Skip to main content

குழந்தை ஏற்கனவே புலியைப் பார்த்திருக்கிறது

ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ்


தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் 

                            ஒரு சின்னஞ்சிறு குழந்தை முதல்முறையாக மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அந்தக் குழந்தை நம்மில் ஒருவராய் இருக்கலாம், இன்னொரு வகையில் பார்த்தால் அது நாமாகவே இருந்து நாம் அதை மறந்துபோயிருக்கலாம். இந்தப் பின்னணியில் - இந்த வினோதமான பின்னணியில்- அந்தக் குழந்தை இதுவரை பார்த்திராத விலங்குகளைப் பார்க்கிறது.  சிறுத்தைப் புலிகள், ராஜாளி, காட்டெருமைகள்… இன்னும் வினோதமாக, ஒட்டகச்சிவிங்கிகளையும் பார்க்கிறது. திகைக்கச் செய்யும் அளவுக்கு வகைமை கொண்ட விலங்குகளின் ராஜ்ஜியத்தை பார்க்கும் வாய்ப்பு முதல் முறையாக அந்தக் குழந்தைக்குக் கிடைக்கிறது. இந்தக் காட்சி எச்சரிக்கையூட்டவோ அச்சமூட்டவோ செய்தாலும் அந்தக் குழந்தை அதை ரசிக்கிறது. விலங்குக் காட்சி சாலைக்குப் போவதைக் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகளில் ஒன்று என்று குதூகலம் அடைகிறது. அன்றாடம் நிகழ்ந்தாலும் புதிராகவே இருக்கும் இந்த நிகழ்வை நாம் எப்படி விளக்க முடியும்?

நாம் அதை மறுக்கலாம். மிருகக்காட்சிச் சாலைக்கு திடீரென்று அவசரமாக அழைத்துச் செல்லப்படும் குழந்தைகள், சிறிது காலத்தில், நரம்பியல் நோயுள்ளவர்களாக மாறக்கூடும் என்று நாம் நினைக்கலாம். உண்மை என்னவென்றால், மிருகக்காட்சிச் சாலைக்கே செல்லாத குழந்தை ஒன்று இருக்க முடியாது. அதுபோலவே, நரம்பியல் கோளாறு இல்லாத பெரியவரும் யாரும் இல்லை. எல்லாக் குழந்தைகளும் அறிய விழைபவர்கள் என்று வரையறுக்கலாம். ஒரு கண்ணாடி அல்லது தண்ணீர் அல்லது மாடிப்படிகளைத் தெரிந்துகொள்வதைப் போன்றே மர்மமானதுதான் ஒட்டகத்தைக் கண்டறிவதும். மிருகங்கள் சூழ்ந்த இந்த இடத்துக்கு அழைத்துப் போகும் பெற்றோரைக் குழந்தை நம்புகிறது என்றும் சொல்லலாம். தவிர, அந்தக் குழந்தையிடம் உள்ள பொம்மைப் புலியும், கலைக்களஞ்சியத்தில் உள்ள புலிகளின் படங்களும் ஏதோ ஒருவகையில் ரத்தமும் சதையுமான புலியை அச்சமின்றிப் பார்க்க அந்தக் குழந்தைக்குக் கற்றுத்தந்திருக்கும். தனது தொல்படிம நினைவில் குழந்தை ஏற்கனவே புலியை பார்த்திருக்கிறது என்று ப்ளேட்டோ (இந்த உரையாடலில் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டிருப்பாரெனில்) நம்மிடம் சொல்லக்கூடும். ஒரு குழந்தை புலிகளை அச்சம் இன்றி பார்க்க இயல்வது எப்படி என்பதற்கான காரணத்தை  இன்னும் ஆச்சரியமூட்டும் வகையில் ஷோபன்ஹர் சொல்லக்கூடும். தானே அந்தப் புலி என்றும் அந்தப் புலிதான் நான் என்றும் அந்தக் குழந்தை அறிந்திருக்கும். அந்தக் குழந்தையும் புலிகளும் ஆசை என்ற ஒற்றை சாராம்சத்தின் மாறுபட்ட வடிவங்களே தவிர வேறோன்றுமில்லை என்பதையும் அது அறிந்திருக்கும்.

நாம் இப்போது நிஜ மிருகக்காட்சி சாலையிலிருந்து புராணிகங்களின் காட்சியகத்துக்குச் செல்வோம். அது சிங்கங்கள் உள்ள மிருகக்காட்சி சாலை அல்ல, ஸ்பிங்ஸ்சஸ், கிரிஃபான்கள் மற்றும் மனித முகமுள்ள குதிரைகள் வசிக்கும் இடம். இரண்டாவதில் உள்ள மிருகங்களின் தொகை முதலாவதைத் தாண்டியிருக்கும். உண்மையான உயிர்களின் கலவையாகவே கற்பனை மிருகங்கள் இருப்பதால் வேறு வேறு கலப்புகளின் சாத்தியங்கள் முடிவற்றவை. சென்டார் மிருகத்தில் குதிரையும் மனிதனும் சேர்ந்திருக்கிறார்கள். மினோடாரில் காளையும் மனிதனும் (மனித முகமும் காளையின் உடலுமாக தாந்தே அதை கற்பனை செய்திருக்கிறார்); இந்த ரீதியில் முடிவில்லாத வகையில் பல விதமான மிருகங்களை உருவாக்க முடியும் - மீன்கள், பறவைகள், ஊர்வன என்று பல சேர்க்கைகளுடன். நமக்கு ஏற்படும் அலுப்பு அல்லது எரிச்சலே அதன் எல்லை. இருப்பினும் அது நடக்கவில்லை; கடவுளுக்கு நன்றி, இன்னும் அவை பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கும். டெம்ப்டேஷன் ஆப் செய்ண்ட் அந்தோணியின் கடைசிப் பக்கங்களில் மத்திய காலச் செவ்வியல் கால மிருகங்களின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாகச் சொல்ல முயன்றிருப்பார். சில புதிய மிருகங்களையும் சேர்க்க முயன்றிருப்பார்; அவர் சொல்லும் தொகை அந்த அளவுக்கு ஏற்கத்தக்கதல்ல. ஆனாலும் அவற்றில் சில நமது கற்பனையைத் தூண்டுபவை. தற்போதைய கையேட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் ஒருவர், கனவுகளின் விலங்கியல், சிருஷ்டிகர்த்தாவின் விலங்கியலை விட எவ்வளவு தூரம் மோசமாக இருக்கிறது என்பதை விரைவிலேயே அறிந்துகொள்வார்.

பிரபஞ்சத்தின் அர்த்தம் குறித்து நமக்குள்ள அறியாமை அளவுக்கு டிராகனைக் குறித்தும் அறியாமை இருக்கிறது. ஆனால் மனிதக் கற்பனையை டிராகனின் உருவம் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கிறது. அதனால்தான் முற்றிலும் மாறுபட்ட இடங்களிலும் காலங்களிலும் டிராகனைக் காண்கிறோம். அதனால்தான், அவசியமான மிருகமாக - நிலையற்ற, தற்காலிகமான ஒன்றாக இல்லாத - மூன்று தலை சிமரா அல்லது கட்டோப்ளபாஸ் ஆகியவை குறித்துப் பேச வேண்டியுள்ளது.

இந்தப் புத்தகம் குறித்து நாங்கள் அறிந்தே இருக்கிறோம். ஒருவேளை இந்த வகைமையில் இதுவே முதல் நூலாகவும் இருக்கலாம். கற்பனை மிருகங்கள் மொத்தமும் தொகுக்கப்படாமல் போயிருக்கலாம். நாங்கள் செவ்வியல் மற்றும் கீழைத்தேயப் படைப்புகளுக்குள் ஆழ்ந்திருக்கிறோம், இதைப் பொருத்தவரை தேடலுக்கு முடிவே இல்லை என்பதை உணர்கிறோம்.

ஓநாய் மனிதன் போல மிருக வடிவங்களை எடுக்கும் மனிதன் குறித்துப் பேசும் பல கதைகளை வேண்டுமேன்றே விலக்கிவிட்டோம்.

(போர்ஹெஸ் தொகுத்த தி புக் ஆப் இமேஜினரி பீயிங்ஸ் நூலின் 1957 இல் வெளியான பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரையின் மொழியாக்கம்)

Comments