Skip to main content

தாய் அறியாத புரட்சி எது?


                               ஷங்கர்ராமசுப்ரமணியன்

மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலில், ‘தாய்மார்கள் இரக்கத்துக்கு உள்ளானதேயில்லை’என்று ஒரு வரி வரும்.

‘லட்சுமி என்னும் பயணி’ சுயசரிதையை எழுதியிருக்கும் லட்சுமி அம்மாவின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. தாய், தந்தையரின் அரவணைப்பிலான, சரியான குழந்தைப் பருவத்தைக்கூட அனுபவிக்காத ஏழைச் சிறுமி லட்சுமி. அடிப்படைத் தேவைகளுக்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல நேர்ந்தவர். அங்கே தொழிற்சங்கத்தில் சேர்ந்தவர். தொழிற்சங்கம் வழியாக முழு நேர அரசியலுக்குத் திருமணம் வழியாகவும் பிணைக்கப்பட்டவர்.

லட்சுமி அம்மாவின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை, அரசியல், சூழ்நிலைகள் அனைத்தும் அவரது தேர்வு அல்ல. ஆனால், துரும்பளவுகூட மீட்சிக்கு வாய்ப்பில்லாத சூழலில் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துக்காகவும் சகமனிதர்களின் தன்னிறைவுக்காகவும் போராடும் நித்தியப் போராளியாக லட்சுமி அம்மா இந்த சுயசரிதை வழியாக வெளிப்படுகிறார்.
மேல்நிலைக் கல்வி, மார்க்சியம், பெண்ணியம் சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படை எதுவுமின்றி, சமூகத்தின் அடித்தளத்திலிருந்து வந்து, அரசியலை வாழ்க்கையாகக் கொண்டு சமூக விடுதலைப் போராட்டத்தின் அங்கமாக மாறிய லட்சுமி அம்மாவின் சுயசரிதை முன்மாதிரியில்லாதது.

அரசியலைத் தங்கள் வாழ்வின் பிரதானப் பணியாகத் தேர்ந்தெடுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்தை லட்சுமி அம்மாள் தன் கதை வழியாகவே கடுமையாக உரைத்துவிடுகிறார். ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது ஒரே ஒரு வேலைதான். பெண்களுக்கோ இரட்டை வேலை மட்டுமல்ல, பெரும் சுமையாகவும் மாறுகிறது.
லட்சுமி அம்மாள் தனது முழு நேரக் கட்சி ஊழியரான கணவரின் குடும்பப் பொறுப்புகள், அரசியல் பொறுப்புகள் இரண்டையும் சுமக்கிறார். குழந்தையைப் பார்த்துக்கொண்டேதான் போராட்டங்களிலும் கலந்துகொள்கிறார். இடுப்பில் குழந்தையுடன் தன் தெருவுக்குத் தண்ணீர் லாரியைக் கொண்டுவருகிறார். ஆண்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். பெண்ணின் உடலோ அரசியல் பணிகளூடாகக் கூடுதலாகச் சிதைகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டு ஆண்கள் சிறைக்குப் போய்விடுகிறார்கள். ஆனால், போராட்டத்தில் ஈடுபடும் லட்சுமி உள்ளிட்ட பெண்கள் போலீஸால் சிறைப்பிடிக்கப்பட்டுச் சிறைக்குச் செல்ல மாட்டோமா என்று ஏங்குகிறார்கள். சிறைக்குச் சென்றாலாவது அன்றாட வீட்டு வேலைச் சுமை குறையும் என்ற ஏக்கம் அவர்களுக்குச் சிறையை விடுதலைக்கான இடமாய் மாற்றுகிறது. துரதிர்ஷ்டவசமாக லட்சுமியை போலீஸார் சிறையில் ஒருபோதும் அடைக்கவில்லை. அவர் வெளியிலேயே உழல்வதற்குப் போதுமான துன்பங்கள் இருக்கின்றன.

லட்சுமி அம்மாவின் சுயசரிதையில் அவர் சொல்லும் கதைகளுக்குப் பின்னால் சொல்லப்படாத கதைகள் இருக்கின்றன. லட்சுமி அம்மாவின் கணவர் பெ. மணியரசனும், இராஜேந்திர சோழன் போன்ற தோழர்களும் மார்க்சிய இயக்கத்திலிருந்து தமிழ்த் தேசிய அரசியலை நோக்கித் திசைதிரும்புவதற்கான காரணிகளும் வலுவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உள்ளூர் தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தைத் தூண்டிவிடும் கட்சித் தலைமை, ஒரு கட்டத்தில் பின்வாங்குவதையும் அதனால் அடிமட்டத்தில் போராடும் கட்சித் தோழர்கள் பாதிக்கப்படுவதையும் இந்த நூல் சொல்கிறது. காவிரி நதி நீர் போன்ற மாநில நலன்களைப் பேசும்போது கட்சி மவுனமாக இருப்பதையும் லட்சுமி அம்மாள் பதிவுசெய்கிறார்.

தன் குடும்ப நலன், தன் பிம்பத்தை உயர்த்திப் பிடித்தல், தன் நலனுக்காக எதையும் சமரசம் செய்யத் தயங்காத ஆளுமைகளை இன்றைய சமூக வாழ்வில் நாம் கண்டுவருகிறோம். இந்தச் சூழ்நிலையில் சமத்துவம், பொதுநலம், மொழிநலனுக்காகப் பல்வேறு கருத்துநிலைகளில் நின்று போராடிய அரிய ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள் இந்த நூலில் உண்டு.
லட்சுமி அம்மா உருவாக்கிய வீட்டில் அவரது கணவர் மணியரசன் வந்து செல்பவராகவே இருக்கிறார். பெரும்பாலும் கட்சி, போராட்டங்களுக்காகத் தலைமறைவாகவும், தெருக்களிலும் சிறையிலும் இருக்கிறார்.

காலம்காலமாகப் பெண்களின் உழைப்பு மனித நாகரிகத்துக்கும் உலகத்தின் வளத்துக்கும் கலாச்சாரப் பெருமைகளுக்கும் காரணமாகியுள்ளது; ஆண்களின் அந்தஸ்துக்கும் பெருமிதத்துக்கும் அடையாளத்துக்கும் உரமாகியுள்ளது; அத்துடன் புரட்சிகளுக்கும் போராட்டங்களுக்கும்கூடப் பெண்களின் உழைப்பும் தியாகமும் வலிகளும்தான் விதைகளாக மாறியுள்ளன என்பதைச் சொல்லும்போது துக்கமும் வந்துசேர்கிறது.

மனித நாகரிகம் முழுவதும் பெண்களுக்குத்தான் கடமைப்பட்டுள்ளது. பெண்தான் இந்த உலகைத் தாங்கிப் பிடிக்கிறாள். இந்தப் பெருமையெல்லாம் சரிதான். ஆனால், குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது இதுபோன்ற பெருமைகளிலிருந்தெல்லாம் பெண்களை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆண்கள் யாரும் குற்றவுணர்வின்றிப் படிக்க முடியாது. இந்தச் சுயசரிதையில் திருமகள், மௌனேஸ்வரி, அனாரம்மா என எத்தனையோ பெண்களின் சித்திரங்கள் வருகின்றன. குழந்தைகள் வருகிறார்கள். ஆண்கள் லட்சுமி அம்மாவின் கதையில் மிகவும் சிறுத்திருக்கிறார்கள்.

ஜான் ஆபிரகாமின் ‘அம்ம அறியான்’ படத்தில் வசனம் ஒன்று வரும். “எந்தக் குழந்தையும் அம்மாவிடம் சொல்லாமல் புரட்சிக்குப் போகக் கூடாது”. தாய் அறியாத புரட்சி ஏது?

Comments