(நடேஷின்கோட்டுச்சித்திரங்கள் குறித்த கட்டுரைக்கான இணைப்பு https://www.shankarwritings.com/2021/10/eggu.html ) 1990களில் பிற்பகுதியில் படிப்பை முடித்து சென்னையில் வேலைகளில் சேருவதும் விடுபடுவதுமாக இருந்த காலகட்டத்தில் நவீன ஓவியனாய், தன் கலை ரீதியான சிந்தனையின் நீட்சியாகவே பார்ப்பவர்களிடமும் உடனடியாக மோதி உரையாடல் நிகழ்த்தும் கலைஞனாக, நண்பராக கொந்தளிப்பும் உற்சாகமுமாய் அறிமுகமானவர் நடேஷ். நண்பர் சி. மோகனுக்கு பிரியத்துக்குரிய வட்டத்தில் நானும் இருந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே செல்லமாக இருந்தவர் நடேஷ். 1999 காலகட்டத்தில் என் கோடம்பாக்கம் அறைக்கு வருமளவுக்கு நடேஷ் நெருக்கமாகிவிட்டார். புலி, பூனை, நாய் எல்லாமே நேச்சுரலான யோகா மாஸ்டர்ஸ் மாமு, மனுஷனோட பரிணாமத்தில் சீக்கிரம் மூக்கில் ஸ்ட்ரா வளர்ந்துவிடும், நிலத்தடி நீர் எல்லாம் கீழ போய்க்கிட்டிருக்கு என்பது போன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடியேதான் அறைக்குள் நுழைவார். அலியான்ஸ் பிரான்சேஸ் கலாசார மையத்தின் நுழைவுக் கூரையில் நடேஷ் பிரமாண்டமாக வரைந்த யானை ஓவியம் பல ஆண்டுகளாக அங்கே பாதுகாக்கப்பட்டு வந்தது. சைக்கிள் ஓட்டும் யானை...