Skip to main content

திருப்பாகம்






திருப்பாகம் என்ற பெயரை இட்டு இணையத்தில் தேடியபோதுதான், அது  அழிந்துவரும் பதார்த்தங்களில் ஒன்று என்ற எண்ணம் ஏற்பட்டது.

எனக்கு Sweet tooth ஏற்பட்டுள்ளதால் இருக்கலாம். இந்த மழைநாள் மாலையில், எங்கள் ஊர் திருநெல்வேலியின் ஞாபகங்களில் ஒன்றாக இருக்கும் திருப்பாகம் என்னும் இனிப்பை சாப்பிடவேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. சில ஆசைகள் நிறைவேறிவிடக் கூடியவை. அடை,அவியல், சொதி போன்றவைகளைக் கூட அம்மாவை தொலைபேசியில் அழைத்து, அவள் கண்டபடி ஏசிக்கொண்டே கூறும் பக்குவத்தைக் கவனித்து, நாக்கின் நினைவிலிருக்கும் ருசியையும் மொழிபெயர்த்து கிட்டத்தட்ட திருநெல்வேலியை சென்னையில் உள்ள எங்கள் சமையலறைக்கு சில சமயங்களில் கொண்டுவந்து விடமுடியும். 


ஆனால் திருப்பாகம் என்னும் அரிய தெய்வீக இனிப்பைச் செய்வது சுலப சாத்தியமில்லை. தெய்வீக இனிப்பு என்று நான் சொல்வது மிகையாக இருக்கலாம். அதன் பெயரில் ஒரு மயக்கம் இருப்பதாக எண்ணலாம். ஆனால் திருப்பாகம் என்னும் பெயர் அந்த இனிப்புக்கு மிகவும் பொருத்தமானதே. ஆனால் திருப்பாகம் என்று சொல்லும்போது, சமயம், கோவில் தொடர்பான ஒரு உணர்வு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. 


வெண்ணைத் தாளில் மெல்லிதாக, டைமண்ட் வடிவில் பொதியப்பட்டிருக்கும். வாயில் போட்டு தித்திப்பின் படிகளில் மெதுவாக ஏறி உச்சத்தில் லேசாக பச்சைக் கற்பூரத்தின் சுவையுடன் கரையக்கூடியது. பால்கோவின் மென்மைக்கு கொஞ்சம் மேலாக சற்று நெருநெருவென்று இருக்கும்.  திருநெல்வேலி டவுனில் தெற்குரத வீதியில் உள்ள போத்தி கடையில், காலையில் வாக்கிங் என்ற பெயரில் வீட்டைவிட்டுக் கிளம்பும் பெரியவர்கள், சந்திப்பிள்ளையார் முக்கில் கூடி, அன்றைய அரசியலை விவாதித்து முடித்து, வீட்டுக்குப் போகும்போது, நெய் உப்புமாவையும், ஒரு திருப்பாகத்தையும் விழுங்கிவிட்டு, ஒரு காபியையும் வக்கணையாக சாப்பிட்டுவிட்டு, கலோரிகளை ஏற்றி, வீட்டிலும் ‘பெயருக்கு காலை உணவுக்கு கொஞ்சம் போல வயிற்றில் இடம் வைத்துவிட்டுச் செல்வார்கள். அடுத்த தடவை திருநெல்வேலி போகும்போது, தெற்குரதவீதிப்பக்கம் திருப்பாகத்தை ருசிக்கவாவது போய்வர வேண்டும்.


என் அம்மாவிடம் திருப்பாகம் பற்றிக் கேட்க தொலைபேசியில் கூப்பிட்டேன். அவளுக்கு ஞாபகத்தில் இல்லை . பாசிப்பருப்பு மாவில் செய்வார்கள் என்று சொல்லிவிட்டு எனக்குத் தெரியவில்லை என்று போனை வைத்துவிட்டாள். நான் ஊரிலிருந்து வெளியேறிய பிறகு, அவளது சமையல் கைருசியும் துரதிர்ஷ்டவசமாக தேய்ந்துவருகிறது.   

திருநெல்வேலியில் ஓரளவு  வசதியானவர் கல்யாணங்களில் திருப்பாகம், இலையின் ஓரத்தில் இடது பக்கத்தில் பிரிப்பதற்கு ஏற்றாற்போல வெண்ணைத் தாளின் மடிப்பில் இடம்பெறுவது உண்டு. இப்போது அங்கே நடக்கும் கல்யாணங்களில் திருப்பாகம் போடுகிறார்களா, விசாரிக்க வேண்டும்.  


புட்டாரத்தி அம்மன் கோவில் தெரு அத்தையை தொலைபேசியில் கூப்பிட்டேன். கடலை மாவு,பால்,சீனி,நெய் எல்லாம் சேர்த்து கடைசியில் பச்சைக் கற்பூரத்தைப் போடுவார்கள் என்று சொன்னார். பக்குவம் சொல்ல அவருக்கும் தெரியவில்லை.  திருப்பாகம் செய்வதற்கென்றே ஸ்பெசல் ஆட்கள் கல்யாணங்களில் அழைக்கப்படுவார்களாம்.

திருநெல்வேலியில் திருப்பாகம் இருக்கிறது என்ற தகவல் நிம்மதியாக இருக்கிறது. இல்லையெனில் எனது கற்பனை ஊரில் உள்ள ஒரு கற்பனை இனிப்பு என்று என் மகளும், நண்பர்களும் ஒரு நாள் கேலி செய்யகூடும். 


திருப்பாகம் போன்று நினைவில் இருக்கும் வடிவங்கள் மற்றும் ருசிகள்...


Comments

திருப்பாகம் தேடி இங்கே வந்தேன்!

அருமை யானை!
அது உண்மையில் திரிப்பாகம்...திருப்பாகம் என்று சொல்லிச் சொல்லிப் பழகப்பட்டுவிட்டது
Chandrakumar said…
உடையார்பட்டி விசாக பவன் ஹோட்டலில் திருப்பாகம் கிடைக்கிறது
Chandrakumar said…
உடையார் பட்டி விசாக பவன் ஹோட்டலில் திருப்பாகம் கிடைக்கிறது