பறக்கும் ரயிலிலிருந்து
கலைவாணர் அரங்கத்தின்
வாகன நிறுத்தத்தில்
இரண்டு புதியரகக் கார்களுக்கு நடுவே
கடல் நீல நிறத்து
அம்பாசிடர் காரைப்
பார்த்தேன்.
வானை முட்டும் கட்டிடங்களுக்கு நடுவே
மிகவும் ஆழம்
மிகவும் தூரம்
மிகவும் ஏகாந்தம்
மிகவும் அமைதி
அந்த நீல நிற அம்பாசிடர் கார்.
என் அம்மாவின்
திருமணப் பட்டுச்சேலையில்
பின்னொரு நாள்
உறங்கியபோது
உணர்ந்த மிருது
வெள்ளிப் பரல்கள் மின்னி மறையும்
இளங்காலை வெயிலில்
ஒற்றை ஜோடியாய்
அவள் கைபிடித்து
கடல் நோக்கி நடந்த நாளில்
பாதமெங்கும் படர்ந்த மிருது.
2
இலவ மரம்
கிளி
பரஸ்பரம் பரஸ்பரம்
நினைவில் இல்லாத
கதை.
இலைகளுக்கும் மரத்துக்கும்
பச்சை மேல்
மேலும்
இச்சையை அளித்து
சுற்றி சுற்றிப் பறந்தன
கிளிகள்.
Comments