Skip to main content

சென்னையில் பேய்கள் இல்லை


ஷங்கர்ராமசுப்ரமணியன்


கடவுள் இருக்கிறார் என்று நிச்சயமாக என்னால் நூறு சதம் சொல்ல இந்த வயதுவரை இயலவில்லை. ஆனால் அழகு,இயற்கைநீதிகவிதை மற்றும் நிமித்தங்களில் நம்பிக்கை கொண்டபகுத்தறிவால் விளங்கவே இயலாத அபூர்வமான சில ஆசிர்வாதங்களையும் கருணையையும்  அபூர்வமாக அவ்வப்போது அனுபவித்திருக்கும் என்னால் அப்படிஇறைமையைப் பரிபூரணமாக மறுக்கவும் முடியாது.

 நாம் பார்க்கவில்லையே தவிரபேய்களும் வாதைகளும் பிசாசுகளும்குட்டிச்சாத்தான்களும் இந்த உலகில் உண்டு என்றுதான் சில மாதங்கள் முன்புவரை முழுமையாக நம்பிக்கை இருந்தது.

 என்னுடைய 20 வயதுகளில் நண்பர் லக்ஷ்மி மணிவண்ணன்சிறுதெய்வங்கள் மற்றும் வாதைகளைக் கண்டுபிடிப்பதிலும்அந்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் ஈடுபாடும் தீவிரமும் கொண்டிருந்தார். நானும் சளைக்காமல் அவருடன் சென்றிருக்கிறேன். முற்பகலின் கழுவி விடப்பட்ட ஈரத்தரை டாஸ்மாக் கடைகள்மூர் மார்க்கெட் காவல் நிலையம், இருட்டில் மினுமினுக்கும் பல்லாவரம் ரயில் நிலையம் முதல் நாகர்கோவில் இசக்கியம்மன் கோவில் வரை அவர் என்னை அழைத்துச் சென்ற இடங்கள் ஏராளம். சி.எஸ்.ஐ மிஷன்  மருத்துவமனையென்பதுதான் எனது ஞாபகம். லக்ஷ்மி மணிவண்ணனின் முதல் பையன் ரிஷி பிறந்த அன்றுஅதிகபட்ச கிளர்ச்சியும் துயரமும் ஒருங்கே கொண்ட மனநிலையில் மணிவண்ணன் இருந்தார். அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த குழந்தைகள் பூங்காவில்லக்ஷ்மி மணிவண்ணன் தனது பால்யத்தில் ஆடவே வாய்க்காமல் போன குழந்தைகள் ஊஞ்சலில் மருத்துவமனை தாதிகள் எல்லாம் வெளியே ஓடிவந்து பார்க்கும் வகையில் நள்ளிரவில் ஆடியபடி என்னையும் ஊஞ்சலாட அழைத்தார். மருத்துவனையிலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற பயத்தில்  விளக்குகள் இல்லாத மருத்துவ வார்டின் நடைபாதையைத் தேர்ந்து உடலை வளைத்துப் படுத்திருந்தேன். ஆனாலும் நான் ஒளிந்து படுத்திருந்த இடத்தைக் கண்டுபிடித்து என்னை நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலுக்கு தனது ஸ்கூட்டரில் அழைத்துப் போனார். அங்கே ஆலமரங்கள் விழுதுகளைப் பரப்பி யட்சிகளைப் போல இருட்டில் நின்றுகொண்டிருந்தன. அவர் அங்கே சில பிரார்த்தனைகளை உரக்கச் சொல்லி இரைஞ்சிவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மணிவண்ணன் ஆடிய அந்த ஊஞ்சல் இன்னும் நள்ளிரவுகளில் ஆடிக்கொண்டிருக்கிறது.          

பேய் பயம் காரணமாக தனியாக உறங்குவதை நெடுங்காலம் தவிர்த்து வந்திருக்கிறேன். சமீபகாலமாகத் தான் தனியாகப் பயமின்றி உறங்குவதற்கான திடத்தைப் பெற்றிருக்கிறேன். ஆவி மற்றும் பேய் தொடர்பான அதிகபட்ச அச்சத்தை ஏற்படுத்தியதும் அச்சத்தை விலக்கியதும் சமீபகாலமாக நான் தனியே படுத்துறங்கிய ஒற்றைக்கட்டில்தான்.

அந்த ஒற்றைக்கட்டிலில் தான் எனது மனைவியின் தந்தையார் காலமானார். என் மகளை இடுப்பில் சுமந்துகொண்டு அவர் இறுதிமூச்சை விட்டதை பார்த்தது எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது.  பள்ளிக்கரணையில் யாருமில்லாத புது வீட்டில்,முதல் நாள் அந்தக் கட்டிலில் படுப்பதற்கு நான் மிகவும் தயங்கினேன். குடிப்பதற்காக வெளியே அழைத்த நண்பரை வீட்டுக்கு வரவழைத்து அவருடன் அந்த நாள் இரவை கீழே தரையில் படுத்து அந்த நாளைக் கழித்தேன். அடுத்தடுத்த நாட்களில் அந்தக் கட்டிலில் உறங்குவதும் அதன் பக்கத்தில் உறங்குவதும் வேறு வேறு இல்லையென்ற ஞானம் வந்தது. ஜன்னலை இறுக்கச் சாத்திவிட்டு இருட்டைக் கூர்ந்து பார்க்காமல் கண்ணைச் சிக்கென மூடி உறங்கினேன். அடுத்த நாள் காலையில் விழித்தபோதுஎந்த அசம்பாவிதமும் நடக்கவில்லையென்பது உறுதிப்பட்டது. எனது மாமனார் உயிருடன் போது என்னிடம் இருந்ததைவிட,என்னுடன் தற்போது பிரியத்துடனும் ஆசிர்வாதத்துடனும் இருக்கிறார் என்பதாகவும் விளங்கிக் கொண்டேன்.

அடுத்தடுத்த நாட்களில் விளக்குகளை அணைத்த இரவுகளில் நிலவொளியில் எனது அறை ஜன்னல்களில் ஆடும் மரஇலைகள்ஜென் கருப்பு-வெள்ளை ஓவியங்கள் போல நிழல் படங்களாக மாறுவதை ஏகாந்தமாக ரசிக்கத் தொடங்கினேன். ஜன்னலைத் திறந்து சுற்றியுள்ள இருட்டைக் கூர்ந்து பார்த்தேன். எப்படிப்பட்ட உருவமாக இருந்தாலும் நேரில் சந்தித்துவிடலாம் என்ற தைரியம் வந்திருந்தது. பள்ளிக்கரணையில் விதவிதமான பறவைகள் இருக்கிறதே தவிரபேய்கள்இல்லையென்ற நம்பிக்கை வரத்தொடங்கியது.

சென்னையை இருள்கொள்ளச் செய்தயாரிடமும் தொலைபேசியில் கூட பேச இயலாமல் ஆக்கிய  துர்கனவு போன்ற அந்த மழைக்கால இரவுகள் கொடுத்த தனிமையுணர்வில் கூட நான் பேய்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இடுப்பளவுக்கு மேல் ஒரு வாரத்துக்கும் மேல் இரைச்சலாக சாலையின் குறுக்கே ஓடிய தண்ணீரின் நடுவில்  இரு சக்கர வாகனங்களை பாலத்திலிருந்து இறங்கிதினசரி சில நூறடிகள்இருட்டு உருவங்களில் ஒன்றாய் உருட்டிக் கொண்டு வீடுதிரும்பும் போதும் குருட்டுக் காமத்தைத் தவிர வேறு எந்தப் பேயையும் சந்திக்கவேயில்லை.     

பள்ளிக்கரணையில் பேய்கள் இல்லையெனில்வேளச்சேரியிலும் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. வேளச்சேரியில்இல்லையெனில் நங்கநல்லூரிலும் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று எனது தர்க்கத்தை விரித்து எனது அலுவலக சகாவிடம் பகர்ந்தேன்.

பேய்களை எது தோற்றுவிக்கிறதுபேய்கள் எங்கே தோன்றுகின்றன?

எனது பதினான்கு வயதில் ஒரு கிறிஸ்துமஸ் நாளென்று ஞாபகம். எனது நண்பன் ஹெரால்ட் வீட்டுக்குக் காலை உணவுக்கு அழைத்திருந்தார்கள். அவன் இருந்த வீடு சுற்றிலும் வீடுகள் நெருக்கமாக இருந்த  தனி மாடிவீடு தான் அது.

ஹெரால்டின் அம்மாஅப்பாதம்பி மூன்று பேரும்அவர்கள் வீட்டின் ஹாலில் அமர்ந்து காலை உணவுடன் பலகாரங்களைச் சாப்பிட உட்கார்ந்திருந்தனர். வீட்டின் இரும்புக்கேட்டைத் திறந்து வெளியே வாகனங்கள் விடும் இடத்தைக் கடந்து திறந்திருந்த வாசல் நிலையில் ஒரு உருவம் உள்ளிருந்த ஹாலிலிருந்து தெரிந்தது. என்ன என்று கேட்டார் ஹெரால்டின் அப்பா. குடுகுடுப்பைக் காரன் போன்ற தோற்றத்தில்  தோளில் பொதியுடன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். ஹெரால்டின் அப்பாஎன்னிடம் இரண்டு ரூபாய் பணத்தைக் கொடுத்துஅவனிடம் போய் கொடுக்கச் சொன்னார். நான் கொடுத்து விட்டு வந்தமர்ந்தேன். அவன் நின்ற இடத்திலிருந்து நகராமல் நின்றான்.

அப்புறம் அவன் குறிசொல்வதைப் போலப் பேசத் தொடங்கினான். அவர் சொன்ன வார்த்தைகள்அவர் பேசிய விஷயம் எதுவும் தற்போது ஞாபகத்தில் இல்லை. ஆனால் எல்லாருமே அவன் வார்த்தைகளில் கட்டப்பட்டது போல அந்த ஹாலில் உறைந்திருந்தோம். வீட்டை அவன் சுற்றித் தன் வார்த்தைகளால் கட்டியிருந்தான். ஒரு அச்சநிலை அந்த இடத்தில் படர்ந்திருந்தது. ஒரு மரணத்தை ஒரு தீமையை அவன் ஏவிவிட்டுக்கொண்டிருந்தான். அவனைத் திருப்திப்படுத்தா விட்டால் நாங்கள் அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைப் போல இருந்தது அவனது வார்த்தைகள். வீட்டிற்குப் பின்வாசல் இருந்தது. ஆனால் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை.  

ஐந்து நிமிடங்கள் கூட அவன் அந்த இடத்தில் நின்றிருக்க மாட்டான். அதற்குள் எல்லாம் நடந்துவிட்டிருந்தது. ஹெரால்டின் அப்பாஎழுந்து வீட்டுக்குள் போய் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வந்து அவனிடம் கொண்டுபோய் கொடுத்தார். அவன் தன் வேலையை முடித்துக் கிளம்பிச் சென்றான். ஹெரால்டின் அப்பாகதவை மூடிவிட்டு வந்தார். நாங்கள் அந்தக் காலை உணவை மௌனமாக அன்று சாப்பிட வேண்டியிருந்தது.
சென்னையில் ஆளற்ற பறக்கும் ரயில் நிலையங்கள், நள்ளிரவு விடுதி அறைகள், கூவ இருட்டு மூலைகள், சம்பிரதாய முறையில் தகனம் செய்யும் இடுகாடுகள் மற்றும் நவீன மின்சார தகனக்கூடங்களில் பேய்கள் இல்லை. சமீபத்தில் நண்பர் ரஃபீக்குடன் சேர்ந்து ஒரு ஆவணப்படம் தொடர்பாக, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பழைய மத்திய சிறை இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கல்லறைத் தோட்டத்துக்குச் சென்றபோது, இங்கிலாந்தைத் தாயகமாகக் கொண்டு காதல் மற்றும் இந்தியாவின் மீதுள்ள ஈடுபாட்டால் இங்குவந்து, சென்னையிலேயே 39 வயதில் இறந்துபோன  ஆங்கிலப் பெண் கவிஞர் லாரன்ஸ் ஹோப்பின் சமாதியைக் காண்பித்தார். அவரது கவிதைத் தொகுப்பின் பெயர் ‘கார்டன் ஆப் காமா. அவர் சமாதியைக் காண்பித்து ரஃபீக், அவரின் புதிரான காதல் வாழ்வு மற்றும் அகாலத் தற்கொலை பற்றிச் சொன்னதைக் கேட்டபடியே என் பழக்கத்தில் ஒரு செடியின் மீது கைகளைப் படரவிட்டேன். ஒரு பறவை கொத்தியது போல முள் ஒன்று எவ்விக் குத்தியது; கடுக்கும் வலி.  கல்லறையின் காவலாளி இளைஞர், வீட்டுக்குப் போவதற்குள் வலி நீங்கிவிடும் என்றார். நிறைவேறாத காதல், பிரிவுகள், மரணம் சார்ந்து சுயசரிதைத் தன்மையில் சூபி கவிஞர்களின் தாக்கத்தில் கவிதைகளை எழுதிய பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரொமாண்டிக் கவிஞர் லாரன்ஸ் ஹோப். இது அவரது புனைப்பெயர். அவரது இயற்பெயர் அடெலா ப்ளாரன்ஸ் நிகல்சன்.     
 பேய்கள் சொற்களிலிருந்து தோன்றுகின்றன. மனிதர்கள் அடையும் ஆன்மிகத் திவாலிலிருந்து தோன்றுகின்றன.விந்தையேயற்று இந்த உலகைசகமனிதர்களைஅனுபவங்களை வெறும் நுகர்பொருளாகப் பார்க்கும்போது பேய்கள் தோன்றுகின்றன. நடந்த ஒன்றைத் திரும்பவும் வேண்டி வேண்டி மனம் ஆசைப்படும் போது பேயிருள் தோன்றுகிறது. சமூகத்தின் கூட்டு அகநலிவிலிருந்து பேய் அரசுகள் தோன்றுகின்றன.  

Comments