றியோடு நினைவுகூரக்கூடிய, தொடர்ந்து வந்து சந்தித்துச் செல்லகூடிய சில மாணவர்கள் இருந்தனர். சில மாணவர்களை ஆங்கிலத்தில் எழுத அவர் ஊக்குவித்தார். அவரின் தாக்கமும் அந்த இளம் எழுத்தாளர்களிடம் இருந்தது. கல்வித்துறை சார்ந்த ஆளுமையாக அவர் இல்லை. தனது எழுத்துகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார்.

Thursday, 23 May 2013

மனித வாழ்வு முழுவதையும் பகுத்தறிவு பொறுப்பில் எடுக்கமுடியாது- அசீஸ் நந்தி-3தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்


(ஈரானைச் சேர்ந்த தத்துவவாதி ராமின் ஜகன்பெக்லூவுடன் அசீஸ் நந்தி நடத்திய உரையாடல் நூலான Talking India விலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. அசீஸ் நந்தி 1937 இல் பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராக பயிற்சி செய்தவர். அரசியல் உளவியலாளர் என்று தன்னைப் பற்றி கூறுகிறார். மனித இயல்பிலும், பொதுவாழ்க்கை தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பத்தை அரசியல் உளவியலாளர் என்ற பெயரே நியாயம் செய்வதாக கருதுகிறார். காந்தியை மறுநிர்மாணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி.
வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாசாரத் தரப்புகள் வெறுப்போ,விலக்கமோ இல்லாமல் உரையாடுவதை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இன்று வெவ்வேறு அடையாளத் தரப்புகளும், அதன் தர்க்கங்களும் பரஸ்பரம் மூர்க்கமாக மறுப்பதும், விலக்குவதுமாகவும், வெறுப்பதாகவும் மாறியுள்ள இன்றைய சூழலில் அசீஸ் நந்தியின் உரையாடல் இயல்பை நாம் பரிசீலிப்பது அவசியமானது.
வெகுமக்களின் வாழ்க்கை முறை, விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மேல் கொண்டுள்ள ‘உண்மையான விருப்பை வெளிப்படுத்துகிறார் அசீஸ் நந்தி. சிலேட் செப்டம்பர்-நவம்பர் 2012 இதழுக்காக மொழிபெயர்க்கப்பட்டது. இது முடிவுப்பகுதி)
ஒருவிதத்தில் நவீன பகுத்தறிவின் சடங்குகள், மரபை அழித்துவிட்டன. இருப்பினும் மரபு, நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களிலும் அறிவுஜீவிகளின் சொல்லாடல்களிலும் நுண்மையாக மறுவருகை புரிவதைப் பார்க்கிறோம். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?

நானும் அப்படியே நினைக்கிறேன். ஆனால் கிராமங்களில் அல்ல, நகரங்களில் தான் மதச்சார்பின்மை அதிகம் புலப்படுகிறது. இதை இரண்டு அல்லது மூன்று மட்டங்களில் பரிசீலிக்கலாம். பகுத்தறிவு, மனித வாழ்வு முழுமையையும் பகுத்தறிவு பொறுப்பில் எடுக்கமுடியாது என்பதால் மரபு மீண்டும் மேலெழுகிறது. பகுத்தறிவு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோற்கிறது. காரண-காரிய அறிவால் மட்டும் வாழ நினைக்கும் குறிக்கோள் என்பது போலியானது. 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவால் ஊக்குவிக்கப்பட்ட நோய்க்கூறு என்று அதை வகைப்படுத்தலாம். மக்கள் தங்கள் உணர்வுகள், ஆசாபாசங்கள் மற்றும் உள்ளுணர்வுகளால் வாழ்கிறார்கள். பகுத்தறிவுரீதியாக கிறிஸ்துமஸ் ஒரு பண்டிகை மட்டுமே என்றும் அதற்கு மதரீதியான முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் உணரலாம். ஆனாலும் அவர்களது மனதின் ஒரு மூலையில், கிறிஸ்துமஸ் குறித்த பழைய ஞாபகங்கள் உறுதியாக இருக்கும். இதனாலேயே, மதப்பிடிப்பு இல்லாத கிறிஸ்தவர்கள் கூட தற்போது அந்தப் பண்டிகை, வெறுமனே நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டதற்கு வருத்தப்படுகின்றனர். அந்தப் பண்டிகை வெறுமனே சந்தை நிகழ்வாகப் போய்விடக்கூடாது என்று கருதுகின்றனர். முழுமனதோடு இல்லாவிடினும் அவர்கள் கிறிஸ்துமசின் ஆதி உத்வேகத்துக்கு புத்துயிர் கொடுக்க முயற்சிக்கின்றனர். அப்படியான முறையில் மரபு மீண்டும் வருகிறது.
இரண்டாவது வகையில் பார்க்கப்போனால் மரபுகள், இளங்கலை மாணவர்களுக்கான எளிய பாடப்புத்தகங்கள் போல  வாழ்க்கைக்கான குறுக்கு வழிகாட்டியாக உள்ளன.  அத்துடன் எல்லாரும் வாழ்க்கையின் அனைத்து தளங்களையும் கற்றறிந்து, முழுமையான தர்க்க அறிவுடன், பகுத்தறிவுரீதியாக இருப்பது சாத்தியம் அல்ல. அவர்கள் சில பிராந்தியங்களில் வேரோடிய எதிர்வினைகளுக்கும், உள்ளுணர்வுகளுக்கும், உடனடித் தீர்மானங்களுக்கும் அவர்கள் ஆட்பட வேண்டும். மரபு, வார்படக்கருத்துருவங்கள்(ஸ்டீரியோடைப்ஸ்) வழியாகவே நுழையும். உதாரணத்திற்கு நமக்குத் தெரியவே தெரியாத சமூகக்குழுவிலிருந்து வரும் அந்நியரைச் சந்திக்கும் போது வார்ப்படக் கருத்துருவங்கள் கொண்டே சந்திப்பதை உதாரணமாகச் சொல்லலாம்.
வார்படக் கருத்துருவங்கள் சில சமயங்களில் கையடக்கமான நாட்டார் சமூகவியலாகவோ, தொழில்ரீதியான தன்மையை துறந்த கலாசார மானுடவியலாகவோ பயன்படலாம். அதுபோலவே மரபுகள் அன்றாட வாழ்வில் எளிமையான குடியானவனின் வாழ்க்கைத் தத்துவமாக நுழைகிறது. நீங்கள் அறிவுப்பூர்வமாக எங்கே முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லையோ அங்கே அது எட்டிப்பார்க்கிறது. நீங்கள் இயற்பியல் வல்லுனராக இருந்தால் நீங்கள் இயற்பியல் மரபுகளின்படி நடப்பீர்கள். வாழ்க்கையின் பிற பகுதிகளில் சமூக மரபுகளுக்குக் கட்டுப்படுவீர்கள். அது முரண்பட்டதல்ல. குவாண்டம் விசையியல் ஐன்ஸ்டீனுக்கு அசௌகரியம் தந்தது. அதனால், பகடைக்காய்களை கடவுள் உருட்டவில்லை என்று அவர் சொல்வதற்கு செவ்வியல் இயற்பியலை நாடினார். ஏனெனில் அது அவருக்குப் புதிய பிராந்தியமாக இருந்தது.  அவரால் உணர்வுப்பூர்வமாக அதைப் பற்றிப்பிடிக்க முடியவில்லை. காரண காரிய அறிவை திருப்திப்படுத்தக்கூடிய வழிகாட்டியாகவும் அவர் கருதவில்லை. அதனால் அவர் மீண்டும் மரபில் விழுந்தார். பலசமயங்களில் இதுதான் மரபுகளின் பலமான ஆதாரமாக உள்ளது. ஆயத்தமான, முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்ட, முழுமையாக சிந்திக்கப்பட்ட, பட்டறிவு சார்ந்த எதிர்வினைகளைச் செய்யமுடியாத பரந்தபகுதிகள் வாழ்க்கையில் உள்ளன. அங்கே நீங்கள் மரபுகளில் விழுந்துதான் ஆகவேண்டும். அப்படியான நிலையில், மரபு உங்கள் முன் உள்ள  விருப்பத் தேர்வுகளுக்கு ஒரு வரம்பைக் கட்டுகிறது. மரபை ஒரு எதிர்ப்பு வடிவமாகவோ அல்லது மறுப்பின் அடிப்படையாகப் பார்க்கும் எனது தனிப்பட்ட புரிதலை நான் ஏற்கனவே சொல்லியிருப்பதற்கு நான் மேற்சொன்னது கூடுதலாக வலுசேர்ப்பதாகும். 

ஏ.கே.குமாரசாமி அல்லது செயத் ஹோசீன் நாசர் போன்றவர்களின் மரபு தொடர்பான ஆன்மீகவாதத்துக்கும் உங்களது எழுத்துகள் மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்கும் மரபுவாதம் தொடர்பாக நீங்கள் எங்கே வித்தியாசப்படுகிறீர்கள்?

உண்மையில் அந்த சிந்தனைப் பள்ளி மேல் நிறைய மரியாதை உள்ளது. ஆனால் மரபைப் பார்க்கும் அந்த குறிப்பிட்ட வழியிலிருந்து வேண்டுமென்றே என்னைத் தொடர்ந்து தொலைவுபடுத்திக் கொள்ள முயன்றும் வருகிறேன். மரபு தொடர்பான எனது கருத்து என்பது அன்றாட வாழ்க்கையையும், சாதாரண மனிதனையும் கொண்டாடுவதுதான். அதன்வழியாகவே ஏனெனில் சாதாரண மக்களின் வாழ்வாதார அமைப்புகள் மற்றும் வாழ்க்கை முறையின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நவீனத்துவக் கருத்தாக்கத்தையும் விமர்சிக்கிறேன். இந்த ரீதியில் மரபு சார்ந்த கருத்துக்கு துல்லியமான அரசியல் வாய்ப்பு உள்ளது. அந்த அரசியல் வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது.
சாதாரண மக்கள் தங்கள் விருப்பத் தேர்வுகளை உருவாக்குகிறார்கள் எனில் அவர்கள் போதிய அறிவற்றவர்களாக இருக்கிறார்கள் என்றோ, மூடநம்பிக்கை கொண்டு,  பகுத்தறிவற்று இருக்கிறார்கள் என்றோ அர்த்தம் அல்ல என்பதே மரபுவாதமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பல நூற்றாண்டுகளாகவும், தலைமுறைகளாகவும் சேகரிக்கப்பட்ட ஞானம் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் தேர்வுகளை உருவாக்குகிறார்கள். இந்திய மரபு பற்றி நான் பேசும்போது, இந்திய நேற்றின் 3000 ஆண்டுகள் என் மனதில் உள்ளது. அது சாதாரண இந்தியர்களின் ஆளுமையாகவும் ஆசாபாசங்களாகவும் உள்ளது. சாதாரண இந்தியர்களின் ஆசாபாசங்கள் மற்றும் ஆளுமையையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவற்றுக்கு மரியாதை அளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த அனுபவங்கள், நூற்றாண்டுகளாகச் சேகரமான, வாழ்வின் மீது பரிசோதிக்கப்பட்ட கூட்டு அனுபவங்கள்.
மரபு தொடர்பான எனது அணுகுமுறையின் மற்றொரு அம்சத்தை நான் இந்த உரையாடலில் இதுவரை தொடவேயில்லை. இந்த மரபுகள் எல்லா இடங்களிலும் தேக்கத்தில் இருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன். வாழ்க்கை என்பது மேலதிகமாக தொழில்தன்மை வாய்ந்ததாக உருமாறி வருகிறது. அதன் களங்கள் மேலும் மேலும் நிபுணர்களின் மேலாண்மைக்குள் வந்துகொண்டிருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில் அதிகாரமற்றதிலிருந்து தனது சக்தியைப் பெற்றுக்கொள்ளும் எந்த எதிர்ப்பும், மரபுகளுடன் உரையாடக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். மகத்தான படைப்பெழுத்தாளர்கள் இதை புரிந்துகொண்டே இருக்கின்றனர். அப்படியான ஒரு எதிர்ப்பு வடிவத்தைப் பார்த்து அச்சம் கொள்வது கல்வித்துறை அதிகாரத்துவமாகும். தீவிர எதிர்ப்பின் வடிவத்தை வரையறுக்கும் தங்கள் உரிமை சுருக்கப்பட்டு விடுமோ என்று அவர்கள் பயப்படுகின்றனர். மறுப்பின் புதிய மொழியை அவர்களால் புரிந்துகொள்ளவோ கட்டுப்படுத்தவோ இயலாது. இதுதான் பிராமணிய அச்சம்.

தொடர்ச்சி என்பது இருப்பதாலேயே தான் நாம் மரபுக்கு மரியாதை அளிக்கிறோமா?
அதற்கு தொடர்ச்சி இருப்பதால் மரியாதை அளிக்க வேண்டியதில்லை. ஆனால் தலைமுறை, தலைமுறையாக வந்த ஞானத்துடன் தோய்ந்திருக்கும் மொழியைப் போன்றது மரபு. அப்படி இருப்பதாலேயே எப்போதும் சரியானதாக இருக்கும் என்றும் அர்த்தம் அல்ல. அதை நாம் மறுக்கும் நிலையில் கூட, தீவிரமாக அதனுடன் உரையாட வேண்டியிருக்கிறது. நீங்கள் தலையீடு செய்யவோ, மாற்றத்தை விழையவோ, ஜனநாயகப்பூர்வமாக புதிய ஒன்றை அறிமுகப்படுத்தவோ நினைத்தால், மக்கள் மீது போலீஸ் முறைகளைப் பயன்படுத்தி உங்கள் கருத்துகளைத் திணிக்கக் கூடாது என்று எண்ணினால் அவர்களது வாழ்வியல் பரப்புக்குள் நீங்கள் நுழைந்தே ஆகவேண்டும்.

மரபே ஒடுக்குமுறை இயல்புள்ளதாக மாறும்போது என்ன நடக்கிறது?

மரபான வடிவத்தில் இருப்பினும் சரி, அப்படி இல்லாமல் இருப்பினும், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவே செய்யவேண்டும். ஆனால் அப்படியான போராட்டத்துக்கு நீங்கள் மக்களைத் திரட்ட வேண்டுமெனில் அது வேறுவகையான ஆட்டநெறிகளைக் கோருகிறது.  நாடாளுமன்றம், பாலங்கள், ரயில் தண்டவாளங்கள் போன்றவற்றின் அடியில் வெடிகுண்டுகள் வைத்து நவீன அரசமைப்பையும், முதலாளித்துவத்தையும் நசுக்கிவிடலாம் என்று எண்ணுபவராக நீங்கள் இருப்பின், உங்களுக்கு மரபுகள் தேவையே இல்லை. மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கமான பங்களிப்புடன் ஒரு ஒடுக்குமுறை அமைப்பை அகற்றுவதைப் பற்றி நீங்கள் நினைத்தால், அவர்களது மனதைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் சிந்திக்கும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளவும், அவர்களது நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவதற்கும் அவர்களது மரபுகளுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். தங்கள் சொந்த நலன்களைக் காரண காரியப்பூர்வமாக கணக்கிட்டு மக்கள் கலகத்தில் இறங்குவதில்லை. அதனால் தான் நீங்கள் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் அவர்களது மரபுக்குள் நுழைய நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் பேசும் மொழியைப் பேச நீங்கள் அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள இன்னமும் நீங்கள் தீர்மானிக்கவில்லையெனில் உங்களது இலக்குகளை நவீன ஆயுதங்கள் கொண்டோ, அரசின் கொடும் அடக்குமுறை கொண்டோ அடைந்துவிடலாம் என்றோ உங்களது நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அவர்களது கலாசார மொழிவழக்கை நீங்கள் பேசாதவரை அவர்களது ஒத்துழைப்பை நீங்கள் ஒருபோதும் பெறவே போவதில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான்.

(முற்றும்)

Friday, 17 May 2013

நான்கு கவிதைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

மஞ்சள் ரோஸ்
மஞ்சள் ரோஸ்
என்று
தயங்காமல்
அவளை அழைத்துவிடு
அவள் தானாகவே
ஒரு மஞ்சள் ரோஸ்
ஆகிவிடுவாள்
இல்லையென்றாலும்
கவலை இல்லை
அவளை
ஆக்கிவிடலாம்.

000
நான் சிறையிருக்கிறேன்
ஆனால் 
குரங்குகள் உண்டு
வெளிச்சம் உண்டு
காதல் உண்டு
பாடல்கள்
உண்டு
00000இவள்
அவள் அல்ல
அவளை நான்
பார்த்த
பொழுது
இவள்
குழந்தையாக
இருந்திருப்பாள்
ஆனால்
இவள்
ஜெயலட்சுமிதான்

000000

மதியவேளை
மெல்ல மயங்குகிறது
இதற்கு முன்பு யாரும்
பார்த்திராத
மயக்கம் அது
நான் பார்க்கிறேன்..
மரம்
ஜன்னல்
இலைகளில்
தெரியும்
பறவைகள்
பார்வைக்கு
முன்பைவிட
துல்லியமடைகின்றன
ரோஜாவின் நிழலில் அல்ல
அரச மரத்து நிழலில்
இருக்கிறது
என் வீடு
000000
(கல்குதிரை-பனிக்கால இதழ்-21)

Sunday, 12 May 2013

அசீஸ் நந்தி தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
ரானைச் சேர்ந்த தத்துவவாதி ராமின் ஜகன்பெக்லூவுடன் அசீஸ் நந்தி நடத்திய உரையாடல் நூலான Talking India விலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. அசீஸ் நந்தி 1937 இல் பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராக பயிற்சி செய்தவர். அரசியல் உளவியலாளர் என்று தன்னைப் பற்றி கூறுகிறார். மனித இயல்பிலும், பொதுவாழ்க்கை தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பத்தை அரசியல் உளவியலாளர் என்ற பெயரே நியாயம் செய்வதாக கருதுகிறார். காந்தியை மறுநிர்மாணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி.
வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாசாரத் தரப்புகள் வெறுப்போ,விலக்கமோ இல்லாமல் உரையாடுவதை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இன்று வெவ்வேறு அடையாளத் தரப்புகளும், அதன் தர்க்கங்களும் பரஸ்பரம் மூர்க்கமாக மறுப்பதும், விலக்குவதுமாகவும், வெறுப்பதாகவும் மாறியுள்ள இன்றைய சூழலில் அசீஸ் நந்தியின் உரையாடல் இயல்பை நாம் பரிசீலிப்பது அவசியமானது.
வெகுமக்களின் வாழ்க்கை முறை, விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மேல் கொண்டுள்ள ‘உண்மையான விருப்பை வெளிப்படுத்துகிறார் அசீஸ் நந்தி. சிலேட் செப்டம்பர்-நவம்பர் 2012 இதழுக்காக மொழிபெயர்க்கப்பட்டது.


உங்கள் பெற்றோர்கள் பற்றி? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? உங்களது கலாசாரப் பின்னணி என்னவாக இருந்தது?

கல்கத்தாவில் தலைமுறைகளாக வாழ்ந்த வங்காள பாபுக்கள் நாங்கள். கிறிஸ்தவர்களாக மாறிய மூன்றாம் தலைமுறை எங்களுடையது. எனது பெற்றோர்கள் ஆச்சார(devout) கிறிஸ்தவர்கள். இங்கே வாழ்ந்த மற்ற மக்களைப் போலவே அவர்களது வாழ்க்கை முறையில் பல்வேறு நம்பிக்கைகளின் தாக்கங்கள் இருந்தது. உதாரணத்திற்கு இந்து அம்சங்களும் மெலிதான இஸ்லாமிய நடைமுறைகளும் எனது குடும்பத்தில் பிரதிபலித்தன. விரதம் மற்றும் பிற சடங்குகளை நாங்கள் இந்துமதத்திலிருந்து கடன்வாங்கி பின்பற்றினோம். இந்து மற்றும் முஸ்லிம் மதங்களிலிருந்து சில விலக்குகளும் கடைபிடிக்கப்பட்டன. எங்கள் குடும்பத்தில் யாரும் மாட்டு இறைச்சியோ, பன்றி இறைச்சியோ சாப்பிடாததற்கு இது காரணமாக இருக்கக்கூடும். ஒரு வங்காள கிறிஸ்தவ குடும்பம் இரண்டையும் சாப்பிட முடியாததற்கு காரணம் எதுவும் இருக்கமுடியாது. ஆனால் அதுதான் நடைமுறையில் இருந்தது. அவர்களிடம் அதற்கான காரணமும் இல்லை. அவர்களது ஆட்சேபத்துக்குக் காரணம் என்னவென்று நான் கேட்டபோது," குறிப்பாக ஒன்றும் இல்லை, எங்களுக்குப் பிடிக்காது. அவை பெரிய மிருகங்கள்" என்று கூறினார்கள். அதில் கொஞ்சம் உண்மையும் உள்ளது. ஏனெனில் எனது அப்பாவுக்கு பெரிய துண்டுகளாக இறைச்சி பரிமாறப்படும் போதெல்லாம் அவர் ஏதாவது காரணத்தைக் கூறி சாப்பிட மறுத்துவிடுவார். இந்தியாவின் தேசிய உணவுப்பொருளாக மாறிவிட்ட தந்தூரி சிக்கனை அவர் சாப்பிடுவார் என்று என்னால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. உயிருடன் இருக்கும் விலங்கை ஞாபகப்படுத்தும் உணவை அவர் சாப்பிட விரும்பாதவராக இருந்தார். ஒருமுறை எனது அப்பா டெல்லிக்கு ஒரு கூட்டத்தில் பங்கேற்கப் போயிருந்தார். அங்கே அவரது அலுவலக சகாக்கள்  ஆட்டுக்கறி என்று சொல்லி பன்றிக்கறி சாப்பிட வைத்துவைத்து விட்டனர். வீடு திரும்பிய போது அவரின் முகம் அத்தனை பரிதாபமாக இருந்தது.
எளிமை மற்றும் நன்னடத்தை தொடர்பாக எனது குடும்பத்தினர் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்ததும் எனக்கு தெளிவாக ஞாபகத்தில் உள்ளது. பொருட்களை மறுஉபயோகம் செய்வது தொடர்பாக குறிப்பாக பொருட்களைக் கழிப்பது தொடர்பாக அவர்கள் வாழ்க்கை முறைக்குள்ளேயே ஒரு அம்சம் தகவமைக்கப்பட்டிருந்தது. நமது புத்தகங்கள் அல்லது உடைகள் முழுமையாக நம்முடையது என்று நினைப்பதே தவறாக எங்கள் குடும்பத்தில் கருதப்பட்டது. உதாரணத்திற்கு எங்கள் புத்தகங்களுக்கு வீட்டிலேயே அட்டைப்போட்டு விடுவோம். ஒரு ஆண்டு உபயோகத்துக்குப் பிறகு அவை வசதியில்லாத உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்துவிட வேண்டும். அவர்களின் குழந்தைகள் அந்தப் புத்தகங்களைப் பயன்படுத்துவார்கள். இல்லையெனில் அந்தப் புத்தகங்களை வேறு பள்ளிகளுக்குக் கொடுத்துவிடுவோம். பிறந்தநாள் பரிசுகளாக கிடைக்கும் நாவல்கள் மற்றும் கதைப்புத்தகங்களையும் நாங்கள் சரியாகப் பாதுகாக்க வேண்டும். அவற்றின் மீது எங்கள் சுவாரசியம் குறைந்து போனபின் அவை மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவை.

மதம் மற்றும் அதீத ஒழுக்கவியல் பின்னணியில் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள், இல்லையா?

ஆமாம். மிக, மிக ஒழுக்கமான பின்னணியில் வளர்ந்தேன். அத்துடன் அந்த ஒழுக்கச் சட்டகம், எனது இளவயதில் மிகுந்த சுமையாகவும் இருந்தது. நான் சீக்கிரமே எனது மதநம்பிக்கையை இழந்ததற்கும் அது ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம். பிரம்மசமாஜம், ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் காந்தியிடமிருந்து, தூய்மைவாதத்தின் சாயல் கொண்ட மிகையான அளவு  ஒழுக்கவியலை வங்காள கிறிஸ்தவம் பிரதானமாக உள்வாங்கியது. எனது பெற்றோர்கள் காந்தியின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். சுதந்திரப் போராட்டத்தை அவர் வழிநடத்து பாணியால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தனர். எங்களுக்கு அது ஒருவகை பழமைவாதமாகவும், பாரம்பரிய ஒழுக்கவாதமாகவும் பட்டது. ஒழுக்கப்பண்பு அல்ல அது, ஒழுக்கவாதம். நாங்கள் அதை தொடர்ந்து கேலி செய்தோம். பல ஆண்டுகள் காந்தி தொடர்பாக முழுமையான புறக்கணிப்பு மனிநிலையிலேயே இருந்தேன். மதச்சாயல் கொண்ட எந்த விதமான அறத்தையும் சேர்ந்து புறக்கணிப்பவனாகவே இருந்தேன். எனது வாழ்வில் மிகவும் பிற்பகுதியில் தான், நான் காந்தியை மறுகண்டிபிடிப்பு செய்தேன். சாதாரண மக்களின் அறவியல் வரைமுறைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அறவியல் ஆகியவற்றின் மீது நான் தீவிர கவனம் கொள்ளத் தொடங்கினேன். ஜனநாயக அரசியலின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று உணர்ந்தேன். இந்த சமயம் எனக்கு அது சுமையாகப் படவில்லை. சமூக மற்றும் கலாசாரத் திசைகாட்டுதல் என்பது, மேலதிகமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருவதாக நான் எண்ணினேன். சுற்றுச்சூழல் பிரச்னைகள், அமைதி இயக்கம், உலகளாவிய, பிராந்திய வன்முறைகளின் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் பின்னணியில் தான் எளிமையான அன்றாட அறப்பண்பின் விழுமியங்களைப் பாராட்டத் தொடங்கினேன்.

அதுவும் எனது குடும்பத்தினர் என்மீது தாக்கம் செலுத்தியதன் பகுதியாகவே இருந்தது. ஏனெனில் அவர்களது அறப்பண்பு, குறிப்பிட்ட கருணையால் உருவானது. எனது அப்பா எதையாவது வாங்குவதற்காக வெளியே போய்விட்டு, மீண்டும் பணம் எடுப்பதற்கு வீட்டுக்கு வருவதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். தெருவில் யாராவது ஒரு ஏழையைப் பார்த்தால் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடுவார். நாங்கள் அதிகம் வசதியாக இல்லாத காலத்திலும் அவர் இப்படியே செய்தார். மிச்சமின்றி கொடு என்பது அவருக்குப் பிடித்த பைபிள் வாசகம்.


இந்த அறப்பண்பின் அடிப்படை இன்று உங்களுக்கு எப்படியாக இருக்கிறது. நீங்கள் மதநம்பிக்கையற்றவரும் கூட. உங்கள் அறப்பண்பு மதநம்பிக்கையில் வேர்கொண்டதில்லை இல்லையா?

நான் மத நம்பிக்கையில்லாதவனாக இருக்கலாம். ஆனால் வேறுவகை நம்பிக்கைகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒரு அறவியல் கோட்பாட்டுடன் வாழ்கிறார்கள். எனது அறவியல் என்பதின் ஒருபகுதி எனது கலாசார, சமூக மற்றும் மதப்பின்னணியிலிருந்து வந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன். அத்துடன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண மனிதர்கள் மீது எனக்கு வளர்ந்து கொண்டிருக்கும் மரியாதையும் எனது அறவியலை வடிவமைத்திருக்கிறது. இப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு வாழ்க்கையும், அர்த்தப்பூர்வமாக இருக்கும்பட்சத்தில், இயல்கடந்த இருப்பின் மாயத்தொடுகையை கட்டாயம் வைத்திருக்கத்தான் செய்யும். அந்த எல்லை கடக்கும் நிலை ஆன்மீகத்திலிருந்து வரலாம். அல்லது அறத்தின் பால் விருப்பு கொண்ட சில சமூக நடவடிக்கை வடிவங்கள் வழியாக ஒருவருக்கு மறைமுகமாக ஏற்படலாம்.


உங்களது உலகநோக்கு கருத்தியல் சாராத அறிவார்த்தமாக உள்ளது. அத்துடன் தேவையற்ற அரசியல் கோஷங்களும் இல்லை. ஆக்கப்பூர்வமான பயன்விளைவை உருவாக்க உள்ளிருந்து போராடும் தடுப்பு இயக்கத்தை உருவாக்க விரும்புகிறீர்களா?

அப்படியான முறையில் நான் யோசிக்கவில்லை. ஆனால் கருத்தியல்கள் தொடர்பாக எனக்கு பலத்த சந்தேகம் உருவானது உண்மை. ஒரு உளவியலாளர் பணியில் கருத்தியலாளர்கள் எல்லாரும் தங்கள் கருத்தியலுக்கு ஆதாரமான பொருட்கள் மீது ஆழ்ந்த வெறுப்பை வைத்துள்ளதைப் பார்க்கிறேன். அவர்களது கருத்தியல் யாரை முன்வைத்துச் செயல்படுகிறதோ, அவர்களுக்கு எதிராகவும், யாருக்குப் பயன்படுமோ அவர்கள் மீது அவநம்பிக்கை கொண்டதாகவும் இருக்கிறது. உதாரணத்திற்கு எனது அனுபவத்தில் பல மார்க்சிஸ்டுகள், பாட்டாளிகளை வெறுப்பவர்கள். அவர்களுக்கு அது தெரியாது. அவர்களுக்கு ஒரு பாட்டாளி, போதுமான புரட்சிகரமானவனாக, அறிவுகொண்டவனாக அல்லது மனச்சான்று உள்ளவனாகத் தெரியமாட்டான். அவர்கள் போதிய அளவு செயல்தன்மை அற்றவர்களாக, கருத்தியல் உத்வேகம் அற்றவர்களாக, ஒழுங்கில்லாதவர்களாக, தங்களது வரலாற்றுப் பாத்திரத்தையோ, வகுப்பு நலன்களையோ உணராதவர்களாகத் தெரிவார்கள். பெண்ணியவாதிகளுக்கு, பெண்கள் மீது கடுமையான வெறுப்பின் ரேகைகள் தென்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு பெரும்பாலான பெண்கள் போதுமான அளவு பெண்ணிய உணர்வு கொண்டவர்களாகவோ அல்லது பெண்ணியக் கருத்தியலால் முழுமையாக உந்தப்படாதவர்களாகவோ தெரிகின்றனர். சமூகத்தில் அவர்கள் தங்களுக்கான இடத்தை கோரிப்பெறுவதற்கு போதுமான போராட்டக்குணம் இல்லாமல் இருப்பதாக பெண்ணியவாதிகள் கருதுகின்றனர். பெரும்பாலான பெண்ணியவாதிகள், குடும்பப்பெண்களை ஏளனம் செய்பவர்கள். மதரீதியானதும், இனரீதியானதுமான வன்முறையை ஆய்வுசெய்யும் போது, இந்து தேசியவாதிகளால் எழுதப்பட்ட பெரும்தொகுதியை நான் படித்திருக்கிறேன். இவர்கள் பேரினவாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் அவர்களின் சிறந்த வசைகள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் தொடர்பானதல்ல. அவர்கள் முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் சந்தேகமேயின்றி திட்டுகிறார்கள் தான். ஆனால் அவர்களது கொடூரமான தாக்குதல்கள் இந்துக்கள் மீதானதாகவே இருக்கின்றன. இந்துக்கள் ஒருங்கிணைப்பில்லாதவர்களாக, கையாலாகதவர்களாக, எரிச்சலூட்டக்கூடியவர்களா, தங்களுக்குள்ளேயே சண்டைகள் போடுபவர்களாகவே அவர்கள் எண்ணுகின்றனர். அவர்களது எழுத்துகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது மறைமுக ஆராதனை இருக்கிறது. நவீன தேசிய அரசைக் கையாளவும், நவீன தேசியத்தை உருவாக்கவும் போதிய திறனையும் தகவமைப்பையும் அவர்களது மதங்கள் வழங்கியிருப்பதான மரியாதை அது. இந்தப் பின்னணியில் இந்துக்கள், குறிப்பாக ஊறுபடும் நிலையில் இருப்பதாக இந்துப் பேரினவாதிகள் கருதுகின்றனர். வி.டி. சாவர்க்காரின் இந்துத்வா தொடங்கி நாதுராம் கோட்சேயின் கடைசி வாக்குமூலம் வரை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போல இந்துக்கள் இல்லை என்று கிட்டத்தட்ட ஒப்பாரியே வைக்கின்றனர்.
தங்கள் கருத்தியல்களின் பயனாளிகள் மீது ஆழமான விருப்பையும் வெறுப்பையும் பராமரிப்பதை ஒரு விதியாகவே கருத்தியல்வாதிகள் வைத்திருப்பதால் நான் அவர்களை சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு உளவியல் அமைப்பாக கருத்தியலைச் சந்தேகப்படுவதை படிப்படியாக உருவாக்கிக் கொண்டேன். ஒரு உளவியல் கட்டமைப்பாக எந்தவிதமான கருத்தியலும், மனித ஆளுமையிடம் குறிப்பட்ட ஒன்றைக் கேட்டு நிற்கிறது. இந்த கோரிக்கைகள் எப்போதும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஏற்கப்படாத ஒருவரின் உணர்வுநிலைகளான சுதந்திரமான கோபம், அதிருப்தி உணர்வுகள், காரணமற்ற அவநம்பிக்கை கற்பனைகள் ஆகியவற்றுக்கான கேடயமாகவே கருத்தியல்கள் இருக்கமுடியும் என்பதற்கு திட்டவட்டமான சான்றுகள் உள்ளன. நான் கருத்தியல்களிலிருந்து விலக நேர்ந்ததற்கு அதுவே காரணமாக இருந்திருக்கக் கூடும். சமீப ஆண்டுகளில் அவை குறித்து கூடுதலான சந்தேகங்கள் எனக்கு எழுந்துள்ளன.
ஆரம்ப காலங்களில் எனக்கு இந்தளவு நிச்சயம் இல்லை. 20 ஆண்டுகளாக எனது மாணவப்பருவத்திலிருந்து விமர்சனவாதக் கோட்பாட்டின் பொது முறைமைகளுக்குள் ஆய்வு செய்துவருகிறேன். சமூக மற்றும் அரசியல் நுண்ணுனர்வு கொண்ட உளநோய் தீர் உளவியல் எழுத்துமுறையாக அது இருப்பதால் என்னை ஈர்த்திருக்கலாம்.  தியோடர் அடோர்னோ, ஹெர்பர்ட் மார்க்யூஸ், மேக்ஸ் ஹோர்கிமர், ஹன்னா ஆரண்ட் மற்றும் எரிக் ப்ராம் போன்ற ஆய்வாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. நான் முதலில் சொன்ன இரண்டு பேரின் தாக்கம் என்னிடம் வெளிப்படையாகவே 15 முதல் 20 ஆண்டுகள் நீடித்தது. அதை பெரும்பாலான பேர் கண்டுணரவேயில்லை. நான் என்னை ஒரு இடதுசாரியாகவோ, தீவிர நிலைப்பாடு உள்ளவனாகவோ எப்போதும் சொல்லியதில்லை. எப்படியிருப்பினும் பிராங்க்பர்ட் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் மார்க்சியர்களாக கருதப்படுவதில்லை. ஏனெனில் இந்தியாவில் லெனினிஸ்டுகளே அதிகம். ட்ராட்ஸ்கிக்கு ஆங்காங்கே சில ஆதரவாளர்களும் இங்கு உண்டு. அவர்கள் ஸ்டாலினை உதறியவர்களே தவிர லெனினை அல்ல. அவர்கள் தங்கள் பற்றுதலை பல்வேறு சாயல்கள் கொண்ட நிலை உறுதிப்பாட்டுவாத அல்லது அதீத நிலை உறுதிப்பாட்டுவாத மார்க்சியத்துடன் கொண்டிருப்பவர்கள். சுவாரசியத்துக்குரிய வகையில் அப்படியான மார்க்சிய வடிவம் இப்போது பலவீனப்பட்டு விட்டது. உலகின் இப்பகுதியில் உள்ள விமர்சனவாதக் கோட்பாட்டைப் பயன்படுத்தும் இளைஞர்களில் ஒருவர் கூட எனது முறை விமர்னவாதக்கோட்பாட்டை ஒட்டியது என்று அறிந்துகொண்டதேயில்லை. இங்குள்ள அறிவார்த்த கலாசாரம் என்பது எப்படியென்று தெரிந்துகொள்ள இதுவொன்றே போதுமானது. உங்கள் கருத்தியல் அடையாளத்தை மற்றவர்கள் ஏற்பதற்கு அதை நீங்கள் சொந்தம்கொண்டாடி, வெட்டவெளிச்சமாக்க வேண்டும். ஏனெனில் கருத்தியல் என்பது நகர்புற மத்தியதர வர்க்கத்தினருக்கு மதநம்பிக்கைக்கான பதிலியாக இருப்பது காரணமாக இருக்கலாம்.

தெற்காசியாவில் கருத்தியல் என்பது மேலோட்டமானதே. ஒருவரது உள்ளார்ந்த வன்முறையை தேர்ந்தெடுத்த இலக்குகளை நோக்கி செலுத்துவதற்காகவே இந்த கருத்தியல் பிரதான தேவையாக உள்ளது. தெற்காசியர்கள் மிகவும் ஆக்ரோஷம் கொண்ட கருத்தியலாளர்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் கருத்தியல் பிணைப்பு மீது தொடர்ந்த சந்தேகம் கொண்டவர்களாக உள்ளனர். அதனால் தான் கார்ல் மார்க்சின் ஒரு வார்த்தையைக் கூட வாசிக்காத நிறைய மார்க்சியர்களை நீங்கள் இங்கே பார்க்கமுடிகிறது. அவரைப் படிப்பது விஷயமே அல்ல. ஆனால் 'நான் மார்க்சிஸ்ட்' என்று கோரிக்கொள்ளுதல் மிக முக்கியமானது.
(தொடரும்)

அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்

மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...