எங்கே ஆடுகிறது
அந்தத் தொட்டில்
என் குழந்தை வளர்ந்து விட்டாள்
ஆனால் தொட்டில்
ஆடும் சத்தம் கேட்கிறது
தூளியை ஆட்டி
ஞாபகமிருந்த ஒரே ஒரு தாலாட்டைப்
பாடிய
பெரியம்மாவும் இப்பூமியில் இல்லை
ஆனாலும் தொட்டில்
ஆடிக்கொண்டு தான் இருக்கிறது.
தொட்டில் கம்பு கொண்டுவந்த
நெல்லையப்பன் அத்தான்
இப்போது இல்லை
ஆனாலும் தொட்டில்
ஆடிக்கொண்டு தான் இருக்கிறது.
முதல்முறையாக
வண்ணங்களை என் மகள் அறிவதற்கு
சொல்லித்தந்த
கிளி
எங்கே போனது
தெரியவில்லை
ஆனாலும் தொட்டில்
எங்கோ ஆடிக்கொண்டு தான் இருக்கிறது.
Comments