ஷங்கர்ராமசுப்ரமணியன்
எனது வளர்ப்பு மீன்
தொட்டி அழுக்கடையும் போதும்,கலங்கியிருக்கும் தோறும் நான் பதற்றத்துக்குள்ளாகிறேன்.
நான் நம்பிக்கையில்லாமல், கலங்கிக் குழம்பும் வேளைகளிலும், எனது மீன்தொட்டியின்
நீர் அழுகத் தொடங்குகிறது. மீன்களின் இயக்கம் நீரில் குறைகிறது. அவை மூச்சுவிடத்
திணறுவதை நான் அனுபவிப்பேன். அதன் தலைகள் ரத்தச்சிவப்பை அடைகின்றன.
எனது மீன்தொட்டியில்
மூன்று தங்க மீன்கள் உள்ளன. ஒன்று மூத்தது, பெரியது. இரண்டு மீன்கள்
குட்டிகள். அதில் எது ஆண், எது பெண் என்று எனக்குத் தெரியாது. நான் பெரிய மீனை
அம்மா என்றும் குட்டிகளை குழந்தைகள் என்றும் கற்பிதம் செய்துள்ளேன். அம்மா மீனின்
பெயர் மீனாட்சி. அதன் உடலை விட அதன் வால் பெரிதாக வளர்ந்துவிட்டது, என் கனவு,
லட்சியங்கள், ஆசைகள் மற்றும் கற்பனைகளைப் போல வளர்ந்துவிட்டது. மீனின் உடலை விட
நீளமான மெல்லிய வாலிழையின் நுட்பங்கள்தான் அழகாக இருக்கிறது, அதுவும் என் கனவைப்
போலவும் லட்சியங்களைப் போலவும். நான் கொடுக்கும் உணவுத்துகள் மட்டுமே அந்த வாலுக்கு காரணமில்லை. மீனாட்சியின் வால் இழை வடிவமைப்பை ஒத்திருக்கும்
வேறு தங்கமீன்கள் முன்பு பிறக்கவில்லை. மீனாட்சியின் பிரதி இனியும் வேறு எங்கும் பிறக்கப்போவதில்லை.
கடவுள் பற்றி
நூற்றாண்டுகள் நடந்த விவாதங்களுக்குப் பிறகு இந்த எளிமையான முடிவுக்கு வந்து
சேர்கிறேன். மீனாட்சியின் வாலிழையின் தனித்தன்மையையும் அழகையும் கொண்டே அதைப் படைத்தவன்
ஒருவன் இருக்கிறான். அதன் தனித்துவ வால் தொட்டிக்குள் சுற்றிச்
சுழன்று, எடையேயற்ற இலையாய், காற்றின் நீரில் விசிறி ஆடுவதைக் கண்டு, அதைப்
படைத்தவன் ஒப்புயர்வற்ற கலைஞன்தான். மீனாட்சியின் உடலைவிட அதன் இருப்பை
அழகாக்குவது அதன் வால்தான். இந்த உலகில் இதைவிட எளிமையான உண்மை வேறு எப்படி இருக்கமுடியும்.
Comments