Skip to main content

பூனைகளுக்குப் பெயரிடுவது





 டி. எஸ். எலியட்


பூனைகளுக்குப் பெயரிடுவது சிக்கலான காரியம்
அது வெறும் விடுமுறை விளையாட்டுகளில் ஒன்றல்ல
ஒரு பூனைக்கு மூன்று பெயர்கள் இருக்கவேண்டுமென்று
நான் சொன்னால்
நீங்கள் முதலில் என்னை முற்றிய பைத்தியம் என்று நினைக்கலாம்
முதல் பெயர் குடும்பத்தினர் பயன்படுத்துவது போல
பீட்டர், அகஸ்டஸ், அலான்ஸோ அல்லது ஜேம்ஸ் என்பது போல
விக்டர் அல்லது ஜோனாத்தன், ஜார்ஜ் அல்லது பில் பெய்லி
என்பதெல்லாம் உருப்படியான அன்றாடப் பெயர்களே
கேட்பதற்கு இனிமையாக இருக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால்
ப்ளேட்டோ, அட்மீடஸ், எலக்ட்ரா, டிமிட்டர் போன்ற
மோஸ்தரான பெயர்களும் இருக்கின்றன
சில பெயர்கள் கோமான்களுக்கு சில பெயர்கள் சீமாட்டிகளுக்கு.
அவையும் அன்றாடத்தன்மை கொண்ட உருப்படியான பெயர்கள்தான்.
ஆனால், ஒரு பூனைக்கு குறிப்பிட்ட ஒரு பெயர் வேண்டுமென்று
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
அந்தப் பெயர் விசித்திரமாகவும், மேலதிகமாக கவுரவத்துக்குரியதாகவும்
இருக்க வேண்டும்.
அப்படியில்லையெனில்
அதனது வாலை எப்படி நெட்டுக்குத்தாக வைத்திருக்க முடியும்
அல்லது
தனது மீசைகளை எப்படி விரிக்கவோ தனது பெருமிதத்தை அனுபவிக்கவோ முடியும்?
அந்த மாதிரியான பெயர்களுக்கு ஒரு சிறுதொகையை உதாரணமாகத் தரலாம்
முங்குஸ்ட்ரப், குவாக்ஸோ அல்லது காரிகோபாட்
பம்பலுரினா அல்லது ஜெல்லிலோரம்
இதுபோன்ற பெயர்கள் ஒரு பூனைக்கு மேல்
எதற்கும் உரிமையாக இருக்காது.
ஆனால்
எல்லாவற்றும் மேலாக அப்பால் இன்னும் ஒரு பெயர்
நம்மால் ஊகிக்கவே முடியாத ஒரு பெயர் மிச்சமுள்ளது;
மனித தேடலால் கண்டறியவே இயலாத பெயர்—
ஆனால் அந்தப் பூனைக்குத் தெரியும், ஆனால் ஒருபோதும்
நம்மிடம் வெளிப்படுத்தாது.
ஒரு பூனை அதன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை
நீங்கள் பார்க்கும் போது
அதன் காரணம், நான் உங்களிடம் சொல்கிறேன், எப்போதும்
ஒன்றுதான்.
தனது பெயரைத் தான் நினைத்து
நினைத்து
நினைத்து
அதன் மனம் மூழ்கி உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறது.
விளக்க இயலாத அந்தப் பெயர்
ஊடுருவவே முடியாத பெயர்
ஆழமும் மர்மமும் வாய்ந்த
அந்த ஒரு பெயர்.

(தமிழில் : ஷங்கர்)

Comments