வீட்டின் தாழ்வார
மிதியடியருகே
அடுத்த காலடி நெருக்கத்தில்
கருமையும் வெள்ளையும்
மினுமினுத்து நெளிய
ஒரு குண்டு உடலைப்
பார்த்தேன்
திடுக்கிட்ட பிறகுதான்
பூனை என்று
எண்ணம்
முழுமையாய்
வரைந்தது
நான் பார்த்த பிறகு
அது ஓடிவிட்டது
நான் பார்க்காத வேளையில்
அது அங்கே வந்து இருந்து
சில நிமிடங்கள் ஆகியிருக்கும்
படியிறங்கி ஓடி
காம்பவுண்ட் சுவரைத்
தாண்டுவதற்கு முன்னால்
அதற்கு நான் வரைந்த
உடலை
அதுவே தொகுக்கும்
வேலை.
ஆனால்
நானோ
அதன் முகத்தைக் கூட
முழுமையாகப் பார்க்காமல்
திருட்டுப் பூனை
திருட்டுப் பூனை
திருட்டுப் பூனை என்று
புதுசாய்க் கண்டுபிடித்த
எக்களிப்பில்
நானே வரைந்த பூனையைத்
துரத்தி ஓடுகிறேன்.
Comments