Skip to main content

கதை சொல்லும் ஊடகம் மட்டும்தானா?



1930 களின் காலகட்டத்திய பாரிஸ் நகரத்தின் பரபரப்பான ரயில் நிலையம். அதன், ரயில் நிலைய நிர்வாகத்துக்குத் தெரியாமலேயே 12 வயது அனாதைச் சிறுவனா ஹூகோ, தனது குடிகார மாமாவுடன் அந்த ரயில் நிலையத்தின் கடிகாரக் கோபுரத்தில் வாழ்கிறான். ரயில் நிலையத்தில் உள்ள பிரம்மாண்ட கடிகார எந்திரங்களை வேளை தவறாமல் சாவி கொடுத்து, பழுதுகளை நீக்கி இயங்க வைப்பது தான் அவனது வேலை. எந்திரங்கள், பற்சக்கரங்கள், கப்பிகளால் சூழப்பட்ட பிரபஞ்சம் அவனுடையது. பாரீஸ் நகரையே ரயில்நிலையத்தின் பிரதான கடிகார முகப்புக்குப் பின் நின்று ஒரு பெரிய எந்திர இயக்கமாகப் பார்க்கிறான். இந்த உலகுக்கு வரும் ஒவ்வொரு உயிரியும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு அவசியமானது என்று நினைக்கிறான். இந்த பூமிக்கு வரும் எந்த உயிரியும் உபயோகமற்றதாக இங்கே பிறப்பதில்லை என்று நம்புகிறான்ஏனெனில் ஒரு எந்திரத்திலும் தேவையற்ற ஒரு பாகம் என்று ஒன்று இருப்பதில்லை .


இயக்குனர் ஜார்ஜ் மெலிஸ்

அந்தச் சிறுவன் ஹூகோவுக்கு, சமகாலத்தில் மறக்கடிக்கப்பட்ட பழுதான மனிதர் ஒருவரைச் சரிசெய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. ஊமைப்படக் காலத்தில், ஒரு மந்திரவாதியாக இருந்து, ஊமைப்பட சினிமாவின் தொடக்க காலத்தில் இயக்குனராக மாறி, அற்புதமான சிறுபடங்களை உருவாக்கிய, ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தில் பல கண்டுபிடிப்புகளைச் செய்த மேதை அவர். உலக யுத்தம் காரணமாக சினிமாத் தொழிலில் தோல்விகண்டு, விரக்தியின் காரணமாக மறைந்து வாழ்பவர். சிறுவன் ஹூகோ கார்பர்ட் பணிபுரியும் அதே ரயில்நிலையத்தில் விளையாட்டு பொம்மைக் கடையை நடத்திவரும் அந்த முதியவரைத் தான் திரும்பக் கண்டுபிடித்து அந்த மாபெரும் இயக்குனருக்கான உலகின் அங்கீகராத்தை வாங்கித் தருகிறான் அந்தச் சிறுவன்.

 கைக்கு கிடைக்கும் எந்திரங்களை எல்லாம் சரிசெய்வதையே வாழ்க்கையின் முழு ஆனந்தமாக கருதும் ஹூகோ, பெற்றோரை இழந்து கதைப்புத்தகங்களில் வரும் சாகசங்கள் வழியாகவே வாழ்வைப் பார்க்கும் இசபெல், தன் பழைய வாழ்க்கையைக் கிட்டத்தட்ட உலகுக்குத் தெரியாமல் புதைத்து வாழும் ஜார்ஜ் மெலிஸ் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான மம்மா ஜீன் ஆகியோரைச் சுற்றி  ஒரு நாவல் எழுதுவதைப் போல நிதானமாக விஸ்தாரமாகச் செல்லும் திரைப்படம் இது.

 இத்திரைப்படத்தில் வரும் ஜார்ஜ் மெலிஸ் கதாபாத்திரம் ஊமைப்பட காலத்தின் பிரமாண்ட இயக்குனரான ஜார்ஜ் மெலிசைப் பிரதிபலிப்பதே. ஒரு சுவாரசியமான ஹாலிவுட் படத்துக்கேயுரிய உணர்ச்சித் திருப்பங்களுடன் இந்தப் படம் சினிமாவின் வரலாற்றையும் சொல்லிவிடுகிறது.


இயக்குனர் ஜார்ஜ் மெலிஸ் வழியாக, இயக்குனர் மார்டின்ஸ்கார்ஸிசி, கதை சொல்லாத சினிமாவைக் கனவுகாண்கிறாரோ என்றும் தோன்றுகிறது. பிரமாண்டமான எந்திர யுகத்தில் கனவுகளையும், மாயக்காட்சிகளையும், விந்தை அனுபவங்களையும் தரக்கூடிய ஒரே ஊடகமாக சினிமாவைப் பார்த்த ஜார்ஜ் மெலீஸ் எடுத்த படங்களும் இத்திரைப்படத்தில் காண்பிக்கப்படுகிறது.

 மார்டின் ஸ்கார்சிசி எடுத்த திரைப்படங்களில் அவர் இதயத்துக்கு நெருக்கமான படம் என்று ஹீகோவை விமர்சகர்கள் கருதுகிறார்கள். அந்தப் படத்தில் வரும் சிறுவன் ஹீகோ அவரது பிரதிபலிப்புதான் என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கான கனவுலகைப் போல இத்திரைப்படம் இருக்கிறது. 

 காலத்தில் மறக்கப்பட்ட சினிமா இயக்குனராக நடித்திருக்கும் பென் கிங்க்ஸ்லி குறிப்பிடப்பட வேண்டியவர். 

3டியில் ஒரு படத்தின் முழுசாத்தியத்தையும் பார்க்க விரும்புபவர்கள் ஹூகோவைப் பார்க்கவேண்டும். லூமியர் சகோகரர்கள் தாங்கள் எடுத்த முதல் திரைப்படத் துண்டான நிலையத்துக்குள் ரயில் வரும் காட்சியைக் காட்டுகையில் 3டியின் சாத்தியத்தை அவர் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளதை உணரமுடிகிறது.

ஹூகோ திரைப்படம் சினிமாவின் பிறப்பு எப்படியான விந்தையான சூழ்நிலைகளில் உருவானது என்பதை காட்டுகிறது. சினிமா தான்இன்றைக்கு மனிதகுலத்துக்கு பெரும் கனவுகளையும் அனுபவங்களையும் தரும் சாத்தியம் கொண்ட ஊடகம் என்பதையும் மௌனமாக உணர்த்திவிடுகிறது.

Comments