என் அரசியலில் இருந்தே எனது கதைகள் பிறக்கின்றன
சந்திப்பு:
ஷங்கர்ராமசுப்ரமணியன்
கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் இலக்கியப்பரப்பில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு நிகழ்வு ஷோபா சக்தி. ஈழத்தமிழர் போராட்டம் பெற்றெடுத்த குழந்தை என்று ஷோபா சக்தியை நிச்சயமாகக் கூறலாம். இவர் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்த, அகதிகள் படும் துயரத்தைப் பேசும் பிரெஞ்சுத் திரைப்படமான ‘தீபன்’, கான் திரைப்படவிழாவில் தங்கப்பனை விருதும் பெற்றுள்ளது…சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் தி இந்து தமிழ் நாளிதழுக்காக
எடுக்கப்பட்ட நேர்காணலின் முழுமையான வடிவம் இதோ….
உங்களது புதிய நாவலான ‘பாக்ஸ்
கதைப் புத்தகம்’ குறித்து சொல்லுங்கள்?
முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்குப் பிறகு வன்னி பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் யுத்தத்தின் வடுக்கள் குறித்த கதை இது. யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும் செய்திகளாகக் கட்டுரைகளாகப் பதிவாகியிருக்கின்றன. அதை இலக்கியமாகப் பதிவுசெய்திருக்கிறேன்.
இந்த நாவலுக்கென்று தனியாக கள ஆய்வு செய்தீர்களா?
என்னைப் பொருத்தவரை கள
ஆய்வுக்கான அவசியம் கிடையாது. யுத்தத்தோடும் மக்களோடும் அவர்களுடைய வாழ்வோடும்
மனதளவில் எப்போதும் களத்திலேதான் இருக்கிறேன். யுத்தத்திலிருந்து தப்பித்துவந்த
மனிதர்களிடம் தொடர்ந்து உரையாடுகிறேன். களப்பணி செய்து எழுதுவது இலக்கியம் இல்லை.
அது மானுடவியல். நான் யுத்தத்தின் விளைவுகளையும், மக்களின் வடுக்களையும்
இலக்கியமாகச் சொல்லியிருக்கிறேன்.
எண்ணற்ற உயிரபாயச் சூழல்களைத் தாண்டி இன்று உருவாகியிருக்கும் ஷோபா சக்தியாக அந்த அனுபவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் பார்த்தவற்றில் நூறில் ஒரு பகுதியைக் கூட இன்னும் எழுதவில்லை. மற்றவர்களின் கதையை எழுதுவதிலேயே எனக்கு ஆர்வம் இருக்கிறது. என்னுடைய கதை போன்று வாசகனைத் தோன்றச் செய்வதற்குச் சில வித்தைகள் செய்கிறேன். 15 வயதில் எனது குடும்பத்திலிருந்து பிரிந்துபோகிறேன். அதற்குப் பிறகு குடும்பத்துடன் சேரவேயில்லை. எனக்கென்று குடும்பமும் இதுவரை இல்லை.
நான் மிகச்சிறிய தீவுக்கிராமமான
அல்லப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவன். எங்கள் கிராமத்திலிருந்து மூன்றரைக்
கிலோமீட்டர் தூரம்தான் யாழ்ப்பாணம் நகரம். 16 வயதில் நான் விடுதலைப்புலிகள்
இயக்கத்தில் சேர்ந்தேன். இயக்க வேலைகளுக்காக இலங்கை முழுவதும் பயணம் செய்யத்
தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். புதுப்புது தோழர்களைச் சந்தித்தோம்.
இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னர்
சிறையில் இருந்தபோது சிங்களர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
1987 வரை தாயகத்தை விட்டு வெளியே போக வேண்டும் என்று நாங்கள் நினைத்ததேயில்லை.
இந்திய அமைதிப்படை அங்கே வந்து கொடூரமான யுத்தத்தை நிகழ்த்திய வேளையில்தான்
அங்கிருந்து சிதறி ஓட வேண்டியிருந்தது.
முதலில் அமைதிப்படையின்
கைகளிலிருந்து தப்பி கொழும்புக்கு ஓடி வந்தேன். கொழும்பிலிருந்து சாய்பான் என்னும்
தீவைத் தேடிப் போனோம். சாய்பானில் வேலைவாங்கித் தருகிறேன் என்று கூப்பிட்டுப்
போனார்கள். எங்களைக் கூட்டிப்போன முகவர் ஹாங்காங்கில் விட்டுவிட்டுப்
போய்விட்டார். இப்படித்தான் ஆறுமாதங்கள் அங்கே போனது. வேறு வழியில்லாமல் மீண்டும்
இலங்கை வந்து பெரும்பாலான நாட்களை கொழும்பிலேயே கழித்தேன். அப்போதுதான் நிழல் உலக
மாஃபியாக்களுடன் சின்னத் தொடர்புகள் ஏற்படுகிறது. போலி பாஸ்போர்ட் மற்றும்
ஆவணங்கள் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டேன்.
அப்போது இந்திய அமைதிப்படை
வெளியேறியது. எங்களைத் தூக்கி சிறையில் போட்டார்கள். பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தில் என்னைப் பிடித்தார்கள். தினசரி நிறைய தமிழ் இளைஞர்களைப் பிடிப்பதால்
சிறையிலும் இடம் இருக்காது. எங்கள் மீது பெரிதாக எந்தக் குற்றங்களும் இல்லை என்பதை
வைத்தும், சில சிபாரிசுகளை வைத்து கடிதம் கொடுத்து மூன்று, நான்கு மாதங்களில்
விடுதலையானோம்.
சிறையிலிருந்து வந்ததற்குப்
பிறகு ஒருகட்டத்தில் தாய்லாந்திலேயே இருக்கத் தொடங்கினேன். அங்கே மூன்றரை ஆண்டுகள்
இருந்தேன். எதிர்காலம் என்னவென்றே தெரியாது. விரக்தியில் அப்போதுதான் குடிக்கத்
தொடங்கினேன்.
இலங்கையில் கூத்து, நாடகம்,
வாசிப்பு என்று எல்லாம் இருந்தாலும் தாய்லாந்தில் தமிழ் புத்தகங்கள் எதுவுமே
கிடைக்காது. கொழும்பு சிறையிலிருந்து விடுதலையாகி தாய்லாந்துக்குப் போகும்போது
என்னுடன் இரண்டே இரண்டு தமிழ்புத்தகங்களைத்தான் நான் எடுத்துப்போனேன். ஒன்று
பைபிள், இன்னொன்று பாரதியார் கவிதைகள்.
பிரான்சுக்கு எப்போது வந்தீர்கள்?
தாய்லாந்தில் போலீஸ்
கெடுபிடிகள் அதிகமாகின. ரௌடிகள் பட்டியலிலும் எனது பெயர் இடம்பெறத்
தொடங்கிவிட்டது. ஒரு பெரிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு இருபது பேர் கைது
செய்யப்பட்டோம். நான் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் காவலில் இருந்தேன். ஒரு
சிறுநீரகம் சேதமானதால் எடுத்துவிட்டனர். தாய்லாந்திலிருந்து வெளியேறியே ஆக வேண்டும்.
தலையால தண்ணி குடித்து பணம் சேர்த்து போலி பிரெஞ்சு பாஸ்போர்ட்டில் 1993-ல் பாரீஸ்
நகரம் வந்திறங்கினேன். இதைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். ஆனால் ஒவ்வொரு நாளும்
தடைகள், தொந்தரவுகள், கொண்டாட்டங்கள், துயரங்களாக கழிந்தன.
ஒரு கதைசொல்லியாக உங்கள்
கருத்துலகு எப்படி உருவானது?
படித்த காலங்களிலும் சரி, இயக்கத்தில் இருந்த
காலங்களிலும் சரி இந்த மாதிரியான வேலைகளில் ஈடுபட்டதுதான் அதிகம். இயக்கத்திற்காக
கவிஞர் நிலாந்தன் எழுதிய நாடகத்தில் நடித்திருக்கிறேன். நானும் சொந்தமாக நாடகங்கள்
போட்டிருக்கிறேன். கவிதைகளும் சராமரியாக எழுதுவேன். தாய்லாந்திலும் கையெழுத்துப்
பத்திரிகை நடத்தினேன். பாரீசுக்குப் போன பின்பாக ரஷ்ய இலக்கியங்களைப் படிக்கத்
தொடங்கினேன். மக்சிம் கார்க்கி போன்றவர்களின் நூல்கள் கிடைத்தன. அவர்களுடன்
இலக்கியம் குறித்து விவாதித்திருக்கிறேன். 90-களில் நிறப்பிரிகை, தலித் இலக்கியம்,
பெரியார் எழுத்துகள் எல்லாம் பாரிசில் எனக்கு அறிமுகமானது. சாதி குறித்து எனது
டிராட்ஸ்கியவாத தோழர்களுடன் பேச ஆரம்பிக்கும்போது முரண்பாடுகள் வருகிறது. அவர்கள்
வர்க்கம், வர்க்கம் என்றே சொல்லிக் கொண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில்தான் முதல்
முறையாக தமிழகம் வந்தேன். நேரடியாக தஞ்சாவூரில் வசித்துவந்த அ.மார்க்சின்
வீட்டுக்கதவைத் தட்டினேன். அதன் மூலம் தமிழகத்தில் உள்ள நண்பர்கள்
அறிமுகமானார்கள். இந்தக் காலப்பகுதியில்தான் நான் மிகவும் தீவிரமாக வாசிக்க
ஆரம்பித்ததும் எழுத ஆரம்பித்ததும் 1997-ல் தான். என்னுடைய முதல் கதையாக நான்
கருதும் எலிவேட்டை கதை அப்போதுதான் பிரசுரமானது.
உங்களைப் பாதித்த எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்?
இங்கு போலவே அங்கேயும்
ஜெயகாந்தன் காய்ச்சல் அடித்துப்போட்ட காலம் தான் எங்கள் இளம்வயதுகள். அந்த வயதில்
எங்களைக் கவர்ந்த ஒரே எழுத்தாளராக ஜெயகாந்தன் மட்டுமே இருந்தார். என்னை மிகவும்
பாதித்த தமிழின் உச்சகட்ட கதை எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவரை தமிழ் இலக்கியத்தின்
சாதனையாளராகக் கருதுகிறேன். ப.சிங்காரத்தின் புயலில் ஒரு தோணி என்னை மிகவும்
பாதித்தது. இவையெல்லாமே 1997க்குப் பிறகுதான். அதற்கு முன்பு ஜெயகாந்தனை மட்டுமே
படித்திருந்தேன்.
என்னுடைய எழுத்தைப் பாதித்தவர்
எஸ்.பொன்னுத்துரை. எழுதவரும்போது எப்படி தொடங்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்ட
நிலையில் என்னுடைய வழிகாட்டிகள் என்று எஸ்.பொன்னுத்துரை, சாரு நிவேதிதா, ரமேஷ் ப்ரேம்,
ஆகியோரைச் சொல்ல முடியும்.
இன்று தமிழில் எழுதும் சிறுகதை மற்றும் நாவலாசிரியனுக்கு இருக்கும் சவால்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?
என்னைப் பொருத்தளவில்
சமகாலத்தில் உள்ள சமூகப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளை இலக்கியம்
பிரதிபலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னொரு வகையில் சொல்லப்போனால் என்னுடைய
கதைகள் எல்லாமே சற்றுப் பெரிதாக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் என்றே சொல்வேன்.
அரசியல் இல்லாத எந்த எழுத்தையும் எழுத்து என்று சொல்ல மாட்டேன். உதாரணத்துக்கு
சாதத் ஹசன் மண்டோவைச் சொல்லலாம். மிக எளிமையாகச் சொன்னால் சார்லி சாப்ளினைச் சொல்வேன்.
அவரது படைப்புகளில் முதலாளித்துவத்துக்கு எதிரான பெரிய அரசியல் இருந்தது. இது எனது
சமகால எழுத்தாளர்களிடம் நான் வைக்கும் எதிர்பார்ப்பு. நிபந்தனை அல்ல.
இலங்கை, இந்திய சமூகங்கள்
அமெரிக்க, ஐரோப்பிய சமூகங்களை ஒத்தவை அல்ல. அவர்கள் நவீனத்துவத்தைக் கடந்து பின்நவீனத்துவம்
வரை சென்றுவிட்டார்கள். நாம் நவீனத்துவத்துக்கே வராமல் நிலப் பிரபுத்துவத்திலேயே
உழன்றுகொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அவர்களுக்கு அங்கே அடிப்படை அரசியல்
பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. பெண்கள், தொழிலாளர்கள் எல்லாருடைய
பிரச்சினைகளும் ஓரளவு சரிசெய்யப்பட்டுள்ளன. அவர்கள் வேறு பிரச்சினைகளின்
பின்னணியில் வேறுவிதமாக எழுதுகிறார்கள். அந்த நிலத்துக்கு அவர்கள் எழுதும்
எழுத்துகள் சரி. நமக்குச் செய்ய வேண்டிய வேலை வேறு என்பது எனது கருத்து.
என்னுடைய கருத்து
பாமரத்தனமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். என்னுடைய ஒவ்வொரு எழுத்தும்
ஒவ்வொருவருக்கும் புரியும்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறேன். அதைத்தான் மற்ற
எழுத்தாளர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.
பிரான்ஸ் வாழ்க்கை உங்களை அரசியல்ரீதியாகவும் இலக்கியரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
நான் என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கோ, வேலை தேடியோ பிரான்சுக்குச் சென்றவன் அல்ல. நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் போனவன். எனக்குக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பிரான்சுக்குப் பதில் ஆஸ்திரேலியாவுக்குப் போவதற்கான கள்ள பாஸ்போர்ட் கிடைத்திருந்தால் அங்கே போயிருந்திருப்பேன்.
அதனால் பிரான்ஸ்
வாழ்க்கைக்குள் பொருத்திக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் நான் போராடவேயில்லை. இன்றுவரை
எனக்கு பிரெஞ்சு மொழி முழுமையாகப் பேசத் தெரியாது. கடைக்குப் போய் கேட்பதற்குத்
தெரியும். நான் பிரான்சுக்குச் சென்றாலும் தமிழ் மனத்தோடும், ஈழத்து
நினைவுகளுடனும், பிரான்சுக்குள்ளேயே குட்டி ஈழத்தை உருவாக்கிக் கொண்டு தமிழ்க்
கடைகள், தமிழ் உணவு விடுதிகள், தமிழ் சலூன்களில் வாழுபவர்களில் ஒருவன்தான் நான்.
பிரான்சில் பல்வேறு தேசிய இனங்கள் இப்படித்தான் தங்களுக்குள் மூடிக்கொண்டு
வாழ்கிறார்கள். பிரான்சின் வாழ்க்கை கண்காணிப்புக்குள்ளாக இருந்தாலும் தனிமனித
சுதந்திரம் ஒப்பீட்டு ரீதியாக நன்றாக உள்ளது. தனிப்பட்டவர் வாழ்க்கையில் அரசு
பெரிதாக தலையிடுவதில்லை. பொருளாதார ரீதியாக அடுத்தவேளை சோற்றுக்குக் கவலைப்பட
வேண்டிய அவசியம் இல்லை. இந்தச் சூழல் எழுத்துக்கு முக்கியம்தானே. இதைத் தவிர
பிரெஞ்சுக் கலாசாரம் எங்கள் மீது தாக்கம் எதுவுமெல்லாம் செலுத்தவில்லை.
2009-க்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது?
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே ஈழத் தமிழர்கள் போராடுவதற்கும் இன்றுவரை போராட்டம் தொடர்வதற்கும் முதல் காரணம் சிங்கள பௌத்த இனவாதம்தான். பௌத்த மதபீடம் தான் அங்குள்ள பெரும்பான்மை மக்களிடம் செல்வாக்கு செலுத்துவதாக உள்ளது. அவர்கள் தமிழர்களை சிங்கள மக்களுக்கு எதிரிகளாகக் கட்டமைத்துவிட்டனர். அந்த உளவியல்தான் தமிழர்களை ஒடுக்கச் சொல்கிறது. இன்று விடுதலைப் புலிகள் அழிந்துபோய் விட்டபிறகு, பிரச்சினைகள் தணிந்துபோனது போலத் தெரிகிறது. ஆனால் இந்தச் சூழல் மாறலாம். சிங்கள இனவாதம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அது இருக்கும் வரைக்கும், ஈழத்தமிழர்களின் போராட்டங்களும் இருந்துகொண்டே தான் இருக்கும்.
90-களின் இறுதி முதல் தற்போது வரை தொடர்ந்து தமிழகம் வந்துபோய்க் கொண்டிருப்பவர் நீங்கள். இங்குள்ள அரசியல் மற்றும் வாழ்க்கைநிலைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
முதல் சில ஆண்டுகளில் தமிழக, இந்தியச் சூழலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை. கடந்த ஆறேழு ஆண்டுகளில், இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் சகிப்புத்தன்மையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாராயணகுரு, வைகுண்டசாமி, தந்தைப் பெரியார், வள்ளலார், அம்பேத்கர், காந்தியார் போன்ற சமசீர்திருத்தவாதிகள், ஞானியர் இந்திய மண்ணில் ஆண்டுக்கணக்காக பேசிய விஷயங்கள் இங்குள்ள மக்களின் நனவிலியில் இருந்துகொண்டிருப்பவை. அதனால்தான் இங்கே சகிப்புத்தன்மை அதிகம் என்று நான் நினைப்பேன். அந்த சகிப்புத்தன்மை தற்போது குறைந்திருக்கிறது. எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்கள் வட்டத்திலேயே கருத்துவெளிப்பாடு தொடர்பான சகிப்புத்தன்மை குறைந்துவருகிறது. ஒரு புத்தகம் போட பயப்படும் சூழல் உள்ளது. பெரும் பெரும் அரசியல் எதிரிகள் ஒன்றாக மேடையில் பேசிய நாடு இது.
அரசியல் உணர்வு, கலையுணர்வு, வெகுஜன கலாசாரத்திலும் திளைத்த உணர்வில் உங்கள் கட்டுரைகளும் கதைகளும் மண்ணில் வேர்கொண்டவை? இதற்கான அடிப்படை உங்கள் வரையில் என்னவென்று கருதுகிறீர்கள்?
நான் நடித்த பிரெஞ்சுப் படமான தீபனில் நடித்தது குறித்த நேர்காணல் ஒன்றில் எனக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டனர். நான் எம்ஜிஆர் என்று சொன்னேன். எனது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பை கலைஞர் கருணாநிதியின் பேச்சுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். எனக்கு தமிழ் சினிமாப் பாடல்கள் ஆயிரம் மனப்பாடம். எல்லாமே மனதில் அழியாமல் இருக்கின்றன. என்னுடைய வாழ்க்கை மற்றவர்களை விட பல தளங்கள் கொண்டது. ஒரு கிராமத்துச் சிறுவன், ஒரு கூத்துக்கலைஞன் விடுதலை இயக்கப் போராளி, தீவிர மார்க்சியக்கட்சி உறுப்பினர், எழுத்தாளன், கான்ஸ் திரைப்பட விழாவுக்குப் போன நடிகன் என வாழ்க்கை திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டது. அதனால் இந்த வண்ணங்கள் வந்திருக்கலாம்.
உங்களின் அரசியலுக்கும் உங்களது படைப்புக்குமான தொடர்பு என்ன?
நான் என்னுடைய அரசியல் பார்வையிலிருந்துதான் என்னுடைய கதைகளைக் கண்டடைகிறேன். விடுதலைப் புலிகள் குழந்தைகளை தங்கள் படையில் சேர்க்கிறார்கள். இது தவறு. இதுதான் எனது கருத்து. நான் குண்டு டயானா என்ற ஒரு கதையை எழுதினேன். எனது கருத்து நேரடியாக இருக்காது. இந்த யுத்தம் தமிழனை மட்டும் அல்ல, அப்பாவிச் சிங்களனையும் பாதிக்கிறது.
யுத்தத்தில் முன் அரங்கில்
நிற்கும் ராணுவ வீரன் யாரென்றால் ராணுவச் சீருடை போர்த்த ஏழைச் சிங்கள விவசாயி
என்ற ஒரு வரியின் மீது எழுதப்பட்ட கதைதான் தங்கரேகை. இதுதான் எனது அரசியலுக்கும்
கதைகளுக்குமான தொடர்பு.
Comments