Skip to main content

புலம்பெயர் பிள்ளையார்

 ஷங்கர்ராமசுப்ரமணியன்




முப்பத்தி இரண்டாம் எண்
ஐந்து ரத தெரு
அண்ணா நகர்
மாமல்லபுரத்தைச் சேர்ந்த
சிற்பி ஐயப்பன்
சென்ற வருடம் வங்கிக்கடனில் வாங்கிய
குட்டி யானை டெம்போவில்
ஈரமணலை இடுகிறார்
ஒரே முகம் ஒரே வடிவம்
பல்வேறு சைஸ் கல்பிள்ளையார்கள்
வண்டியில் ஏறுகிறார்கள்
அம்மன்களும்
பெரிய பிள்ளையார் பிரதானமாக
நடுவில் வீற்றிருக்கிறார்
பெரிய அம்மன்கள் இருபுறம்
சென்ட்ரல் ரயில் நிலையம் வரை
சேதமுறாமல் பயணிக்க
பிள்ளையார் மற்றும் அம்பிகைகளை
நெஞ்சோடு சேர்த்து
நைலான் கயிற்றில் கட்டுகிறார்
ஐயப்பனின் உதவியாளர்.
சின்ன அம்மன் சிலைகள் ஈரமணலில்
படுத்திருக்கின்றன
பிள்ளையாரை ஒருபோதும்  
சமமாகப் படுக்கவைக்க முடியாது
டெம்போ
மாமல்லபுரத்தை
நீங்குகிறது
வெயில் தகிக்கத் தொடங்குகிறது
பகீரதப் பிரயத்தன சிற்பங்களில்
உள்ள குரங்குகளும்
சிற்பமாகாமல் பின்னணியில் நிற்கும் பாறையும்
புலம்பெயரும் பிள்ளையாருக்கு
விடைகொடுக்கின்றன.

Comments