ஷங்கர்ராமசுப்ரமணியன்
அம்மா புகட்டிய காலத்திலிருந்து எனக்கு நீதிக்கதைகள் இன்றுவரை தேவையாகவே இருக்கின்றன. எளிய நீதிக்கதைகள் முதல் சிக்கலான நீதிக்கதைகள் வரைத் தேடித்தேடி அவை சொல்லும் நெறிமுறைகள் வழியாக, எனது அன்றாடத்துக்குள் ளும், என்னைச் சுற்றி நடக்கும் துயரமும் ரணமும் சிறு இளைப்பாறுதல்களும் கூடிய நிகழ்ச்சிகள், அபத்தங்கள், புதிர்களுக்குள்ளும் ஒரு ஒழுங்கை நான் கற்பிக்கவோ புனரமைக்கவோ செய்கிறேன்.
என்னைச் சுற்றி நடக்கும் ஒரு நிகழ்வுக்கு கால, வெளிப் பரப்பளவில் மிக அருகிலிருக்கும், கைக்குத் தென்படும் காரண காரியங்களைத் தேடாமல், என் வாழ்வுக்கு அப்பாலும் முன்பும் காரணம் இருக்கலாம்; மனிதத்துவத்துக்கு அப்பாற்பட்ட காரணமும் இருக்கலாம்; அதனால் சஞ்சலமில்லாமல் புகார்கள் இல்லாமல் அமைதியாக இரு என்பதை என் தலையில் குட்டிக் குட்டி உணர்த்தும் நீதிக்கதைகள் அடிக்கடி தேவையெனக்கு.
கட்டற்ற நுகர்வு ஒன்றே வாழ்வென்றாகிவிட்ட இக்காலகட்டத்தில் அடங்கவேயடங்காத புலன்கள் வழிநடத்தும், குறுக்கும்நெடுக்குமான சபலத்தின் பாதைகளில் திரியும் நவீன மனிதனுக்கு, மேலதிகமாக தற்காலத்தின் பாடுகளையும் அகப்படுத்தியிருக்கும் நீதிக்கதைகள் தேவை. ஊடகங்கள் நமது நவதுவாரங்களையும், இறையாண்மையற்ற நிலங்களாக மாற்றியிருக்கும் சூழலில் கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு மட்டுமல்ல. எந்தப் புலன்களுக்கும் சொந்தமுடையதல்ல என்ற மந்திரத்தை ஒவ்வொரு கணமும் மனிதஜீவி ஜெபிக்க வேண்டிய நாட்கள் இவை.
அறிந்த இடத்திலிருந்து அறியாத, அறிய முடியாத அறியவொண்ணாததை அறிஅறியென்று பிறாண்டாமல், தெரியாததன் இயற்கையையும் தெரியாததன் பிரபஞ்சத்தையும் தெரியாததன் அழகையும் ஒழுங்கையும் நோண்டாமல் இருப்பதற்குச் சொல்லித்தருபவை நீதிக்கதைகள். ஒருவகையில் இந்த உலகம் தரும் உறவுகள், உருவாக்கும் பந்தங்கள், ஏற்படும் இழப்புகள், அவை காண்பி க்கும் புதிர்கள் மற்றும் ரகசியங்களைச் சுமக்க இயலாமல் மனிதன் காலம் காலமாக தெய்வத்திடமோ இயற்கையிடமோ, படைப்புடனோ செய்த பிரார்த்தனையின் சிறுபரிகாரங்கள் அல்லது கண்டடைதல்கள் இந்த நீதிக்கதைகள்.
“ அறிவு அடங்க வேணும், மங்கலாகாது. அதற்குக் கொள்கை துணை செய்யாது. கொள்கையெனும் பந்தத்தை அணைத்து வைக்கும் வரை, யாகக்குண்டத்தை இடித்து மூடும்வரை அறிவு அடங்காது. அறிவு அடங்கினால்தான் அவனுக்குக் கண் திறக்கிறது. அறிவின் தன்மை தெரிய அதுதான் வழி” என்று சுமக்க ஏலாமல் அறிவைக் கீழே போடத் துடித்த புதுமைப்பித்தனின் ஏக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
புராணக்கதைகள், திருக்குறள், ஜென் கதைகள், முல்லா கதைகள் தொடங்கி ஜெயகாந்தன், அசோகமித்திரன், சூடாமணி, வைக்கம் முகமது பஷீர், லியோ டால்ஸ்டாய், விக்தர் ஹியூகோ, ஓஷோ, நீட்சே,காஃப்கா, போர்ஹெஸ், போத்ரியார் வரை எனக்குத் தனிப்பட்ட வகையில் இந்த உலகை அணுகுவதற்கான நீதியாசிரியர்கள் தான்.
ஒரு சிறுவனும் இன்னும் சில சிறுவர்களும் சில குரங்குகளும் பங்குபெற்றதும், அதை வெகுகாலமாக அந்தச் சிறுவனே சொல்வதற்குத் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருப்பதுமான நீதி க்கதை இது.
குரங்குகள் மலிந்த அந்த ஊரில் அவனது பால்யத்தின் ஒருபகுதி கழிந்தது. ஒரு விடுமுறை நாளின் மதியத்தில் பூஜைகள் ஏதுமற்று கைவிடப்பட்டிருந்த புராதன கோயிலின் மைதானத்தில் அவன் தனது தெரு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். பெரியதொரு அதிசயங்கள் எதற்கும் வாய்ப்பில்லாத அலுப்பான வெயில் தரும் மௌனச் சலிப்புக்குள், அவர்களைக் கிளர்த்தும் ஆசையாக ஒரு பொட்டலத்தை கீழப்பாளையம் தெருவிலிருக்கும் மணிகண்டன் கொண்டு வந்து தந்தான். ஒரு கருப்பட்டி அளவு இருந்த அந்தப் பொட்டலத்தைப் பிரித்து, கிரிக்கெட்டை உடனடியாக கைவிட்டு அந்த ஐந்து சிறுவர்களும் அதிலிருந்த இனிப்பைச் சாப்பிட்டார்கள். அது அல்வா ஆகாமல் பதம் திரிந்து நடுவிலேயே இறுகிப்போய் கைவிடப்பட்ட இனிப்புப்பண்டம். ஆனால் அப்படிப்பட்ட ருசியுள்ள, நாக்கைச் சிறிது அரிக்கும் பண்டத்தை அவர்கள் சாப்பிட்டதேயில்லை. அல்வா ஆகாமல் போன அல்வா மைசூர்பாகைப் போல கட்டிகட்டியாக உடையும் பதத்தில் இருந்தது. வாயில் இட்ட பிறகு இனிப்பு மேலேறி ஒரு புள்ளியில் வெடித்துக் கரைந்துவிட்டது.
விளையாட்டைத் தொடரும் மனநிலையை இனிப்பு வென்றுவிட்டது. அடுத்த நடவடிக்கையாக, இறுகிப்போன அல்வா இருக்கும் இடத்தை விசாரித்து மணிகண்டனுடன் போனார்கள். சேகர் லாலாக் கடையின் பின்புறம் இருக்கும் பட்டறை சந்திற்குள் அவர்கள் நுழைந்தனர். பட்டறையின் கதவில் பூட்டு இல்லை. தாழ்ப்பாளில் ஒரு குச்சி மட்டுமே செருகப்பட்டிருந்தது. சிறுவர்கள் கதவைத் திறந்து கையில் கிடைத்த அகப்பையை எடுத்து பெரிய இரும்பு வாணலியில் இறுகிக்கிடந்த இனிப்பை உடைத்துக் காகிதத்தில் சுருட்டினர். திறந்த கதவை தாழ்ப்பாள் போடாமலேயே மீண்டும் மைதானம் மீண்டனர். கைவிடப்பட்ட அந்த இனிப்பு, போதை போல அவர்களைக் கிளர்த்த, அவர்கள் மீண்டும் பட்டறைக்கு வந்தனர். கதவு திறந்திருந்ததால் இரண்டாம் முறை அவர்கள் செல்லும் போது குரங்குகளும் வந்திருந்தன. அடுத்த முறை சிறுவர்கள் நுழைந்தபோது குரங்குகள் பட்டறையின் ஓட்டையும் பிரித்து இறங்கத் தொடங்கியிருந்தன.
வெயிலின் கடுமையா, இனிப்பு தரும் சோர்வா, தெரியவில்லை. உறக்கம் பற்ற நான்கு மணிக்கே வீடுதிரும்பினர். உடனே உறங்கியும் போயினர்.
மாலையா அதிகாலையா என்ற குழப்பத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தும் அந்தியில் அவன் எழுந்தான். வாசலுக்கு வந்தான். சேகர் லாலா கடை பட்டறை இருக்கும் இடத்தில் குரங்குகளும் காகங்களும் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தன. குற்றவுணர்வு எழ, தெருமுனைக்குப் போனான்.
உயரத்தில் மின்சாரக் கம்பத்துக்கும் கம்பிக்கும் இடையே பெருத்த குரங்கு ஒன்று கைகளை உயர்த்தியபடி இறந்திருந்தது.
அல்வாவின் இனிப்பும் போதையும் அந்தச் சிறுவர்களைப் போலவே குரங்குகளையும் தாறுமாறாக கிளர்த்தியிருக்கிறது. அந்த இறுகிய அல்வாவைச் சாப்பிட்ட குரங்குகள் அன்று நடத்திய அமளியைப் போல தன் வாழ்நாளிலேயே என்றும் பார்த்ததில்லை என்று பாலாமணி ஆச்சி அங்கிருந்தவர்களிடையே சொல்லிக் கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் ஆரவாரம் மட்டுமீற மின்சாரக் கம்பிகளை குஞ்சுக்குரங்குகளும் உலுக்க ஆரம்பித்து ஊஞ்சலாடியதைப் பார்த்ததாக பாலாமணி ஆச்சி சொன்னாள். பிரளயம் வந்தமாதிரி இருந்துச்சு அதுங்களோட கும்மாளம் என்றாள்.
இறந்த தாட்டான்(தடியன் குரங்கு) குரங்கின் சடலத்தைச் சுற்றிச்சுற்றி எல்லா குரங்குகளும் போய் போய் பார்த்துக்கொண்டிருந்தன. காகங்கள் இரைச்சலிட்டுப் பறந்துகொண்டிருந்தன.
இப்போது சொல்லப்பட்ட இந்த நீதிக்கதையைச் சொன்ன சிறுவன் இனிப்பைத் தின்று தப்பித்த சிறுவனாக மட்டுமல்லாமல், இனிப்பை மேலதிகமாக நுகர்ந்து இறந்து போன அந்தக் குரங்காகவும் இந்த வயதில் இருக்கிறான்.
அந்தக் குரங்கின் கதை நம் எல்லாருடையதும் தான்.
Comments