Skip to main content

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

ஷங்கர்ராமசுப்ரமணியன்
(மணல் புத்தகம்,3-  2009 இல் எழுதப்பட்ட தலையங்கம்)
புகைப்படம் - சந்தோஷ் நம்பிராஜன்


ஜப்பானில் உள்ள நாகாசாகியில் வசித்த பெண் ஒருத்தி, கலை வேலைப்பாடுள்ள நறுமணப் புகைச்சிமிழ்களைத் தயார் செய்வதில் அரிதான திறன் பெற்றவளாய் இருந்தாள். அவள் பெயர் கமே. ஜப்பானில் தேநீர் சடங்கு நடக்கும் இடங்களிலும், மடாலயங்களிலும் அவள் தயார் செய்த நறுமணப் புகைச்சிமிழ்கள்தான் அலங்கரித்தன.
கமேயின் தந்தை நல்ல ஓவியக்கலைஞர். அவர் குடிப்பதில் மிகவும் விருப்பமுடையவர். கமே அவள் தந்தையிடமிருந்து கலையையும் குடியையும் கைவரப் பெற்றிருந்தாள்.
கமேக்குச் சிறிது பணம் கிடைத்தால் போதும். ஓவியக்கலைஞர்கள், கவிஞர்கள், பணியாளர்கள் என்று அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்து மகிழ்விப்பாள். ஆண்களுடன் சேர்ந்து கலந்து புகைப்பதிலும் அவளுக்கு விருப்பம் அதிகம். இந்த விருந்துகளில் இருந்துதான் அவளுக்குப் புதிய வடிவங்கள் பற்றிய கற்பனை பிறக்கும்.
கமே தனது படைப்புகளை உருவாக்குவதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால் அவள் உருவாக்கும் ஒவ்வொன்றுமே சிறந்த கலைப்படைப்பு ஆகிவிடும். அவளது நறுமணப் புகைமூட்டிகள் வீடுகளிலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. அந்த வீடுகளில் இருந்த பெண்கள் குடிப்பதேயில்லை. புகைப்பதுமில்லை. அவர்கள் ஆண்களுடனும் சகஜமாகப் பழகுபவர்கள் இல்லை
 
ஒரு நாள் நாகசாகியின் மேயர் கமேயைக் காண வந்தார். தனக்கென்று நறுமணப் புகைச்சிமிழ் ஒன்றை அவள் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேயருக்கான நறுமணப் புகைமூட்டியை உருவாக்க கமே ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டாள். அந்தச் சமயத்தில் மேயருக்கு இடமாற்ற உத்தரவு வந்தது. அந்த அவசரம் காரணமாக மேயர், கமேயிடம் சென்று தனக்காகச் சீக்கிரம் புகைச்சிமிழ் வேலையை முடிக்க வேண்டும் என்று கோரினார்
 
கடைசியில் ஒரு வழியாகத் தூண்டுதல் பெற்ற கமே, ஒரு நறுமணப் புகைச்சிமிழை இரவு பகலாக விழித்திருந்து உருவாக்கினாள். பணி நிறைவடைந்தவுடன் அவள் உருவாக்கியதை மேஜை ஒன்றில் வைத்து நீண்டநேரம் கவனத்துடன் அவதானித்தாள்.
பிறகு அந்த நறுமணப் புகைச்சமிழிதான் தன் துணைவன் என்பதுபோல், அதனுடன் குடிக்கவும், புகைக்கவும் தொடங்கினாள். நாள் முழுவதும் அதனைப் பார்த்துக்கொண்டே கடைசியில், ஒரு சுத்தியலை எடுத்து, நறுமணப் புகைமூட்டியைத் துகள்துகளாக நொறுக்கினாள். அவள் மனம் கேட்டதுபோல் அது பூரணமாக வரவில்லை என்பதை அவள் கண்டாள். தன்னிலையுடனேயே முரண்படுவது தற்கொலைத் துணிகரம், சுயமறுப்பென்று படைப்பூக்கத்தின ஆதார இயல்புகளை மிக எளிமையாக நினைவூட்டும் கதை இது.


 படைப்பூக்கமும் அதன் அடிப்படை இயல்பான முரணியல்பும் முற்றிலும் அருகிவரும், படைப்பென்ற பெயரிலான உற்பத்தி அமோகமாகியிருக்கும் தமிழின் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிய ஜென் கதை நமது போதத்தைச் சிறிது துளைக்க வேண்டும்
 
தமிழின் நவீன இலக்கியத்திலும் நவீன எழுத்தியக்கத்திலும் எழுத்து காலம் முதல் நுண்மையான அரசியல் அகற்றம் நிகழ்ந்து வந்தது. அப்போது இயங்கிய எழுத்தாளர்களின் சமூக பொருளாதார, கலாச்சாரப் பின்னணிகள் மற்றும் சார்புகளுடன் தொடர்புடையவை அவை. 70களில் தொடங்கி 80களில் தீவிரப்பட்ட தீவிர இடதுசாரிச் சிந்தனைகளும், அமைப்பியல், பின்நவீனத்துவம் பற்றிய உரையாடல்களும் இதன் பின்புலமாக நடைபெற்ற தலித் அரசியல் எழுச்சியும் இந்த மௌனத்தைக் கலைத்துப்போட்டுப் புதிய அரசியல் பிரக்ஞையைக் கோரின.
ஆனால் இன்று உலகமயமாக்கல் போக்கின் உக்கிரத்தில் அனைத்துக் கருத்தியல்களும், முரணியக்கங்களும், உதிரமும், இருட்டும் சேர்ந்து எழுதிய கொந்தளிப்பான போராட்ட கணங்களும், வெறும் தகவல்களாக தெர்மகோல் உருண்டைகளாக மேலே மிதக்கத் தொடங்கியுள்ளன. இதன் வாயிலாக தட்டையான பொதுப்புத்தி ஒன்று பல்வேறு முகபாவனைகளுடன் வெற்றிகரமாகச் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன் பரவல்தான் இன்றைய நவீன அரசாக மாறியுள்ளது
 
இந்தப் பொதுப்புத்தி, தமிழ்தேசியப் பொதுப்புத்தி, மார்க்சியப் பொதுப்புத்தி, பெரியாரியப் பொதுப்புத்தி, தொண்டூழியசேவைப் பொதுப்புத்தி, தேசியவாதப் பொதுப்புத்தி, சுற்றுச்சூழல் பொதுப்புத்தி, பெண்ணியப் பொதுப்புத்தி வரை பல்வேறு சரக்குகளாக இன்று இதழ்களிலும், இணையதளங்களிலும் அவை இறைந்து கிடக்கின்றன. அதுதான் பல்வேறு இடங்களிலும் நம்மை மறித்து வேறுவேறு கள்ளக் குரல்களில் உரையாடி, சிறைபிடிக்கின்றன
 
வேறு சாத்தியங்கள் மற்றும் அபாயங்களுக்கு உட்பட்ட சக வாழ்க்கை நிலைகள் குறித்த செய்திகளிலிருந்தும் தங்களை முழுமையாகத் துண்டித்துக்கொண்ட இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் பாவனைகளே இந்தப் பொதுப்புத்தியின் உள்வரைபடம். வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த சொல்லாடல்களின் கொடுங்கோன்மைதான் இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதன் நீட்சிதான், உலகிலேயே எளிய நிகழ்ச்சிநிரலாக மாறியுள்ள கலைப்பண்பாட்டுப் பாசாங்குகளை வைத்துக்கொண்டு வாசகர்களாகப் பெருக்கும் தமிழ் நடுநிலை இதழ்களும்உற்பத்தியின் அவசியம் தாண்டிய உபரி உருவாக்கும் குற்றநிலை என்று இதைக் கூறலாம். நீட்சே சொன்னதை மெய்ப்பிக்கும் சூழல் இது. எழுத்தின் உள்ளுயிர் நாறி வருகிறது
 
இப்பின்னணியில்தான் சிறையும் மக்களை அடக்கும் காவல்துறையும் மட்டுமே அரசின் உடைமைகளாக இருப்பதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கும். இந்த நாட்டை எனது இந்தியா என்று புகழ்ந்து கட்டுரை எழுதும் ஜெயமோகனின் தரப்பு எது என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். இன்று அனைத்துத் தளங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சுத்திகரிப்பு மற்றும் இந்தியாவில் உருவாகியிருக்கும் உணர்வு மழுங்கிய மத்தியதர வர்க்கத்தினரின் பிரதிநிதித்துவக்குரல்தான் ஜெயமோகனுடையது. 20 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சென்ற குந்தர்கிராஸ் இந்தியாவில் வளர்ந்துகொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் insensitive ஆக மாறி உள்ளது என்று விமர்சித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குஜராத் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அங்கு வலுப்பெற்று வரும் மதவாதத்துக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அஷீஸ் நந்தியின் கூற்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்
 
ஜெயமோகனின் படைப்பு மற்றும் விமர்சனச் செயல்பாடு இன்றைய நடுத்தர வர்க்கத்தின் ஒற்றை மதிப்பீடான வெற்றி என்ற புள்ளியைச் சென்றடைந்து சேர்வது. மற்றமை என்பதன் மீது பரிசீலனையே இல்லாதது.
ஜெயமோகனைப் பொறுத்தவரை நிர்ணயத்துக்கு உட்படாத எதுவும் இந்த உலகத்தில் இருப்பதற்குத் தகுதி இல்லாதவை. குரங்கென்று ஒன்று இருந்தால் அது தன்னைக் குரங்கென்று சொல்ல வேண்டும். அல்லது குரங்கு இல்லை என்றாவது சொல்ல வேண்டும். இல்லையெனில் குரங்குக்கு சமூகத்தில் செல்வாக்க வரவேண்டும். அதுவரை திருவாளர் ஜெயமோகனின் அபோதக் கண்களுக்குச் சுற்றியலையும் குரங்கு கண்ணுக்கே தெரியாது

 இன்றைய நடுத்தரவர்க்கம் வெற்றி தொடர்பாகவும், அதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் இதே எதிர்நிலைகளில்தான் பயணிக்கிறது. அதன் வழியாகவே அது கொலைகளையும் தன்னுணர்வு அற்று நிகழ்த்திவிடுகிறது
 
ஜெயமோகனின் எழுத்துகளில் உள்ளோடும் வெறுப்பு ஒரு சமூகமோ, குழுவோ தன்னோடு இனம் கண்டுகொள்ளக்கூடிய வெறுப்புக்குத் தீனி போடும் வல்லமை கொண்டது
 
இன்றைய கார்ப்பரேட் சூழலில் நடைமுறையில் உள்ள தன்னையே விளம்பரப்படுத்திச் சந்தைப்படுத்துதல், தொடர்பு வலையை விஸ்தரித்தல், ஆள் பிடித்தல், அதிகாரத்திடம் பணிவாக இருப்பது (அல்லது எதிர்த்து மாற்று அதிகாரத்தில் குளிர்காய்வது) போன்ற சுயமேம்பாட்டு முறைமைகள் அத்தனையையும் தமிழில் அறிமுகப்படுத்திய முன்னோடி ஜெயமோகன்தான். அந்த வகையில் இணையம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தகவல் தொடர்பில் பெரிய வலைத்தளத்தை உருவாக்கிய பெருமை ஜெயமோகனையே சேரும்.
இந்நிலையில் ஜெயமோகன் போன்றோர் ஆன்மிகம் குறித்தும் ஆன்மிகத்தின் தொடக்கப் படிநிலையான நகைச்சுவையையும் பற்றித் தொடர்ந்து கதைப்பதுதான் நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆன்மிக வறுமை...
'ஏழாம் உலகம்' நாவலில் அவர் தமிழகத்தின் மையப்பகுதியான பழனிக்குக் கொண்டு வந்து போடும் உடல் குறையுள்ள கதாபாத்திரங்கள் யார் என்பதை நாம் கவனமாக வாசிக்க வேண்டும். அவர்கள் அத்தனை பேரும், அவர் கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டிய குறைக்கருத்தியல்கள்தான் என்பது தெரியவரலாம். படைப்பூக்கம் விடைபெற்றுக்கொண்டு வாழ்வும் வாசிப்பும் இயக்கமும் கருத்தியலும் காதலும் உயிர்ப்பிழந்து வெறும் பழக்கங்களாக சரியும் நிலையில் வீழும் ஒரு சமூகத்தில்தான் புரோகிதம் தலையெடுக்கிறது. அந்த இடம்தான் ஜெயமோகன்.
இச்சூழ்நிலையில், புறக்கணிப்பிலும் தனித்திருத்தலிலும் தம் படைப்புயிரை உக்கிரத்துடன் தக்க வைத்திருந்த பிரமீள் மற்றும் நகுலனின் நிலைகளை நாம் பரிசீலிக்க வேண்டும்
 
இன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு எழுத்து என்பது ஒரு மூலதனம்தான். படிப்படியாகச் செல்வாக்கு பெறும்வரை அவன் தனியன். செல்லும் வழி இருட்டு என்ற புதுமைப்பித்தனின் கவிதை அவனுக்கு முற்றிலும் பொருந்தும். ஆனால் அதற்குப் பிறகு செல்வாக்கு வளர, வளர ஆட்சிஅதிகாரம், சட்டஒழுங்குக்குப் பக்கத்தில் உள்ள இருக்கைகளைப் பகிர்ந்துகொள்வதில் அவனுக்கு ஒரு கூச்சமும் இல்லை.
உலகெங்கும் எழுத்தாளர்கள் விளிம்புநிலையினரோடும் அதன் நிலைமைகளோடும் தம்மை அடையாளம் கண்டு ஒரு அபாயகரமான முனையில் தங்களை வைத்திருக்கிறார்கள். அந்த அனுபவத்தின் மூலவளங்கள் வழியாக வரலாற்றுமௌனத்தைப் பிரதிபலிப்பவர்களாக அவர்கள் போராடிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் சிறுபான்மையினராக இருப்பினும், இத்தரப்பின் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருந்தும் தொடர்ந்து விடுவித்துக்கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கும் ஆளுமைகளாக வேறு, வேறு நிலைகளில் தமிழில் ஷோபாசக்தி, .மார்க்ஸ், சி.மோகன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்றோரின் தொடர்ந்த இயக்கம் சிறிது நம்பிக்கையைத் தருவதாக உள்ளது

 
இன்றைய சவநிலைமையிலிருந்து தப்ப நாம் ஜெயமோகனிடமிருந்து தப்பிக்க வேண்டும். ஜெயமோகனிடம் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ஒரு நபர் அல்ல. அதுதான் இன்று அமெரிக்கா, அதுதான் இன்றைய இந்தியா, அதுதான் இன்று நரேந்திர மோடி, அதுதான் புத்ததேவ் பட்டாச்சார்யா, அதுதான் கருணாநிதி, அதுதான் ஜெயலலிதா... அதுவே நாமாக மாறும் இன்றைய அபாயமும்கூட

 

Comments