Skip to main content

மியாவ் மியாவ் மியாவ்


  

தாய்ப்பாலுடன் சேர்ந்து

பருப்பு சோறு

சாப்பிடத் தொடங்கும் போது

குழந்தைகளுக்கு

பூனை மீசை வளர்கிறது

பூனைகளுக்கும்

எனக்கும் மட்டுமே தெரியும்

மீசை அது

அம்மாவின் ரத்தம் குடித்து

வளர்ந்த மீசையாக்கும்

என்று ரகசியமாய்

தெரிவித்து

வாயைச்

சப்புக்கொட்டுகிறது

குழந்தை.

000
புழக்கடையில்

என்ன சத்தம் என்கிறாள்

காக்காய் கரைகிறது

என்றேன்

வித்தியாசமாக இருப்பதாகச் சொன்னாள்

அப்படியாவென்று கேட்டு

அடுப்பங்கரைப் பால்கனிக்குப் போய்

நானும் சேர்ந்து கரைந்தேன்

ஆமாம்

அவள் சொன்னது சரிதான்

எங்கள் கரைதலுக்கு உள்ளே

மியாவ்

மி…..யா…..வ்

மி……….யா……….வ்

இருக்கிறது.

5

உனது கடைசிப் பூனைக் கவிதையை

எப்போது எழுதப் போகிறாய்?

இப்படி ஒரு குரல் கேட்டது

விழித்தேன்

முதலில் பயந்து

பின்னர் தளர்ந்து சிரித்தேன்

கடைசிப் பூனையைப் பார்த்த பிறகு

போதுமா என்று

பதிலைச் சொல்லி

புரண்டு கொண்டேன்.

000
முகத்தை உற்றுப் பார்

பூனையிலிருந்து

மிகத்தொலைவில்

அடர்ந்த இருளுக்குள்

உள்ளது

புலி

புலியின் முகவாட்டம்

குலைந்த ஜியோமிதி

அதில் தெரியும் மடத்தனம்

குழந்தைமை

நிர்வாண வேட்டை

பூனையில் இல்லவே இல்லை.

Comments