Skip to main content

புராதனக் கோவிலின் கல் யாளிகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்



வண்ணத்துப்பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப்பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஒய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது

                                         - பிரமிள் 

இந்தக் கவிதையின் வரிகள் என் நினைவில் தொடர்ந்து கொண்டே இருப்பவை. அந்தக் கவிதையின் கடைசி வரிகளான ‘முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது’ என்பதைத் தெரிந்துகொண்டே நண்பர்களிடம் ‘முதற்கணம் உவர்த்த சமுத்திரம் பின்னர் தேனாய் தித்திக்கிறது’ என்று என் கற்பனை சேர்த்துப் பகிர்ந்திருக்கிறேன். ஒரு அனுபவத்துக்கும் இன்னொரு அனுபவத்துக்கும் இடையில் ஒரு கணம் நிற்க ‘பின்னர்’ தேவைப்படுகிறது எனக்கு. இனிக்கிறது என்பதைவிட தித்திக்கிறது என்பதுதான் எனது அனுபவ சொற்களஞ்சியத்தில் சரியாக இருக்கிறது. ஒரு நல்லகவிதையை இப்படியெல்லாம் ஒரு வாசகன் தன்வயப்படுத்திக் கொள்ளலாம்.

கிரேக்கத் தொன்மமான பீனிக்ஸில் இருந்து, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளில் சூரியனுக்கு அருகே சென்று கருக விரும்பும் பறவையாக ஜோசப் ஜேம்ஸை கற்பிதம் செய்வது வரை எத்தனையெத்தனை உருவகங்கள்? உன்னதம் மற்றும் இறவாமையைத் தேடித்தான் எத்தனைவிதமான சஞ்சாரங்களை மனிதமனம் செய்துள்ளது!
லட்சியவாதத்தின் கொடுமுடியில், அதேவேளையில் அது சரியும் பிரக்ஞை நிலையில் பிரமிளுடையதும், சுந்தர ராமசாமியுடையதுமான இந்த உருவகங்கள் நவீனத்துவக் காலகட்டமான 20-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. ‘ஓய்ந்தேன் என மகிழாதே...உறக்கமல்ல தியானம்...பின்வாங்கல் அல்ல பதுங்கல்’ என்று இன்று, ஓர்மையுள்ள ஒரு நவீன கவிஞன் உரைக்கமுடியாது. நடுவில் சில பத்தாண்டுகள்தான் எனினும் காலம் நம்மை, நமது லட்சியங்களை அறுத்து ஈ மொய்க்கத் தெருவில் போட்டுவிட்டது.

பிரமிள் எல்லையற்ற பூ என்று வர்ணிக்கும் சூரியனின் இடத்தில்-அந்த உன்னதத்தின் இடத்தில்-மாணிக்கவாசகர் கயிலாயத்தில் உள்ள சிவனை வைக்கிறார். கடவுளை பெரிய பூ என்று சொல்கிறார். பூமியில் இருக்கும் சின்னப்பூக்களிலெல்லாம் தேன் குடித்து மகிழாதே! அந்தப் பெரிய பூவின் மேல் நீ அமரவெல்லாம் வேண்டாம். நினைத்தாலே போதும், உனக்குள்ளேயே தேன் சுரக்கும் என்ற உறுதிமொழியையும் கொடுக்கிறார்.

தினைத்திணை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்
அனைத்து எலும்பு உள் நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய், கோத்தும்பீ!

(திருவாசகம்-திருக்கோத்தும்பி)

மரபும் மெய்யியலும்

மரபும் மெய்யியலும் எவ்வளவு காலத்துக்குப் பிறகும் தன் எதிரொலிகளைப் படைப்புகளில் உருவாக்குகின்றன என்பதைப் பார்ப்பதற்கான சிறுகுறிப்பே இது.
இந்த எதிரொலிகளை கவிஞர்கள் நகுலனும், ஞானக்கூத்தனும் தொடர்ந்து தங்கள் கட்டுரைகளில் அவதானித்து வந்திருக்கிறார்கள்.
புதுக்கவிதை என்கிறோம். நவீன கவிதை என்கிறோம். இருபத்தியோராம் நூற்றாண்டும் வந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மரபுக்கு சவால் விடும் வண்ணம் எழுதப்பட்ட நவீன கவிதைகளில் எத்தனையை, நமது மரபென்ற புராதனக் கோவிலின் கல்யாளிகள் தன்வயப்படுத்துவதற்காக வாய்திறந்து காத்திருக்கின்றன?
இதுபோன்ற ஒப்பீடுகளைச் செய்துபார்க்கும்போது அழகும் துயரமும்
சேர்ந்த அனுபவம் வாய்க்கிறது.இது
தவிர்க்கமுடியாத செயல்முறையும் கூட.
எல்லாம் எதிரொலிகள்தானோ?

*
என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். காகங்கள் சிரிக்கக் கூடும். சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புதான். அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.

(ஜே.ஜே சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி)

Comments