Skip to main content

சிங்கப்பூரில் கள் பாவிப்பு – கண்முன் தோற்றம் கொள்ளும் வரலாறு

 



சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’-ல் வெளியாகியிருந்த ‘சிங்கப்பூரில் கள்ளின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ கட்டுரை, ஆழமும் சுவாரசியமும் ஒருங்கே கொண்ட அபூர்வமான எழுத்தாக இருந்தது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீனமான சிங்கப்பூர் சமூகத்தில் இருந்த கள்ளுண்ணும் பண்பாட்டை, குறிப்பாக தமிழர்கள் மத்தியில் கள் குடித்தலை சமூக, பொருளாதார, வெகுஜன பாவனைகளின் பின்னணியில் முனைவர் தாரிணி அழகிரிசாமி புனைவெழுத்தாளரின் கவனிப்புகளுடன் எழுதியுள்ளார்.

வழக்கம்போல சிங்கப்பூரை அப்போது ஆண்ட காலனித்துவ அரசாங்கம், கள் அருந்துதலை தமிழினத்தின் தனிப்பட்ட இழிவாகவே கருதியிருக்கிறது. கார்ல் மார்க்ஸ் காலத்தில் ஐரோப்பாவில் ஏழைகள் நமது டாஸ்மாக் கடைகளில் இருக்கும் நிலையைவிட மோசமான ஸ்திதியில் மதுபோதையில் அழுந்திக் கிடந்திருக்கின்றனர். டி எச் லாரன்ஸின் சிறந்த கதைகளில் ஒன்றான the odour of chrysanthemums சிறுகதை ஒன்று சுரங்கத் தொழிலாளி ஒருவனின் மது அடிமை நிலையின் உயிர் சித்திரம் தான். சிங்கப்பூரிலும் ஏழைகளின் பானமாகவே கள் நுழைந்திருக்கிறது. சில தமிழர்கள் கள்ளை விற்பனை செய்து பணம் சம்பாதித்து ‘கள்ளு ராஜாக்கள்’ ஆகவும் இருந்துள்ளனர். கள் விற்பனையில் கிடைத்த லாபம் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் பங்காகப் போய்ச் சேர்ந்துள்ளது. கள்ளுக்கடைகள் சூழ்ந்திருந்ததால் இன்றைக்கு ‘ஓர்ட்’ என்றழைக்கப்படும் பாலம் அன்று கள்ளுப் பாலமாக பெயர் பெற்றிருந்திருக்கிறது. ரமேஷ் பிரேதனின் பாண்டிச்சேரி புனைவிலும் கடலூரையும் பாண்டியையும் இணைக்கும் பாலம் போதையை இணைக்கும் பாலமாக இருந்ததைப் பதிவு செய்துள்ளார். அ. மார்க்ஸும் அந்தப் பாலத்தை தனது அபுனைவில் குறிப்பிட்டுள்ளார்.

பீர் உள்ளிட்ட ஆல்கஹால் பானங்கள் அப்போதே குடிப்பதற்குக் கிடைத்தாலும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் பலரோடு உறவாடவும் கேளிக்கைக்கும் கள்ளையே விரும்பியிருப்பதாக குறிப்பிடுகிறார் தாரிணி அழகிரிசாமி. சம்சு என்று அழைக்கப்பட்ட சாராயம் மலிவாக கிடைத்தாலும் அது அடிக்கடி, முன்பு தமிழகத்தைப் போலவே, உயிரிழப்புகளை உருவாக்கியதால் சாராயம் பக்கம் போக அந்த ஏழை மக்கள் தயங்கியிருக்கின்றனர். மலேயாவில் கள் குடிப்பது சிங்கப்பூரைவிட சமூக அளவில் விலக்கமான நடத்தையாக கூடுதலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தளவு விலக்கம் சிங்கப்பூர் சமூகத்தில் இல்லை என்கிறார் ஆசிரியர். சிங்கப்பூருக்கு தமிழ் மக்களுடன் சென்ற மதுரை வீரன் போன்ற குலசாமிகளுக்கும் கள் படைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு அருகே கள்ளுக்கடைகள் இருந்தன என்கிறார் தாரிணி. கள்ளுக்கடைகளுக்கு அருகிலேயே சைட் டிஷ் உணவுகளாக கடலையும் கறியும் தமிழர்களாலேயே விற்கப்பட்டிருக்கின்றன.


முப்பது மேசைகள் போடக்கூடிய அளவில் இருந்த கடைகளில் பெரிய டிரம்களில் கொண்டுவரப்பட்டு தகரம் மற்றும் பிளாஸ்டிக் குவளைகளில் கள் பரிமாறப்பட்டிருக்கிறது. நமது டாஸ்மாக் கடைகள் போலவே மிகவும் சுகாதாரமற்றவையாக அவை இருந்திருக்கின்றன. ஏழைத்தொழிலாளர்கள் நின்றபடியோ அழுக்கான தரையில் அமர்ந்தபடியோ தலையைக் கவிழ்ந்து கள் அருந்தினர் என்று கூறும்போது ஒரு பெரிய ஓவியம் கண்முன்னால் படர்கிறது. வான்கோவை மறுமைக்குக் கொண்டு சென்ற ஓவியங்களில் ஒன்றான ‘உருளைக்கிழங்கு உண்பவர்கள்’ ஓவியத்தின் காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. காந்தி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இங்கே கள்ளுக்கடை மறியல்களை நடத்தி தென்னை மரங்களை வெட்டி எறிந்த போராட்டம், சிங்கப்பூரிலும் தாக்கத்தையும் பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. பெரியார் வருகை சிங்கப்பூரில் கள் பாவனையைக் குறைத்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காலனிய அரசாங்கத்தின் தலையீட்டால் கள்ளுக்கடைகளின் சுகாதாரம் மேம்பட்டு கண்ணாடிக் குவளைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதே நேரத்தில் சிங்கப்பூர் சமூகத்தில் பீர், அனைவரும் குடிக்கக்கூடிய பானமாக ஆரோக்கியத்தை உண்டாக்குவதாக அறிமுகப்பட்ட வரலாறும் இந்தக் கட்டுரையில் இருக்கிறது. புலி பீர் என்ற பானத்துக்கு மிக சுவாரசியமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் இரண்டு விளம்பரங்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறுகின்றன. பெண்களும் தேக ஆரோக்கியம் பெற புலி பீரைக் குடிக்கலாம் என்று அந்த விளம்பரம் காண்பிக்கிறது. ஒருவருக்கு நல்ல நேரம், அதை புலி பீர் தருகிறது என்று சொல்லும் விளம்பரம் ஒன்றில் வாழைத்தோரணம் கட்டப்பட்ட வீட்டுக்குள் ஒரு தொழிலாளி பீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டியைக் கொண்டு செல்கிறார். அவர் அங்கே பெட்டியை இறக்கிவிட்டு, மாலையில் கள்ளுக்கடைக்குப் போகுபவராக இருந்திருப்பார்.

இன்று டாஸ்மாக் கடைகளில் ஏழைகளும் சுத்திகரிப்புத் தொழிலாளர்களும் வாங்கி அருந்தும் மலிவான மானிட்டர் பிராந்தியை, கிடா ஒண்ணு கொடு என்றே கேட்டு வாங்குகிறார்கள். கிடா மார்க் சாராயத்தின் பழைய ஞாபகத்தை எழுப்புவதாக மானிட்டர் பிராந்தி உள்ளது.

கள் பொருளாதாரம் படிப்படியாக சரியத் தொடங்கி 1979-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீழந்த கதையோடு இந்தக் கட்டுரை முடிகிறது.

ஏழையின் குடியை மற்றவர்கள் புரிந்துகொள்ளவே முடியாது என்று ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா தனது சுயசரிதையில் கூறியுள்ளதை இந்தக் கட்டுரை ஞாபகப்படுத்தியது.

வரலாற்றின் ஒரு முனையில் கிறிஸ்துவும் இன்னொரு முனையில் கார்ல் மார்க்ஸும் ஏழைகளைப் புனிதப்படுத்தியுள்ளார்கள். ஏழையின் நடத்தைகளில் உடல் பாவனைகளில் கிறிஸ்துவும் மார்க்ஸும் ஏறியுள்ளார்கள். அவர்கள் தலையைக் கவிழ்த்து மது அருந்தும் நிலை இன்றும் மாறவில்லை.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அயல்நாட்டு மதுவகைகளின் விற்பனை, இந்தியாவிலும் தமிழகத்திலும் கள், சாராய விற்பனையை கிட்டத்தட்ட முடித்துவைத்து டாஸ்மாக் குடி என்பது ஒரு பண்பாடாகவே உருவாகி முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்தப் பண்பாட்டையும், அங்கே குடிப்பவர்களின் நடத்தை, ஆரோக்கியம், பொருளாதாரம் இவற்றைப் பற்றிய எந்த தீவிரமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேயில்லை. தேர்தல்களில், அரசாங்கத் திட்டங்களில் மது விற்பனை சார்ந்த பொருளாதாரம் என்பது பெரிய பங்களிப்பை இந்தியாவில் செலுத்துகிறது. மதுவிலக்கு நிலவும் குஜராத் மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களின் எந்த மூலையில் உள்ள ஊரிலும் கிடைக்கும் மதுவை அருந்திவிட்டால் போதும், நாம் புறப்பட்டு வந்த ஊரை அருந்துவது போலத்தான். கிட்டத்தட்ட தேசத்தின் அத்தனை உணர்ச்சிகளும் அம்சங்களும் ஒரே இடத்தில் கலந்திருக்கும் பானம், இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுவகைகளிலேயே சேர்ந்திருக்கிறது.

ஏழைகள், குறிப்பாக தலித் ஏழைகளின் குடி நடத்தைகள் பிரத்யேகமாக விசாரிக்கப்பட வேண்டியது. குடிசைப் பகுதிகளில் அடிக்கடி தோன்றும் மரண அஞ்சலி சுவரொட்டிகளில் இருக்கும் இளவயது ஆண்களின் முகங்களில் டாஸ்மாக் ஏற்படுத்தியிருக்கும் தடயங்கள் அதிகம். இப்படியாகப் பல எண்ணங்களை தாரிணி அழகிரிசாமியின் கட்டுரை என்னிடம் ஏற்படுத்தியது.  

(கட்டுரையைப் படிக்க : https://serangoontimes.com/2022/02/14/kal-singapore/amp/)

Comments