நாங்கள் தூத்துக்குடிக்குக்
குடியேறிய பின்னர், காய்கறிக் கடை, பலசரக்குக் கடை, சலூன், பாத்திரக்கடை, பேக்கரி,
மின் பொருட்கள் விற்கும் கடை என எல்லா சின்ன, பெரிய கடைகளிலும் கல்லாவில் உட்கார்ந்திருப்பவர்
மேல் டி. ஆறுமுகம் பிள்ளை என்ற பெயரில் மாலையிட்ட சதுர கருப்பு வெள்ளைப் புகைப்பட சட்டகத்தில்
ஒரு முகத்தை எல்லா இடங்களிலும் பார்த்தேன். இவர் யாரு? எல்லா இடத்திலும் இவர் போட்டோ
மாட்டியிருக்காங்களே? என்று அம்மாவிடம் கேட்டேன்.
அவர் டி. ஏ
என்னும் தூத்துக்குடியின் புகழ்பெற்ற ஜவுளிக்கடையின் முதலாளியாக இருந்தவர் என்றும்,
அவரிடம் பணிபுரிந்தவர்கள், அவரால் பலன் பெற்றவர்கள் எல்லாரும் அவரது புகைப்படத்தை தங்களது
கடைகளில் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாள். எனது பதினேழு, பதினெட்டு வயதுவரை டி.
ஆறுமுகம் பிள்ளையை தூத்துக்குடிக்குப் போகும்போதெல்லாம் துருவித் தேடிப் பார்த்திருக்கிறேன்.
தூத்துக்குடியோடு எனக்கு அடையாளமாக இருந்த புகைப்படம் அது.
ஆறுமுகம் பிள்ளையின்
புகைப்படம் அதிர்ஷ்டம் கொடுப்பதான நம்பிக்கையும் ஒரு காலகட்டத்தில் நிலவியிருக்கலாம்.
ஒரு தலைமுறை
கடந்துவிட்டது. சமீபத்தில் இரண்டு மூன்று முறை தூத்துக்குடிக்குப் போகும்போது, ஆறுமுகம்
பிள்ளை புகைப்படமாக வைக்கப்படும் இடத்திலிருந்து பெரும்பாலும் மறைந்துவிட்டதைப் பார்க்க
முடிந்தது. கல்லா இப்போது அடுத்த தலைமுறைக் குழந்தைகளால் நிரப்பப்பட்டு விட்டது. தூத்துக்குடியில்
இப்போது வசிக்கும் எனது பெரியம்மா மகன் ராஜாவிடமும் கேட்டேன், ஆறுமுகம் பிள்ளை புகைப்படத்தை
சமீபத்தில் கடைகளில் பார்த்தாயா என்று.
ஆறுமுகம் பிள்ளையின்
கடையைத் தவிர வேறு எங்கும் காணமுடிவது இல்லை என்று சொன்னான்.
இணையத்தில்
அவரது புகைப்படம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். இல்லை. எனது நினைவில் ஆறுமுகம்
பிள்ளையின் முகம் தேசலாக ஞாபகத்தில் இருக்கிறது.
அரசியல், கலை,
இலக்கியம், சினிமா, ஊடகம், குற்றம் என எல்லா இடங்களிலும் இப்படி சிலர் பெரும்பான்மையானவர்களின்
கற்பனையையும், நினைவையும் ஆறுமுகம் பிள்ளையைப் போல ஆக்கிரமிக்கும் படிமங்களாக ஒரு காலப்பகுதியில்
இருக்கின்றனர்.
பின்னர் அவர்கள்
துளிச்சுவடும் இன்றி மறைந்துவிடுகின்றனர்.
Comments