Skip to main content

சஹானா கவிதைகள்



‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்பது பிரமிளின் கவிதை வரி. அந்தக் கண்டுபிடிப்பை கவிதைக் கணங்களாக நிகழ்த்துபவை சஹானாவின் கவிதைகள். இறந்த உலகங்கள், இறந்த அனுபவங்கள் மோதிக் கொண்டேயிருக்கும் சித்தத்தைக் கிழித்து தற்கணத்தில் வேரூன்ற சஹானா சொல்லும் தேவதைக் கதைகளாக அவரது கவிதைகள் இருக்கின்றன. தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் பேதமின்மையை உணரும் புள்ளிகளில் தன் கவிதைகளை எழுதிப் பார்த்துள்ளார் சஹானா. பள்ளி பீரியட் இடைவெளியில் கழிப்பறை சுவரில் தேங்கியிருக்கும் நீரில் கும்மாளமிடும் குருவியை தன் மனதில் பாதியாக சஹானாவுக்குப் பார்க்கத் தெரிகிறது.
இயல்பாகவே கற்பனைக்கும் நிஜத்துக்குமான திரைச்சீலை கிழிந்த உலகம் சஹானாவுடையது. “சிறு துளியில் எனது குடம் பொங்கி வழிகிறது’ என்னும் அறிதல் அப்படித்தான் சத்தியமாகிறது. இந்த உலகில் எங்கோ ஓரிடத்தில் சிறுதுளியில் பொங்கும் குடத்தின் சாத்திய இருப்பை அந்தக் கவிதை உறுதி செய்துவிடுகிறது. குழந்தை தாய்க்குப் பாலூட்டுகிறது என்ற வரியும் உண்மையாகும் இடம் அது.   

சம்பிரதாயப் பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேறி விட்ட சஹானா
குழந்தை, ஞானி, சிறுமி, மகள் என்னும் கட்டங்களில் தாண்டித் தாண்டி விளையாடியபடி அடைந்திருக்கும் சுயகல்வியாக இந்தக் கவிதைகள் தெரிகின்றன. குழந்தை, பெண் என்ற நிலையில் கவிஞன் என்ற தொழில்நெறியாளன் அபூர்வமாகச் சென்று சேரும் இடங்களை கவிதையின் தாதுநிலையில் சஹானா பிடித்திருக்கிறாள். பிரமிள் எழுதிய சிறந்த கவிதைகளில் ஒன்றான ‘வண்ணத்துப்பூச்சியும் கடலும்’ கவிதையிலாவது வண்ணத்துப்பூச்சி இறந்த பிறகு கடலின் தித்திப்பை உணர்கிறது. ஆனால், சஹானாவின் பட்டாம்பூச்சியோ, மிகப்பெரிய பூவில் தேன் குடித்து முடித்த பின்னும் வாய்க்குள் சுவை தீர்ந்துவிடவில்லை. ஆழம், நிசப்தம் தரும் இனிப்பைச் சிறுவயதிலேயே சுவைத்திருக்கிறாள்.

சஹானாவின் கவிதைகளைப் படிக்கும்போதுதான், பெண்கள் ஏன் பூச்சூடுகிறார்கள் என்பதற்கான பதிலை நான் தெரிந்துகொண்டேன். அவர்கள் தாவரங்கள் என்று அவர்களது உயிருக்குத் தெரிந்திருக்கிறது; அதனால் சூடுகிறார்கள் என்ற உண்மை மிகத்தாமதமாக எனக்கு உறைத்தது. இயற்கைக்கு மிக அருகிலிருக்கும் போது உணரும் பேதமற்ற தன்மையையும் எல்லையற்றது தரும் தவிப்பையும் எதுவும் தீராத போத உணர்வையும் இந்தக் கவிதைகள் இயற்கையாக இறகுகளைப் போலச் சுமக்கின்றன; தித்திப்புடன் சுவைக்கின்றன.

தொட்டிலில் தூங்கும் லாஸ்யா உலகம் சுகிக்கத் தூங்குகிறாளாம். பூவிலிருந்து உறிஞ்ச முடியாத மஞ்சள் தேன் உடலாம். நாம் பார்க்க இயலாத ஒரு மழைக்காட்டில் அந்தக் குழந்தை ஓய்வெடுக்கிறதாம்.

கடல், அடர்காடு, மழை, மீன், பட்டாம்பூச்சி, காகம், நட்சத்திரம், மெழுகு, மேகங்கள் என உருமாறி எல்லாவற்றோடும் அடையாளம் கண்டு தற்கணத்தில் மூழ்கும் கவிதைகள் இவை. இத்தொகுப்பில் உள்ள சிறந்த கவிதைகளில் பிரமிள், நகுலன், தேவதச்சன், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைகளின் அனுபவ எதிரொலிகளைப் பார்க்க முடிகிறது. தன்னையும் இயற்கையின் ஒரு பகுதியாகத் திறந்து அந்தக் கணத்தின் எக்களிப்பில் நிகழும் அறிதல்களை தமிழில் ஏற்கெனவே கவிஞர் தென்றல் எழுதியுள்ள கவிதைகளும் ஞாபகத்துக்கு வருகின்றன.  

ஒரே ஒரு மீன் மட்டும் விழித்திருக்கும் போது கடலில் படகை செலுத்தத் தெரிந்த சஹானாவின் கவிக்கண்கள் அபூர்வமானவை; ஏனென்றால் அவை கீறி குணப்பட்ட கண்ணின் அனுபவங்களைச் சேகரித்தவை. கவிஞர்கள் கவிதை வாசகர்கள் மேல் சடசடவென்று புதுநீரினை இறகுகளால் தெளிக்க வல்லவை. கண் அறியாக் காற்று என்ற தலைப்பு சரிதான். சஹானாவின் கவிதைகளைக் கண்டு அதைப் பதிப்பித்திருக்கும் ஆகுதி-பனிக்குடம் பதிப்பகம் பாராட்டுக்குரியது.

அலைக்கு மேல் துள்ளும் மீனைப்போல
நீர்க்காகம்
குளித்தலும் பறத்தலுமாக இருக்கிறது
விரிந்த முழுக்குளத்தின் குறுக்குவெட்டாக
நொடிப்பொழுதில் பறந்து செல்கையில்
எல்லைப் பரப்புகள் மாயமாவதை
ஓர் ஓரத்தில் மரமாய் நின்று
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
இலைகள் துளிர்க்கின்றன.

0000

அன்று அவள்
என்னோடு விளையாடிக் கொண்டிருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
இரவு வானில் நட்சத்திரங்கள்
பூக்கத் தொடங்கின
மேகங்களின் ஊஞ்சலில்
வெகுநேரம் ஆடினோம்
இன்று அவள் இருந்த இடத்தைப்
பார்க்கச் சென்றேன்
அவளைப் போன்ற ஒரு பூனை
என்னைப் பார்த்துச் சொல்கிறது
அவள் எங்கிருக்கிறாளோ.

000
கடல் மீன்கள் தூங்கியிருக்கும்
மணல் நண்டுகள் சண்டையிடும்
கடல் ஆமைகள் அமைதியாக
கரை ஏறித் தவந்து மகிழும்
சூரியன் கடலறையில் ஓய்வெடுக்கும்
வான் நிலா மேலேறிப் பணியைத் தொடரும்
மேகம் புகைநிறம் ஆகிவிடும்
ஒரே ஒரு மீன் மட்டும் விழித்து இருக்கும்
என் படகு
கடலில் செல்லும் நேரம்.
000
என் வில்லுக்குறி
பெரியம்மா வந்ததும்
பெரியம்மா வசித்த போதிருந்த
பழைய வில்லுக்குறி ஆகிறது

போனபின்
மறுபடியும்
என் பழைய வில்லுக்குறியாகிறது.
000


Comments