Skip to main content

சூழலின் கனி

                                    லக்ஷ்மி மணிவண்ணன்




பாறைகளைக் கண்ணிவெடி வைத்துத்
தகர்ப்பவன்
உளியின் மீது அடிக்கும்
சுத்தியின்
கந்தகச் சிறுதுவாரப் பெரு ஓலம்
பச்சைவெயில் மேகங்களில் எதிரொலிக்கிறது.
திரியிட்டுக் கொளுத்திய
வெடிச் சத்தத்தில்
மனிதர்களை வெளியேறச் சொல்லும் ஊழ்
கற்களை நகரங்களை நோக்கியும்
பள்ளங்களை நோக்கியும்
பாரமேற்றுகிறது.

கட்டிடங்கள் உயர உயர
கடற்கரைகள் உயர உயர
சாலைகள் அகலமாக மாக
உச்சிமலையில் நடக்கிறது
தவ நடனம்

அடுத்த கண்ணி வெடிக்கு
உடும்புப் பாறையில் உடல் பிடித்து
யானைப் பாதக் கரங்களால்
அவன் பற்றியேறுவதை
வினோத விலங்கின் விஸ்ரூபமெனக்
கண்டு நகைக்கும்
பெருநகரத்து மேல்தளத்துக் குழந்தைக்குத்
திரும்பும் அவனது பார்வை
கடுமை நிறைந்த தொரு உளியின் சீற்றம்

ஒவ்வொரு உளிச்சத்தமும்
சிதறிக் கிடக்கும் ஒரு கருங்கற்துண்டு
பசிக்கும் குழந்தைக்கான
சில பருக்கை நாணயம்


வார இறுதி நாளில்
ஏராளமான உளிச் சத்தங்களோடும்
சோற்றுப்பருக்கைகளோடும்
அவன்
சாராயக் கடையில் நுழையும்போது
அஞ்சி
கடை பின் வாங்குகிறது
போதை தயக்கம் காட்டுகிறது
தின் பண்டங்கள் தங்களை
ஒளிக்க முற்படுகின்றன
இறைச்சித் துண்டை பலாத்காரமாய்
வெட்டியிழுப்பவனைப் போல
அனைத்தையும் உயிர்ப்பிக்கிறான்





உளிச்சத்தங்கள் நிரம்பிய
நாணயங்களோடு வண்டியேறியவன்
கொடுத்த பையில் குழந்தைகள்
கை துளாவித் தளர
மனைவியை கற்பாறையெனத் தகர்த்துத்
துயில்கிறான்.

கனவில்
வழிநெடுகச் சிந்திய
நாணயங்களைப் பொறுக்கி
தின் பண்டங்களாலும்
வண்ண பலூன்களாலும்
திளைக்கிறார்கள்
வந்த வழி பாதையெல்லாம்
நிற்கும் குழந்தைகள்

***

சமீபத்தில் என்னால் எழுதப்பட்ட சில கவிதைகளில் ‘பெரு ஓலம்’ என்கிற தலைப்பிடப்பட்ட இக்கவிதையும் ஒன்று. சில கவிதைகள் எனில் எழுதியவை உண்மையிலேயே சில கவிதைகள் தான். கை விரல் எண்ணிக்கைக்குள் வந்து சேரக்கூடியவை அவை. இரண்டு வருடங்களில் கதைகள் எதையுமே எழுதவில்லை. பெரும்பாலும் சுயசரிதைத் தன்மை வாய்ந்த கட்டுரைகளையே எழுதுகிறேன். எழுதப்பட்ட சில கவிதைகளை பாலை நிலவன் கொண்டு வந்துள்ள நீட்சி இதழுக்குத் தந்தேன். கட்டுரைகளுக்கான எதிர்வினைகளை எப்படியிருப்பினும் உடனடியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. கதைகள், கவிதைகள் பற்றி அறிய பத்து வருடங்களேனும் சுமந்திருக்கவேண்டும். பின்பு ஒரு நியாயமான ஒரு குரல் வந்து செவியில் மோதும். எனது படைப்புகளின் விதியிது. சில படைப்பாளிகளுக்கோ பத்தாண்டுகளுக்குப் பின்னரும் விதி கைகூடுவதில்லை. சிறுபத்திரிக்கைகளில் மந்திரச் சிமிழ், நீட்சி  ஆகிய இரண்டும் எனது கைவசம் உள்ளன. நீட்சியில் சிற்றிதழின் மனோநிலையும், அதற்கான முகாந்திரமும் அமைய பெற்றிருக்கிறது.  ஸோஸா, போர்ஹெஸ் கத்தாரி என வாசிப்பிற்கான  பக்கங்களை உள்ளடக்கியிருக்கிறது மந்திர சிமிழ் இதழ்.  சிலேட் இதழை  கொண்டு வரும் முனைப்பில் இருக்கிறேன். பொங்கலுக்கு பின்பு வேலையைச் சூடுபிடிக்க வேண்டும். அதில் பூர்வீக வைத்தியர்கள், சாமியாடிகள் ஆகியோரோடு அல்தூஸரையும் அமரச் செய்யவேண்டும்.

என்னுடைய வசிப்பிடத்தின் அருகில் ஒரு படிப்பகம் உண்டு. வழக்கமாக வந்து சேரும் இதழ்களை படித்தபின் அங்கு கொண்டு போடுவது வழக்கம். அம்ருதா, உயிர் எழுத்து, குமுதம்-தீராநதி போன்ற இதழ்கள்  இவற்றில் அடக்கம். எனது இச்செயல்பாட்டிற்காக குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பலமுறை கூட்டங்களில் நன்றி பாராட்டியிருக்கிறார்கள்.அக்கூட்டங்களுக்கு செல்லும் பழக்கம் எனக்கில்லை. எவரேனும் வந்து இவ்வாறு நன்றி பாராட்டினார்கள் என்று ஏதோ பெருமை செய்துவிட்டது போன்ற பெருமிதத்துடன்  கூறுவார்கள். அவர்கள் இவ்விதழ்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இதழ்கள் என்று சுட்டமாட்டார்கள். கதைப்புத்தகங்கள் என அழைப்பார்கள். குடியிருப்பில் வசிப்பவர்கள் பெரும்பான்மையினர் அரசு அதிகாரிகள். ஓய்வுபெற்றவர்கள். மெத்தப்படித்தவர்கள். அவர்களுடைய தவ வாழ்க்கையில் முதன் முறையாக இப்போதுதான் இத்தகைய இழ்களைக் கண்ணுறுகிறார்கள். நாளிதழ்கள், வாரயிதழ்களைத் தவிர்த்து பிற எல்லாமே அவர்களைப் பொறுத்த வரையில் கதைப்புத்தகங்கள்தான். ஒரு மாத காலத்திற்கு முன்பு அதன் தலைவர் என்னை அழைத்து நீங்கள் படிப்பகத்தில் போடும் இதழ்கள் எல்லாம் தீவிரவாத இதழ்கள் என்று சொல்கிறார்கள். நள்ளிரவில் உங்கள் வீட்டில் விளக்கு எரிகிறது. அறிமுகமற்றவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து செல்கிறார்கள் உங்களையும் தீவிரவாதி என்கிறார்கள். எனவே புத்தகங்களை நீங்கள் படிப்பகத்தில் போடக்கூடாது என்று சொன்னார். அய்யா மேற்படி இதழ்களை படிப்பகத்தில் போட்டே தீரவேண்டும் என்று உடும்புப் பிடி ஏதும் எனக்கு இல்லை. வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு குப்பையாகக் கிடப்பதால்தான் இங்கே கொண்டு போடுகிறேன்.  மற்றபடியும் இவை அரசாங்கத்தில் பதிவு பெற்ற இதழ்கள்தான். மாவட்ட மைய நூலகத்தில் அரசாங்கமே வரவழைக்கும் இதழ்கள்தான் இவை என்றேன். தீராநதி, குமுதம் குழுமத்தின் இதழ். அதனை நீங்கள் தீவிரவாத இதழ் என்று கூறினால் அதனைக்காட்டிலும் பெருமை குமுதம் குழுமத்திற்கு இருக்க இயலாது. அம்ருதா இதழின் சிறப்பாசிரியர்களுள் ஒருவர் ஓய்வுபெற்ற  காவல்துறை அதிகாரி திலகவதி என பதில் கூறினேன். உங்களிடம் பேச விரும்பவில்லை. உங்களுக்கு இங்கே ஒரு அதிகாரமும் கிடையாது என்று நான் நலசங்கத்தின் ஆயுட் கால உறுப்பினர் என்பதைக்கூட நினைவில் தவறி பதற்றமானார். இதுவரையில் கிறுக்கன், குடிகாரன் என்கிற சமூக அந்தஸ்து மட்டுமே எனக்கிருந்தவை. மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் தீவிரவாதி என்கிற பதக்கமும் இணைந்திருப்பது பெருமை. சில மாதங்களாக இவ்விதழ்களில் வெளியான கூடங்குளம் அணு உலைகள் எதிர்ப்புப் பிரசுரங்கள்தான் இவர்களின்  திடீர் முடிவுக்கு காரணமாக இருக்குமோ என்று எனக்கொரு எண்ணம். எவ்வாறும் இருக்கட்டும். துப்பாக்கி கையில் கிடைத்தால் மிக அழகாகவும் லாவகமாகவும் எனக்கு அதனை கையாளத் தெரியும் என்பது சத்தியம்தான். முறைப்படி அதற்கு அரசாங்கத்திலேயே பயிற்சி பெற்ற அனுபவமும் எனக்குண்டு.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில்தான் பா.வெங்கடேசனிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. எனது தொலைபேசி சரியாகத்தான் வேலை செய்கிறதா என்கிற சந்தேகமும் எழுந்தது. அவ்வப்போது எனக்கு விசித்திரமான அழைப்புகள் வருவதுண்டு. ஒருமுறை வெளிநாட்டு அழைப்பு ஒன்று என்னுடைய புகைப்படத்தைப் பார்த்ததாகவும் அது வயதான சிவாஜிகணேசனை நினைவுபடுத்துவதாகவும் கூறியது. விதியே விதியே என் செய்வேன் விதியே எனக் கேட்டுக்கொண்டேன். தொடர்ந்து அதற்குப் பணிஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஒரு மணிநேரம் ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டு சிவாஜிகணேசனுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டது. பின்பு ஒருநாள் போதையிலிருக்கும் போது மறுமுனையில் நான் பேசுவதைக் கேட்டதும் நிறுத்திக் கொண்டது. இதுவொரு மாதிரி. இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.


பா.வெங்கடேசனின் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஒரு இதழில் ஊழியம் செய்தபோது அவருடைய ஒருகதையை சிலாகித்து ஒரு கடிதம் எழுதியிருப்பதாக நினைவுபடுத்திப் பேசினார். பொதுவாகவே என்னுடைய தனிப்பட்ட கடிதங்களை சக படைப்பாளிகளோ நண்பர்களோ அவ்வாறே நம்புவதும், எடுத்துக், கொள்வதும் நல்லதல்ல. அபூர்வமாக சில கடிதங்கள்தான் தப்பிப்பவை. ஒரு முறை கவிஞர் ஒருவருக்கு நீங்கள் மஹாகவி எனக்கூறி கடிதம் எழுதினேன். அதனை அவ்வாறே முழுச்சுரணையோடு ஏற்றுக்கொண்டார். தகுதியை பிறர்சுட்டும்போது அடக்கம் காட்டுவது அடக்கமுடைமை அல்ல என்பது அவர் கொண்ட கருத்து. தொடர்ந்து அதன் காரணமாகவே அல்லல்பட்டு படாதப்பாடுபட்டு கூடுமிடங்களில் தேம்பித் தேம்பி அழுது வருகிறார் என்பது வேறுவிஷயம். பா.வெங்கடேசன் ‘மழை குரல் தனிமை’ எனும் அவருடைய சிறந்த கதை ஒன்று நூலாக வருவதாகக் கூறி அதற்கு என்னுடைய எண்ணத்தை முன்னுரையாக எழுதக் கேட்டார். அவருடைய கதைக்கு எஸ்.சண்முகமோ  பூரண சந்திரனோ, நாகர்ஜூனனோ, பிரம்மராஜனோ அல்லது இந்த வகையாறாக்களின் துதிக்கைகளோ எழுதுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அவர் தனது  லக்ஷ்ய பிடிவாதங்களை தளர்த்திக் கொள்வார் எனில் சி.மோகன் எழுதலாம். எழுதியனுப்பிவிட்டேன். அதிர்ஷடவசமாக அதனை அவரால் தொகுப்பில் பிரசுரிக்க இயலவில்லை. பின்னர் கேள்விப்பட்ட போது தமிழ் சூழலிலிருந்து ஒவ்வொருவர் ஒரு கதைக்கென முன்னுரை எழுதி தொகுப்பு நூல் வெளிவரயிருப்பதாக அறிந்தேன். அந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் புக்கர் போன்ற குறிக்கோள் விருதுகள் கிடைக்காமல் போனாலும்கூட கின்னஸ் சாதனையில் இடம்பெறக்கூடும். ஏனெனில் கதைக்கு ஒருவரென முன்னுரை எழுதி வெளிவரும் முதல் தொகுப்பு நூல் உலகிலேயே இதுவாகத்தானிருக்கவேண்டும். ‘சூழலின் கனி’ என்கிற தலைப்பில் மழையின் குரல் தனிமை கதைக்கான எனது முன்னுரை இது.


மழையின் குரல் தனிமை

பா.வெங்கடேசனின் படைப்புலகம் குறித்து எழுதும் அருகதையும் ஒழுக்கமும் எனது உரைநடைக்கு உண்டு என்று தோன்றவில்லை. அவரது படைப்புலகம் குறித்த பார்வையை உருவாக்க கடினமான புத்தி ஸ்வாதீனமும், அறிவுலகங்களுடன் ஓரளவேனும் முழுமேன்மையான தொடர்பும் சக்தியும் அவசியம். நவீனத்திற்கு முந்தைய வங்க இலக்கியங்களுடனான பழக்கமும் அதற்கு வேண்டும். தமிழ் படைப்புலகத்தின் முழுமையான அக மதிப்பீடு கொண்ட உரைநடை அதற்குத் தேவை. எனது உரைநடைக்கு நிச்சயமாக அந்தத் துணிவும் தெம்பும் கிடையாது என்பதை நன்கறிவேன். அறிவுலகத்துடனும், படைப்புலகத்துடனுமான எனது தொடர்பு கள்ள தொடர்புக்கு நிகரானது. படைப்புகளை வாசிக்கும் எனது பழக்கம் கண் தெரியாதவர்கள் தடவி வாசிக்கும் முறைக்கு நிகரானது. சில சமயங்களில் இப்பழக்கம் வழக்கமான வாசிப்பில் உணர இயலாதவற்றை வாசிக்க இடம் தருவதும் உண்டு. எனினும் சங்கருக்கு கதவற்ற வீடு கவிதைத் தொகுப்பிற்குப் பின் வந்த வீரலெட்சுமி, எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம், அப்பாவை புனிதப்படுத்துதல். ஆகிய எனது மூன்று கவிதைத் தொகுதிகளுக்கும் பிடித்தமான அவருடைய மழையின் குரல் தனிமை கதை அணுகத் தெம்பைத்தருகிறது. மழையின் குரல் தனிமை கதை  பிரசுரம் கண்ட சந்தர்ப்பத்தில் படைப்புத் திட்டங்கள் ஏதும் தமிழில் பிரபலமடையவில்லை. படைப்பியக்கமும் படைப்புத்திட்டங்களும் வேறுவேறானவை என்பதைக் கூறவேண்டிய அவசியம் அப்போது இல்லை.

மௌனி, லா.ச.ரா.ஜானகிராமன், நகுலன், பிரமிள் ஆகியோர் குறித்தோ வண்ணநிலவன் வண்ணதாசன் குறித்தோ ஒன்றிரண்டு வாக்கியங்களையேனும் உருவாக்க தகுந்த அகமதிப்பீடு எனக்கு உண்டு. இவர்கள் தனித்தனியாக அவரவர்களுக்கே  உரித்தான வகையில் ஏதோ ஒரு விதத்தில் எனது படைப்புகளுக்குப் பிடித்தமானவர்கள். தெருத்தெருவாக அலைவுற்ற புதுமைப்பித்தனை பின்வந்த தமிழ்ச்சமூகம் மீண்டும் தெருவில் இறக்கி வாங்கு வாங்கென்று தகர்த்துவிட்டது. இதுவொரு சோகம். புதுமைப்பித்தனே ஒட்டுமொத்தமாக பெருத்த சோகம் தான். மௌனி குறித்து அக்கறை கொள்ளாத புதுமைப்பித்தனைப் பற்றிய பார்வைகள் நிச்சயமாக புதுமைப்பித்தனை அறியும் தகுதி படைத்தவை அல்ல. புதுமைப் பித்தன் கட்சி கோஷத்தைப் போல பிரபலமடைந்தார். பிறருடைய படைப்புத்திட்டங்களுக்காக புதுமைப்பித்தன் மீண்டும் தமிழில் காவு கொடுக்கப்பட்டார். நவீன விமர்சனப் பார்வையின் கொடுங்கோன்மையின் செயல்பாட்டுப் பிரதிபலன்களில் ஒன்று இது. ஒரு காலத்தின் விமர்சனப் பார்வை அல்லது அதன் உள்கருத்துகள் எப்போதுமே போதாமைகள் நிறைந்தவை. கருத்தும் படைப்பும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை என்பதை அறியாதவை அவை. லா.ச.ரா, ஜானகிராமன் ஆகியோர் ஒடுக்கப்படுவதற்கும் விமர்சனப் பார்வைகளின் போதாமைகளே காரணமாக அமைந்தன. ஒரு படைப்பை அணுகும் விமர்சனப் பார்வை படைப்பு நிலையை எய்தாத வரையில் அது ஒரு விமர்சனப் பார்வையாக நிலைகொள்ள தகுதியற்றது. அசோகமித்திரனின் விமர்சனப் பார்வை இதிலிருந்து தப்பிப்பதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது அதுபோல பிரமிளுடையதும். வெங்கட் சாமிநாதனுடையதையும் ஓரளவுக்குச் சுட்டலாம். விமர்சனப் பார்வையில் ஆகத் தகுதி குறைந்த அவருடைய பாஷையிலேயே சொல்வதாயின் ஆகத் தரக்குறைவான உரைநடையைக் கையாண்டவர் சுந்தர ராமசாமி. ஒரு விமர்சனப் பார்வை படைப்பு வாசிக்கப்படுவதற்குரிய பெரிய காலதாமத்தை நிச்சயமாக படைப்புக்குத் தரக்கூடாது. படைப்பை காலத்தின் முன் மூழ்கடிக்கக்கூடாது. சுந்தர ராமசாமியின் உரைநடை வண்ண தாசனுக்கு இத்தகைய ஒரு நீதியின்மையை ஏற்படுத்தியது. வண்ணதாசனின் படைப்புகள் விமர்சனங்களின் ஒடுக்குதலுக்கு இலக்கானவை. எனினும் வாசகபலம் அவரை தப்பிக்கச் செய்தது. லா.ச.ராவின் படைப்புகள் நிச்சயமாக மீள் பரிசீலனை செய்யப்படவேண்டியவை. கருத்துக்களுக்கு படைப்பை மூழ்கடிக்கச் செய்யும் நீதியின்மை ஒருபோதும் கிடையாது. வண்ணநிலவன் போன்ற ஒரு படைப்பாளி உருவான மொழியில் யுவான் ருல்போவெல்லாம் கொண்டாடப்படவேண்டியவரே அல்ல. அதே சமயத்தில் வண்ணநிலவன் துக்ளக் இதழில் எழுதுகிற பொதுப்புத்தியை படிக்கும் சந்தர்ப்பம் அவரது வாசகர்களுக்கு அமையாதிருக்க வேண்டும். தமிழ் விமர்சன மொழியின் துர்பாக்கியம் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத் தன்மையை தொடர்ந்து கைக்கொண்டிருந்தது என்பது தான். பாதிரியின் அங்கியைக் கழற்றி எறியாத தமிழ் விமர்சகர்கள் தான் பெரும்பாலோர். பிரமிள் மட்டுமே மாறுபட்டிருந்தார். நாகார்ஜூனன் அச்சு அசல் வெள்ளை அங்கி கிறிஸ்தவ ஆங்கிலோ தமிழ் பாதிரி. தமிழ் சிறு பத்திரிக்கைச் சூழலில் மிகப்பெரிய துர்பாக்கியமான இதழ் என்று அவர் நடத்திய வித்தியாசம் இதழைச் சுட்டலாம். கிறிஸ்துவ ஜெபக்கூட்டங்களில் வெள்ளைக்காரிகள் உட்கார்ந்திருப்பதை போல மேற்கோள்களையும் பிற ஆசிரியர்களின் பெயர்களையும் தோள்களில் தூக்கிச் சுமக்கும் உரைநடைகளின் தர்மகர்த்தா அவர். ஒரு வரியைக் கூட சுயமாக அவரது உரைநடை உருவாக்கியதில்லை. எல்லாம் அவர் சொன்னார் அவர் சொன்னார் அவர் சொன்னார். அவர் யார்? தெரியாது. தமிழவன் பங்ககேற்கும் சிற்றிதழ் இயக்கங்கள் அனைத்தும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களாகி விடுகின்றன. இது எவ்வாறு குணாதிசயம் கொண்டு நிகழ்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

சுவாமி விவேகானந்தர் ஒரு சிறந்த கிறிஸ்துவர் என்று சொன்னால் எவரேனும் நம்புவார்களா? பிறப்பால் அவர் அப்படியல்ல என்று கூறிய வண்ணம் இங்கு கூடி திரள ஒரு கூட்டு மனமே காத்திருக்கிறது. ஸ்தூலமான பிறப்பின் அடிப்படையை பற்றியல்ல பேசவிரும்புவது. வடிவமற்ற அகத்தின் பிறப்பைப்பற்றி பேசியாகவேண்டும். சுவாமி விவேகானந்தரை விடுவோம். தமிழில் இந்துத்வா என பலரால் அடையாளப்படுத்தப்படும் ஜெயமோகன் ஒரு கிறிஸ்தவர்தான். தமிழ் மார்க்ஸிய பிரதிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டேயிருக்கும் மாற்று கிறிஸ்தவப் பிரதியை அல்லது சிறந்த கிறிஸ்தவப் பிரதியை உருவாக்கப் பாடுபடுகிறார். இவர்களுக்கு பூக்கோ சாக்கோ என்றால் எதிர் நிலையில் அவருக்கு யதியோ குதியோ கைத்தடி போல் வேண்டும். இல்லையெனில் உயிர் பிழைக்க இயலாது என்கிற சாவெண்ணம். இங்குள்ள பூர்வீகத்தின் தன்மைகளிலிருந்து படைப்புகளும், விமர்சன படைப்புகளும் உருவாகவேண்டுமெனில் இத்தடையிலிருந்து முதலில் விடுபடவேண்டும். பூர்வீக தன்மை என்பதை வட்டாரத் தன்மை என்கிற பொருளில் சுட்டவில்லை. நிச்சயமாக ராம கிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு கிறிஸ்தவரே அல்ல என்று கூறமுடியும். அதுபோல் மாயம்மா. இங்கு இன்று பிரபலமாகி விற்பனையாகிக் கொண்டிருக்கும் யோக குருமார்கள் ஒருவர் பாக்கியின்றி அனைவரும் கிறிஸ்தவர்கள். படைப்பு பற்றி பேசுவதற்கும் இவற்றிற்கெல்லாம் ஏதேனும் சம்பந்தம் உண்டா?. இந்து, கிறிஸ்து, இஸ்லாம் என்று உருவாக்கப்பட்டிருக்கும் பேரர்த்தங்களைப் பற்றித்தான் இவ்வுரை நடைபேசுகிறது என்று சிப்பாய்கள் எண்ணம் கொண்டால் அந்த ஜென்ம சாபத்திற்கு எனது உரைநடையிடம் பதிலில்லை

கோணங்கி, பா.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகள் பற்றிப்பேச மேற்கண்ட பீடிகைகளை முதலில் புரிந்து கொள்வது அவசியம் என்றே கருதுகிறேன். யோசித்துப் பார்த்தால் எனது கவிதைகள் பூர்வீகத்தின் தெய்வங்களை அழைப்பதிலும் பின்னேறுவதிலும் கதைகள் கிறிஸ்தவத்தை நோக்கி முன்னேறுவதிலும் தோற்றுக் கொண்டிருப்பவை. கோணங்கி, பா.வெங்கடேசன், ஆகியோரின் படைப்புகள் பூர்வீகத்தைத் பின்னேறுகின்றன. கோணங்கி பின்னேற்றத்தின் கடின ஆழத்திலிருப்பதால் வெளிப்படையாகப் புலப்பட மறுக்கிறார். வெங்கடேசன் புலப்படுபவர். அதற்கு மழையின் குரல் தனிமை ‘கதை’ உதாரணம்.

தமிழில் மாறும் காலத்தின் முன்பாக படைப்பும் உரைநடையும் நிலைக்கொண்டபோது புதிய படைப்பு நெருக்கடிகளை நோக்கி தமிழ் படைப்புலகம் திரண்டபோது எண்பதுகளுக்கு பிறகு உத்வேகம் புதிய படைப்பாளிகளுக்குத் தேவைப்பட்டது. இந்நெருக்கடியிலிருந்து சில மனவோட்ட வகைகள் உருவாயின. வண்ண நிலவன் உட்பட இதுகாறும் உருவான அனைத்து படைப்புகளையும் ஒன்றுமில்லை எனும் ஒற்றைக்குரலால் சில காரணங்களைக்கூறி புறக்கணித்துவிட்டு அகத்தால் முன்னேறிவிட்டதான மயக்கத்தைக் கொண்டிருந்தது முதல்வகை. இவ்வகை எல்லாவற்றையும் சிந்தனைப் பள்ளிகளின் துணைகொண்டு தாண்டி வந்துவிட்டோம் என்றும் அப்பள்ளிகளின் உதவியுடனேயே புதிய படைப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கையையும் கொண்டிருந்தது. கலாச்சாரத் தணிக்கை செய்யப்பட்டவற்றை எழுதுவதற்கும் பாடதிட்டங்களை படைப்புகளில் அப்படியே அமல் படுத்துவதற்கும் மயக்கம் உதவிற்று. தமிழவன், சாரு நிவேதிதா, தொடங்கி எம்.ஜி.சுரேஷ் வரையில் இப்போக்கு நிலவுகிறது. இவர்கள் ஆதார சுருதிகள் எனில் இழைகள் ஏராளம். ஒருமுறை தமிழவன் உங்கள் ஊர்காரர் தானே என்று ஒருவர் கேட்டபோது நிச்சயமாகவா என்று தெரியாது எம்.ஜி.சுரேஷின் தகப்பனார்தானே அவர் எனத்திருப்பிக் கேட்டேன். வாசிப்பின் வழியே கண்தெரியாத என்னைப்போன்ற ஒருவருக்கு முழுமையற்ற இத்தகைய அவதானிப்புகள்தான் சாத்தியம்? இவ்வகையினருக்கு தலைமைச் செயலகம் பாரிஸ், பிரான்ஸ்நாடு. உச்ச பட்சம் என்பது ‘நோபல் விருது’ நோபல் விருது நம்மூர் சாஹித்திய அகாதமி போல பெரும்பாலான சமயங்களில் குப்பைகளுக்குத் தரப்படுபவை என்பதை உணரும் சக்தியை மயக்கம் தடுத்துவிடுகிறது. இவ்வகையினர் தமிழ்ச்சூழலில் மட்டும் உருவானவர்கள் அல்ல.உலகம் முழுவதிலுமே இவ்வகையினர் உருவானார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் பிரான்ஸில் நடந்த கலாச்சார எழுச்சி இதற்கு காரணமாக அமைந்தது. தஸ்தேயேவெஸ்கி வாழ்ந்த காலத்தில் ரஷ்யாவிலும் இவ்வகையினர் பிரபலமாயிருந்தனர். பாரதியை ஓத்த ரஷ்ய கவிஞன் ஒருவனைப் பற்றிப் பேசும்போது தஸ்தேயேவெஸ்கி இவ்வகையினரைக் கேலியும் கவலையும் செய்கிறார். எல்லாம் எங்கோ மேலிடத்திலிருந்து வருபவை எனும் மனப்பாங்கு கொண்ட இவர்களை கடுமையாகத் தாக்கிய தஸ்தேயேவெஸ்கி பிரஞ்சு மொழியிலிருந்து ஒரு நூலையும் ரஷ்யமொழிக்குப் பெயர்த்தவர். பிரஞ்சு மொழியை நன்கறிந்தவர். எனினும் இத்தகையோரின் மனப்பாங்கு அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திற்று.

பிரேம் ரமேஷ் வேறுவகையில் முயன்றனர். மேலை தத்துவங்களின் அடிப்படையில் தமிழ் காவிய மரபை அடைய முயன்றனர். இது ஒரு முஸ்தீபு. இதன் தாக்கம் பின்வந்த படைப்பாளிகள் பலருக்கும் இருந்தது. இந்த முஸ்தீபு தமிழ் தத்துவவாதிகள் இவர்கள் என்கிற இடம் வரையில் இவர்களைக் கொண்டு சென்றது. இவர்களுக்கு பண்டை இலக்கியங்களில் பால் மயக்கமும் தமிழ் நவீன காலத்தின் சத்தான பகுதிகள் மீது பாரா முகமும் ஏளனமும் இருந்தது. ஒருவேளை பின்னதில் பாராமுகத்தை இவர்கள் அஞ்சியிருப்பார்களின் புதிய தமிழ் உரைநடை ஒன்று இவர்களால் சாத்திய பட்டிருக்கும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு போக்கு பிரதானப்பட்டு பின் நிதானம் கொள்வதும் தொடர்ந்து மற்றொரு போக்கு பிரதானமடைய ஆசைப்படுவதும் தமிழிலும் ஒரு இயக்கம். ஆனால் தமிழ் படைப்பாளியும், கவிஞனும் இவ்விஷயங்களிலிருந்து விலகி ஒளித்து ஒளித்து படைத்துக் கொள்வது அசாதாரண காரியங்கள். லத்தீன் அமெரிக்கப் படைப்புகளும் தமிழில் இத்தகைய மனத் தொந்தரவுக்கு இலக்காயின. கல்குதிரை இதழ் மார்க்வெஸூக்கு தமிழ்க் கல்லறை ஒன்றைக் கட்டித் தந்தது. கல்லறையில் மார்பிள் பதிக்கும் பணிசெய்தவர் தர்மகர்த்தா நாகார்ஜூனன். மழையின் குரல் தனிமை கதையை மீண்டும் வாசிக்கும் வாய்ப்பு இப்போது உருவான போது மேற்கொண்ட நினைவுகளைத் தவிர்க்க இயலவில்லை. தமிழ் வாசகன் மிக்க கூர்மையானவன். அவன் குறைவான எண்ணிக்கையில் இருப்பவன் எனினும் அவனுக்கு ஓர்மைமிக்க வலுவான வாசிப்பின் வரலாறு இருக்கிறது. அவனுக்குக் காட்டு உள்ளிக்கும் புதிய பொக்கேவுக்கும் இடையிலுள்ள வேறுபாடு தெரியும். படைப்பில் காட்டு உள்ளியின் நறுமணம் காலாணி புற்றை நீக்கக் கூடியது. இவ்வலுவின் உறுதியை நம்பி மட்டும்தான் தமிழ்ப் படைப்பாளி இயங்க முடியும்.

கோணங்கியின் படைப்புகள் சிந்தனைப் பள்ளிகளின் பாடங்களுக்குக் காது கேட்பதுபோல நடித்துவிட்டு கேளாமல் இருப்பவை. அதன் காரணமாக அவர் மதனிமார்கதைகளிலிருந்து கொல்லனின் ஆறு பெண்மக்களுக்கு அதிலிருந்து பொம்மைகள் உடைபடும் நகரம் என நகர்ந்த போது சூழலின் கண்களை கட்டிவிட்டு காத்திரமான மொழிக்கும் உரைநடைக்கும் உறுதியானார். குடைநிலை தமிழ் வாழ்வின் தர்க்கமற்ற மொழியும் பூர்வீக ஆவிகளின் சுயவெளிப்பாடும் அவரிடம் சாத்தியமாகிவிட்டன. தொடர்ந்து அதனை சாத்தியப்படுத்தியவர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும் பா.வெங்கடேசனும். கோணங்கியை தவிர்த்து மற்ற இருவரும் பின்வந்த காலங்களில் படைப்புத்திட்டங்களில் குறிக்கோளானவர்கள் என்பதும் தவிர்க்க இயலாத எண்ணம். தங்கள் படைப்பின் ஆதாரத்தை கண்டடைந்த பின் அதனை பல்வேறு விதங்களில் வெற்றி இலக்கணமாக முயல்வதையே படைப்புத்திட்டம் என்கிறேன். படைப்பியக்கம் என்பது தாவித்தாவி சென்று கொண்டேயிருப்பது. படைப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டது. கோணங்கி அங்கு பாருங்கள் தம்பி என்று சக படைப்பாளி ஒருவரிடம் கூறினால் கேட்பவர் கூருணர்வு கொண்டவராக இருப்பின் அவர் காட்டிய திசையைப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அவர் வேறு திசையில் ஓட்டம் பிடிக்கத்தான் உங்களை அங்கே பார்க்கச் சொல்கிறார் என்பதை விளங்கவேண்டும். அவர் காட்டிய திசையை பார்த்துக்கொண்டேயிருப்பவர் பார்த்துக்கொண்டே நிற்க வேண்டியதுதான். அத்திசையில் ஒரு அதிசயம் உண்டு என்பது உண்மைதான். கோணங்கி உரைநடையில் கணத்திற்கு கணம் உருமாறிக்கொண்டேயிருப்பவர். பா.வெங்கடேசன் மனவுலகின் ஆழ்பிரதேசத்தில் சஞ்சரித்து குணங்களின் பூர்வீக பேய்வுருவங்களையும் அவற்றின் தேமல்களையும வெளிக்கொணர்பவர். இவை மரபான தமிழ் நவீனத்துவ வெளிப்பாட்டு முறையிலிருந்தும் பின்னேறி பூர்வீகங்களுக்குள் கிறிஸ்துவ தாக்கமின்றி உள் நுழைபவை. குறிப்பாகச் நவீன கவிதைகளில் கிறிஸ்தவ தாக்கம், தர்க்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுச் சிதறியவை விக்ரமாதித்யனின் கவிதைகள்.  கலா ப்ரியாவின் கவிதைகளும் இத்தகையதொரு விதிவிலக்கு.

பா.வெங்கடேசனின் ‘மழையின் குரல் தனிமை’ கதையைப் படிப்பதற்கு முன்பு அவருடைய கவிதைகளே அறிமுகம். அழகும் கச்சிதமும் கூடித்திகளும் கவிதைகள் அவை என்பது நினைவு. அவரது முதல் தொகுப்பு அப்போது வெளிவந்திருந்தது. அவருடைய கவிதைகள் கவர்ச்சி கொண்டவை. நவீன கவிதையின் செய்நேர்த்தி அவற்றுக்கு உண்டு. மழையின் குரல் தனிமை கதையை படித்தபோது அவர் அதிலிருந்து விடுபட்டு சுயமான ஓரிடத்திற்குள்ளிருப்பது தெரிந்தது. ஒருவகையில் அவருக்கும் தனது படைப்புலகின் ஆதாரத்தைக் கண்டடைந்த திருப்தியை இக்கதை வழங்கியிருக்கலாம். பின்னர் நீட்டித்து இக்கதையே பெரும் புத்தகங்களாயின. இக்கதையை பலமுறை வாசித்திருப்பேன். பெரிய கதையொன்றிற்கான பிரயத்தனத்தோடு எழுச்சிக்கொண்டு பின் படைப்பின் மன அவசரத்திற்கு இலக்காகி பின் மீண்டும் எழுச்சியில் கச்சிதமடைந்திருக்கும் கதை இது. படைப்பு கடுமையான நோயை முதலில் உருவாக்குகிறது. பின் அதிலிருந்து விடுபடவும் வழிச்செய்கிறது. இவ்வாக்கியம் உண்மையாக இருக்குமெனில் இக்கதையை பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம். அதுபோல தமிழ் நவீனத்துவத்திற்கு பின்வந்த கதைகளின்  சிறந்த தொகுப்பு உருவாகுமெனில் இக்கதையைத் தவிர்த்துவிட்டு அத்தொகுப்பை உருவாக்குவது சாத்தியமற்றது. நவீன கதைகளுக்குப் பின்னர் தமிழ் கதைகளில் என்ன நடந்திருக்கிறது என வினவும் ஒரு கேள்விக்கு பூபென் கக்கரின் போரன் சோப் கதைக்கு நிகரான இக்கதையை சிபாரிசு செய்யலாம். இக்கேள்வியின் முன்பாக கோணங்கியை நிறுத்துவது பொருந்தாது என்றுதான் நினைக்கிறேன். பா.வெங்கடேசனின் இக்கதை புதிய கதைகளின் தோற்றத்திலும் முதன்மைபெறுவது. எஸ்.ராமகிருஷ்ணனின் சில கதைகள் பா.வெங்கடேசனின் சிலகதைகள், சி.மோகன், கூ.கண்ணன், பாலைநிலவன் ஆகியோரின்  சிலகதைகளையேனும் கற்ற பின்னர் ஒருவர் கோணங்கியை அணுகுவதே தற்காத்துக் கொள்ளும் வழி. அவர் மௌனி, லா.சரா. ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, கு.அழகிரிசாமி, எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு ஆகியோரையும் கற்ற வலுபெற்றிருந்தால் சிறப்பானது. இவை ஏதுமற்ற கோணங்கி வாசிப்பு என்பது வெறும் ஒரு ஏடு வாசிப்பு அவ்வளவு தான். எஸ்.ராமகிருஷ்ணனும், பா.வெங்கடேசனும் இத்தகைய தேவையை அழுத்துபவர்கள் அல்லர்.

தமிழ் நவீனத்துவ காலக்கட்டத்தை நவீனத்துவத்தின் குறைபாடுகளைக் கொண்டு நிராகரிக்கும் நிலையிலும் கூட அதனை ஒரு மேன்மையான காலக்கட்டம் என்று தான் சொல்லவேண்டும். அதற்கு முன்பும், பின்பும் அத்தகைய மேன்மையான காலக்கட்டம் அமையப்பெறவில்லை. நவீனத்துவ காலக்கட்டத்தில் படைப்பாளிகள் படைப்புத் திட்டங்களைப் பற்றி அனேகமாக அறிந்துகொள்ளவில்லை. நகுலன் தனது வாழ்நாள் முழுவதிலும் படைப்பியக்கத்துடன் மட்டுமே தொடர்பு பெற்றிருந்தார். ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல்தான் முதலில் படைப்புத் திட்டங்களுக்காக தனது நாவை நீட்டியது. அதற்குரிய அனைத்து தகுதிகளையும் அது பெற்றிருந்தது என்பதும் உண்மை. சிறந்த படைப்புகள் எப்போதும் சிறந்த குறைபாடுகளுடன் கலந்தே எழுச்சியடைகின்றன. முழுமையைத் தயாரிக்கும் போது அது திட்டமாகிவிடுகிறது. படைப்புக்கு குறிப்பிட்ட திட்டம் உண்டு என எனது உரைநடை நம்புவது இல்லை. நவீன காலத்திற்கு பிந்தைய படைப்பாளிகள் உருவான தமிழ்ச்சூழலில்; சுற்றிலும் படைப்புத் திட்டங்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார்கள். பதிப்பாளர்கள் படைப்பாளியை நோக்கி படைப்புத் திட்டங்களைக் கோரிக்கை செய்தனர். இன்றைய இளங்கவிஞன் தனது முதல் தொகுப்பிலிருந்தே படைப்புத் திட்டங்களுக்குத் தயாராகி வருகிறான். படைப்பியக்கத்துடன் மட்டும் தொடர்புக்கொண்ட கைலாஷ்சிவன் போன்ற படைப்பாளிகள் பதுங்கு குழிக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். அவரது சிறுகதைகள் இதுவரையில் தொகுக்கப்படாதவை. மேடைகள் படைப்புத் திட்டங்களாகவும் படைப்பியக்கம் பதுங்குழியாகவும் தீவிரம் கொண்ட தமிழ்ச்சூழல் இன்றிருப்பது. இச்சூழ்நிலை சாபமடைந்து நலிவுறும்போது தீர்க்கமாக மேலும் சில படைப்புகளைப் பற்றி உரையாட முடியும்.

மழையின் குரல் தனிமை கதையை முன்வைத்து மீண்டும் சூழலைப் படைப்பியக்கம் நோக்கி திருப்ப முடியும். அதற்கு மனம் திறந்த முழுமையான ஒரு உரையாடல் தேவை. படைப்பாளிகள் தங்கள் தங்கள் தகுதியின்மையையும் அறியாமையையும் ஒப்புக்கொள்ளும் துணிச்சலை அதற்காகப் பெறவேண்டும். இக்கதை தனிக்கதையாக மீண்டும் வடிவம் கொள்வது அதற்கு நல்ல ஆரம்பம்.

இக்கதையை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு படிக்கும் போது இருந்த மனநிலை எனது நினைவில் இல்லை. இப்போது அதனைப் படிக்கும் போது அது தன்னைப்பற்றி மட்டும் அல்ல. இலக்கிய சமக்கால வரலாறு குறித்தும் பேசுகிறது. பெரும் பெரும் நூல்களுக்கு மத்தியில் உன்னைப் போல பிறர் எவரேனும் என்னை அடையாளங் காணமுடியுமா என்றும் கேட்கிறது. ஒருசிறந்த படைப்பின் அவலக்குரல் இது. நிச்சயமாக தமிழ் வாசகன் வலுவானவன் என்கிற பதிலை நோய் அவதியில் படுத்திருக்கும் நண்பனின் காதுகளில் சொல்வதைப் போல கிசுகிசுக்கிறேன். ஏராளமான விஷயங்கள், குழப்பங்கள், தெளிவுகள் நிகழ்ந்தேறிவிட்டன என்பது உண்மைதான். தமிழ் வாசகன் நிச்சயமாக உன்னை அடையாளங்கண்டவன் மீண்டும் அவன் மருத்துவமனை அறைக்கதவைத் தட்டி ஸ்பரிசிப்பான்.

மழையின் குரல் தனிமை கதையை இருவேறு விதங்களில் வாசிக்க முடியும். முதலில்  கதையாக வாசிப்பது. காமத்தின் விஸ்வரூபமும் முடக்கமும் சாபமுமே இக்கதை. க.நா.சு ஒருவேளை இக்கதையை வாசிக்க நேர்ந்திருந்தால் அவர் எந்த விதமான சிந்தனை சட்டங்களும் இன்றி ரசித்து இக்கதையை எளிமையாக வாசித்திருப்பார். மதகுரு நாவலை மொழிபெயர்க்கும் வேலையில் ரசித்து மீண்டும் மீண்டும் வாசித்த அவருக்கு வங்காள இலக்கிய வாசிப்பனுபவம் நிச்சயமாக இதற்கும் உதவியிருக்கும். நீலகண்டப் பறவையைத் தேடி நாவலில் வரும் ஜோட்டன் என்கிற பாத்திரத்ததோடு இக்கதையின் கமலாவையும் அவர் நினைவுப்படுத்தியிருக்கக்கூடும். ஜோட்டனோ கமலாவோ பாத்திரங்கள் மட்டுமல்ல. காமத்தின் மன ஆழ புலன் வடிவங்கள். கமலா எல்லாவருக்குள்ளும் இருக்கிறாள். சாரங்கனைப் போலவே. பிரபஞ்ச தூண்டுதலின் குழைவில் இவர்கள் விசையுறுகிறார்கள். கமலா ஒருவேளை பகவதியாகவோ, மதுரை மீனாக்ஷ்சியாகவோ, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளாகவோ ஏன் இருக்கக்கூடாது! ஒருவேளை விமர்சன பூர்வமாக அணுகினால் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் இல்லை என்று ஒருவர் தீர்க்கம் கொள்ளலாம். வங்காள இலக்கியவுலகில் யதார்த்தத்திற்கும் முன்பிருந்த காலக்கட்டத்தோடு தொடர்பு கொள்ளத்தக்க கதை இது. சூழலோடு இணைத்து சூழலின் கனி இது என வாசித்தால் ஒரு திசைக்காட்டும் கருவியைப் போல நகரும் உலகில் தனது இருப்பை அசைத்து உறுதிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது இக்கதை.

பா.வெங்கடேசன் இதை எழுதக் கேட்டபோது இதுபெரும் பொறுப்பு என உணர்ந்து இயலாமையுடன் ஒத்துக்கொண்டேன். பெரும் பொறுப்புகளும் பதவிகளும் எனக்கு லாயக்கற்றவை. மேலும் மேலும் பொறுப்புகளை விதி என் மீது சுமத்தாதிருக்கட்டும்.

23.11.2011                               
நாகர்கோவில்

நன்றி- தீராநதி, பிப்ரவரி 2012

Comments

பா.வெங்கடேசனின் "மழையின் குரல் தனிமை" கதையை இன்றுதான் படித்தேன். அந்த கதை எற்படுத்திய தாக்கத்தால் இணையத்தில் தேடிய போது உங்கள் பதிவை படிக்க நேர்ந்தது. அற்புதமான பதிவு.. பா.வெங்கடேசன் தற்பொழுது தொடர்ந்து எழுதுகிறாரா??
இது லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய கட்டுரை ஆகும். பா.வெங்கடேசன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர் சமீபத்தில் தாண்டவராயன் கதை என்னும் நாவலை எழுதியுள்ளார்.