Skip to main content

உங்கள் வீட்டில் ஒரு அந்நியன்?



நமது தினசரி வாழ்க்கையைச் சுற்றி மர்மமானதும், விநோதமானதுமாக நடக்கும் நிகழ்ச்சிகள் மீதுதான் அயர்ன்கவனத்தைக் குவிக்கிறது. ஒரு பெருநகரத்தில் மோட்டார் பைக்கில் சுற்றும் தனிமையான இளைஞன் தான் நாயகன். அவன் திருடன் அல்ல. ஆனால் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து, அந்த வீட்டு உரிமையாளர்கள் வரும்வரை, அந்த வீட்டைப் பயன்படுத்துபவன். அவர்களின் சமையலறையில் சமைத்து உண்டு, அவர்களின் படுக்கையறையில் தூங்கி எழுந்து செல்பவன். அதற்கு நன்றிக்கடனாக அந்த வீட்டில் பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை சரிசெய்து வைப்பான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவான். உடைந்த பொருட்களை நேர்த்தியாக ஒட்டிவைப்பான். அழுக்கு உடைகள்- உள்ளாடைகள் உட்பட- துவைத்து உலர்த்திச் ஓரிரு நாட்களில் வீட்டு உரிமையாளர் வருவதற்குள் அகன்றுவிடுவதை பொழுதுபோக்காகக் கொண்டவன். அவன் பெயர் டாய்-சுக்.

வேறுவேறு வீடுகளில் வேறு வேறு மனிதர்கள் வாழும் வாழ்க்கையைத் தற்காலிகமாக வாழ்வதில் காமுறும் டாய்-சுக், முன்னாள் நடிகையும், விளம்பர மாடலுமான சுன்-ஹூவாவின் வீட்டில் நுழைகிறான். யாரும் இல்லை என்று நினைத்து கதவை உடைத்து நுழையும் அவனை, பூட்டப்பட்ட வீட்டில் கணவனாலேயே சிறைவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் அந்த நடிகை, டாய்-சுக்கின் செயல்களை மறைந்திருந்து பார்க்கிறாள். ஒருகட்டத்தில் இருவரும் அறிமுகமாகிறார்கள். நடிகையைக் கொடுமைப்படுத்தும் கணவனை தாக்கிவிட்டு, நடிகையும், நாயகனும் தப்பிக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து பூட்டப்பட்ட வீடுகளின் கதவை உடைத்து, தற்காலிகமான தங்கல்களை நடத்துகிறார்கள். இப்படியாக ஒரு வீட்டுக்குள் அவர்கள் நுழையும்போது, அந்த வீட்டின் உரிமையாளர் அநாதையாக இறந்துகிடப்பதைப் பார்த்து, உடைந்த பொருட்களைச் சரிசெய்வது போலவே அவருக்கு மரியாதைப்பூர்வமான ஒரு இறுதிச்சடங்கையும் அந்த வீட்டின் தோட்டத்திலேயே நடத்துகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து வேறு வேறு வீடுகளுக்குப் பயணித்தாலும் அவர்களுக்குள் உரையாடல் படம் முழுவதும் இல்லை.  மௌனமான உறவின் ஒருகட்டத்தில் உடல்ரீதியாகவும் இணைகின்றனர். மரணமடைந்த மனிதரின் மகன் வீடுதிரும்புகிறான்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தந்தையை கொலைசெய்ததாகவும் டாய்-சுக் மற்றும் சுன்-ஹூவாவின் மீது புகார் கொடுக்கிறான். சுன்-ஹூவாவின் கணவன் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். டாய்-சுக் சிறைக்குப் போகிறான்.

டாய்-சுக் சிறையில் ஒரு இடத்தில் இருந்துகொண்டே மறைந்திருக்கும் விநோதக்கலை ஒன்றை பயிற்சி செய்கிறான். சிறையிலிருந்து விடுதலை அடைந்தவுடன் சுன்-ஹூவாவின் வீட்டிற்கே திரும்புகிறான். அங்கு மூன்றுபேர்(!) சேர்ந்து வாழத்தொடங்குகின்றனர்.

த்ரீ அயர்ன் திரைப்படத்தை இயக்கியவர் கிம் கி டுக். கடந்த பத்து ஆண்டுகளில் உலக சினிமாப் பார்வையாளர்களை வியக்கவைத்த கொரிய இயக்குனர் இவர். சமகால நகர்ப்புற வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளையும், அதன் காரணமாக உருவாகும் வன்முறை மற்றும் குரூரங்களையும் எந்த ஜோடனையும் இல்லாமல் வெளிப்படுத்திய படங்கள் இவருடையது. அதேவேளையில் நவீன மனிதனின் ஆன்மீகத்தேவைகளையும், வெறுமையையும் அவர் ஆழ்ந்து பரிசீலிக்கக் கூடியவர்.

உரிமையாளர்கள் வெளியேறிய காலிவீடுகளைப் போல நாம் அனைவரும் இருக்கிறோம். இன்னொருவர் யாருடைய வருகையோ நம்மை நிரப்பும் என்று காத்திருக்கிறோம். அந்த விருந்தினரால் விடுதலை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் அந்த காலிவீடுகள் காத்திருக்கின்றன. அத்துடன் நாம் வாழாத இன்னொரு வீட்டின் மீதும், இன்னொரு வாழ்க்கை மீது நமக்கு எப்போதும் ஏக்கம் இருக்கிறது. காதலும் காமமும் உறவுகளும் கூட நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் நிரப்பிக்கொள்ள மேற்கொள்ளும் செயல்கள்தானோ என்ற கேள்வியை அயர்ன் திரைப்படம் எழுப்புகிறது.

இப்படத்தில் கிம் கி டுக் நாம் வாழ விரும்பும் இன்னொருவரின் வீடு, இன்னொருவரின் படுக்கையறை, இன்னொருவரின் தோட்டம், இன்னொருவரின் செடிகள், இன்னொருவரின் வளர்ப்பு மீன்கள் ஆகியவற்றுடன் வாழ நம்மை அழைத்துச் செல்கிறார். அது இன்னொருவருடையது என்ற எண்ணமே ஒரு குறுகுறுப்பையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.

நாம் எல்லாருமே ஒரு காலியான இன்னொருவரின் வீட்டுக்குள் நுழைவது போலத்தான் இந்த உலகத்திற்குள் வருகிறோம். ஆனால் அந்த குறுகுறுப்பையோ, மகிழ்ச்சியையோ நாம் அடைவதில்லை.

 படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுதிருடன் போன்று தோன்றும் நாயகன், படத்தின் இறுதியில் பொருள்சார்ந்த உலகிலிருந்து மேலெழுந்து தன் இருப்பே தெரியாமல் மறைந்து வாழும் ஒரு ஞானியை ஒத்தவனாக மாறிவிடுகிறான். அவன்தான் விடுதலை பெற்றவன் என்று கிம் கி டுக், ஒரு அழகிய ஜென்கதை போன்ற எளிமையில் சொல்லிவிடுகிறார்.

கிம் கி டுக் எடுத்த படங்களிலேயே எளிமையானதும், வன்முறைக் காட்சிகள் குறைவானதுமான படம் இது. மிக அமைதியான பௌத்தச் சடங்குகளை ஒத்த தன்மையுடன் இப்படத்தின் காட்சிகள் அமைதியும், கவித்துவமுமாக உருவாக்கப்பட்டவை. கிம் கி டுக்கின் உலகிற்குள் நுழைய இந்தப் படம் நல்ல அறிமுகமாக இருக்கும்

Comments