‘அமெரிக்கன் பியூட்டி’, ‘ஸ்பெக்டெர்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களின் இயக்குநரான சாம் மெண்டிஸின் தாத்தா ஆல்பிரட் மெண்டிஸ் முதல் உலகப் போரில் பங்குபெற்றவர். சேறு சகதியோடு பிணங்களைக் கடந்து ரத்த கோரங்களைப் பார்த்த அனுபவத்தில் அந்தத் தாத்தா வீடு வந்த பிறகும், அடிக்கடி தன் கைகளைக் கழுவிக்கொண்டே இருந்திருக்கிறார். அந்தப் போரின் கசப்பான அனுபவங்கள் அவரை 50 ஆண்டுகளுக்குப் பிறகும் துரத்தியதை சாம் மெண்டிஸ் கதைகளாகக் கேட்டதன் தாக்கமே இந்தப் படம். ‘1917’ படத்தின் ஆரம்பக் காட்சியே நீளமான பதுங்கு குழிகள் வழியாக ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு வடக்கு பிரான்ஸின் இன்னொரு எல்லைக்குச் செல்லும் இரண்டு பிரிட்டிஷ் வீரர்களின் பயணத்திலிருந்துதான் தொடங்குகிறது. நாள் ஏப்ரல் 6, 1917. திரைப்படம் முழுவதுமே ஒரே ஷாட் என்று தோன்றும் வகையில், நாமும் அவர்களுடன் அதே கால அளவில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. மொத்த சினிமாவிலும் ஒரு நீர்மத்தன்மையை உணரமுடிகிறது. ஜெர்மானியர் விரித்த பொறிக்குள், அது பொறியென்று தெரியாமல் நுழையவிருக்கும் 1,600 வீரர்களைக் காப்பாற்றுவதற்கான பயணம் அது. லான்ஸ் கார்ப்போரல்களாகக் குழந்தைத் த...