Skip to main content

பறக்கும் ரயில் தடங்களும், அதி யதார்த்தத்தின் வேலைத்தொகுதியாகி வரும் என் நகரமும்ஜாக்கிரதை: கண்ணாடியில் தெரியும் பொருட்கள், தோன்றுவதை விட அருகில் இருக்கலாம்.(ழான் போத்ரியாரின் 'அமெரிக்கா' எனும் நூலிலிருந்து தூண்டுதலாகவும் எதிர்வினையாகவும் எழுதப்பட்ட கட்டுரை இது. பின்நவீனத்துவ தத்துவ ஆசிரியரான போத்ரியார் தனது பிரெஞ்ச் பின்னணியிலிருந்து அமெரிக்கா என்னும் நில-மனவெளியில் பயணித்த அனுபவத்தை இந்நூலில் எழுதிச்செல்கிறார். 'அமெரிக்கா' சம்பிரதாயமான பயணநூல் அல்ல.
கனவு முடிவுற்ற நிலமாக. ஒரு பேரரசு மற்றும் அதிகார நிலைமையின் உச்சநிலையில் உணரப்படும் வெறுமைநிலையில் அமெரிக்காவைப் பார்க்கிறார் போத்ரியார். அமெரிக்காவின் நிலவெளி, கட்டடங்கள், பாலைவனச் சாலைகள் வழியாக அமெரிக்க மனவரைபடத்தைத் தொடும் நூல் இது. சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் பிரக்ஞைநிலையிலேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உண்மையில் உலகம் என்ற ஒன்றே இல்லாமல் இன்னொரு உலகத்துக்கு வெறுமனே காண்பித்து நிற்கும் வெறும் விளம்பரப் பிம்பம்தானோ அமெரிக்கா எனவும் சந்தேகம் எழுப்புகிறார். அமெரிக்கா என்னும் மன--நில வரைபடத்தை ஆராய்வதற்கு ஒளிஇயற்பியல் கருத்தாக்கத்தைப் பயன்படுத்துகிறார் - ஒளிஇயற்பியலோடு தொடர்புள்ள சொற்களையும்
அமெரிக்காவின் எந்தப் பிரச்னையும் இன்று உலகின் பிரச்னை ஆகிவிடுகிறது. ஆகவே, சென்னையிலுள்ள டைட்டல் பார்க் சாலை எப்படி அமெரிக்கக் கனவின் அங்கமாய் மாறியுள்ளது என்பதைச் சொல்ல முயற்சிக்கும் கட்டுரை இது.)

இரவு ஏழரை மணிக்கு, இந்நகரின் பறக்கும் ரயில்தடம் வழியாக இந்திரா நகர் நிலையத்தில் இறங்குகிறேன். சென்னை கடற்கரை நிலையத்தில் தொடங்கி கிழக்குக் கடற்கரையின் முகம்பார்த்துச் செல்லும் தடம் இது. நகருக்குச் சற்று மேலே அலுவலகங்களின், வீடுகளின், மனிதர்களின் கூரைகள், தலைகளைப் பார்க்க முடியும். உயரத்தில் செல்வதால் இந்த ரயில் தடத்துக்கும், நிலையங்களுக்கும் பிரத்யேகத் தனிமையும், ஏகாந்தமும் மிச்சமாய் உள்ளது. பெரிய வீடுகளின் கூரைகளும், சிறிய வீடுகளின் கூரைகளும் தோல்வியுற்ற கனவென ஒன்றாகவே நிறம் வெளிறிப்போயுள்ளன. ஈ.வி.கே. சம்பத் தெரு, மதியழகன் சாலை, அஞ்சுகம் தெரு, கருணாநிதி சாலை என அரசியல் மரபு, குடும்ப நினைவு, இடவரைபடமாகச் சந்துகளாகவும், தெருக்களாகவும் கீழே நீண்டிருக்கின்றன. வாழ்விடத்தொகுதிகளின் மேல் கஸ்தூரிபா நகர், இந்திரா நகர் என்ற நிறுத்தங்களினூடாகச் செல்கிறது பறக்கும் ரயில் தடங்கள்.

இந்தப் பறக்கும் ரயில் தடங்கள் இன்னும் அதிகப் பயணிகளின் புழக்கத்தைப் பெறவில்லை. இந்நகரில் ஒரு புதிய புராதனத்தைக் கண்டு வாசம் செய்யத் தொடங்கிவிட்டன புறாக்கள். இந்த அந்தர ரயில் நிலையங்களும் அதைத் தாங்கும் பெரிய தூண்கள் உள்ள பிரம்மாண்ட கீழ்த்தளங்களும் கடவுளின் விடுதிபோல் நிஷ்டையில் உள்ளன. பகலிலும் இரவிலும் இந்த ரயில் நிலையங்களின் இருட்டை நிரப்ப இயலாததுதான் நம் சூரியனும், விளக்குகளும். இதைத் திட்டமிட்ட பொறியாளரின் கண்களில் நூற்றாண்டைக் கடந்த முன்னோக்கிய விசுவாசம் தெரிகின்றது. இப்போது இந்தப் பறக்கும் ரயில் நிலையங்கள் எல்லாப் பொழுதுகளையும் அகாலமாக்கி ஒரு சிறு காலடிச்சத்தத்தைக் கூட அசரீரியாக்கிவிடுகிறது. அடுத்த நூற்றாண்டில் வரப்போகும் பயணிக்காக வெளிச்சமான பயணச்சீட்டு கவுண்டரில் கண்ணாடித்திரைக்கு வெளியிலிருக்கும் இருட்டுக்குப் பயணச்சீட்டை வழங்கப்போகிறவர் யாராக இருக்கக்கூடும்?
கடலை நோக்கிச் செல்லும் ரயில்பாதை,ஒரு நாள், கடலுக்குள்ளும் செல்லும். அப்போதும் அந்த நாள் ஏற்படுத்திய அலுப்பில், மோதி ஓலமிடும் கடல் அலைகள் மேல் கண்கள் வெறிக்க -  கடலையே காணாமல் - ஒருவன் / ஒருத்தி இறங்கிச் செல்வார்.

இப்போது இந்தப் பறக்கும் ரயில் தடத்தை விசுவாசமற்ற தடமென்று சொல்லலாம். இந்த ரயில் நிலையங்களை, ரயில் செல்லப்போகும் கடல்வழித்தடங்களைத் தாங்கும் பெரிய தூண்களும் விசுவாசமற்றவையே.
நான் ரயிலில் கடக்கும் இந்நகரத்தின் வீடுகளிலுள்ள ஜன்னல் வெளிச்சத்தைப் பக்கவாட்டு வழிகளில் பார்த்த சொல்லொண்ணா இருட்டை, என்னுடன் வீட்டுக்கு எடுத்துச்செல்கிறேன். நகரத்தில் வாழும் உதிரிகளைப்போல பாலச்சுவர் வெடிப்புகளில் வளர்த்திருக்கும் தாவரங்களை, கல்லறைத்தோட்டங்களில் தும்பறுந்து பறக்கும் பட்டங்களை, கழிவுகள் நுரைக்கும் கருப்பு நதியோரங்களில் சரிந்திருக்கும் குப்பங்களைக் கடந்து இந்த ரயில் பயணிக்கிறது. அன்றாடப் பயணத்தில் பறக்கும் காகத்தின் தலைமுகடையும் ஒருவனுக்குப் பார்க்க லபிக்கிறது. நான் இன்றிரவு என் குழந்தைக்குச் சொல்லப்போகும் கதையில் காகத்தின் தலைஉச்சியில் நான் பறந்ததன் செய்தியும், இருளும் சேர்ந்திருக்கும். கருப்பு நதியின் சாம்பல், கரும்பச்சை, கருநீலம் எனக் கருப்பின் எல்லா நிறபேதங்களும் எனது கதையில் இருக்கும்.

பறக்கும் ரயில் தடத்தை ஒட்டியுள்ள டைடல் பார்க் சாலை என்னும் இன்றைய நவீனத்தை உருவமைக்க முயலும் பாதையைப் பற்றிப் பேச நான் ஆசைப்படுகிறேன். நடுவில் ஒரு தொன்மமாய்ப் பறக்கும் ரயில் தடம் குறுக்கிட்டுவிட்டது. டைடல் பார்க் சாலையும் டைடல் பார்க் கட்டடமும் இரவற்ற ஓர் இரவில் அனைத்தும் துடைக்கப்பட்டுவிட்ட இடமாக, அதீத வெளிச்சத்தில் நிகழும் வேலைத்தொகுதியாகக் காட்சியளிக்கிறது. பெற்றோரின் அந்தரங்க தருணத்தை முதல்முறை பார்க்கும் ஒரு குழந்தையின் மனதில் எழும் அலறலை இவ்விடம் தோற்றுவிக்கிறது... அமெரிக்காவிலிருந்து வரும் கட்டளைகளைப் புலனாகாத தொடர் பிணைப்புகளின் வழியாய்ப் பெற்றுப் பணிபுரியும் நீள்சங்கிலித் தொடரின் ஒரு கேந்திரமாய் இருக்கிறாள் என் மனைவி. திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பின் படுக்கையறையில் என் மனைவி முகம் தெரியாத மருத்துவர் ஒருவரின் நோயாளி அறிக்கையை ஒலிக்கோப்பிலிருந்து கணிப்பொறியில் ஒலிபெயர்த்துக்கொண்டிருந்த நள்ளிரவு வேலை. கணிப்பொறியின் நீலஒளி அவள் முகம் மீதும், எங்கள் கட்டிலின் மீதும் படர்ந்திருந்தபோது என் தலையில் பைத்திய அலறலின் முதல் தாக்குதலை அனுபவித்தேன். அவள் கணிப்பொறியில் நோயாளியின் நோய்கள், உளவியல் பின்னணி, உடல் இயல்பு, மரணத்தின் அருகாமை இவற்றையெல்லாம் ஒலிபெயர்க்க எல்லாமும் எங்கள் வீட்டுக்குள் கடும் வாதைகளாய் நடமாடுகின்றன. சில நேரங்களில் கணிப்பொறியின் சி.பி.யூ.விலிருந்து உடல் பொசுங்கும் வாடையை நான் உணர்ந்திருக்கிறேன்... கணிப்பொறி நாறத்தொடங்கிவிட்டது... படுக்கையறையும் நாறத்தொடங்கிவிட்டது எனச் சொல்வேன். நான் கணிப்பொறியுடன் முரண் கொள்வதைத் தன்னுடனான முரணாய்ப் புரிந்துகொள்கிறாள். நான் விரும்பாத எதுவும் அவளுக்குத் தெரிந்துவிடக் கூடாது. ஏனெனில் நான் விரும்பாததை வேட்டையாடித் தேடி காதல் கொண்டுவிடுபவள் அவள்.

என் மனம் நம்பிக்கையுற்றிருக்கும் சமயங்களில் தரமணி கடந்து டைடல் பார்க் சாலையில் என் இருசக்கர வாகனத்தில் சாத்தியத்திற்கும் அதிகமான வேகத்துடன் பயணம் செய்திருக்கிறேன். மிகத்தரமாக உருவாக்கப்பட்ட பழுதுகளற்ற சீரான ஒரு வழிப்பாதை அது. பக்கவாட்டில் நவீனச் சிற்பங்களும் நெடிதாய் நீளும் சுவரில் புடைப்பு நவீன பாணி ஓவியங்களும் சாலையின் குறுக்கே மினியேச்சர் சோலைகளும்... இலைவடிவ மின்விளக்குகளும் டைடல் பார்க் சாலையை ஒரு வெளிச்சத் தீவாக்கியுள்ளன புதிதாகப் போடப்பட்ட இந்தச் சாலையில் முதல் முறை என் மனைவியுடன் செல்லும்போது அவள் 'அமெரிக்கன் ரோட்! அமெரிக்கன் ரோட்!' எனக் கூவினாள். அவளும், அமெரிக்க லாட்டரிக்காகக் காத்திருக்கும் இந்தப் பூமிக்கோளத்தின் பிரஜைகளில் ஒருத்தி. இந்த டைடல் பார்க் சாலையே அமெரிக்காவுக்குப் பறப்பதற்கு முன்பாக ஓடுதளமாகவே மனவரைபடத்தில் நினைவுநிரலில் பிரதிபலிக்குமாறு எழுதப்பட்டுள்ளது.

டைடல் பார்க் சாலையில் நுழையும் எந்த வாகனமும் தன்னிச்சையாக வேகத்தை முடுக்கிவிடுகின்றன. நினைவின் தடத்தையே இல்லாமல் ஆக்கும் வேகம். இந்தச் சாலையில் பைக்கின் வேகத்தை முடுக்கும் காதலனை இறுக்கி உடனே தீர்ந்துபோகும்படியாய்க் காதலி அவனைக் கட்டிக்கொள்கிறாள். பைக்கின் வேகம் அவள் யோனியின் ஆனந்தப் பரவசச் சுற்றுகளில் முடிவின்மையின், அறியாப்புதிரில் பயணிக்கும்.  இளைப்பாறும் புள்ளி எது? கருந்துளையில் விழுந்து மறைபவர்கள் குறித்த நினைவுகள் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன.

உங்கள் தோழியின் பெண்ணுறுப்பை சியாலிஸ் மாத்திரை வழியாகத் தகர்த்தெறியுங்கள்... ஒன்றரை டாலர் மட்டுமே...

டைடல் பார்க் வாசலில் ஒரு மெலிந்த பெண் இறங்குகிறாள். அவள் கழுத்தில் நிறுவனப் பணி அடையாள அட்டையைச் சட்டென்று அணிந்துகொள்கிறாள். அவன் இனி மின்னணு நிரல் எழுதப்பட்ட சமுத்திரத் தொடரிணைப்பின் ஓர் உறுப்பு... அவள் திரவமாய் ஒயர்களில் பயணிப்பவள்... இவ்வழியில் அடையாளங்கள் அற்று நீந்தலாம்... அவள் ஒரு நிறமிலி... இனி ஒரு ஆசியனுடன், ஒரு அமெரிக்கனுடன் ஏதாவதொரு அடையாளத்துடன் தரப்படுத்தப்பட்ட ஆங்கிலத்தில் கடன் அட்டையின் கடனைத் திரும்பச் செலுத்தச் சொல்லி வேண்டுகோள் விடுக்கலாம்.

அல்லது

"நான் செனகலில் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவருகிறேன். என் தேசத்தில் நடந்த உள்நாட்டுக் கலவரத்தில் என் தந்தையும், மூத்த சகோதரனும் இறந்துவிட்டார்கள். எனது அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பியுள்ளேன். உனது வார்த்தைகள்தான் செனகலின் கடும்வெப்பத்தில் ஒரே ஒரு ஆறுதலைத் தந்துகொண்டிருக்கிறது.
அல்லது
'எனது பெயர் இக்பால். எனது தந்தையாரின் பணம் - ஒரு லட்சம் டாலர் மதிப்பு - அவரது அகால மரணம் காரணமாக முடக்கப்பட்டுவிட்டது. எனது தந்தையின் அந்த சேமிப்புக்கு நான் காப்பாளர் மட்டுமே. ஓர் அறக்கட்டளையின் மூலம் உங்கள் முகவரி கிடைத்தது. என் தந்தையின் ஆவியை ஒருவரில் வரவழைத்துக் கேட்டதில் நான் உங்களை நம்பத்தகுந்த பங்குதாரராகத் தேர்ந்தெடுத்துள்ளேன். தர்ம காரியத்திற்காக என் அப்பாவின் கணக்கில் உள்ள சேமிப்பை உங்களுக்கு மாற்றுவது எளிது என்று எனது ஆடிட்டர் ஆலோசனை கூறினார். உங்களது வங்கிச் சேமிப்புக் கணக்கு எண், விவரங்களை எனக்கு அனுப்பித்தாருங்கள். உங்களுக்கு அந்தப் பணம் வந்து சேரும். என் அப்பாவின் நல்லாசிகள் உங்களுக்குண்டு.
நன்றியுடன்
இக்பால் ஹசன்.

சென்னையில் புதிய யோனியாய்க் கனவுகளின் உச்சஇடமாய் டைடல் பார்க் என்னும் மென்பொருள் பூங்காவும், டைடல் பார்க் சாலையும் உருமாறியிருக்கின்றன. அதன் தொடக்கமாய்ப் பிரார்த்தனைக்கென மத்திய கைலாஷ் ஆலயம் அதிநவீனக் கழிப்பறை போலத் திகழ்கிறது. கவிஞன் பாரதியும் இங்குக் கனவுகள் உதிர்த்த கடவுள்களில் ஒருவராய் உருமாற்றப்பட்டுள்ளான். பாரம்பரிய உணவுக்கடையில் காரைக்குடி பாணி பணியாரத்தையும், இடதுகையில் டயட் கோக்கையும் ருசித்தபடி தங்கள் பணியிடத்துக்குள் அவர்கள் நுழையும்போது பெரிய கைலாசத்தில் பனிலிங்கம் கரையத்தொடங்குகிறது.  உடலுக்கும் இயற்கைக்கும் நடந்த உரையாடலின் சாட்சிகளென அம்மிக்குழவிகளும் திருணைகளும் நாட்டுப்புறவியல் அருக்காட்சியகத்தை அடையும்போது உடலும் மூளையும் மீண்டும் பெரும்முரண்களாய் பேதப்படும் வரலாறு திரும்ப எழுதப்படுகிறது. பசுமைப்புரட்சியில் தற்கொலை செய்த விவசாயிகளின் உயிர் உரத்திலிருந்து இயற்கை விவசாயம், தடுக்கப்பட்ட குளிர்சாதன அரங்கங்களில் அடுத்த திட்ட நிரலாய் எழுதப்படுகிறது. இதற்கிடையில் மருத்துவச்சுவடிகளை, நுண்படங்களாக மாற்றி அமெரிக்காவுக்குக் குருவிகள் எடுத்துச் சென்றுவிட்டன. மென்பொருள் பூங்காவின் மத்தியத் தொகுதியும், துணைக்கட்டடங்களும் ஒன்றை, ஒன்றின் பிம்பங்களாய் மாற்றித் தோற்றம் தருகின்றன. பாம்புகளின் பிணையல்  சிற்பத்தைச் சற்றுப் பார்த்தால் பாம்புகள் தங்கள் உருளை வடிவை, முப்பரிமாணத்தைத் தொலைத்த தட்டையான பாம்புகள் என்பதை அறிய இயலும் ஒருவேளை, கண்ணாடியால் எழுப்பப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட இருபரிமாணத் தட்டி உரைக்கும் செய்தி நகரமெங்கும் முளைத்திருக்கும் விளம்பரத்தட்டிகளின் செய்திகளின் சாராம்சம் மட்டுமே போலும்.


மெலிந்து வரும் யுவதிகள், கடன்அட்டைகள், காப்பீட்டுப் பிரதிநிதிகள், குறைந்த விலை சொகுசுந்து விளம்பரங்கள், மருத்துவமனை விளம்பரங்கள், கைத்தொலைபேசி விளம்பரங்கள் என எல்லாவற்றின் மீதும் ஒளி படர்ந்துள்ளது. ஒளிக்குக் கீழே இல்லாத பொருள்கள் அனைத்தும் இன்னும் பிறக்காததைப் போல் மௌனத்திலும் தோல்வியிலும் உறைந்துள்ளன.

'எங்கள் சோப்பை எங்கள் மருந்தை (உப ஆரோக்கிய உணவு எனக் குறிப்பிட வேண்டும். ஏனெனில் வேதிப்பொருள் கலக்காதது) எங்கள் பற்பசையை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலமே நீங்கள் அதன் முகவராகிவிட முடியும். நீங்கள் செய்ய வேண்டியது அதிகம் ஒன்றுமில்லை. எங்கள் தயாரிப்புகளை உபயோகிக்கும்போது உங்கள் உடலில் தெரியும் வெளிப்படையான மாற்றங்கள் பற்றி உங்கள் நண்பர்கள் கேட்கும்போது எங்கள் தயாரிப்புகளின் மேன்மையைப் பற்றி யதார்த்தமாய்ச் சொன்னால் போதும்... ஏனெனில் யாரும் இன்று மிகையானதை விரும்புவதில்லை... நீங்கள் எங்கள் தயாரிப்புகளுக்குச் செய்யும் அறிமுகம் மூலம் உங்கள் நண்பர்களை முகவர் ஆக்குங்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் நினைக்குமளவு விஞ்ஞானியாக, ஓய்வுக்குப் பிறகு ஒரு பண்ணை வீட்டில் அமைதியாக வாழ நீங்கள் ஒரு வெற்றியாளராய் மாறவேண்டும். கழிப்பறை, தரைகளைச் சுத்தம் செய்யும் எங்கள் லோஷன் எச்ஐவி கிருமியையே அழிக்கக் கூடியது. நீங்கள் தம்பதியராய் இருப்பது நலம்.'டைடல் பார்க்கைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் தன்னை அதியதார்த்த வேலைத்தொகுதியின் நீட்சிகளாய்த் தங்களை அவசர அவசரமாய் ஒப்பனை செய்வதன் மூலம் நகரம் முழுக்கப் புழுதிக்காற்று சுழன்று வீசத் தொடங்கியுள்ளது. மென்பொருள் பூங்கா என்னும் வேலைத்தொகுதி உற்பத்தி செய்யும் கழிவுகளை அப்புறப்படுத்தவும் மேலாண்மை செய்யவும் இக்கட்டடத் தொகுதியின் ஆசனவாய் அருகே நவீனச்சேரியாக ஒரு கீழ்நிலை வேலைத்தொகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த இடத்தில் புழுதி அதிகம். இந்த வழிகளின் வழியாகப் புதிய வேகத்துடன் உலவும் மென்பொருள் நிறுவன வாகனங்கள் கருப்புக் குழந்தைகளின் மீது வாடிக்கையாய் விபத்துகளை நடத்துகின்றன. வாகனத்தில் இரவுப்பணி விட்டு உறங்கும் உடல்தொகுதிகள் விடுதியெனச் சுருங்கிய வீடுகளை நோக்கிப் பயணிக்கின்றன.

கருப்புக் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. காலம் காலமாய்க் கருப்பாகி வரும் கூவத்தின் நித்யப் பார்வையாளர்கள் அவர்கள். கடல்சிப்பிகளைப் போலக் கழிக்கப்பட்ட மின்னணு உதிரிப்பாகங்களை அவர்கள் பொறுக்குகிறார்கள். அவர்களுக்கு ரக்பி பந்து புதிதாய் அறிமுகமாகியுள்ளது. அவர்களைக் கைவிட்ட கடவுளர்களைக் குறுந்தகட்டில் ஒட்டி வீட்டு வாசல்படிகளையும் ஆட்டோக்களின் முகப்பையும் அலங்கரித்துள்ளனர்.

டைடல் பார்க் சாலையில் செல்லும்போது ஏற்படும் மனவெழுச்சி நகரத்தின் புதிய மேம்பாலங்களைக் கடக்கும்போது - குறிப்பாக மேம்பாலத்தின் உச்சிமுகட்டைக் கடக்கும்போது - சுற்றியுள்ள கட்டடத் தொகுதிகளின் கண்ணாடிச் சுவர்கள் எல்லாம் என்னை பிரம்மாண்டமாகப் பிரதிபலிக்கிறது...

அந்தக் கணத்தில் நான் சாதனையாளன், ஒரு புகழாளனாய்த் தெரிகிறேன்... அதைத் தவிர எனது எந்த அம்சங்களும் அர்த்தமற்றது... நான் ஒரு visiting card..

தெரிவிப்பு, வெளிப்படுத்தல் என்பது, சொல்வதன் 'தேவை' என்னும் மையத்திலிருந்து விலகித் 'தோன்றும்' அதீதச் செயலில் 'சாராம்சம்' கொலையுண்டுவிட்டது. விளம்பரங்கள், பொதுத்தொடர்பு, சுயஅறிமுகங்கள், உண்மைக் காட்சிகள்...

நான் சுற்றுபுறச்சூழல் ஆர்வலன், நான் இடதுசாரி, நான் நாட்டுப்புறவியலாளன், நான் பெண்ணியவாதி, நான் இயற்கை விவசாய ஆர்வலன், நான் இயற்கை ஆற்றல் சேமிப்பு பிச்சாரகன், நான் மனிதஉரிமை ஆர்வலன், நான் கலை விமர்சகன், நான் குறும்பட இயக்குநன், நான் சிறுகதையாளன், நான் நவீன நாடகக்காரன், நான் தலித்களுக்காகப் போரிடுபவன், நான் இலக்கிய ஆர்வலன், நான் இலக்கியக் கொடையாளன், நான் தன்னார்வத் தொண்டன், நான் தொண்டு நிறுவனம் நடத்துபவன், நான் கவிஞன், நான் விளிம்புநிலை, நான் ரசிகன், நான் மானுடவியலாளன், நான் நடுநிலைமையாளன், நான் இயற்கை உணவில் ஈடுபாடுள்ளவன், நான் பயணி...

உபயம்: அமெரிக்கா, உபயம் அமெரிக்கா, நான் அமெரிக்கா உபயம். நான் உபயம் அமெரிக்கா.

நீங்கள்  ஓர் உணவகத்தின் பெயர்ப்பலகையைப் பார்த்து உங்கள் பசியும் நாவின் ருசி மொட்டுகளும் தூண்டப்படுகின்றன. நீங்கள் உணவகத்துக்குள் நுழைய முயல்கிறீர்கள். நீங்கள் ஒரு காதலை வெளிப்படுத்த விரும்புகிறீர்கள்... நீங்கள் பேச விரும்புகிறீர்கள். நீங்கள் அழ விரும்புகிறீர்கள். கண்ணாடிப் பெண் வரையப்பட்ட நீண்ட முடிவில்லாத் திரையிலேயே மோதுகிறீர்கள். இதுதான் நம் காலத்தின் சிறப்பு விளைவு.

ஐன்ஸ்டீன் சிறுவயது முதலே தனது இடுப்புக்குக் கீழ் வளர்ந்த வாலொன்றைப் பராமரித்தார். பெண்களுடன் அவர் பேணிய காதல் சரசங்களில் அந்த வால் பல அனுகூலங்களையும், சோகங்களையும் நிகழ்த்தியுள்ளது. ஆனால் ஐன்ஸ்டீனின் வாலை வரலாறு உதிர்த்துவிட்டது.
(மணல் புத்தகம், 2008)

Comments