Skip to main content

கடலால் எங்களைப் பிரித்த தீவு




கடலால் எங்களைப் பிரித்த தீவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் தொடர தொடர பேச்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பொதுவாகப் பேசிக்கொள்ள ஏதுமற்ற எங்கள் வெறுமையூரில், அந்தக் கொலைகளைப் பற்றி ஒரு திருவிழா போல் கூடிகூடிப் பேசினார்கள். கொலைகளைப் பலகோணங்களில் இருந்தும் ஆராய்ந்து பேச வெளிநாடுகளிலிருந்தும் தாயகம் இறங்கி வந்து சிறிய அரங்குகளில் பேசினார்கள். பெரிய மேடைகளில் ரத்தம் கொதிக்கப் பேசினார்கள். பேரணிகளில் பேசினார்கள். போராட்டங்களில் பேசினார்கள். அனைவரின் கையாலாகாத்தனங்களையும் மறைப்பதில் ஆரம்பித்த பேச்சு ஒருவர் தரப்பை மற்றவர் புதைப்பதில் முனைப்பானது. பேசிப்பேசி இறந்த உடல்களை ஆழத்துக்குள் புதைத்தபடியே இருந்தனர். அனைவரும் வேறு வேறு குரல்களில் பேசினார்கள். பேச்சுகள் புத்தகங்களானது. பேச்சுகள் உடனடியாக விற்றுத்தீர்ந்தது. பேச்சுகள் திட்டநிரல்கள் ஆனது. ஆணும் பெண்ணும் ஊடல் கொள்வது போல் பேசிப்பேசி உன்மத்தம் ஏற்றினர். மரணம் நேரும் புதிரும், பலவீனமும் ஆன முடிச்சை அவர்கள் உணராமலேயே பேசிக்கொண்டிருந்தனர். சிலர் இறந்தான் என்றனர். சிலர் இறக்கவில்லை என்றனர். இரண்டு தரப்பும் கதைகளைச் சந்தையில் கூவி விற்றனர்.கவிஞர்கள் பேசினார்கள். அரசியல்வாதிகள் பேசினார்கள். எழுத்தாளர்கள் பேசினார்கள். சினிமாக் கலைஞர்கள் பேசினார்கள். திருநங்கைகள் பேசினார்கள் . ஓவியர்கள் பேசினார்கள். முற்போக்குகள் பேசினார்கள். பிற்போக்குகள் முரண்பட்டுப் பேசினார்கள். மௌனத்தை யாரும் கடைபிடிக்கவேயில்லை. எங்கள் நகரத்தில் ஒவ்வொரு தெருமூலையில் குவிந்திருக்கும் குப்பைகளிலும் எலிகள் முளைக்கத் தொடங்கின. மழையில் பூனைகளின் மரணம் அதிகமானது. அரசு மதுபானக்கடைகளில் மாலைகளில் மது வாங்குவதில் நெருக்கடி ஏற்பட்டு நகரதொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட தகராறுகள் கலவரமாகின. ஓட்டுனர் இல்லாத மரணரயில் பிரதான நிலையத்திலிருந்து பாதைமாறி பயணித்தது. பிளாஸ்டிக் குவளைகள் மற்றும் மதுவின் ஈரபிசுபிசுப்பு குவியலுக்கிடையே தனிமையை பேச இயலாத நாக்கு துண்டித்துக்கொண்டு உதிரத்தோடு குப்பைகளுக்குள் கிடக்கிறது. அந்த தீவின் தலைநகரில் ஒரு பைத்தியம் தாய்மொழியைப் பேசியதால், அவன் இனம்காணப்பட்டு காவல் தடியால் தாக்கப்படுகிறான். எல்லாரையும் போல அவன் கடலுக்குள் தப்பவே முயல்கிறான். கடலுக்குள் புகுந்தபின்பும் அடி, அவன் தலையில் விழுகிறது. அவன் உயிர்ஓலம் எழுப்பி கையைத் தூக்கி மன்றாடுகிறான். அவன் கருணை கோரும் சிறுகுரங்கு போல் தெரிந்தான். அவனது கபாலம் அதிர்கிறது. அலைகளுக்குள் போகிறான். மொழியற்ற அவனது கைகூப்பல் இந்த உலகை நோக்கி வெறித்து மூழ்குகிறது.

Comments