கவிதை என்பது ஒருவகையில் மிகவும் அந்தரங்கமானது, அத்தியாவசியமானது என்று நம்புகிறேன். அதை அதீதமாக எளிமைப்படுத்தாமல் அதை வரையறுக்கவும் முடியாது என்றும் கருதுகிறேன். மஞ்சள் நிறம், காதல், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகள் ஆகியவற்றை வரையறுக்க முயற்சிப்பதைப் போன்ற காரியம் அது. அத்தியாவசியமான விஷயங்களை எப்படி வரையறுப்பதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரேயொரு சாத்தியமான வரையறையெனில் அது ப்ளேட்டோவினுடையதாகவே இருக்கும். துல்லியமாகச் சொன்னால் அது வரையறை அல்ல, ஒரு கவித்துவச் செயல்பாடு. கவிதையைப் பற்றி குறிப்பிடும்போது அவர், "இறகுகளைக் கொண்டதும் புனிதமானதுமான லேசான வஸ்து" என்கிறார். ஒரு திட்டமான வார்ப்புக்குள் அடையாதென்பதால், ஒரு தேவதையின் வடிவமாகவோ ஒரு பறவையாகவோ கவிதையை வரையறுக்கலாம் என்று நம்புகிறேன்.
ஆம், கவிதை என்பது அழகியல் செயல்பாடு என்று இன்னும் நம்புகிறேன்; கவிதை என்பது எழுதப்பட்டு கவிதை அல்ல, ஒரு கவிதை வெறுமனே உருவகங்களின் தொடர் வரிசையை மட்டுமே கொண்டதாக இருக்கலாம். கவிஞன் எழுதும்போது, வாசகன் வாசிக்கும் போது-அது எப்போதும் சற்று வித்தியாசமான முறையில் நடக்கிறது- நடக்கும் கவித்துவச் செயல்பாடுதான் கவிதை என்று நான் நம்புகிறேன். அந்தக் கவித்துவச் செயல்பாடு நடக்கும்போது, நாம் அதுபற்றிய விழிப்பை அடைவதாகத் தெரிகிறது. கவிதை என்பது விந்தையான, மர்மமான, விவரிக்க இயலாத, பகுக்கமுடியாத ஒரு நிகழ்வு. அந்தக் கவித்துவ நிகழ்வை ஒருவர் வாசிக்கும்போது உணரவில்லையெனில் கவிஞன் தோற்றுவிடுகிறான்.
Comments