வெறும் மூன்று பூக்கள் பூப்பதற்கு இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வைக்கும் எனது ‘டெசர்ட் ரோஸ்’ செடி அந்தக் காத்திருப்புக்கு முழுவதும் தகுதிகொண்டது. செவ்வரளியின் சாயலையொத்த பூதான் டெசர்ட் ரோஸ். என்றாலும் அதன் இளஞ்சிவப்பு, விளிம்பில் இழையாய் இருக்கும் ரத்தச்சிவப்பு, வெளிக்கோடுகள் துல்லியப்படாது வெளியோடு உருமயங்கும் தன்மை ஆகிய அம்சங்கள் டெசர்ட் ரோஸ்க்கு கூடுதல் வசீகரத்தைத் தருவதாக உள்ளது. சுற்றுக்கோடுகள் (contour) கூர்மையாகத் துடிக்காமல் வெளியோடு கோடுகள் மயங்கும் கூழாங்கல்லைப் போன்ற கலையில் கூடுதலாக அடைக்கலத்தை உணர்கிறேன். செய்நேர்த்தி, உள்ளடக்கம், கருத்து, மொழி, வடிவம் ஆகியவற்றின் கோடுகள் மங்கி மிருதுவாகி மயங்கும் ஒரு பாழ் வசீகர அனுபவத்தை தன் சிறுகதைகளின் வழியாகத் தந்ததனாலேயே, இன்றைக்கும் நம் மொழியின் அழியாத நினைவாக மௌனி இருக்கிறார். காலஞ்சென்ற கர்நாடக இசைக் கலைஞர்களில் மேதையென்று அறியப்படுபவரான எம். டி. ராமநாதன் பாடிய ‘மோக்ஷமு கலதா’ என்ற தியாகையர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனையைக் கேட்கும்போது, ஒரு வார்த்தைகூட புரியாவிட்டாலும், அந்தகாரத் தனிமையின் இருட்டிலிருந்து பிரார்த்தனை போல இரைஞ...