Skip to main content

பூனைச் சதுக்கம் கவிதைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்


உதிர்ந்த கொன்றைப் பூக்களுக்கு அடியில்
தெரு நிசப்தத்துடன் இருப்பதைப் பார்த்தபடி
காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது
தகரக் குப்பைத் தொட்டிக்கு அருகே
முளைத்தது போல
வெறித்துக் கொண்டிருந்தது
சாம்பல் நிறப் பூனையொன்றின்
துண்டிக்கப்பட்ட தலை.
எல்லாம் திடுக்கிட்டு அதிர
திரும்பப் பார்க்காமல் நடந்தேன்
வலதுகை தூக்கி
இருக்கிறதாவென்று
தொட்டுப் பார்த்தேன்
வெட்டப்பட்ட என் கழுத்து
தெரு மண்ணில் நரநரக்கிறது
அகப்பட்ட பூனையின் சீற்றச் சீறல்கள்
என்னைத் துரத்தத் தொடங்கியது
உடல் துவங்கி மீசைரோமம் வரை
ரூபம் பெருக்கிக் காட்டும்
ஆகிருதியும்
ஆவேச மியாவ்களும்
என்னைச் சிலிர்ப்பித்தது
சாலையின் குறுக்கே மறித்தாரோ
காம்பவுண்ட் சுவரில் பிடித்தாரோ
கணிப்பொறி திரையிலிருந்து உந்துதல் அடைந்தாரோ
கறிவெட்டும் பலகையில் அரிந்தது போல்
நேர்த்தியாய்
வெட்டியவரின் சாகசமும் சேர்த்து
என்னை உலுக்கியது
வெட்டப்பட்ட பூனையின் தனிமை
அவனது தனிமை
பூனையின் இருட்டு
அவனின் இருட்டு
பூனையின் வீரம்
அவனின் வீரம்
அனைத்தும்
இந்தக் கிரகத்தில் நடந்த ஆதிக்கொலையின்
காவியச் சாயலை
அந்தத் தெருவுக்கு தந்துவிட்டது
தொலைவிலிருந்து திரும்பிப் பார்த்தேன்
ஒருமுறை தான் பார்த்தேன்
என்றாலும்
ஒன்பது வாழ்வுகளைக் கொண்ட
அந்த நிகழ்வின் தலை குற்றமாக இருப்பினும்
வால்
விந்தையின் வளைவை அரூபத்துக்குள் நீட்டியிருக்கிறது
நிகழ்ந்தது இங்கே சின்னஞ்சிறு மூலையில்
சின்னஞ்சிறு அளவில் என்றாலும்
அங்கே
தொடர்ந்து நடுங்கியபடியே இருக்கிறது
சாட்சியமேயற்ற இருளில்
ஏதோ ஒரு கணத்தில்
அது நிகழ்ந்த
இந்தச் சனிக்கிழமை தெருவை
சாம்பல் பூனைச் சதுக்கம் என்று
இனி அழைப்பேன்
நான் உருவாக்கப் போகும்
பூனைத் தலைச் சிலைக்குக் கீழே
பொன்மொழிகளைப் பொறிப்பேன்
தலை குற்றம்
வால் விந்தை
உடல் வீரம்.

000

எப்போதும்

என்னைத் தொடரும் காகங்களில்

இரண்டு

அன்று வீட்டுக்கு வந்திருந்தன

என் மொட்டைத் தலையில்

பூசியிருந்த நல்லெண்ணெய் மணம்

அழைத்திருக்க வேண்டும்

ஒரு காகம் பாந்தமாக அடிவைத்து நெருங்கி

மாடிச் சுவரில் பதிந்திருந்த

என் இடதுகை விரலைக்

கவ்வித் தூக்கியது

வெந்துட்டா என்று கேட்டேன்

டிஷ் ஆண்டெனா குடையில்

அமர்ந்திருந்த இன்னொரு காகம்

பறந்து வந்து 

என் பின்கழுத்தில்

கொத்தியதா

கால் வழுக்கியதா என்று

சொல்லத் தெரியவில்லை

மீண்டும் சென்று அமர்ந்தது

இன்னும் வேகலையா என்று கேட்டுவிட்டு 

சிறிது கலவரத்துடன் படியிறங்கினேன்

காகங்களை ஈர்த்தது

வெளியே உள்ள வடையிலிருக்கும் எண்ணெயா?

பழங்கதையின் உள்ளே
நித்தியமான வடையிலிருக்கும்

எண்ணெய்யா?



000

கலவரத்தின்

திரைவழியாகவே பார்க்கும்

கண்களும் வீடும்

அந்தச் சிறுவனுடையது.

அவன் தனது 41 வயதில்

மண்ணுக்குள் இட்ட ஒரு விதை

சொல்ல முடியாத இருட்டுக்குள்

உறை கிழித்து

முளையாய் சிலிர்த்து

நிலம் கீறி எழுவதைப்

பார்த்தான்

இங்கே நடைபெறும்

மாபெரும் சண்டை இதுதானென்று உணர்ந்து

உடல் சிறுத்து நடுநடுங்கினான.

சிந்திய ரத்தத்தின் சுவடோ

வீச்சமோ இல்லவே இல்லை

தாபத்தின் கரிமம் கனிந்து

பூத்தது ஒரு வைரம்

தன் சிறுவயதில்

கலைந்த உறக்கத்தின் போது

பார்க்க நேர்ந்த

பெற்றோரின் புணர்ச்சியைப் போல

கலக்கமாக  சிவப்பாக மருள்தோய்ந்திருந்தது

அந்தச் சம்பவமும்

அதற்கு முன்னும்


எல்லாமும்.

Comments