எனது இடது கையில்
சூடான தேநீர்க்
கோப்பையுடன் அமர்ந்திருக்கிறேன். அதைஉடனடியாகக்
குடிக்க முடியாது.
அது சூடாக
இருப்பதால் நான் காத்திருக்க வேண்டும். எனக்கு
முன்னால் கத்தி,
ஸ்பூனுடன் பனானா
ப்ரெட் சிலைஸ்களும் வைக்கப்பட்டுள்ளன.
நண்பர்கள்
வருகைக்காகக் காத்திருப்பதால் அதுவும் வெட்டப்படாமல் இருந்தது.
எனது வலது
பக்கத்தில் சீனக் கைவினைஞர்களால் செய்யப்பட்ட அழகிய
கைப்பிடியுள்ள கூடைஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அது காலியாக
இருந்தது. அந்தக்
கூடையின் பூர்விகமும்,
வெறுமையாக இருப்பதன்
பெறுமானம் வலியுறுத்தப்படும்
தாவோயிச தத்துவமும்
சேர்த்து என்னை
தேநீரிடமிருந்தும் ரொட்டியிடமிருந்தும் சற்று எட்டியிருக்கச் செய்திருந்தன.
அந்த ஆதியான வெறுமை நிலைக்குள், பிரபஞ்சங்கள் சுற்றிச்
சுற்றி வந்து
போய்க்கொண்டிருந்தாலும் அது நிரப்பப்படுவது
தொடர்கிறது. எனது மடியில் மூக்குக் கண்ணாடி
இருந்தது. நான்
கண்களை மூடி
அமர்ந்திருப்பதால் அதனால் இப்போதைக்குப்
பயன் இல்லை.
இங்கேஇருக்கும் பொருட்கள் மீது எனக்கு கவனம்
இல்லை; இங்கு
இல்லாதவை மீதுதான்
இத்தருணத்தில் என் பிரதான கவனம் இருக்கிறது.
இதுவும் ஒரு
முரண்பாடுதான்.
இதைக் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கும் எனது நண்பர்
வெடுக்கெனத் தாளைக் கிழிக்கிறார். இன்னும் வடிவமெடுக்காமல்
வரவிருக்கும் வார்த்தையை எழுதப்போகும் தாளைஅப்போதுதான் அவர்
அடைய முடியும்.
ஏற்கெனவே கொடுக்கப்பட்டதை
அனுபவிப்பதைவிட, வரப்போவதுதான் உண்மை என்பது போல
எங்களது தயாரிப்பு
உள்ளது.
நிறைந்த கோப்பையிலிருந்து காலியான கூடையின் சாத்தியத்தை நோக்கிப்
போவதுதான் ஆன்மிகத்
தேடலின் முழுமையான
உள்ளடக்கமும்கூட. எது கற்கப்படவேண்டுமென்பதைத்
தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ளப்பட்டது மறக்கப்பட
வேண்டும்.
அதீத உற்சாகத்துடன் ஒன்றை
அடைவது; அதன்பின்னர்
இன்னும் முழுமையாக
அடையாததைப் பைத்தியக்காரத்தனமாகத் தழுவுவது;
அதைத் தொடரும்
தன்மறதி, கடுமையானமுயற்சியோடு
அடைந்ததை எளிதாக
விட்டுச் செல்வதற்கும்
உதவுகிறது. மனம் அதே உறுதியுடனும் திடத்துடனும்
அறியப்படாததன் அடுத்த வருகைக்காகவும் காத்திருப்பதுதான் அதைவிட அற்புதமானது. பல முறை
நிரம்பியும் காலியாகியும் திரும்பவும் காலியாகவும்
காத்திருக்கும் இந்தக் காலிக் கைப்பிடிக்கூடை போல
அப்பட்டமாக இல்லாவிட்டாலும், நீங்களும்
நானும் வெறும்
வெளிப்பாடுகள்தான்.
எப்போதும் புத்துணர்வோடு இருப்பதற்கும்
எப்போதைக்குமான அர்த்தமுள்ள காலித்தன்மையுடன்
இருப்பதற்குமான பாடமாக இந்தக் கூடை உள்ளது.
அந்த வெறுந்தன்மையே பரிபூர்ணத்துக்கும் பிறப்பை அளிக்கிறது.
நீங்கள் காலித்தன்மையிலிருந்து
பிறக்கலாம், நீங்கள் பூர்ணத்துக்குள் நிறையலாம் மற்றும்
ஒவ்வொருவரும் தேடும் நிறைவை உணரும்
வெறுமைத்தன்மையை அடையலாம்.
(தமிழில் ஷங்கர்)
(தமிழில் ஷங்கர்)
Comments