மார்டின் பட்லர்
(போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்திய பயன்விளைவை இன்னும் சில வாசகர்களும் அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்க்கிறேன்.)
இதயத்தின் ஆழத்தில் நீங்களும் நானும் ஆசையே. அப்படித்தான் ஸ்பினோசாவும்,
ஷோபன்ஹெரும் புத்தரும் சொல்கிறார்கள். இது உண்மைதான் என்று தெரிந்து கொள்வதற்கு
நம் மனத்தில் நடப்பது குறித்த சின்ன கவனிப்பே போதுமானது. ஆசைகள் வந்து வந்து போவதை
உட்கார்ந்து கவனித்துப் பார்த்தால் ஒன்றைப் பற்றி ஒன்றாக அவை முடிவில்லாமல்
பெருகுவது தெரியவரும். ஆசையைப் பொருத்தளவில் ஷோபன்ஹெருடைய அணுகுமுறைக்கு
ஸ்பினோசாவின் அணுகுமுறை முற்றிலும் வேறு என்றாலும் ஆராயத் தக்கதே. மனிதனின்
சாராம்சம் ஆசைதான் என்கிறார் ஸ்பினோசா. இருத்தலைத் தொடர்வதற்கான ஆசையை
முக்கியமென்கிறார். ஒவ்வொரு உயிரும் தன்னிடமுள்ள அதிகாரத்தை அனுசரிக்கும்
‘இறையாண்மைமிக்க இயற்கை உரிமை’-ஐப் பெற்றுள்ளதாக அவர் சொல்கிறார். வலிமையானது
பலவீனமானதன் மீது ஆதிக்கம் செலுத்தவும் சுரண்டவும் செய்யுமென்று கூறும் அவர் அதில்
எந்தத் தவறையும் காணவில்லை. இயற்கை ஒவ்வொரு உயிரையும் அப்படித்தான்
படைத்திருக்கிறது – நாம் படைத்துக் கொள்ளவில்லை. இந்த இருப்பு ஆற்றலை அவர்
கடவுளுடன் இணைவைக்கிறார். பலசாலிகள் பலவீனர்களை ஆதிக்கம் செய்வது கடவுளால்
அளிக்கப்பட்ட நடத்தையெனக் கருதுகிறார்.
இருப்புக்கான அதிகாரத்தை நற்பண்போடு இணைவைக்கிறார் ஸ்பினோசா. இருப்பினும்
இந்தத் தோட்டத்தில் எல்லாமே நறுமணமுடையவை அல்ல. நாம் விரும்புவதை நம்மால்
எப்போதும் பெற முடியாததால் நாம் துயரப்படுகிறோம். எல்லாருக்கும் எல்லாம்
கிடைக்கும் வாழ்க்கையாக இது இல்லை. அல்லது
விலங்குகளைப் போலத் துயரப்பட்டிருப்போம். அதனால், ஒரு ஒழுங்கு நிலவும் சமூகத்துக்காக
நமது அதிகாரத்தை கொஞ்சூண்டு இழக்கிறோம். இருக்கும் நிலைமையை உள்ளது உள்ளவாறு, எந்தத்
தயக்கமும் மதிப்பீட்டு தீர்ப்புகளும் இன்றி ஸ்பினோசா இதைச் சொல்கிறார்.
இப்படித்தான் விஷயங்கள் உள்ளன. அதனாலேயே சிறிதளவே துயர்படும் அளவுக்கு நமது
வாழ்க்கையை ஓரளவு சீராக ஒழுங்கமைத்திருக்கிறோம்.
ஷோபன்ஹெரோ முழுமையாக வித்தியாசமான ஒரு அணுகுமுறையை எடுக்கிறார். அவர்
கீழைத்தேய சமயங்களால், குறிப்பாக பௌத்தத்தால் அழுத்தமான தாக்கத்துக்குள்ளானவர்.
அதனால் அவரது அணுகுமுறை இப்படியாக இருக்கிறது. கால, வெளியில் ஆசையால் அவதரித்த
உடல்கள் நம்முடையவை. எல்லா வஸ்துக்களிலும் இந்த ஆசையே உள்ளது, இதையே அவர்
வாழ்க்கைக்கான விருப்பு என்றார். குருட்டுத்தனமான, பிரக்ஞை பெற இயலாத இந்த
சக்திதான் ஒவ்வொரு உயிரையும் இந்தப் பிரபஞ்சத்தின் மையமாகத் தன்னைப் பார்க்கச்
செய்கிறது. இருப்பதற்காக உயிர்கள் பிற உயிர்களின் மீது துயரத்தை ஏவிவிடவும்
வேண்டியிருக்கிறது. பிற உயிர்களைச் சாப்பிட வேண்டியிருக்கிறது; சுரண்ட
வேண்டியிருக்கிறது; ஆதிக்கம் செலுத்துவதற்கும் புணர்ச்சி உரிமைக்கும்
சண்டையிடுகிறது; ஷோபன்ஹெர், இந்த விஷயம் முழுவதையும் பரிதாபத்துக்குரியதாகப்
பார்க்கிறார். இந்த உந்துதலுக்கு ஆட்பட்ட எந்த உயிரும் துயரப்படுவதோடு மற்ற
உயிர்களையும் துயரத்துக்குள்ளாக்கும் என்கிறார்.
இப்படித்தான் அவரது தலைசிறந்த நூலான ‘தி வேர்ல்ட் அஸ் வில் அண்ட்
ரெப்ரசண்டேஷன்’-ல் வாழ்வுக்கான விருப்பை மறுப்பதற்குப் பரிந்துரைக்கிறார். வேறு
வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், நம்மில் உள்ள ஏதோவொன்று அந்தக் குருட்டுத்தனமான
உந்துதலைப் பார்த்துக் கொண்டு அதற்கு முதுகு திருப்பிக் கொள்கிறது. கிறித்துவ
சமயத்தில் சொல்லப்படும் துறவுக்கு ஒப்பானது இது. பெரும்பாலான சமயங்களில் இதுபோன்ற
வடிவங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் தனிப்பட்ட மனிதர்களால் அரிதாகவே
கடைபிடிக்க முடியக்கூடிய விஷயம் இது. ஞானியரும் துறவியரும் வேண்டுமானால்
வாழ்வுக்கான விருப்புக்கு பாராமுகம் காட்டியிருக்கலாம்.
ஷோபன்ஹர், ஸ்பினோசா இருவரது அணுகுமுறைகளும் அதற்குரிய பலன்களைக் கொண்டவை.
ஸ்பினோசா, எத்தனை சாத்தியமோ அத்துணையளவு நமது அதிகாரத்தை அனுசரிக்கலாம் என்கிறார்.
நாம் விரும்புவதைப் பெறுவது எப்போதும் சாத்தியமல்ல என்ற உண்மையையும் நாம் தாங்கிக்
கொள்ளவே வேண்டும்.
அனைத்து ஆசைகளிலிருந்தும் விடுதலை தேடுவதன் வாயிலாக நிராகரிக்கப்படுவதின்
வலியை நேரடியாக எதிர்கொள்கிறோம் என்கிறார். இரண்டு அணுகுமுறைகளிலும் எனக்குப்
பயனுள்ளதை நான் எடுத்துக் கொள்வேன். ஷோபன்ஹெர் நமக்கு முன்னால் சூழ்நிலையின்
பயங்கரத்தை எடுத்துக்காட்டி உணர்வுரீதியான கோணத்தைத் தருகிறார். ஆசைகளை
அனுசரிப்பதற்கான பகுத்தறிவுப் பூர்வமான அணுகுமுறைகளை ஸ்பினோசா வழங்குகிறார்.
சுருக்கமாகச் சொன்னால், ஸ்பினோசா ஆசையை ஏற்புக்குரியதாகவும் அதன்
இயல்பிலேயே அதை அணுகவும் செய்கிறார். ஷோபன்ஹெரோ ஆசையை குருட்டுத்தன்மை
கொண்டதாகவும் இரக்கமற்றதாகவும் பார்க்கிறார். அத்தோடு சாத்தியமென்றால் அதைப்
புறக்கணிக்க வேண்டியதாகவும் பார்க்கிறார்.
(http://corporealfantasy.com இணையத்தளத்திலிருந்து)
Comments