Skip to main content

புலி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
அல்போன்ஸ்ராய்

நேர்காணல் : ஷங்கர்ராமசுப்ரமணியன் 
புகைப்படம் : பேஜர் கிருஷ்ணமூர்த்தி
புகைப்படக்கலையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? உங்கள் தந்தை உங்களை ஊக்குவித்தாரா?

எனது அப்பா தென்னக ரயில்வேயின் முதல் புகைப்படக்காரராக பணியாற்றியவர். அவர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து எனக்கு ஆர்வம் உருவானது. நான் டாக்டராக வேண்டும் என்ற ஆசை எனது அம்மாவுக்கு இருந்தது. எனக்கு பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்தது. புனே திரைப்படக்கல்லூரியிலும் இடம் கிடைத்தது. ஆனால் நான் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவுக்கு வனஉயிர்கள், காடுகளை படமெடுப்பதில் இயற்கையான விருப்பம் இருந்தது. அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால் அதிகம் செயல்படமுடியவில்லை. ஆனால் விடுமுறைகளில் குடும்பத்தோடு கிளம்பிவிடுவோம். எங்களுக்கு இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்ய இலவச பாஸ் இருந்ததால் அது சுலபமாகவும் இருந்தது. கல்கத்தா மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி குட்டிப் போட்டிருக்கும் தகவல் வந்தால் அங்கே போய்விடுவோம். கிண்டி தேசிய வனஉயிர்பூங்காவில் அப்போது வனஉயிர்கள் தொடர்பான திரைப்படங்களைத் திரையிடும் பழக்கம் இருந்தது. அங்கே ஐந்து படங்கள் மட்டுமே சேகரிப்பில் வைக்கப்பட்டிருந்தன. அதை ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்குக் காண்பிப்பார்கள். அந்தப் படங்களை நாங்கள் திரும்பத்திரும்ப பார்த்தோம். எங்கள் வீட்டிலேயே 16 எம்.எம் திரையிடும் ப்ரொஜக்டர் வைத்திருந்தோம். அதை இயக்கவும் எனக்குத் தெரியும். கிண்டி பூங்கா காப்பாளருக்கு படத்தை ப்ரொஜக்ட் செய்வதில் அலுப்பு ஏற்படும்போது நானே திரையிடுவேன். அப்படியாக இந்தப் படங்களை பலதடவை பார்த்து வனஉயிர்களைப் படம்பிடிப்பதில் நாட்டம் வந்துவிட்டது. திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தபிறகு இதுதான் எனது துறை என்று முடிவும் செய்துவிட்டேன். ப்ராஜக்ட் ஒர்க்காகவும் அதையே செய்தேன். அப்போதுதான் வண்டலூர் மிருகக்காட்சி உருவானது. மிருகங்கள் எல்லாம் ஒரு தற்காலிக முகாமுக்கு கொண்டுவரப்பட்டு எடுத்துச்செல்லப்படும். அந்த நேரத்தில் ஒரு ஆவணப்படத்தை முதலில் உருவாக்கினேன். அதற்குப்பிறகு கிண்டி பூங்கா இருக்கும் காட்டிலும் எனது பயிற்சியை எடுத்தேன். ஏனெனில் சென்னைக்குள் எடுப்பது செலவு குறைந்ததாக இருந்தது
 
தந்தையைத் தவிர யார் உங்களை இத்துறையில் ஊக்கப்படுத்தினார்கள்?

டில்லியில் இருக்கும் நந்தகுமார் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பை அளித்தார். அவர் நரேஷ் பேடியிடம் பணிபுரிந்தவர். எனது மனைவி ராதாவும் ஆதரவாக இருந்தார். அவர் எனக்கு கல்லூரியில் சீனியர். அவர் சில குறும்படங்களை ஏற்கனவே எடுத்திருந்தார். அவர்தான் எனக்கு முதல் வாய்ப்பை அளித்தார். தேக்கடியில் போய் படமெடுங்கள் என்று ஊக்கப்படுத்தி நிதியுதவியும் செய்தார். அக்காலகட்டத்தில் வனங்களில் படமெடுப்பதற்கான சரியான டெலிலென்ஸ் அறிமுகமாகவில்லை. ஐஐடியில் இருந்த நண்பர் ஒருவரின் உதவியோடு, நாங்களே கணக்கெடுத்து வடிவமைத்து போலெக்ஸ் மூவி கேமராவில், புகைப்பட லென்சை பொருத்தி தேக்கடி காடுகளுக்குப் போனோம். ஏனெனில் வனத்தில் படமெடுப்பதற்கு தொலைதூரக்காட்சிகளைப் பார்ப்பதற்கு தகுந்த லென்ஸ் தேவை. இன்றைக்கும் ஸ்டில் காமிரா லென்சைத்தான் மூவி காமிராவுக்குப் பயன்படுத்துகிறோம். வனஉயிர் சினிமாவுக்கான காமிராக்கள் என்று எதுவும் இன்னும் வரவில்லை. ஏனெனில் உலகத்திலேயே மொத்தம் 300 பேர் தான் இத்துறையில் இருக்கிறார்கள். தேக்கடி காடுகளைச் சுற்றி விலங்குகளுக்காக காத்திருந்தோம். எங்கள் அதிர்ஷ்டம், 30, 40 யானைகள் பெரியார் அணைப்பகுதியில் தண்ணீரைக் கடந்து வருகிறது. படம்பிடிக்கலாம்னு காமிராவை இயக்கினால் படமே தெரியவில்லை. என்னவென்று பார்த்தால் நாங்கள் பொருத்திய லென்சின் மறைகழன்று விழுந்துவிட்டது. எங்கள் கண்முன்னால் யானைகள் வரும்போது அதை படமெடுக்கமுடியாமல் போய்விட்டது. அதற்குப்பிறகு மூவிகேமராவை கையில் பிடித்து கிடைப்பதை படம்பிடிப்போம் என்று முயற்சிசெய்தோம். ஆனால் சரியாக வரவில்லை. இரண்டு ரோல் பிலிம் வீணாகிவிட்டது. ராதா எங்களுக்குக் கொடுத்த பணம் எல்லாம் வீணாகப் போய்விட்டது. அப்புறம்தான் தூர்தர்ஷனில் வாய்ப்பு வந்தது. அக்காலகட்டத்தில் தூர்தர்ஷன் தவிர வேறெந்த தொலைக்காட்சியும் இல்லை. பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்னை உச்சகட்டமாக இருந்தபோது அதைப் படம்பிடிக்க யாரும் போவதற்கு பயந்தனர். நான் போய் அப்பிரச்னை தொடர்பாக நிறைய படங்களை செய்தேன். அதில் வரும் வருமானத்தில் காடுகளுக்குச் சென்று புகைப்படங்களை எடுக்கத்தொடங்கினேன். இதுதான் தொடக்கம்.

இன்றைக்கு வனஉயிர்களைப் பற்றி படங்களை ஒளிபரப்புவதற்கு தனி தொலைக்காட்சி சேனல்களே இயங்குகின்றன. இந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது?

அப்போதைய காலகட்டத்தில் நேஷனல் ஜியாக்ரபி தயாரித்த வனஉயிர் படங்கள் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ஒரு மணிநேரம் தூர்தர்ஷனில் காண்பிக்கப்படும் நிலைமையே இருந்தது. உலகம் முழுவதுமே இதுதான் சூழ்நிலை. இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நேச்சுரல் வேர்ல்ட்னு ஒரு நிகழ்ச்சியை பிபிசி ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர் கணக்குகளைப் பார்க்கும்போது, மிக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர் இருப்பது தெரியவருகிறது. அதனால் பகல்நேர ஒளிபரப்பாக ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். 4 மணிநேரம், ஆறுமணிநேரம் என்று அதிகரித்து 24 மணிநேர சேனல்களாக டிஸ்கவரி, அனிமல் ப்ளானட் போன்றவை மாற்றம் பெறுகின்றன. ஆனால் 24 மணிநேரத்துக்கும் ஒளிபரப்பும் அளவில் உலக அளவிலேயே படங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். ஒரு பிராணியின் வாழ்க்கை சுழற்சியை படமெடுப்பதற்கு மிகவும் காலம் எடுக்கும். ஒரு குட்டி வளரும் வரை காத்திருக்கவேண்டும். இதனால்தான் பீப்பிள் அனிமல் பேஸ்டு படங்கள் வருது. ஒரு நிகழ்ச்சிவழங்குனர் இருப்பார். அவருக்கும் குறிப்பிட்ட விலங்குக்குமான உறவுகளை தொடர்ந்து படம்எடுப்பார்கள். அதனால்தான் 24 மணிநேரத்தை அவர்கள் நிரப்ப முடிகிறது. வனஉயிர் சினிமாக்களின் தொடக்க காலத்தில் வெறுமனே ஒரு பிராணி, அதன் நடத்தைகளை அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இதுவரை மனிதன் பார்க்காத நிகழ்வுகளை காண்பிப்பதுதான் முக்கியமாக இருந்தது. ஏனெனில் ஒரு பிராணிக்கு காமிரா இருப்பது தெரியவே கூடாது. அப்படி ஒரு பிராணி தொந்தரவுக்குள்ளானால் அதன் நடத்தை இயற்கையானதல்ல.
இந்தியக் காடுகளில் புலிகளைப் படமெடுத்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். நான் இத்துறைக்குள் வரும்போது உலகளாவிய அளவிலேயே அதிகம் புலிகளைப் பற்றிய படங்கள் இல்லை. பாந்தவ்கர் என்ற காட்டில்தான் நான் முதலில் புலிகளைப் படம் எடுக்கத் தொடங்கினேன். அங்கே 60 புலிகள் இருக்கும். மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் காடு அது. அந்த இடம் முன்பு ரீவா மகாராஜாவின் பிரத்யேக வேட்டைப்பகுதியாக முன்பு இருந்துள்ளது. ஒருகட்டத்தில் அதைப் பராமரிக்க இயலாமல் அரசாங்கத்துக்கு அந்த இடத்தை அளித்துவிட்டார். வயல்களும், சாலைகளும் இருக்கும் காடு அது. வயல்களுக்கு நடுவே சாலை இருப்பதால் வயல்கள் வழியாக கடக்கும் புலிகளை படமெடுப்பது அப்பகுதியில் சுலபமாக இருந்தது. நீண்டதூரத்துக்கு ஒரு வண்டியிலோ யானையில் சவாரி செய்தோ புலியின் நடமாட்டத்தைப் பின்தொடர முடியும். இது எங்களுக்கு அனுகூலமாக இருந்தது. நான் முதலில் படமெடுத்த புலியின் பெயர் சீதா. அது ஒரு பெண்புலி. சீதா மண்டபம் என்ற இடத்தில் முதலில் காணப்பட்ட புலி என்பதால் அதற்கு அந்த பெயர் வந்துள்ளது. காட்டில் உள்ள யானைப்பாகன்கள் வைத்த பெயர் அது. நாங்கள் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு அந்த சீதாவை பின்தொடர்ந்தோம். எங்கள் யானையிடமும் எங்களிடமும் அது இயல்பாக இருப்பதற்கும் பழகுவதற்கும் அந்த காலம் தேவைப்பட்டது. பிறகு யானை வரும்போது அதன்போக்கில் உட்கார்ந்திருக்கும். நாங்கள் படம்பிடிக்கத் தொடங்கினோம். இன்னொரு பிரெஞ்சு சேனல் ஒன்றுக்காக படம்பிடிக்கத் தொடங்கும்போது சீதாவுக்கு குட்டி பிறந்துவிட்டது. அடுத்து ஒரு ஜப்பானிய சேனல் ஒன்றுக்காக படமெடுக்க அதே காட்டுக்குப் போனபோது சீதாவின் குட்டி வளர்ந்துவருகிறது.. இப்படியே தொடர்ந்து அங்கே படமெடுத்ததில் 12,13 ஆண்டுகளில் சீதாவின் ஆறேழு தலைமுறையை நான் படமெடுத்துவிட்டேன். இந்தக்காட்டில்தான் புலிகளின் வெவ்வேறு வாழ்க்கை நிலைகள், நடத்தைகளை படம்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புலிகள் என்றாலே அல்போன்சா ராய் என்ற பெயரும் இப்படித்தான் வந்தது. ஆனால் நான் புலிகள் மட்டுமின்றி மான்கள், பாம்புகள் உள்ளிட்ட பல உயிர்களையும் படம்பிடித்திருக்கிறேன்
 
வனஉயிர் படமெடுப்பவர்களில் உங்கள் முன்னோடிகள் பற்றி கூறுங்கள்?

இந்தியாவில் முக்கியமானவர்கள் என்று எடுத்தோமெனில், அஷீஸ் சந்தோலாவைச் சொல்லலாம். அவருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். நரேஷ் பேடியையும் சொல்லவேண்டும். இவர்கள் இரண்டுபேரும் ஒளிப்பதிவாளர்கள். புகைப்படக்காரர்களில் டிஎன்ஏ பெருமாள் முக்கியமானவர். அவரின் படங்கள் பார்த்து தூண்டுதலாகிதான் நாங்கள் வளர்ந்தோம். மற்றொருவர் எம்.ஒய். கோர்ப்படே.. அவர் மகாராஜாவாக இருந்தவர். மற்றொருவர் ஹனுமந்தராவ். நவீனத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இவர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு வனஉயிர் படங்களை எடுத்தவர்கள். இவர்களே காமிராக்களை சொந்தமாக வடிவமைத்து, பிலிம் லோடிங் முறையை உருவாக்கியவர்கள். மா. கிருஷ்ணனும் புகைப்படக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் அ.மாதவையாவின் மகன்.நிலப்பரப்புகளைப் கருப்பு வெள்ளையில் படம்பிடித்துப் புகழ்பெற்ற ஆன்சல் ஆடம்சின் புகைப்படங்களை எனது அப்பாவின் சேகரிப்பிலிருந்து தொடர்ந்து ஈடுபாட்டோடு பார்த்துவந்திருக்கிறேன். ஆன்சல் ஆடம்ஸ் உருவாக்கிய ஜோன் சிஸ்டத்தின் மாணவன் நான். ஒளி குறைவாக இருக்கும் காலை மற்றும் மாலைகளில்தான் மிருகங்கள் வெளியே வரும். அந்த குறைந்த ஒளியில் அப்போதுள்ள பிலிம்களைக் கையாண்டு படங்களை எடுக்க அவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்தியா வந்து ராஜநாகங்களைப் படமெடுத்த ராம்விடேக்கர் எனது ஆதர்சமாக இன்னமும் திகழ்கிறார். அவருடன் சேர்ந்து நான் பணிபுரிந்துள்ளேன். அகும்வே சோமேஸ்வரும் மிக முக்கியமானவர்
 
ஒரு நேர்காணலில் வனவிலங்குகளின் வாழ்க்கை நிலைகளை இந்திய இயற்கைச்சூழலில் படம்பிடிப்பது சவாலானது என்று கூறியுள்ளீர்கள்..அதை விளக்கமுடியுமா?

ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டோமெனில் ஆப்பிரிக்காவின் காடுகள் சாவான்னா புல்வெளிகளால் நிறைந்தவையாகும். இந்தியக் காடுகள் மரங்கள் நிறைந்தவை. ஆப்பிரிக்காவில் உங்களிடம் நல்ல காமிராவும், தொலைதூரக்காட்சிகளை படம்பிடிக்கும் நல்ல லென்சும் இருந்துவிட்டால் ஒரு இடத்தில் பொறுமையாக அமர்ந்து சிறுத்தை ஒன்று மானைத் துரத்தி வேட்டையாடும் காட்சியை கண்ணுக்கெட்டின தூரம் வரை தொடர்ந்து படம்பிடித்துவிடலாம். மொத்த வேட்டைக்காட்சியும் பதிவாகிவிடும். ஆனால் இந்தியாவில் ஒரு புலி தனது வேட்டையை நடத்தும் காட்சியை முழுமையாக படமெடுக்க எனக்கு 16,17 ஆண்டுகள் ஆனது. அதற்கு முன்பு எனக்கு ஆறேழு வாய்ப்புகள் வந்தன. இந்தப் பக்கம் புலி இருக்கும். அந்தப்பக்கம் மான் ஓடிக்கொண்டிருக்கும். சரியாக புலி மானைப் பிடிக்கும் புள்ளியில் நாம் நகரும்போது நடுவில் ஒரு மரம் காமிராவுக்கு குறுக்கே மறைத்துவிடும்.உங்களுக்கு விலங்குகளால் ஆபத்தான சூழ்நிலைகள் வந்ததுண்டா?

ஒன்றுகூட இல்லை. ஒரு மிருகத்துக்கு மனிதனை அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. மிருகத்துக்கு மனிதன் நல்ல உணவும் கிடையாது. மனிதர்கள் கீரை சாப்பிடுகிறோம். அதனால் சாலையில் நடந்துபோகும் போது போகன்வில்லா மர இலைகள் கிடப்பதைப் பார்த்தால் அதை எடுத்து சாப்பிடுகிறோமா என்ன? நம்மைப் போலவே புலிகளுக்கும் தனக்கான உணவு என்னவென்று தெரியும். ஜிம்கார்பெட் புத்தகத்தில் வரும் சுந்தரவனக்காடுகளில் உள்ள சூழ்நிலைகள் வேறு. குமாவுன் மலைகளில் வேட்டையாடுவதற்கு சக்தி இல்லாத, பற்கள் விழுந்து போய் மனிதர்களை அடித்த புலிகளைத்தான் ஜிம்கார்பட் கொன்றார். அதைத்தவிர மிருகங்கள் மனிதர்களை வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.வனஉயிர்களைப் படம்பிடித்த அனுபவத்தில் இன்னும் எடுக்கமுடியாத சூழ்நிலைகள் என்று ஏதாவது உண்டா?

இதுவரை புலிகளின் தாய்மைக்காலத்தை முழுமையாக படம்பிடிக்க முடியவில்லை. புலிகளின் புணர்ச்சியை காட்சியாக எடுத்திருக்கிறேன். வயிறு வீங்கி கர்ப்பமாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். ஆனால் குட்டி போடப்போகும்போது அதைப்பார்க்க முடியாது.. விலங்குகள் கண்ணில் தென்படாமல் போவது இயல்புதான் என்று கண்டுகொள்ளாமல் இருப்போம். ஆனால் பத்து, பதினைந்து நாட்களுக்குப் பிறகு வயிறு வற்றி திரும்பவும் வெளிப்படும். பைனாகுலரில் அதன் வயிற்றில் இருக்கும் முலைச்சுரப்பிகளில் முடியெல்லாம் உதிர்ந்து நகர்ந்திருப்பது தெரியும். அப்போது குட்டிபோட்டிருக்கிறது, பால் கொடுக்கிறது என்று யூகித்துக்கொள்ளலாம். ஆனால் அத்தனை பெரிய காட்டில் குட்டிகளைக் கண்டுபிடிப்பது சிரமமானது. புலிக்குட்டி, ஒரு பூனை போல சிறிதாக இருக்கும். கண்திறக்காத குட்டிகளை தாய்ப்புலி வாயில் கவ்வி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பாதுகாப்புத் தேவைக்காக மாற்றுவதும் உண்டு. அந்தக் காட்சிகளைக் காட்டுச்சூழலில் உலகளவில் யாருமே எடுக்கவில்லை. தடுக்கப்பட்ட மிருகக்காட்சி போன்ற சூழ்நிலைகளில்தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்புறம் குட்டிபோட்ட தாய்ப்புலி, வேட்டையாடுவதற்காக குட்டி இருக்கும் இடத்திலிருந்து ஒரு இடத்துக்கு வரும். வேட்டையை முடித்து இறந்த பிராணியை சாப்பிட்டுவிட்டுத் திரும்ப போய்விடும். ஏனெனில் எங்கே இருந்தாலும் குட்டிக்குப் பால் கொடுக்கணும்னு அதுக்குத் தெரியும். இந்த தாய்மையை யாரும் அதற்கு பாடமாக சொல்லிக்கொடுக்கவேயில்லை.
குட்டி போடறதுக்கு முன்னால் தாய்புலி ஒரு வேட்டையை நிகழ்த்தும். அதை நான் படம்பிடித்திருக்கிறேன். ஒரு கொம்போடு உள்ள மானை அது பாய்ந்து தாக்கும்போது அதன் கொம்பு திரும்பி புலியின் வயிற்றைக் குத்திக்கிழித்துவிட்டால் அதோகதிதான். ஆனால் புலி கவனமாக அதை வேட்டையாடி முடிக்கும். பிரசவத்தின் கடைசிக்கட்டத்தில் கூட அது வேட்டையாட வேண்டியதுள்ளது. அதற்குப்பிறகு அதன் பிரசவத்தை என்னால் படம்பிடிக்க முடியவில்லை
 
வனஉயிர் ஒளிப்பதிவு என்பது வெறுமனே காட்சியின்பத்துக்கானது என்று கருதுகிறீர்களா? வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப் பேணுவதற்கு எவ்வகையிலாவது உதவுகிறதா?

நான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தொலைக்காட்சிகளுக்காக முதலில் படங்கள் எடுக்கும்போது அதை எல்லா மக்களும் பார்க்கப்போகிறார்கள், அதன்மூலம் மக்களுக்கு வனங்கள் அங்குள்ள உயிர்கள் மீது பரிவும் ஆசையும் வரும் என்று நினைத்தேன். ஆனால் இந்தியாவில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தபோது கிராமங்களில் உள்ள மக்கள் யாரும் பார்க்கவில்லை என்று பிறகு உணர்ந்தேன். அப்போதுதான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மக்களின் ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோக்குக்காக படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று அலுப்பு தோன்றத் தொடங்கியது. ஆனால் இப்போது தொலைக்காட்சி ஊடகம் இந்தியாவுக்குள் வந்தாச்சு. இங்கேயும் எல்லா மக்களும் பார்க்கிறார்கள். நான் ஆரம்பிச்ச காலகட்டத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. இப்போது தமிழிலும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. நல்ல முன்னேற்றம்தான்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு ஒரு சதவிகித அளவுக்கு இந்த நிகழ்ச்சிகள் வழியாக அறிதல் வந்திருக்குது. எங்களது சிறுவயதில் விடுமுறைக்கு கோவில்குளம், உறவினர்கள் வீட்டுக்குப் போவார்கள். சொந்த ஊருக்குப் போவார்கள். ஆனால் தற்போது பொருளாதாரம் வளர்ந்துள்ளது. காட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் போகிறார்கள். ஆனால் காடுகள் பற்றி அவர்களுக்கு இன்னும் அதிகம் தெரியவில்லை. காடுகளில் மிருகங்களை யாரும் பார்ப்பதற்கென்று கட்டிப்போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் ஒரு நாளுக்குள்ளேயே விலங்குகளைப் பார்க்க வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள். காட்டில் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றிய விழிப்புணர்வும் இல்லை. அதற்கென உடைகள் அணியவேண்டும். கூச்சல் போடாமல் போகவேண்டும். காட்டில் எதுவெல்லாம் கண்ணுக்குத் தெரிகிறதோ அதெல்லாம் காடுதான் என்கிற அறிவு வரணும். நீங்கள் புலிகளைப் பார்க்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் புலி நிச்சயமாக உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்.
இந்தியப்புலிகளின் தனிஇயல்பு என்று எதைக்கூறுவீர்கள்?
புலிகளில் ஆறு வகைகள் உண்டு. சைபிரியப் புலிகளில் இருந்து வங்கப்புலி வரை சில இயல்புகள் மாறும். இன்று இந்தியாவில் தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வாழிடத்துக்கும் ஏற்றமாதிரி புலிகளின் வாழ்வியல்பும், நடத்தையும் மாறும். சதுப்புநிலங்கள் அதிகமாக உள்ள சுந்தரவனக்காடுகளில் புலிகள் மீன்களையும் அடித்து சாப்பிடும் வழக்கம் உள்ளவை. சைபிரியாவில் முழுமையான பனிநிலத்தில் புலிகள் வசிக்கின்றன. அதனால் அவற்றுக்கு அடர்த்தியாக ரோமம் இருக்கும்.

அடுத்த தலைமுறையில் நம்பிக்கையளிக்கும்படி வனஉயிர் ஒளிப்பதிவாளர்கள் உள்ளனரா?

சரவணகுமாரை முக்கியமானவர் என்று சொல்வேன். எம்எஸ்எசி வனவுயிரியல் படித்துவிட்டு பின்னர் புகைப்படக்கலை, ஒளிப்பதிவு படித்து படங்கள் எடுத்துவருகிறார். அவர் மீது நான் நிறைய நம்பிக்கை வைத்துள்ளேன். நிறைய மாணவர்களுக்கு வனஉயிர் படம் எடுப்பதில் விருப்பம் இருக்கிறது. ஆனால் எத்தனை பேருக்கு ஆழமான ஈடுபாடு இருக்கிறது என்று தெரியவில்லை.தி க்ரேட் காட்ஸ் ஆப் இந்தியா தான் உங்களை அதிகம் பிரபலமாக்கியது. இன்று வனஉயிர் படமெடுப்பவர்களுக்கு இருக்கும் மரியாதையும் இடமும் உங்கள் ஆரம்பகட்டத்தில் இல்லைதானே?

பொதுவாக தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு இப்போதும் எப்போதும் குறைவான புகழே இருந்துவருகிறது. டிஸ்கவரியில் ஒளிபரப்பான தி க்ரேட் கேட்ஸ் ஆப் இந்தியாவைப் பொறுத்தவரை நிகழ்ச்சியை வழங்குபவனாகவும் நான் காமிரா முன்பு வந்தேன். அதில்தான் எனக்கு பிரபலம் உருவானது. நாங்கள் தொடக்க காலத்தில் வனஉயிர் படங்களை மொத்தமாக பார்ப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டலில் வைல்ட் ஸ்க்ரீன் பெஸ்டிவல் ஒன்றுதான் அதற்கான சந்தர்ப்பமாக இருந்தது. இப்போது எந்தப் படத்தை எந்த மூலையில் எடுத்திருந்தாலும் வீட்டுக்குள் வரவழைத்துவிடலாம்
 
காடுகள் மனிதர்களால் சுரண்டப்பட்டு மெதுமெதுவாக சுருங்கிவரும் நிலையில் விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகும் சம்பவங்கள் நடக்கின்றன. அதைத்தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

இந்தியாவில் தற்போது 3 சதவிகிதமே காடுகள் உள்ளன. வனப்பாதுகாப்புச் சட்டம் 1974 இல் நடைமுறைக்கு வந்தது. நமது நாட்டைப் பொறுத்தவரை எந்த சட்டமென்றாலும் அதை நூறு சதவிகிதம் சிறப்பாக அமல்படுத்த முடியாது. ஆனாலும் இந்தச் சட்டத்திற்குப் பிறகு பகிரங்கமாக வேட்டையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. இதனால் மிருகங்களின் தொகை பெருகியுள்ளது. ஆனால் காடுகளின் பரப்போ குறைந்துவருகிறது. யானைகள் போற பாதையில் வீடோ, விவசாய நிலமோ இருந்தால் அது என்ன செய்யும். மேற்கு நாடுகளில் ஒரு வனத்திற்கும் இன்னொரு வனத்துக்கும் இடையில் வாழிடம் உருவானால் யானைகள் செல்வதற்கு என்று சில வழிகளை காடாகவே பராமரிக்கிறார்கள். ஆனால் நம்மிடம் அந்த வழக்கம் இல்லை.
கிழக்குக் கடற்கரை சாலையில் எனது வீடு உள்ளது. முதலில் கொஞ்சம் வீடுகள் இருந்தன. இப்போது நிறைய வீடுகள், விருந்தினர் மாளிகைகள், ரிசார்ட்டுகள் வந்துவிட்டன. ஒரு கட்டத்தில் பாம்புகள் வீடுகளுக்குள் வர ஆரம்பித்துவிட்டன. விஷப்பாம்புகளும் வருகின்றன. ஆனால் என்னைப் போன்றவர்கள் அந்தப் பாம்புகளை ஒரு பையில் காயப்படுத்தாமல் பிடித்து கிண்டிப் பூங்காவில் கொடுக்கிறோம். பாம்பைப் பார்த்தால் அடிக்காமல் தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அவற்றின் இடத்தில் நாம் வீடு கட்டிவிட்டோம். என்ன செய்வது?இயற்கை ஆர்வலராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் நீங்கள் செயல்படுகிறீர்கள்...அதுபற்றி கூறமுடியுமா?

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எனது சிறிய வயதில் எக்கச்சக்கமான பறவைகள் அங்கே வருவதைப் பார்த்திருக்கிறோம். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் முழுமையாக குப்பை மைதானம் ஆகிப்போனது. சேவ் பள்ளிக்கரணை என்கிற இயக்கத்தில் நானும் சேர்ந்து ரொம்ப நாள் போராடி தற்போது வனத்துறையினர் இதை சரணாலயமாக அறிவித்து வேலி போட்டிருக்கிறார்கள். சாதாரண ஆட்கள் கூட்டம் கூடி கோஷம் போட்டால் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எண்ணினேன். நான் போய் நின்றால் பேப்பரில் செய்திவரும் என்பதால் அவர்களுடன் நின்றேன். இந்த குப்பை அத்தனையும் மக்கள் போட்ட குப்பைதான். இந்த இடத்தைக் கடக்கும்போது குப்பை நாற்றம் என்று நாம் குறைசொல்கிறோம். ஆனால் இங்குள்ள குப்பைக்கு நாமும் காரணம் என்பதை மறந்துவிடுகிறோம். பிளாஸ்டிக் குப்பையை தரம்பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பலாம். மக்கும் குப்பையை வீட்டு செடிகள் மரங்களுக்கு அடியில் போட்டு உரமாக்கலாம். இப்படிச் செய்தாலே போது பிரமாண்டமாக உருவாகும் குப்பைமேடுகளைத் தவிர்த்துவிடலாம். ஆனால் இந்த எளிய அறிவைக்கூட நவீனமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் பெறவில்லை என்பதுதான் துயரகரமானது
 
துரோகி வழியாக சினிமா ஒளிப்பதிவிலும் இறங்கியுள்ளீர்கள்...இதற்கான தேவை என்ன?


நான் அடிப்படையில் சினிமா மாணவன் தான். இயற்கையான ஒளியில், சூழ்நிலைகளில் படம்பிடித்த அனுபவத்தை சினிமாவிலும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தது. துரோகி படத்தில் ஒளிப்பதிவாளனாக பணியாற்றியுள்ளேன். உருமி படத்துக்கு கிராபிக்ஸ் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனுடன் பணியாற்றியுள்ளேன். வனம், பிராணிகளின் வாழ்க்கை தொடர்பான சினிமா திரைக்கதை அமைந்தால் திரைப்படத்தை இயக்கவும் ஆசையுள்ளது

நன்றி : த சன்டே இந்தியன் Comments