Skip to main content

ஜோர்ஜ் லூயி போர்ஹே பிறந்த நாள் ஆகஸ்ட் 24

ஆழ்ந்த வெகுமதி 



கலையின் வேலை என்பது, நம்மில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதை மனிதனின் ஞாபகத்தில் தொலைந்து போக இருப்பதை, குறியீடுகளாக, இசையாக மாற்றம் செய்வது. அது தான் நமது வேலை. அதை நிறைவேற்ற முடியாவிட்டால் நாம் கவலை கொள்கிறோம். ஒரு கலைஞனும் எழுத்தாளனும் எல்லாவற்றையும் குறியீடுகளாக மாற்றுவதை ஒரு சமயத்தில் சந்தோஷமான கடமையாக நினைக்கின்றனர். அந்தக் குறியீடுகள் நிறங்களாக இருக்கலாம். வடிவங்களாக, சப்தங்களாக இருக்கலாம். ஒரு கவிஞனுக்கு, குறியீடுகள் என்பவை வார்த்தைகளும் தான்.  நீதிக்கதை,கதை,கவிதை எல்லாமும் தான். கவிஞனின் வேலை முடிவடைவதே இல்லை. எழுதும் மணித்துளிகளுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வெளியுலகிலிருந்து தொடர்ந்து நீங்கள் பெற்றுக்கொண்டே இருக்கிறீர்கள். அவை நிச்சயமாக மாறும். கடைசியில் மாறித்தான் ஆகவேண்டும். இது எந்த சமயத்திலும் வெளிப்படலாம். ஒரு கவிஞன் எப்போதும் ஓய்ந்திருப்பதில்லை. அவன் தொடர்ந்து பணியாற்றியபடியேதான் இருக்கிறான், கனவிலும் கூட. அத்துடன் ஒரு எழுத்தாளனின் வாழ்வென்பது தனிமையான ஒன்று. நீங்கள் தனியானவர் என்று உங்களைக் கருதிக்கொள்கிறீர்கள். வருடங்கள் கடந்தபின், கண்ணுக்குப் புலனாகாத பெரும் நண்பர்கள் கூட்டத்தின் மத்தியில் மத்தியில் இருப்பதை நீங்கள் உணரநேரலாம். அவர்கள், ஒருபோதும் உங்களால் பரிச்சயப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள். ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பவர்கள். அதுதான் ஆழ்ந்த வெகுமதி.

Comments