Skip to main content

காதலர் நேசிக்கப்படுபவரும்தான் - நித்ய சைதன்ய யதி




ரு உண்மையான காதலர், நேசிக்கப்படுபவரும்தான். காதலரும் காதலிக்கப்படுபவரும் இரு வேறு நபர்களல்ல. இரண்டுமே மாறக்கூடிய பதங்கள்தாம். உரிமை அல்லது ஒப்புக்கொடுக்கும் அகந்தையை அகற்றும் தெய்வீக நிலையால் அவனும் அவளும் அங்கே நெகிழ்ந்திருப்பவர்கள். அங்கே உங்களை நீங்கள் அடிமையாக ஒப்புக்கொடுக்கவில்லை, ஒரு உறுதிமொழியாக உங்களையே அளிக்கிறீர்கள்.

நீங்கள் நேசிப்பவருக்கு உங்களையே தருவதில் மிகப்பெரும் ஆனந்தம் உள்ளது. அப்படியாக பரஸ்பரம் அத்தனை இயற்கையோடு அத்தனை சந்தோஷத்துடன் இன்னொருவருக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணம் சிறுதுளி கூட படியாமல் நீங்கள் வழங்கிக்கொள்கிறீர்கள். அதேவேளையில், உங்களுக்கு உதவி செய்வதற்கும் பகிர்வதற்கும் சேவை செய்வதற்குமான வாய்ப்பும் வழங்கப்படுவதற்கான கவுரவத்தையும் உணர்கிறீர்கள்.

இந்தக் கொடுக்கல் வாங்கலில் மேல், கீழ் என்ற நிலை இல்லை. ஆசீர்வாதம் கொடுப்பதைப் போன்றே ஆசீர்வாதம் பெறுவதும் மகத்தானது. இந்த அடிப்படையில் தோழமை வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ளும்போது காதலை வெளிப்படுத்தும் சாத்தியமும் மேலும் விஸ்தீரணமாகிறது.


நாம் காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது, நம்மைச் சுற்றி எத்தனையோ வகையான குட்டிக் குட்டி கிசுகிசுப்புகளைக் கேட்போம். வழியில் ஒரு ரோஜா பேசுகிறது. “ஹாய், எப்படி இருக்கிறீர்கள்”. நாம் ரோஜாவை நோக்கித் திரும்பி, “ஓ, நீ எப்படி இருக்கிறாய்?” என்று பதிலளிப்பதைக் கேட்டு அதன் கீழேயிருக்கும் பசும்புல் ஒன்று நம்மிடம் சொல்கிறது: “நானும் இங்கேதான் இருக்கிறேன்.” என்று கவனத்தைத் திருப்புகிறது. “ஹாய், கொஞ்சம் கவனமாகப் போங்கள். என்னால் மெதுவாகத்தான் நகர முடியும்” என்று நத்தை எச்சரிக்கிறது.

எங்கு போனாலும் அங்கே வாழ்க்கை நுரைத்துக் கொப்பளிக்கிறது. உங்களை வெவ்வேறு விதமான அழகு வரவேற்கிறது. சூரிய ஒளி மேலிருந்து சுடர்கிறது. புராதனத்துக்கும் புராதனமான கடல்களிலிருந்து சில்லென்ற காற்று வீசுகிறது. காற்றே இசையாக உள்ளது. அனைத்துப் பறவைகளும் நமக்காகவே பாடிக்கொண்டிருக்கின்றன. அத்துணை அழகு, சந்தோஷம், அற்புதத்தை நாம் எங்கும் காண்கிறோம்.

வாழ்வு என்று அழைக்கப்படும் இந்தச் சந்தோஷ யாத்திரை மற்றும் அணிவகுப்பில் நீங்கள் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். இது அத்தனையையும் உங்கள் நேசத்துக்குரியவருடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த வகையான பகிர்வில், நண்பர்களாகவும், மலர்களாகவும், பறவைகளாகவும், தென்றலாகவும், பனித்துளிகளாகவும், கண்ணீர் துளிகளாகவும் உங்களைக் கவரும் எல்லாவற்றிலும் நேசத்தின் வெண்சாமரம் வீசும் சுயமே பிரதிபலிக்கிறது.

குழப்பங்கள், நம்பிக்கையின்மையின் மேகங்களைத் தாண்டி மிதக்கக்கூடிய மந்திரக் கம்பளியைத் தந்து தன் உறுதிமொழியால் தழுவுவதும் முத்துக்குளிக்கச் செய்வதும் ஆன்மாவுக்கு மிக விருப்பமான புல்வெளிப்பாதை கொண்ட பூர்விக நிலத்தைக் கண்டடையச் செய்வதும்தான் வாழ்க்கை. அதை அனுபவிக்கும் வேளையில், “ நான் என்னை அனுபவம் கொள்கிறேன்; நான் நேசத்தை அனுபவிக்கிறேன்; நான் எனது மெய்யான உயிரிருப்பின் மகத்தான சுதந்திரத்தை அனுபவிக்கிறேன்” என்று சொல்லிக்கொள்ள முடியும்.


நீங்கள் ரோஜாவை நேசிக்கும்போது, அதனுடன் எந்த பிரத்யேக ஒப்பந்தமும் இட்டுக் கொள்வதில்லை. “ ஏ, ரோஜாவே, நாளை இதே நேரத்துக்கு வந்து, மீண்டும் உன்னை முத்தமிடுவேன்.” என்று சொல்ல முடியாது.

இல்லை. அப்படி உங்களால் ஒப்பந்தம் போட முடியாது. இயற்கை, மனிதர்களுடனான அனைத்து நேசப் பகிர்வுகளும், நம்மைக் கடந்துபோகும் எண்ணங்களும் தற்செயலானதும் ஆற்றொழுக்கானதுமே. கெட்டிப்படுத்தப்பட்ட வடிவங்களில் நாம் நமது உறவுகளை வரையறுக்காமல் இருக்கும்போது அதில் உயிர்ப்பு இருக்கும்.


நமது பல்கலைக்கழகங்களில் ஒன்றைக் கற்றுக்கொடுக்க நாம் மறந்துவிட்டோம். மதிப்பீடுகளையும் பாராட்டுவதற்கான நுண்ணுணர்வை மக்களிடம் வளர்ப்பதற்கும் கற்றுக்கொடுக்கவேயில்லை. அழகு துலங்கும் இடத்தைப் பார்ப்பதற்கு நமது கண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவேயில்லை. மிருதுவாக இருப்பதன் மேன்மையை எந்தப் பல்கலைக்கழகம் கற்றுக் கொடுக்கிறது? கையால் மிருதுவாகத் தொடுவதன் மதிப்பு, மனதால் மிருதுவாக வருடுவதன் மேன்மை, கண்களால் மிருதுவாகக் காணும் மகத்துவம், மிருதுவான சொற்களால் ஆறுதல் கூறுவதன் அற்புதம் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுக்கொடுக்கப் போகிறோம்?

வாழ்க்கை முழுவதற்குமான தோழமைத்துவத்தைக் கண்டுபிடிப்பதற்குக் கடவுள் தரும் வரங்களாகத்தான் காதலும் திருமணமும் பார்க்கப்பட வேண்டும். குழந்தைகள், நண்பர்கள், அண்டைவீட்டார், இயற்கை உட்பட எல்லாவற்றையும் பகிர்வதற்கான சிறந்த வாய்ப்பு அது. அப்படியான அர்த்தமுள்ள திருமணத்தில் வாழ்வதற்கு, நாம் நம்மை மறு-பயிற்றுவித்தலுக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்மிடம் ஆரோக்கியமான நடைமுறைகளும் ஆரோக்கியமான உறவுகளும் நிலவும்.


(கேரளம் கொண்டாடும் அறிஞர்களில் ஒருவரும் நாராயண குருவின் சீடர் நடராஜ குருவின் மாணவருமான நித்ய சைதன்ய யதி எழுதிய ‘டபுள் லாஸ் டபுள் கெய்ன் இன் தி வொண்டர்லாண்ட் ஆப் கம்பேனியன்ஷிப்’ கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில்: ஷங்கர்)

Comments

அய்யா, மேலும் சில பகுதிகளை மொழி பெயர்க்கலாமே?