Skip to main content

புட்டியும் உடையவில்லை வாத்தும் சாகவில்லை


 ஜென் துறவி நான்சனிடம் அவருடைய மாணவரான ரிகோ ஒரு பழைய புதிருக்கான விடையைக் கேட்டார். “ஒருவன் ஒரு வாத்துக் குஞ்சைக் கண்ணாடிப் புட்டியில் இடுகிறான். அதற்கு நாள்தோறும் உணவும் இடுகிறான். வாத்து வளர்ந்தது. இப்போது ஒரு கேள்வி? கண்ணாடிப் புட்டியிலிருந்து வாத்தை உயிருடன் வெளியே வரவைக்க வேண்டும். கண்ணாடிப் புட்டியையும் உடைக்கவே கூடாது”.
கண்ணாடிப் புட்டியின் கழுத்தோ சிறியது. வாத்தால் வெளியே வர முடியாது. புட்டியையும் உடைக்கக் கூடாது; வாத்தும் கொல்லப்படக் கூடாது. வாத்து முழுமையாக உயிருடன் வெளியே வர வேண்டும். புட்டியும் சேதமாகாமல் இருத்தல் அவசியம். இங்கே அழித்தலோ உடைத்தலோ கூடாது. நான்சன் இந்தப் புதிரைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தார். அந்த விடையின் மீது தியானத்தைத் தொடங்கினார். அந்தப் பிரச்சினைக்கு விடை ஒன்றும் கிடைக்கவில்லை. திடீரென்று அந்தப் பிரச்சினையே இல்லையென்ற புரிதல் நான்சென்னுக்கு ஏற்பட்டது. தன்னிடம் அந்தப் புதிரைக் கேட்ட ரிகோவின் பெயரைச் சொல்லிக் கைகளைத் தட்டி ஒரு நாள் சத்தமிட்டார் நான்சென்.
“ரிகோ”
ரிகோவிடம் சென்று, “வாத்து வெளியே வந்துவிட்டது” என்றார்.
வாத்து ஒருபோதும் உள்ளேயும் இல்லை. அது எப்போதும் வெளியில் தான் உள்ளது. அகந்தையின் ஏழு அடுக்குகளும் மறைந்துவிட்டதென்று குரு ரிகோவுக்குப் புரிந்துவிட்டது. நான்சென், ரிகோ என்று சத்தமிட்டவுடன் அவருக்கு ஞானம் வந்துவிட்டது. ரிகோவோ அந்தக் கேள்விக்கு தத்துவார்த்தமான விடை ஒன்றை எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் “ரிகோ” என்று சத்தமிட்டவுடன் எந்தக் காரணமும் தொடர்புமின்றியே விடுபடாத ஒரு புதிர் தீர்க்கப்பட்டு விட்டது. அதுதான் அந்தப் புதிரின் ரகசியமும் கூட. “இதோபார் ரிகோ, வாத்து வெளியே வந்துவிட்டது” என்றார் நான்சென். கண்ணாடிப் புட்டியின் ஏழு அடுக்குகள் அகன்றுவிட்டன.
“ஆமாம் குருவே” என்றார் ரிகோ. அந்தக் கணத்தில் ரிகோ தூய்மையான பிரக்ஞையாக இருந்தார். அங்கே ஒரு திரைகூட இல்லை. ரிகோ உடல் அல்ல. அந்தக் கணத்தில் ரிகோ மனம் அல்ல. அந்த க்ஷணத்தில் கடந்த காலத்தின் நினைவு அல்ல. அந்த நொடியில் ரிகோ எந்த ஆசையும் அல்ல. அந்த நிமிடத்தில் யாருடனான ஒப்பீடும் அல்ல. அப்போது அவன் எந்தச் சமயத்தையும் சேர்ந்தவன் அல்ல.
‘ரிகோ’ என்று அவனை அவனுடைய குரு அழைத்தபோது, அவன் ஒரு விழிப்புநிலை, அவ்வளவே. எந்த உள்ளடக்கமும் நெறிப்படுத்தலும் அங்கே இல்லை. அவன் இளைஞனோ கிழவனோ அழகனோ அசிங்கமானவனோ அல்ல. அவன் முட்டாளோ புத்திசாலியோ இல்லை. எல்லா திரைகளும் மறைந்துவிட்ட சுடர்விடும் விழிப்பு நிலை அவன்.
“நான் புட்டியை உடைக்கவில்லை. அது அங்கேயேதான் இருக்கிறது. நான் வாத்தையும் கொல்லவில்லை. ஆனால், வாத்து வெளியே வந்துவிட்டது.”

Comments