Skip to main content

ஆலவாயை வரையும் ஜயபாஸ்கரன்ஷங்கர்ராமசுப்ரமணியன்


பழைய பொருட்களுக்கு  வேகமாக விடைகொடுக்கும் காலம் இது. அன்றாட வாழ்க்கையில் பழைய பொருட்கள், புழக்கத்திலிருந்து தொடர்ந்து காணாமல் போகும் நிலையில், அதே பொருட்கள் அருங்காட்சிகளாக மாறி மீண்டும் வருகை புரிகின்றன. அப்போது அவை உபரி மதிப்பாக மாறி, படிப்படியாக மனிதக் கைகளின் தீண்டல் இல்லாமல் போய் கண்ணாடி பேழைகளுக்குள் தூசிபடர்ந்து அபூர்வத்தின் அந்தஸ்தை அடைந்துவிடுகின்றன. இந்த அபூர்வ அந்தஸ்தை அடைவதற்குப் பொருட்கள் தொடர்ந்து பழமையின் அடையாளம் ஆகி, அவை நம் அன்றாட வாழ்விலிருந்தும்  விரைவாக காணாமல் போகவேண்டியுள்ளது.

இப்படித்தான்  பண்பாடுகள் மற்றும் மரபுகளையும், அபூர்வ அருங்காட்சியகப் பொருளாக நாம் மாற்றிவிட்டோம். என் தாய் மொழியிலேயே, ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கவிதையை வாசித்து அர்த்தம் காண்பதற்குக் கூட பயிற்சி தேவையாக உள்ளது. இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக பல்லாயிரம் மனிதர்கள் கூட்டாக சேர்ந்து புழங்கிய மொழி, வாழ்க்கை,கொண்டாட்டம், கதை, சமயம்,பொருள் ஆகியவை சார்ந்த அறிவு மற்றும் பண்பாட்டு  மரபுகளுக்கு அவசரமாக விடைகொடுத்து விட்டோம். இப்படித்தான் பண்பாடும், மரபும் தனது எண்ணற்ற கைகள், கோடிக்கனவுகள் மற்றும் கூட்டு ஞானத்துடன்- இச்சைகளையும், அபிலாசைகளையும், வன்முறைகளையும் சேர்த்து- செய்த கடவுளையும் நாம் இழந்தோம். ஆம் நமது கடவுளும் இன்று அருங்காட்சியகப் பொருள்தான்.

மரபையே பயிற்றுவிக்காத, கல்விப் பின்னணியிலிருந்து வந்து, நவீன பகுத்தறிவு சாத்தியங்களின் எல்லைகளையும், போதாமையையும் உணரத் தலைப்படும் நவீன எழுத்தாளனாக நான் இருக்கிறேன். மரபுக்கும் எனக்கும் நடுவே ஒரு பரிசீலனையுடன் கூடிய உரையாடல் அவசியமாக உள்ளது. அப்படி மரபைத் தழுவும் போது, அங்குள்ள சத்தங்களை என் மொழி உள்வாங்கும் போது, மரபின் இருட்டில் குழைந்த சிற்பங்களாக இருக்கும் வார்த்தைகளை என் கவிதை வசப்படுத்தும்போது(நள் என்றன்றே யாமம் என்று கேட்கும்போதே பட்டிருட்டு காட்சியாக விரிகிறது..) எனது பண்பாட்டின் கடவுளையும் உடன் இணைப்பாக தழுவிக்கொள்ள வேண்டியுள்ளது.

என்னை முற்றிலும் ஒப்படைப்பதற்கு ஒரு முன்னிலை அல்லது ஒரு சர்வ வல்லமை கொண்ட சக்திக்காக எப்போதும் காத்திருப்பவனாகவே நான் இருக்கிறேன். அதனால் இந்த தெய்வத்தையும் ஏற்பதில் எனக்கு குறையொன்றும் இல்லை.
பல உருக்களை வழிபடுபவதும், அனுசரிப்பதுமாக என் வாழ்க்கை இருந்தாலும், எனது கவிதை, தெய்வம் உட்பட அனைத்துப் பெருங்கதையாடலையும் தொடர்ந்து சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பதுதான். அந்த சந்தேகத்திலிருந்து தான் கவிதை தொடர்ந்து உயிர்ப்புடனும், அகந்தையுடனும், ஊக்கமுடனும் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.  

கவிதையால், கடவுளை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது, அதேவேளையில் விமரிசிக்காமலும் இருக்கமுடியாது என்ற இடத்துக்கு ந.ஜயபாஸ்கரன் கவிதைகள் வாயிலாகவே துணிவுடன் வந்துசேர்ந்தேன். ஏனெனில் புறத்தில் புலப்படும் உலகத்தை விட புலப்படாத உலகிலிருந்தே தனது ஆற்றலை மொழி வாயிலாக கவிதை அள்ள முயல்கிறது. கவிதை, கடவுளை அவரின் கனபரிமாணத்தில் பாவிக்காவிட்டாலும் பலவீனமான உருவமாக, உருவகமாக அவரைத் தொடர்ந்து பரிசீலிக்கின்றன. பல நேரங்களில்  பிண அறுவையாளனின் கத்தியைப் போல கடவுளைச் சிதைத்தும் பார்க்கத் துணிகிறது.

மரபையும், கடவுளையும் எப்படி அனுசரிப்பது என்ற புள்ளியில் தான் ந.ஜயபாஸ்கரனது கவிதைகள் என்னை ஈர்க்கத் தொடங்கியிருக்க வேண்டும். முழுமையான விவேகமும், பிரமாண்ட நினைவும், விமர்சனமும், எதிர்ப்புணர்வும் கொண்ட மரபு, அனுதினமும் தன் உயிரைத் தக்கவைக்க ஆசை’யுடன் போராடும் உடல்தான் இந்தக் கவிதைகள்.

ஆசையே மனிதனின் வரம். ஆசையே சகல வடிவங்களையும், பொருட்களையும் உருவாக்குகிறது. கலை மற்றும் அழகியலையும், குழந்தைகளையும் அதுதான் பெற்றெடுக்கிறது. ஆசைதான் பொருளைக் கடவுளாகவும், கடவுளைப் பொருளாகவும் அனுதினமும் மாற்றுகிறது. சின்ன ஆசைகளே உபயோகத்தைத் தாண்டியும் அழகிய வேலைப்பாட்டு அம்சங்களைக் கொண்ட நிரந்தரத்தின் மீதான ஏக்கம் கொண்ட புழங்குபொருள்களாகிறது. பொன்னனையாள் போன்ற பெரும் ஆசைகள், கடவுளின் பொற்சிலையாகிறது. சிலையையே வியந்து கிள்ளியதால் ஏற்படும் தழும்புமாகிறது.  
ஜயபாஸ்கரன் கடவுளின் முகத்தை நமக்கு காட்டக்கூடிய கண்ணாடி நவீன கண்ணாடி அல்ல. கோவில்களில் உலோகத்தில் வைத்திருக்கும் வேலைப்பாடுகள் உள்ள புராதனக் கண்ணாடி. பூஜைகளிலும் சேவைகளிலும் பயன்படுத்தக்கூடிய  பிசுக்கேறிய கண்ணாடி அது. எவ்வளவு பழைய கண்ணாடியாக இருப்பினும், பிம்பம் எவ்வளவு மங்கலாக இருப்பினும் அது தெய்வம் தன் முகத்தைப் பார்த்திருக்கும் கண்ணாடி அல்லவா. 

மாடக்குழிகளும் போய், மாடக்குழி விளக்குகளும் காணாமல் போய், அவற்றின் இருமருங்கிலும் இருந்த கிளிகளை கவிதைகளில் சேர்த்துக் கொள்பவராக இருக்கிறார். ஆசையின் எண்ணற்ற கடவுளர்கள் ஜயபாஸ்கரனின் கவிதைகள்.
ஆசை என்னும் மரத்தின் கனிகள் தான் சொற்கள். எந்தக் கிளைகளில் வந்து அமர்ந்தால் என்ன? அதை ஆசையின் கிளிகளாகவே இவர் உருவகிக்கிறார்.

அந்த ஆசையே அவனாகவும், அவளாகவும், அர்த்தநாரியாகவும் தடையற்றுப் பெருகி ஓடி அவர்களது வலியையும், கசகசப்பையும் தனது உடலில் சுமக்கிறது. ஆசைக்கு ஒருவர்கூட போதும் என்பதால் காதலை மாறாத கானலாக்கி தனிமையையும் சுமக்கிறது.        
ஆசையின் எண்ணற்ற நிறபேதங்களாக, நுட்பமான அலைவரிசைகளில் சொல்ல இயலாத காதல், பேசாத பேச்சு, நீட்டித்தால் நொறுங்கிவிடக் கூடிய நட்பு வெளிப்படுத்த இயலாமை,உறவின் தவிர்க்கமுடியாத ரசக்குறைவில் ஏற்பட்டுவிடும் சிறு சுருதிபேதம்,காத்திருப்பு, உறவின் ஒருகட்டத்தில் ஏற்படும் திகட்டல், சிறையாகவும், கருப்பையாகவும் நாம் உருவகித்துக் கொள்ளும், வரையறுத்துக் கொள்ளும் அவரவரின் இணையமுடியாத தனி உலகங்கள் என்று உறவுகளில் உள்ள இடைவெளியை அளந்தளந்து தீரவில்லை ஜயபாஸ்கரனுக்கு..

நம்மில் வறண்டிருக்கும் அன்பைப் போல பெரும்பாலும் வறண்டிருக்கும், மண்ணில் தோன்றி மண்ணில் முடிவதாகச் சொல்லப்படும், திருவிழாவில் மட்டும் கொஞ்சூண்டு காலடியில் கசகசத்துப் போகும் இன்றைய வைகை நதியையும், பொற்றாமரைக் குளத்தையும் அடையமுடியாமையின் முடிவற்ற அலைக்கழிப்பின் படிமமாக பயன்படுத்துகிறார். (திருப்பூவணத்துப் பொன்னனையாளுக்கும்/
ஆலவாய்ச் சித்தருக்கும்/இடையே/கடக்க முடியாத வைகை மணல்)

கு.ப.ராஜகோபாலன், மௌனி மற்றும் லா.ச.ராவின் வரிசையில் பிரமீள் வகுப்பது போல ஜயபாஸ்கரன் பூர்ணமான அக உலக கலைஞர். அக உலகக் கலைஞர்கள், ஊன் உண்ணும் செடியைப் போன்றவர்கள். அவர்களது உலகம் சிறியதாகத் தோற்றம் அளித்தாலும், அது புறத்தில் தன்னை நோக்கி வரும் அனுபவங்களையும்,பொருட்களையும் ஈர்த்து  தன் வயப்படுத்தி தன்வழியிலேயே ஒரு மெய்மையையும் படைப்புகள் வழியாக உருவாக்கிவிடக் கூடியது. அவ்வகையில் ஜெயபாஸ்கரனின் கவிதை உணர்வின் அகம் ஒரு பூரணமான பரவெளியாக இருக்கிறது.

ஜெயபாஸ்கரனின் கவிதைகளில் அங்கம் வெட்டுண்ட பாணன் என்ற திருவிளையாடற் புராணத்தின் கதைப்படிமம், அவ்வப்போது முகம் காட்டக்கூடியது. குருவின் மனைவி மீது காதல் கொண்ட சித்தனை, சிவனே குருவின் உருவத்தில் வந்து நேரடிச் சண்டைக்கு இழுத்துக் கொல்கிறார். திருவிளையாடற் புராணத்தைப் பொறுத்தவரை, சித்தன் கொடியோனாகவும், கடவுள் தீங்கிழைத்தவனை தண்டிப்பவனாகவுமே பாடல் இருக்கிறது. ஆனால் இந்த வரிகளுக்கூடாக, குரு பத்தினியிடம் ஆசை’ வைத்த சித்தனின் துயரம் மீது, அவனது துடிப்பின் மீது ஜயபாஸ்கரனின் கண்கள் நிலைக்கின்றன. குருவின் மனைவியின் மனதில் இடம் உண்டா’ என்று கேட்டு பகலில் போன சித்தனின் பால் ஜயபாஸ்கரன் மனம் சார்பு கொள்கிறது. குருவின் வேடத்தில் வந்த சிவன், சிஷ்யன் சித்தனை அங்கம் அங்கமாகத் துண்டாடிக் கொல்கிறான். குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்துரை நாவைத்/ தொட்ட கரத்தினை என தலை வரை அறுத்தறுத்துக் கொல்கிறான்.

மனிதனின் அதே மனோவிகாரங்கள் மற்றும் வன்முறையைக் கொண்டவராக கடவுளை, ஜயபாஸ்கரன் அங்கம் வெட்டுண்ட பாணன் படிமம் வழியாக இனம்காண்கிறார். எங்கெல்லாம் ஆசை தண்டிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அங்கம் வெட்டப்படும் லீலைதானே இன்றும் தமிழ்நிலத்தில் நடைபெறுகிறது. ஆசை மறுக்கப்பட்ட நாம் அனைவரும் அங்கம் வெட்டுண்ட பாணர்களாக மாறும் இடம் அது.

அன்பு,காதல்,பக்தி என்றெல்லாம் மரபு, புனிதத்தை உலோகமாக உருக்கி மனிதர் மேல் ஊற்றி சிலையாக்கியிருப்பதை வகிர்ந்து கிழித்து, அவர்களின் சொல்லப்படாத வலியை, ஏக்கத்தை, அவற்றின் இடைவெளிகளை, தவிப்பை ஆண், பெண் என்ற பால்பேதமின்றி குறுக்குமறுக்காக எமிலிடிக்கன்சன், வஹீதா ரஹ்மான், ஆண்டாள், கண்ணப்ப நாயனார், பொன்னணையாள், மீனாட்சி போன்றோரின் மீது, உலராத ரத்தக்கீற்றைக் கொண்டு தன் கவிதைகள் மூலம் கோடிட்டதே ஜயபாஸ்கரனின் முக்கியமான பங்களிப்பு. நவீன கவிதைகளுக்கு மட்டுமல்ல தமிழ் நினைவில் புனிதம், பக்தி, தியாகத்தின் திருவுருக்களாக ஆக்கப்பட்டிருக்கும் ஆளுமைகளை இவர் ஒருவகையில் தன் பரிவால், காதலால் மனிதாயப்படுத்தியிருக்கிறார். இதுவே நமது மரபு குறித்த உண்மையான மறுவாசிப்பும் கூட.

காரைக்கால் அம்மையார், சிவன் குறித்து அனலும், குளிருமாக தனக்கு மாறி மாறி அனுபவம் தருவதாகச் சொல்கிறார். அனல் என்பது தீமைகளை அழிக்கும் சக்தியாகவும், குளிர் என்பது அருள்நிலையைக் காட்டுவதாகவும் மரபு விளக்கம் உள்ளது.
ஆனால் சிவன் என்ற பரம்பொருளின் மீது காதல் கொண்ட காரைக்கால் அம்மையார் மீது போர்த்தப்பட்டிருக்கும் பக்தியையும், புனிதத்தையும் கலைத்து தனியொருத்தியாகப் பார்த்தால், சிவனைத் தரிசிக்க அவள் எத்தனை வெம்மையை அனுபவித்திருக்க வேண்டும் என்பது புலப்படும். உடலை மனோவேகத்தில் செலுத்த பேயுருவாக்கி, கைலாயத்துக்குக் கால்களால் மிதித்து போவது தகாது என, தலையால் நடந்து போகும் காரைக்கால் அம்மையாரின் நேசத்துக்குப் பின்னால் உள்ள காத்திருப்பும், சரணும், தனிமையும்தான்  ஜயபாஸ்கரனின் பிராந்தியம். 
இவருக்கு சிவனை ஏன் பிடிக்கிறது? காரைக்கால் அம்மையார் இத்தனை தவம்கிடந்து தேடியவன் என்பதால் என்னும்போது, மரபுக்கு அழகானதும், இயல்பானதுமாக ஒரு எதிர்வினை கிடைத்து விடுகிறது. அக்குணமே ஜயபாஸ்கரனின் கவிதைகளை நவீனமாகவும் மாற்றுகிறது.

சரித்திரத்தில் மதுரை என்னும் ஊர் மறுபடி, மறுபடி அழிந்து, பிறப்பெடுக்கும் ஊராக உள்ளது. பெருவெள்ளத்தால் அழிந்து, திரும்ப எல்லை வரையறுக்கப்படும் மதுரையாகவும், கண்ணகியின் இடதுமுலை திருகி எறியப்பட்டு எரிந்து மீண்டும் துளிர்க்கும் மதுரையாகவும் இருக்கிறது. மதுரையின் அரசியான தடாதகைப் பிராட்டியின் மூன்றாம் முலை மறைவு என்பதையே ஒரு தனித்துவம் அல்லது பெருமிதத்தின் இழப்பாக கருதமுடியும். எனவேதான் நவீனத்திலும் மதுரை ஒரு இழப்புணர்வையும், இழந்த பொருள் தொடர்பான பெருமிதத்தையும் தன் உளவியலாகக் கொண்டுள்ளது.
மதுரையை ஆசையின் எல்லையற்ற எல்லையாகவும், திருவிளையாடற் புராணத்தை ஆசையின் எண்ணற்ற படலங்களாகவும் நவீன கவிதைகளில் கையாள்கிறார் ஜயபாஸ்கரன். அவ்வகையில் வருடம் முழுவதும் திருவிழாக்களை காலம்காலமாக பாவிக்கும், வாழ்தலின் ஆசையை வண்ண, வண்ண உணவுகளாக்கிப் பரத்தியிருக்கும், புராணிகம் மற்றும் வேறு காலத்தின் பெருமிதத்தில் திளைக்கும், நரிகள் இன்றும் அடிக்கடி பரிகளாக வேடமிடும் பல அடுக்குகளிலான மதுரையை ஆசையின் நித்திய குறியீடாக அவர் மாற்றியுள்ளார்.

தன் அணிகலனான ஆசையின்’ பாம்பால் மீண்டும் ஜயபாஸ்கரன்,  கவிதைகள் வாயிலாக ஆலவாயை அளக்க முயன்றிருக்கிறார். தமிழ் கவிதையெனும் அகன்ற சன்னதியில் மிக அழகிய, ‘சின்ன’ மோகினி உருவாக ஜயபாஸ்கரன் இருப்பார்.

(ந. ஜயபாஸ்கரனின் சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் கவிதைத் தொகுப்புக்காக 2013-ம் ஆண்டில் எழுதப்பட்ட முன்னுரை) 


Comments