Skip to main content

புவியரசு நேர்காணல் தாஸ்தாயெவ்ஸ்கி கொடுத்த ஞானம் அது



ஷங்கர்ராமசுப்ரமணியன்

கவிதையை ஜனநாயகப்படுத்திய வானம்பாடி இதழின் தாய்ப்பறவை கவிஞர் புவியரசு. ‘தேடாதே தொலைந்து போவாய்/ வழிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று நம்பிக்கையின்மை தொனிக்க கவிதை எழுதியவர், வாழ்க்கை முழுக்க கவிதை, அரசியல், மெய்யியல், சினிமா, வாசிப்பு எனத் தேடலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். ஓஷோ முதல் சுந்தர ராமசாமி வரை வியந்த படைப்பான தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை மொழிபெயர்த்தது இவருடைய வாழ்நாள் சாதனை. கோவையில் அவரது இல்லத்தில் கவிஞர் இசையுடன் சந்தித்து மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது…


வானம்பாடி இயக்கமும், கவிதை இதழும் தோன்றிய கதையைச் சொல்லுங்கள்?

வானம்பாடி இதழ் 1970-களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. சர்வதேச ரீதியாக, அனைத்து நாடுகளிலுமுள்ள மக்கள், கொந்தளிப்போடும் அரசியல் சொரணையோடும் எழுந்த புரட்சிகரமான காலகட்டம் அது. பருவநிலைகள் எல்லாரையும் கிளப்பிவிட்டு விட்டதா, பூமிக்குக் கீழே எரிமலைகள் கொந்தளித்தது காரணமா என்று தெரியவில்லை. பிரான்சில் மாணவர் புரட்சி வெடித்ததற்குப் பின்னான மனநிலையென்று சொல்லலாம். அப்துல் ரகுமான் மாதிரி நாங்களும் அப்போது பெரிய கவியரங்கங்களுக்குப் போய் பாடிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் நண்பர்கள் மீரா, சிற்பி, பாலா போன்ற நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பேசினோம். நாங்கள் சோசலிஸ்டுகளாகவும் கொஞ்சம் காங்கிரஸ் ஆதரவு மனோபாவம் உள்ளவர்களாகவும் இருந்தோம். தி.மு.க எதிர்ப்பு மனநிலையும் இருந்தது. மரபு கடவுளைப் பாடியது. தி.மு.க போன்ற இயக்கங்களோ தமிழ் தமிழ் என்று செய்த அரசியல் மீது வெறுப்பும் இருந்தது. நாங்கள் இந்த இரண்டிலிருந்தும் விலகி சமூகத்தைப் பாட வேண்டுமென்று முடிவு செய்தோம். ஆனால் உடனடியாக எதுவும் நடக்கவில்லை. சில மாதங்கள் கழித்து தமிழ் பேராசிரியர் முல்லை ஆதவன் வீட்டு மாடியில் கோவை ஞானியுடன் சேர்ந்து பேசி முடிவெடுத்தோம். வானம்பாடி என்ற இயக்கத்தைத் தொடங்கினோம். அக்கினிபுத்திரன் உட்பட ஐந்தாறு பேர் இருந்தார்கள். முல்லை ஆதவன் கூட்டத்தை நடத்தினார். அப்போது உப்பிலிப்பாளையத்தில் நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் பெர்க்ஸ் என்ற பள்ளியை நடத்தி வந்தார். அவரை பெர்க்ஸ் அண்ணாச்சி என்று அழைப்போம். அவர்தான் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஸ்கைலார்க் பத்திரிகையின் பெயரைக் கூறினார். அதற்குத் தமிழில் பெயர் என்னவென்று கேட்டேன். வானம்பாடி என்றார். எங்கள் அமைப்புக்கு வானம்பாடிகள் என்றும் பத்திரிகைக்கு வானம்பாடி என்றும் பெயர் வைக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. முதலில் மார்க்சிஸ்டுகள் வந்தார்கள். அதற்குப்பிறகு பெரியாரியர்களும் வந்தனர். இன்னொரு கூட்டம் என் வீட்டில் நடந்தது. அப்துல் ரகுமான், மார்க்சியத்தை ஒத்துக்கொண்டாலும் சமூகத்தைப் பாடுவது நியாயம் தான் என்றாலும் அவர் தி.மு.க காரர் என்பதால் அமைப்பில் இணையமுடியாது என்று கூறி மறுத்துவிட்டார். அப்போது கலைஞர் கருணாநிதி ஆட்சிதான் நடந்தது. கலாப்ரியா போன்றவர்கள் அமைப்பு ரீதியாகச் சேரமுடியாது என்று கூறி இடதுசாரிப் பார்வையிலான கவிதைகளை அனுப்பிவைப்பதற்கு ஒப்புக்கொண்டனர். மீரா, பாலா, தமிழ்நாடன், சக்திக்கனல், சிற்பி, சிதம்பரநாதன் போன்ற மார்க்சிய பார்வையுள்ளவர்கள் மட்டும் அமைப்பில் சேர்ந்து பத்திரிகை தொடங்கப்பட்டது. எனது மருமகன் நடராஜன் நடத்திய மலர்விழி அச்சகத்தில் தான் வானம்பாடி அச்சடிக்கப்பட்டது. அதில் வந்த கவிதைகள் எல்லாமே அரசையும், அரசு நிலைகளையும் எதிர்த்து எழுதப்பட்டவை. அந்தப் பத்திரிகை வெளிவந்தவுடன், நாங்கள் தமிழையெல்லாம் அவமானப்படுத்தும் நோக்கில் பத்திரிகை நடத்தவில்லை என்பதை தி.மு.கவும் தெரிந்துகொண்டது. ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு/ அதை பிறர் மீது விடமாட்டேன்’ என எழுதிய ஞானக்கூத்தன் போன்றோரின் நிலை வேறு; எங்கள் நிலை வேறு என்பது தெளிவாகிவிட்டது. 

வானம்பாடிகளில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள் அல்லவா?

பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். சக்திக்கனலும், சிதம்பரநாதனும் மட்டும்தான் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். அரசுப் பணியில் நாங்கள் இருந்ததால் பாதிப்பும் அச்சுறுத்தலும் இருந்தது. எங்களை நன்கு தெரிந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களே எங்களை நக்சலைட் என்று குற்றம்சாட்டினர். அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த தி.மு.க அனுதாபியான ஒரு பேராசிரியர் கோவை வானம்பாடிகளைப் பார்க்க வந்தார். சென்னையிலிருந்து வந்த எழுத்தாளர்கள் அப்போது தரிசனம் செய்வதைப் போல இப்படி எங்களை வந்து சந்திப்பது வழக்கம். மலர்விழி அச்சகத்திலிருந்து வானம்பாடிகளை நடத்துபவர்கள் எல்லாரும் நக்சலைட்கள் என்று அவரும் ஊருக்குப் போய்ச் சொன்னார். நாங்கள் ரத்தம் என்று எழுதினோம். தி.மு.கவைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் வந்து குருதி என்றுதான் எழுதவேண்டும் என்று சண்டை போட்டு காவல்நிலையம் வரை போன அனுபவமெல்லாம் உண்டு. வங்காளத்தில் அப்போது நக்சல்பாரிகள் ஒடுக்கப்பட்ட நிலைமைகளைப் பற்றி எழுதிய கவிதையைப் பற்றி காவல் நிலைய ஆய்வாளரிடம் நான் சொன்னேன். அவர்தான், ரத்தத்தை ரத்தம் என்று தான் சொல்ல முடியும், குருதி சிந்தினான்னு நீ சாதாரணமாகச் சொல்வியா என்று கேட்டு பிரச்சினையைத் தீர்த்து அனுப்பி வைத்தார். எங்கள் குழுவில் நான் மட்டுமே குறைவான சம்பளம் வாங்கும் தமிழாசிரியராக இருந்தேன். எனது மாதச்சம்பளம் 80, 90 தான். கூடுதல் பாதிப்பு அதிகச் சம்பளம் வாங்கும் சிற்பி, மீரா போன்ற பேராசிரியர்களுக்குத்தான் என்பதால் எனது வீட்டு முகவரியைத் தாங்கி வானம்பாடி வெளிவந்தது. 32 பக்கங்களில் வெளியிட்டோம். 48,60 பக்கங்கள் வரை போயிருக்கிறது. 300 பிரதிகள் வெளியிட்டோம். 1981 வரை 13 இதழ்கள் வந்தன.

பூமியின் பிரளயங்களாய்
காலத்தின் வசந்தங்களாய்
யுகத்தின் சுவடுகளாய்
நிறங்களில் சிவப்பாய்
மண்ணை வலம்வரும் பறவைகளாய்
மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின்
விலையிலாக் கவிமடல் என்று
இலவசமாகவே எல்லாருக்கும் அனுப்பிவைத்தோம். ஆசிரியர் என்று திட்டவட்டமாக யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. ஈரோடு தமிழன்பன் வீட்டுக்குப் போய் கவிதை கேட்டோம். மூன்றாவது இதழுக்காக எங்களை வீட்டிலேயே உட்கார வைத்து ’வானம்பாடிகள் நாம்’ எனத் தொடங்கும் புரட்சிகரமான கவிதையை எழுதிக்கொடுத்தார். அதை முதல் பக்கத்திலேயே போட்டிருந்தோம். ஆனால் அவர் தி.மு.க காரர்.
 எழுத்து பத்திரிகை மரபைச் சேர்ந்த ‘அஃ’  பரந்தாமன் போன்ற நண்பர்கள் எங்களது படைப்புகளை இலக்கியமே அல்ல என்று சொன்னார்கள். நாங்கள் கவிதையை தெருவுக்கு இழுத்து வந்தோம். கோஷம் போடுவதற்கு பதிலாக கவிதை எழுதினோம். சமூக, அரசியல் அளவிலான விழிப்புணர்வு தான் எங்கள் நோக்கமாக இருந்தோம். அதனால் இலக்கியமாகவில்லை என்றால் பரவாயில்லை. கவித்துவம் வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும். ஒருகட்டத்தில் உள்ளுக்குள் தனிப்பட்ட பிரச்சினைகள் வரத் தொடங்கின. 10 இதழ்களுக்குப் பிறகு சிற்பியிடம் பத்திரிகையை ஒப்படைத்துவிட்டேன்.

கவிஞர் இன்குலாப் வானம்பாடி இதழில் எழுதினாரா?

இன்குலாப் எங்களுக்கு முன்னாலேயே தெருவுக்குப் போனவர். அவர் பயங்கரமான இடதுசாரி. அவரது கவிதைகளை மவுண்ட் ரோட்டில் எழுதிவைத்து தான் சிம்சன் தொழிலாளர் போராட்டமே அக்காலகட்டத்தில் நடந்தது. அத்தனை பெரிய போராளி அவர். அவர் மேல் மிகுந்த மரியாதை கொடுத்து நாங்கள் ஒதுங்கிக்கொண்டோம். நாங்கள் அத்தனை பெரிய போராளிகள் அல்ல.

இலக்கிய நுட்பம் அழகியல் சார்ந்து எழுத்து பத்திரிகையும், உரத்த அரசியல், பிரசாரத் தன்மை சார்ந்து வானம்பாடியும் தமிழ் கவிதை வரலாற்றில் இரண்டு துருவங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால் வானம்பாடி இயக்கம் சார்ந்து எழுதியவர்கள் இன்று இலக்கிய அனுபவத்தைத் தருபவர்களாக இருக்கிறார்களா?

எங்களிடம் கவித்துவம் எப்போதும் இருந்தது. வானம்பாடிக்கு முன்னர் நாங்கள் கவியரங்கங்களில் கவிதை பாடும்போது மக்கள் கைதட்டத்தான் செய்தார்கள். அது எங்களுக்குக் கவித்துவத்துக்குக் கிடைத்த கைதட்டல்தான். நாங்கள் அப்போது பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசவில்லையே. நாங்கள் எல்லாரும் மரபுக்கவிதையிலும் குறிப்பிட்ட சாதனைகளைச் செய்தவர்கள் தான். வானம்பாடி ஆரம்பித்த பிறகு கோயில்களுக்கு வெளியிலும் கல்லூரிகளுக்கு வெளியிலும் சென்று கவிதை பாடியிருக்கிறோம். தெருவில் இறங்கும்போது கவித்துவம் குறைந்துவிட்டது. எல்லாரும் இன்னும் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறோம்.
வானம்பாடிகள் இயக்கத்தவர்களான பாலா, சிற்பி போன்றோரின் ஆதிக்கம் பல்கலைக்கழக வட்டாரங்களிலும் சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளிலும் தற்போதும் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி கூறுங்கள்?

சிற்பி, பாலா போன்றவர்களால் தான் எல்லா தரப்பினருக்கும் சாகித்ய அகாதமி கிடைத்தது. சுந்தர ராமசாமிக்கு சாகித்ய அகாதமி கொடுக்காதது தான் இத்தகைய குற்றச்சாட்டுக்குப் பின்னுள்ள பிரச்சினை. அவரும் இறந்துவிட்டார். அவர் கம்யூனிஸ்டாக இருந்தவர். ஆனால், அவருக்குக் கொடுக்கப்படாததற்குக் காரணம் தெரியவில்லை.          

உங்களுடைய கவிதைகளில் விவிலியத்தின் தாக்கம் இருக்கிறதே…
அவன் பிறந்ததிலிருந்து தேடப்படுபவனாக இருந்தான் என்பதே காரணம். கிராமம், கிராமமாகப் போய் மக்களுக்கு அவர்களது கண்ணீரைத் துடைத்து நிம்மதி கொடுத்து தன்னால் முடிந்த ஆறுதலைக் கொடுத்த முதல் நக்சலைட் அவன். அவரது மொழி என்னை ஈர்த்தது. ‘இந்தக் கட்டிடங்களை எல்லாம் தவிடுபொடியாக்குவேன், கல்லின் மேல் கல் இல்லாதபடி ஒழிப்பேன்’ என்கிற குரல் அமைப்புக்கு எதிரான குரல் அல்லவா. விவிலியத்தின் மொழி அழகானது என்பதும் காரணம்.
சமஸ்கிருதத்தை கவிதை மொழியில் தாராளமாகப் பயன்படுத்தினீர்கள் இல்லையா?

உலகத்தில் எல்லாமே கலந்தே தீரும் என்பவர்கள் நாங்கள். நமது மொழியையும் நமது மரபையும் காப்பாற்ற வேண்டும்தான். ஆனால் அதை அந்தந்த மக்கள் தான் அதை முடிவு செய்யவேண்டும். எனது தமிழாசிரியரே, டேய் கழுத என்னடா என்று சாதாரணமாகத் தான் பேசுவார். அதுதான் உலகம். நீரோற்பலம் என்றால் அழகாக இருக்கிறது. சங்கம் என்பதே தமிழா? வடமொழியா? தூய தமிழை வலியுறுத்தியவர்கள் நடத்தும் கூட்டத்துக்கே போய், எனக்கு காபி குடிக்க வேண்டும். நீங்கள் கடைக்கு வந்து எப்படிக் கேட்பீர்கள் என்று போய் கேட்டிருக்கிறேன். குழம்பி என்று கேட்டால் கிடைத்துவிடுமா. காபி என்று சொன்னால் வாய் வெந்து போய்விடுமா? சமஸ்கிருதத்துக்கு நிலம் கிடையாது. நாடு கிடையாது. ஆனால் இந்தியா முழுவதும் எப்படி செல்வாக்கு பெற்றது. மதம் அந்தச் செல்வாக்கைக் கொடுத்தது. பவுத்த தத்துவத்தைப் பாலி மொழியிலிருந்து வாங்கிப் பெயர்த்தவர்கள் சமஸ்கிருதத்தில் தானே செய்தனர். சமஸ்கிருதம் அக்காலத்தில் ஆங்கிலத்தைப் போல ஆட்சிமொழியாக இருந்தது. வடமொழி கலக்காமல் தெலுங்கும் இல்லை, மலையாளமும் இல்லை, தமிழும் இல்லை.

கவிதை, அரசியல், மொழிபெயர்ப்பைப் போலவே சினிமாவிலும் அதிக ஈடுபாடு காட்டியவர் நீங்கள்?

சினிமாவை நமக்கு வாசிக்கத் தெரியாது. தாய் நாவலை சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். புரட்சிகரமான அந்தப் பையனுடைய அப்பா இறந்துவிடும் காட்சியைப் பார்க்க வேண்டும். ஷாட்டை அந்த அப்பாவின் சடலத்தின் கால்களில் வைத்திருப்பார்கள். அந்தக் காலை ஏன் அவ்வளவு நேரம் நிறுத்திக் காண்பிக்கிறான். இந்தக் கால்களில் தான் அந்தக் குடும்பம் நின்றது. அந்த தாய் அழாமல் உட்கார்ந்திருக்கிறாள். அறையில் உள்ள குழாயில் தண்ணீர் சொட்டும் சத்தம். அவள் வடிக்காத கண்ணீரை சூழல் வடித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவில் தான் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்தோம். அதிலிருந்து சினிமா மீதான ஈடுபாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் படமெடுக்கும் வாய்ப்பு வந்தால் இயக்குவேன்.

நெருக்கடி நிலையை வானம்பாடிகள் ஆதரித்தது இன்னும் உங்கள் மீது கரும்புள்ளியாக இருக்கிறதே?

ஆமாம் ஆதரித்தோம். நானும் தமிழ்நாடனும் சேர்ந்து இந்திரா-இந்தியா என்ற புத்தகத்தைச் சேர்ந்து எழுதினோம். குஷ்வந்த் சிங் தான் அந்தப் புத்தகத்துக்கான அட்டை நெகட்டிவையே அனுப்பினார். முழுச்சமூகமே அந்தக் காலகட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையில் தான் அப்போது இருந்தது. ரயில் அப்போது சரியான நேரத்தில் வந்தது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பதே இல்லை. எல்லாக் காரியங்களும் சரியாக நடந்தது. சமூகத்தில் ஒரு கட்டுப்பாடு வந்தது. 12 மணிக்கு எப்போதும் வரும் அலுவலர் 9 மணிக்கு வந்தார். இதற்காகத் தான் ஆதரித்து மேடைகளில் கவியரங்கமும் பாடினோம். ஒருகட்டத்தில் சர்வாதிகாரப் போக்கு தெரியத் துவங்கியது. தொழிற்சங்கங்கள் ஒடுக்கப்பட்டன. பிறகுதான் அந்த ஆதரவைக் கைவிட்டோம். 

 வான்பாடி இதழின் பங்களிப்பு என்று எதை நினைக்கிறீர்கள்?

 எல்லா பின்னணியிலிருந்து வரும் இளைஞர்களும் கவிதைகளை எழுத வந்ததற்கு வானம்பாடி இயக்கம் தான் காரணம். கவிதை ஒரு கோபுரத்தில் இருந்தது. நாங்கள்தான் தெருவுக்குக் கொண்டுவந்தோம். புலவர்கள், ஆசிரியர்கள், பண்டிதர்கள் எல்லாரிடமிருந்தும் கவிதையைப் பறித்தது வானம்பாடி இயக்கம் தான். புலவர் குழந்தை, புதுக்கவிதை என்ன யாப்பு? என்று கேட்டார். நான் ‘பிகாசோ’ என்று பதில் சொல்லிவிட்டு மேடையிலிருந்து கவிதை படித்துவிட்டு கீழிறங்கினேன். ஆனால் நாங்களும் தமிழாசிரியர்கள் தான். எங்களை எதிர்த்தவர்களும் தமிழாசிரியர்கள்தான்.
            
உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள்?

எனது அப்பா ப்ரூக் பாண்ட் தேயிலை நிறுவனத்தில் ஓவியராக வேலை பார்த்தவர். அதன் லட்சிணை ஓவியமான ‘ஒரு மொட்டும் இரு இலைகளும்’ ஓவியத்தை வரைந்தவர் அவர்தான். தாத்தா தெரு நாடகத்தில் நடித்தவர். அப்பாவும் நடிகர் தான். அப்போது தறுதலைகளே கிடையாது. தரிக்கப்பட்ட தலை தான் தறுதலை. அப்பாவின் நீளக்கூந்தலை அம்மா தான் பின்னி நாடகத்துக்கு அனுப்பாவாராம். உடுமலையில் லிங்கவநாயக்கன் புதூர் குக்கிராமம். அப்பா தான் எஸ்எஸ்எல்சி படித்து கோவைக்கு வேலைக்குப் போனார். அப்பா புராணிக ஓவிய மரபு தெரிந்தவர். ஓவியத்தின் கண்ணைத் திறப்பதற்கென்று ஒரு நாளைத் தேர்ந்தெடுப்பார். ஓவியம் வழியாக ஒரு கட்டத்தில் தத்துவத்துக்குப் போய்விட்டார். மதியமே வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்துவிடுவார். அசலமார்க்க வேதாந்தி அவர். பெயர் சுப்பையா. அந்த வேதாந்தம் ஆந்திராவில் தோன்றியது. எதற்கும் சலிக்காத சலனமில்லாத மனத்தை நோக்கிய நிலையைத் தேடியவர். சத்குரு என்று அவரைச் சொல்வார்கள். அதைத்தான் எனது இல்லத்துக்குப் பெயராக வைத்திருக்கிறேன். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு, இதை எழுதிரயாடா என்று கேட்டார். கடவுள் கற்பனை என்று எழுதச் சொன்னார்.

பின்னால் நீங்கள் மார்க்சிஸ்டாக அடையாளப்பட்டாலும் ஓஷோ துவங்கி மிர்தாத்தின் புத்தகம் வரை பல்வேறு பணிகளைச் செய்வதற்கும் உங்கள் அப்பாவிடமிருந்த மெய்யியல் தேடல் தொடர்வதும் காரணமாக இருக்கலாமா?

நான் மெய்யியலுக்கு வந்தததன் காரணம் பேரூர் மடத்தில் படித்ததுதான். தமிழ் இலக்கியங்கள் எல்லாமே திருக்குறள், தொல்காப்பியம் தவிர சமய இலக்கியங்கள் தான். சீவக சிந்தாமணி சமண இலக்கியம். ஒரு நாயகன், எட்டு நாயகிகள். கடைசியில் அவன் துறவியாகிறான். அதைப் படிப்பதற்கு சமண தத்துவம் தெரிய வேண்டும். சமணம், பவுத்தம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம். புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி. நாங்கள் முதலில் ம பொ சிவஞானத்தையும் அடுத்து மார்க்சையும் பற்றினோம். ஒரு தலைவர் மூலமாகத் தான் போகணும். சங்கமாகச் சேரணும். மார்க்சிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி, ஓஷோவோட அமைப்பாக இருந்தாலும் சரி அதை அடுத்துப் பற்றினோம். அதற்குப் பிறகு தத்துவத்தைப் பற்ற வேண்டும். ம.பொ.சி, திராவிட இயக்கத்தை எதிர்த்தவர். அவர் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தபோது, தலைவனை நம்பாதே தத்துவத்தை நம்பு என்று பற்றினோம். கோவை தமிழரசுக் கழக உறுப்பினர்கள் அனைவரும் கும்பலாக வெளியேறினோம். இதுதான் எனது தேடலும் செயல்பாடுமாக இருந்திருக்கிறது. காலம் முழுவதும் திராவிட இயக்க மாநாடு என்று கூட்டம் நடத்திய ம.பொ.சி அதே கட்சியுடன் போய் சேர்ந்தார். அத்துடன் ராமாயணம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை அண்ணா போன்றோர் மிகவும் ஆபாசமாக எழுதியதும் எங்களைத் தீவிரமாகப் புண்படுத்தியிருந்தது. அவர்களைக் காலம் முழுவதும் எதிர்த்த ம.பொ.சி அய்யா உதயசூரியன் சின்னத்திலேயே நின்றார். எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெரும்பாலான மனிதர்கள் சங்கத்துடனேயே நிறுத்தி விடுகிறோம். தத்துவத்தைப் பற்றுவதேயில்லை. 

ம.பொ.சியுடன் அதற்குப் பிறகும் தொடர்பு இருந்ததா?

நாங்கள் கட்சியிலிருந்து விலகி ஆறுமாதம் கழித்து நான் வேலை பார்த்த பள்ளிக்கு வெளியே போலீஸ் பாதுகாப்போடு என்னைப் பார்க்க வந்தார். போலீஸ் ஆணையத்தின் சார்பாக கோவைக்கு வந்திருந்தார். வெளியே வந்த என்னிடம் கோவிச்சுக்காதப்பா என்றார். “தனியாக இருந்து கத்தி ஒரு பிரயோஜனமும் இல்லை. இவர்களும் தமிழ்தான் முக்கியம்னு சொல்றாங்க. அறநிலையத் துறையை எனக்குக் கொடுக்கறதா அண்ணாதுரை சொன்னார். நம்ம சேர்ந்து பண்ணலாம்” என்றார். அடுத்த நாள் சன்மார்க்கச் சங்கத்தில் அவர் கூட்டம் நடந்தது. அன்றைக்கு அவர் நக்சலைட்களை எதிர்த்து முழுக்கப் பேசினார். அவருக்கோ கொடுத்த தலைப்பு ஆன்மிகம் தொடர்பானது. நான் பின்னால் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து எனக்கு எதிராகத் தான் முழுமையாகப் பேசினார். கூட்டம் முடிந்தது. என்னை வண்டிக்கு வரச் சொன்னார். காவல் துறையினரின் பிரச்சினைகள் தொடர்பான ஆணையத்தின் சார்பாக வந்திருந்தார். என்னை பத்து நாள் விடுமுறை எடுக்கச் சொன்னார். கூடவே இருந்தேன். பத்து நாள்களும் எல்லா பணிகளும் முடிந்த பின்னர், ம. பொ. சியிடம் ஏன்யா இந்த வேலை என்று விமானம் ஏறும்போது கேட்டேன். ‘அடி மிஞ்சும்’ என்றார். என்ன மனசு பாருங்க. நான் நக்சலைட் என்றால் அடிதானே மிஞ்சும். அந்த அன்பு சில தலைவர்களுக்கே உரியது. அப்படிப்பட்ட ஒரு தலைவர் ம.பொ.சி.

சோவியத் ரஷ்யா உடைந்து போகிறது. இந்தியா அதற்குப் பிறகு அடைந்துள்ள மாற்றங்களை ஒரு மார்க்சியராக இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?

முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டத்தில் தொழிலாளர்கள், தொழிலாளர் அமைப்புகளுடன் முதலாளிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச சுமுகம் கூட நவமுதலாளித்துவ காலகட்டமான இப்போதில் இல்லை. கார்ப்பரேட் யுகத்தில் தொழிற்சங்கத்துக்கு உரிமையே கிடையாது. காவல் துறை கூட உள்ளே புகமுடியாத சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்னும் சாம்ராஜ்யங்களின் தொகுப்பாக இந்தியா மாறிவருகிறது. கோவையிலேயே ஆன்மிகம், தொழில் என்ற பெயரில் அப்படிப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்குகின்றன. அரசின் அத்தனை சலுகைகளையும் பெற்றுக் கொண்டு திறக்கப்பட்ட நோக்கியா இப்போது எங்கே? நமது பிள்ளைகள் தானே பாதிக்கப்பட்டார்கள்?

கமல்ஹாசனுக்கு கிட்டத்தட்ட ஆசிரிய நிலையில் உள்ளவர்களில் ஒருவர் நீங்கள்…அவரோடு உங்களுக்கு நட்பு ஏற்பட்டது எப்படி?

16 எம்எம் பிலிமில் நான் பத்து நிமிடத்தில் குறும்படம் எடுக்க வேண்டுமென்ற திட்டம் எனக்கு அப்போது இருந்தது. இளமை ஊஞ்சலாடுகிறது படம் என்று நினைக்கிறேன். அதில் ரஜினி ஒரு 16 எம்எம் காமிராவை வைத்திருப்பார். மீரா தான் சொன்னார். இந்த காமிரா கமலுடையதாகத்தான் இருக்கும், அவரிடம் அந்த ஒளிப்பதிவுக் கருவியை இரவலாகக் கேட்டுப் பார்க்கலாம் என்றார். எனது கவிதைத் தொகுப்பை கமல்ஹாசன் பணவிடை அனுப்பி வாங்கிய தகவல் அது. நான் அவரிடம் முகவரி வாங்கி ஒரு கடிதம் எழுதினேன். பெங்களூருவிலிருந்து இரண்டு மாதம் கழித்து ஒரு கடிதம் வந்தது. தாமதத்துக்கு சங்கடமும் தெரிவித்து தனது கடிதத்தை தொடங்கியிருந்தார். எனக்கு 16 எம்.எம் பைத்தியம் பிடித்திருப்பதாக எழுதியிருந்தார். 16 எம்.எம்-ல் நேரடியாக ஒலியைப் பதியவைக்க முடியாதென்றும் சிங்கப்பூரில் தான் படமெடுத்த பிறகு ஒலியைச் சேர்ப்பதற்கு வசதி உண்டென்றும் எல்லா தகவல்களோடும் விரிவாக எழுதியிருந்தார். ஒரு நோட்டுக் காகிதத்தைக் கிழித்து தான் எழுதியிருந்தார். கடைசியில் 35 எம்எம் பைத்தியம் பிடிக்கட்டும் என்று சொல்லி முடித்திருந்தார். 

கமல்ஹாசனின் ஹேராம் திரைக்கதையை நீங்கள் பதிப்பித்திருக்கிறீர்கள். அவருடன் திரைக்கதை விவாதத்தில் ஈடுபடுவீர்களா?

கமல்ஹாசன் திரைக்கதையை யாருடனும் விவாதிக்க மாட்டார். அவர் மட்டுமே உட்கார்ந்து எழுதுவார். மருதநாயகத்துக்கு மட்டும் நானும் சுஜாதாவும் கமலும் சேர்ந்து எழுதினோம். நான் ஒரு காட்சியை எழுதி பெங்களூருவில் இருந்த சுஜாதாவுக்கு அனுப்புவோம். அவர் அதைத் திருத்தி கமலுக்கு அனுப்புவார். அதற்குப்பிறகு அவர் திருத்தி எனக்கு வரும். 12 தடவை முழுமையாக மருதநாயகத்தை திருப்பித் திருப்பி முழுமையாக எழுதியுள்ளோம். ஒரு சினிமாவுக்கு படப்பிடிப்புக்குப் போகும்போது, சில நாட்களுக்கு முன்னர் முழுக்கதையையும் ஆக்சனுடன் என் போன்ற நண்பர்களிடம் சொல்வார். திருத்தமெல்லாம் நம்மிடம் கேட்க மாட்டார். ரொம்பவும் குறைவாகத்தான் திருத்தங்களைச் சொன்னால் ஏற்றுக்கொள்வார்.

கமல், மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பாரா?
அப்படிச் சொல்ல முடியாது. அவர் ஆழ்ந்து கவனிப்பார். சாமானியர்களிடமும் அவர்களது பின்னணி பற்றி ஆழமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார். எனது நண்பர்களை அழைத்துக் கொண்டுபோயிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன். எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக்கொள்பவர்களை அவர் அதிகம் பார்த்து ஏமாந்துவிட்டதால் அதுபோன்ற ஆட்களை தொடக்கத்திலேயே தவிர்த்துவிடுவார். நான் அவருடன் நாற்பது ஆண்டுகள் பழகியிருக்கிறேன். எழுத்தாளர்கள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர் அவர். ஜெயகாந்தன், நீல. பத்மநாபன், தொ. பரமசிவன் மீதெல்லாம் மிகுந்த மரியாதை உள்ளவர். கி. ராஜநாராயணனின் வீட்டுக்கே போய் பார்த்தார்.
இயக்குனர் ஞான ராஜசேகரன், பாரதி கதையைச் சொல்ல கமலிடம் வந்தார். அவர்கள் இருவரும் பேசட்டும் என்று நான் வெளியே போய்விட்டேன். சில மணிநேரங்கள் கழித்து வெளியே வந்த அவர், கதையை நன்றாகக் கேட்டார் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். உள்ளே போன என்னிடம் கமல், என்னங்க இவரு பாரதியார் கதையைச் சொல்றார்னு கேட்டார். நான் பாரதியார் வாழ்க்கைக் கதையைத் தானே அவர் படமாக எடுக்கப் போகிறார்னு அதிசயமாகக் கேட்டேன். கமல் தன்னிடமிருந்த பாரதியார் திரைக்கதையைச் சொல்லத் தொடங்கினார். அதைக் கேட்டால் நமக்குப் பைத்தியமே பிடிச்சுடும். அந்தப் படத்தில பாரதியாரையே காணோம்ங்க. படத்தின் தொடக்கத்திலேயே கடல் வெள்ளம் சென்னை முழுக்க வந்துடுது. மிகவும் கதை அது.   

நீங்கள் மக்கள் நீதி மய்யத்தில் பொறுப்பில் இருக்கிறீர்களா?

நான் இன்னும் உறுப்பினராகவில்லை. அவருடன் இருப்பதால் நான் கட்சிக்குள் இருப்பதாக அர்த்தம். அதனால் உறுப்பினராகவோ, பொறுப்புகளை வகிப்பதோ அவசியமில்லை. 

கமல் வெகுஜன அரசியலுக்குத் தகுதியானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கிராமங்களிலிருந்து தான் தனது பணியைத் தொடங்கியிருக்கிறார் அவர். ஆறு மண்டலங்களாகத் தமிழகத்தைப் பிரித்து வேலை செய்கிறார். செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார். கிராமங்களிலிருந்து தொடங்கும் எல்லாமே வெற்றிபெறும் என்றே நினைக்கிறேன். அவருக்கு அரசியல் முழுக்கத் தெரியும் என்பதற்கு விருமாண்டி படமே உதாரணம். மரண தண்டனையை எதிர்த்து எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டோம். அதற்கு சில ஆண்டுகள் கழித்து விருமாண்டி படத்தை எடுத்தார். அதில் என்னையும் நடிக்க வைத்தார். தூக்கு தண்டனை தரக்கூடாது என்பதை தன் ஊடகம் வழியாக வலுவாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசைதான் விருமாண்டி என்று அவர் என்னிடம் பேசியிருக்கிறார்.

ஹேராம் படப்பிடிப்பில் நீங்கள் இருந்துள்ளீர்கள். கமல்ஹாசனின் பூரணமான படைப்பு என்றும் அதைச் சொல்லலாம். அதைப் பற்றி சொல்லுங்கள்...

காந்தியின் வாழ்க்கை பற்றியும் காந்தியின் எழுத்துகளையும் அக்குவேறாகப் படித்தவர் கமல். ஹேராம் திரைக்கதையை ஆங்கிலத்தில் தான் எழுதியிருந்தார். தமிழ் வசனம் உட்பட ஆங்கிலத்தில் தான் எழுதுவார். திரைக்கதையை படப்பிடிப்புடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நகல் செய்து புத்தகமாகவே கொடுத்துவிடுவார்.
ஹேராம் கதையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கலாசாரப் பின்னணி கொண்டவர்களையே நடிக்க வைத்தார். ஷாரூக் கான், பட்டாணியர். அப்பகுதியில் சோடா பாக்டரி வைத்திருந்தவர்கள் பட்டாணியர்கள். ராணி முகர்ஜி உண்மையிலேயே வங்காளி. ஹேமமாலினி, கிரீஷ் கர்னாட், அதுல் குல்கர்னி, ஒய். ஜி. மகேந்திரன் வரை என பார்த்துப் பார்த்து நடிக்க வைத்தார். காந்திக்கும் வங்காள முதலமைச்சர் சுஹ்ரவர்த்திக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் ஒரு புகைப்பட ஆவணத்தை வைத்து அந்தக் காட்சியையே ஹேராம் படத்தில் சிருஷ்டிருத்திருப்பார். அதே பேக்லைட்டைப் பயன்படுத்தியிருப்பார். வெளிவந்த போது மக்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. மகாராஷ்டிர மகராஜாவுடன் ராமும் அபயங்கரும் காரில் போகும் காட்சியும் வசனமும் ஒரு உதாரணம். ரயில் கேட்டைத் உங்களுக்குத் திறக்கட்டுமா என்று பணியாளர் கேட்கிறார். ‘பட்டேல் சாம்ராஜ்யத்தில் எந்த மகராஜாக்களுக்கும் கதவு திறக்காது’ என்று விரக்தியுடன் பதில் சொல்கிறார் மகராஜா. ஹேராம் படத்துக்கு 400 பிரிண்டையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஓகே செய்தார். 

தத்துவம், மெய்ஞானம், கவிதை என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை நீங்கள் மொழிபெயர்த்துள்ளீர்கள். ஓஷோ, மிர்தாதின் புத்தகம், கரமசோவ் சகோதரர்கள் உங்கள் சாதனை என்றே சொல்லலாம்…அதிகம் அங்கீகாரம் கிடைக்காத அதேவேளையில் அதிக உழைப்பைக் கோரும் மொழிபெயர்ப்புப் பணிக்கு எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?

புத்தகங்களால் பணம் கிடைக்கிறதென்றெல்லாம் சொல்லமாட்டேன். எத்தனையோ பதிப்புகள் வந்தாலும் பணம் கொடுக்க மாட்டார்கள். செலவுக்கு வெச்சுக்கோங்கன்னு சொல்லி ஐநூறு, ஆயிரம் கொடுப்பார்கள். எட்டாவது பதிப்பென்று சொல்லியே திரும்பத் திரும்ப ஆயிரக்கணக்கில் அச்சிட்டு விற்கும் வழக்கமெல்லாம் உண்டு இங்கே. அச்சகத்து நண்பர்கள் சொல்லி இந்த விவரங்களெல்லாம் தெரிகிறது. டிடிபி பண்ணிக்கொடுத்து, அட்டைப்படத்தை வடிவமைக்கும் வேலையையும் நம்மிடமே வாங்கி, காகிதம் வாங்கும் பணத்தையும் வாங்கி ஏமாற்றிய அனுபவமெல்லாம் எனக்கு உண்டு.

 நான் மொழிபெயர்த்த ‘மிர்தாத்தின் புத்தகம்’ ஒன்றரை லட்சம் போயிருக்கிறது. அந்தப் புத்தகத்துக்கு ஒரு ரசிகர் படையே இருக்கிறது. நான் தான் மிர்தாத் என்று நினைத்து என்னைப் பார்க்க வருபவர்களும் இருக்கிறார்கள். சமானந்த சுவாமி என்ற ஒரு மகான் என்னைக் கூப்பிட்டு தனது சீடர்களுடன் என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார். நான் அவரிடம் அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர்தான் என்று கூறி அவரிடம் கெஞ்சி அவரைத் தவிர்த்தேன். அந்தப் புத்தகத்தை எழுதிய மிக்கேல் நேமி, கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர். கலீல் ஜிப்ரானை சிறுவயதிலிருந்து காப்பாற்றி வைத்த நண்பர் மிக்கேல் நேமி. தனது நண்பனின் சாதனைப் படைப்பான தீர்க்கதரிசி-ஐ மிஞ்ச வேண்டுமென்று அவர் எழுதப்பட்டது தான் ‘மிர்தாத்தின் புத்தகம்’. அந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கச் சொல்லி ரமணாசிரமத்திலிருந்து எனக்கு அனுப்பி வைத்தார்கள். இதை மொழிபெயர்த்து விட்டுச் செத்துப் போ என்ற செய்தியுடன் எனக்கு அனுப்பப்பட்ட புத்தகம் அது.

 ஒரு அராபிய நாட்டுக்காரர். அவரால் அத்தனை தூரத்திலிருந்து நம்மைப் பாதிக்க முடிகிறது. 

ஒரு எழுத்தாளன் மாபெரும் படைப்பையெல்லாம் எழுத வேண்டியதில்லை. கரமசோவ் சகோதரர்கள் மாதிரியான ஒரு மாபெரும் நாவலை மொழிபெயர்த்தால் போதும் என்று சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நீங்கள் அதை மொழிபெயர்த்திருக்கிறீர்கள்? அந்த மொழிபெயர்ப்பு வேலை கொடுத்த அனுபவம் என்ன?
நான் இக்காலகட்டத்தில் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் பாராட்டிய மொழிபெயர்ப்பு அது. அவருடைய கருத்தியலில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் அவர் ஆள் அல்ல என்று நேரடியாகச் சொல்லியிருக்கிறேன். பரவாயில்லை என்று அவரும் சொல்லிவிட்டார். நான் மூன்று ஆண்டுகள் இந்த மொழிபெயர்ப்புக்காகச் செலவிட்டேன். வெளியீட்டு விழா அன்றே 55 ஆயிரம் ரூபாய் காசோலையை எனக்கு ராயல்டியாக கொடுத்தனர். தாஸ்தயவெஸ்கி தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை யாரும் படவில்லை. மரணத்தின் முனையிலிருந்து மீண்டு வந்தவர் அவர். அவர் படைப்பில் நாம் உணரும் ஆழத்துக்கு அதுவே காரணம். அவரைப் படித்து மொழிபெயர்த்த பிறகு வாழ்க்கையில் எல்லா சங்கடங்களும் சாதாரணமாகி விடுகிறது. அவமானப்படுவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது என்று அவனது கதாபாத்திரம் தான் சொல்ல முடியும். எவ்வளவு அவமானங்களும் துயரங்களும் வந்தாலும் கவலையே படவேண்டாம் என்பதுதான் அவன் கொடுத்த ஞானம்.   

Comments