Skip to main content

சங்கர் (எ) எலி




 

நினைவு அஞ்சலி சுவரொட்டியில் 
சங்கர் (எ) எலி 
பெயரைப் பார்த்ததும் 
வழக்கம் போல 
வயதைப் பார்த்தேன் 
47 வயது 
முகத்தைப் பார்த்தேன் 
கண்களும் மூக்கும் 
மூன்று துளைகளாக 
கருப்பு வெள்ளையில் தெரிந்தன

எலியென்று 
ஆசையாக 
பெற்றோர் சூட்டியிருக்க முடியாது.


பள்ளியிலோ 
வேலையிலோ 
வீதியில் 
நண்பர்களின் மத்தியிலோதான் 
சங்கர் என்ற எலியாக 
அவர் ஆகியிருந்திருக்க வேண்டும்

உயிருடன் இருந்தபோது 
எலி செல்லாத 
எந்த இடத்துக்கும் போக 
சங்கருக்கு சாத்தியம் இருந்திருக்காது

எலியை நன்கு அனுசரித்திருப்பார் 
சங்கர்.

வாழ்வில் 
இத்தனை பூக்களை 
பார்த்திருக்க மாட்டார் சங்கர்.

சங்கர் மரணமடைந்த இன்று 
சங்கரிடமிருந்து 
எலி 
நிச்சயம் பிரிந்திருக்கும்.

சாவின் வீச்சம் கொண்ட 
பருத்த சாமந்திகளோடு 
கூட்டத்தோடு கூட்டமாய் 
சுடுகாட்டுக்குப் போயிருக்கலாம் 
அல்லது 
நடுவில் 
டாஸ்மாக் கடைக்குள் 
மிச்ச மது குடிப்பதற்கு 
ஒதுங்கியிருக்கலாம் எலி.

Comments

மரணம் இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. கற்பிதத்தின் மீது கட்டப்பட்டபவன் என்றும் சுயத்தை அடைவது இங்கேதான். அதுவே அந்த முக்திநிலை. அருமை, சங்கர்.
ஜனாப் சாகிப் அவர்களே நலமா நன்றி.