அவள் தான்
நிகழ்ந்த
அவள் அது தான்
வீட்டில்
வெளியில்
உலகில்
சங்கு புஷ்பங்களாகப் பூத்துள்ளன.
000
வேறு யார்
சங்கு புஷ்பங்களுக்குப்
பெயர் சூட்டியிருக்க முடியும்?
000
செடியில்
நூலெனச் சுருண்டு
நெளியும்
கொடியில் பூத்திருக்கிறது.
000
மம்மர் அளிக்கும்
மம்மர் தீர்க்கும்
மருந்தா?
நீலமும் வெள்ளையுமாக
ஹரியும் ஹரனும் சூடும்
சங்குபுஷ்பம்.
000
நளினம்
மென்மை
அழகு
திருவவள் ஆடிய லாஸ்யம்
அவன் ஆசையுடன்
சூடிக்கொண்ட பூ.
000
கசப்பு இனிப்பு
இரண்டும் தான்.
இருக்கிறாள் இல்லை
புலப்படுகிறாள் புலப்படாமலும்.
ஒரு பிற்பகலில்
அவள் மீது
ரயில் ஜன்னல் வழியாக
ஆடிய ஒளி தான்
அவளா
000
விடமேறியதை
நான்
பருகிய போது
நீ
என்
கழுத்து பற்றி
படர்ந்த நீலம்
சங்குபுஷ்பத்தின் ஓரங்களில்.
000
கோதை
மரங்களை இலைகளை
அழகிய நிழல்களாய் மலர்த்தியிருந்தது
மூன்றாம் பிறை நிலவு
சற்றுமுன்னர் தான்
மின்சார வெளிச்சம் போயிருந்த
அந்தத் தெருவில்
ஆடும்
கல்வெள்ளித் தொங்கட்டான்கள்
அணிந்தும் அணியாத
தளராடையில்
வெண்டை விரல்களை
அபிநயித்து உரையாடியபடி
தோழியுடன் அவள் கடந்தாள்
அவள்
கடந்ததைப் பொறுக்க முடியவேயில்லை
திரும்பிப் பார்த்தேன்.
நிலா குனிந்து பார்க்க
இருட்டில் இடுப்பில்
குடத்துடன்
வளையல்கள் அதிரும் வெளிச்சம்
மட்டுமே
இருக்கும் வீதியில்
சென்ற
ஆழ்வாரின் மகள்
ஞாபகத்துக்கு வந்தாள்
அப்போது
ஒரு ஓட்டுச்சாய்வு வீட்டின்
திண்ணையில்
ஏற்றப்பட்ட
நாகவிளக்கில்
தீபங்கள்
காற்றில் ஆடிக்கொண்டிருந்திருக்கும்
இல்லையா
000
மழைக்கு முந்தைய
சன்ன இருட்டு
சூரியன் மங்கிய தெருக்கள்
பழைய வெள்ளியாய் மின்னியது
பேருடல்
பெரும் ஒப்பனை இட்ட
மயில்
நகரத்தின் அகவலைக் கேட்டு
தாய்ப்பன்றி ஒன்று
குட்டிகள்
வரிசையாய் பின்தொடர
பால்முலைகள் குலுங்கி குலுங்கி
புதரை நோக்கி விரைந்த
போது
இப்படித்தான் அவ்வப்போது
பயப்படத் தேவையில்லை
என்று ஆறுதல் சொன்னது.
000
இந்த இரவில்
தூங்காத
பொருள்கள்
உயிர்களாலான
ஒரு உலகம்
ஊஞ்சலாக ஆடிக்கொண்டிருக்கிறது
க்ரீச்….க்ரீச்….க்ரீச்
000
அன்புள்ள நகுலனுக்கு
சென்ற ஞாயிறன்று
கவிஞர் வே. பாபு
இறந்துவிட்டார்
உங்களது ஒரு மென்கிளை
அவர்
என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
கடந்த சில நாட்களாக
நான்
பார்க்கும் செவ்வரளிப் பூக்கள்
மேலும் சிவந்திருக்கின்றன.
000
பால் அற்ற எருமை
சங்க காலம்
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் காலம்
இரண்டையும்
நிஜத்தில் ஆறாகவே
பார்த்த ஞாபகம் கொண்டது
அடையாற்று கழிமுகம்.
தற்போது
கருப்பாகிவிட்ட நீரிலிருந்து
அந்தியில்
மெதுவாக எழுந்து நடந்தது
பகல் முழுவதும் அங்கே
திளைத்த
ஒரு எருமை
நிலத்திட்டுகள்
கரையைத் தாண்டி
சாவகசமாகச் சாலைக்கு வந்தது.
மூளை வரை ஈரம்
உணரப்பட
உடனே வீடுசெல்ல மனமின்றி
ஓரத்தில் குப்பையாகப் படர்ந்திருக்கும்
செடிகளுக்குள் புகுந்தது
கழுத்தில் ஒரு பீர்க்கங்கொடியை
இலையும் பூவுமாக
விலைமதிக்க இயலாத நகையாய்ச்
சூடி
நிழலில் அழகு பார்த்தது
சாம்பலும் தெருவிளக்கொளியும் பீர்க்கம்பூவும்
இலைகளும்
மிருதுவாக்கிய எருமை நான்
என்ற
பெருமிதத்துடன்
சாவகாசமாக
நடைபோட்டது.
ஆண்குறியையும்
பெண்குறியையும்
எளிமையாக அழித்தெழுத
மிகச் சமீபத்தில்
கடவுள் கண்டுபிடித்த
சின்ன ரப்பரால்
வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட
முதல் பால் அற்ற
எருமை அது
அடையாற்றின் கரையில்
அசைந்து அசைந்து போய்க்கொண்டிருக்கிறது.
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் காலம்
நிஜத்தில் ஆறாகவே
பார்த்த ஞாபகம் கொண்டது
அடையாற்று கழிமுகம்.
தற்போது
கருப்பாகிவிட்ட நீரிலிருந்து
Comments