Skip to main content

பசி வழி செயல் வழி விடுதலை வழி



ஹெர்மன் ஹெஸ்ஸேயின்சித்தார்த்தன்நாவலில் அந்தணகுமாரன் சித்தார்த்தனும் அவன் நண்பன் கோவிந்தனும் ஞானத்தைத் தேடும்பயணத்தைச் சிறுவயதிலேயே சேர்ந்து தொடங்கி, ஒருகட்டத்தில் பிரிகிறார்கள். நாவலின் கடைசியில் அவர்கள் சந்திக்கும்போது அவர்கள்வயது நாற்பதுகளின் இறுதியில் இருக்கலாம். கரிச்சான்குஞ்சு எழுதிய ஒரே நாவல்பசித்த மானிடம்’. இந்த நாவலில் கும்பகோணம் அருகேதோப்பூரில், பால்யத்தைக் கழித்த கணேசனும் கிட்டாவும் திருவானைக்கா பஜாரில் நேருக்கு நேர் சந்திக்கும்போது அவர்களுடைய வயது 60- ஐத் தொட்டிருக்கலாம். ஞானம் பொதுவானதல்ல; அவரவர் வாழ்வு வழி என்றுசித்தார்த்தன்நாவல் நமக்கு உணர்த்துவதைப் போலவே, ‘பசித்த மானிடம்நாவல், வாழ்க்கை என்பதும் அதன் மூலம் அடையும் உண்மை என்பதும் செயல்வழி என்பதை உணர்த்திவிடுகிறது.



சேர்ந்து வாழும் சமூக வாழ்க்கைக்கு அவசியப்படும் குணங்களென்று சமூகம் கற்பித்த அன்பு, தியாகம், வீரம் மட்டுமல்ல; எதிர்மறை அம்சங்களென்று நாம் கொலுவறைகளிலிருந்து விரட்டி, நிலவறைகளில் போட்டு வைத்திருந்த காமம், குரோதம், பயம் போன்றவையும்வாழ்க்கையின் எரிபொருளாக, மசகெண்ணெயாக எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் கூடுமானவரை மனத்தடையின்றிப் பரிசீலித்தபடைப்புகளில் ஒன்றுபசித்த மானிடம்’. குரோதம், பயம், அதிகார விழைவு, புகழ் விழைவு எனக் கடகடக்கும் செயல் மூர்க்கத்தின்அடிவிழைவான காமத்தை ஆதிப் பசிகளில் ஒன்றாக அனுதாபத்துடன் கரிச்சான்குஞ்சு இந்தப் படைப்பில் பார்த்துள்ளார்.



இருபதாம் நூற்றாண்டு இந்திய, தமிழ் நவீனங்களின் கதைக்கருவை வாழ்ந்தவர் கெட்டால், கெட்டவர் வாழ்ந்தால் என்ற இரண்டுவர்ணனைகளுக்குள் பெரும்பாலும் அடக்கிவிடலாம். பசித்த மானிடம் நாவல், வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் புறநடைச் சிதைவில் முளைத்து, மீண்டும் எழுந்து வாழும் ஒரே உத்வேகத்தில் புறநடைக் கழிவு நீரையே உணவாக்கி, உரமாக்கிக்கொண்டு வளரும் இரண்டு பிராமணச்சிறுவர்களின் கதை இது. தாய், தந்தை இருவரையும் குழந்தைப் பருவத்திலேயே இழந்து, ஊரார் வளர்ப்பிலேயே வாழ நேர்ந்த கணேசன் ஒருபணக்காரப் பெரியவருக்கு, இன்றும் சமூகம் விலக்கெனக் கருதும் தன்பாலின உறவுத் துணையாகப் போய்ச் சேர்கிறான். தந்தையை இழந்து, கொஞ்சம் நிலத்தோடு அல்லலுறும் பிராமணத் தாய்க்குப் பிறந்த கிட்டாவோ, பிராமண சமூகம் அக்காலகட்டத்தில் ஏற்கத் துணியாத டிரைவர்வேலைக்குப் பயிற்சிக்காகச் சென்று, பல்வேறு நிழல் விவகாரங்களையும் தன் ஆளுமையில் சேர்த்துக்கொண்டு மருந்துக்கடை முதலாளியாகிறான்.



இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு சமூகத்தினரின் வாழ்க்கைப் பின்னணியில் 1960-கள் வரை நீளும்காலப் பகுதியில் இந்த நாவல் நிகழ்கிறது. கிறிஸ்தவ மனிதாபிமானம், காந்திய லட்சியவாதம், தமிழ் சித்தர்மரபின் செல்வாக்கு ஆகியவைகதையாகவும் கதாபாத்திரங்களாகவும் பார்வைகளாகவும் தொழில்பட்டிருக்கும் இந்நாவலை எழுதிய கரிச்சான்குஞ்சு, வேதங்களை முறையாகக் கற்ற பண்டிதர்.



இளம் பருவத்திலிருந்து நீடித்த வறுமை, அதன் காரணமாக அடைந்த சிறுமையோடு பன்மொழிப் புலமை, ஞானம் அனைத்தும் நிரம்பப்பெற்றவராக இருந்தும் லௌகீக வாழ்க்கை சார்ந்த சாமர்த்தியமின்மையால் வாழ்க்கையின் கடைசி வரை பொருளாதாரக் கஷ்டங்கள்அவரைத் துரத்தியிருக்கின்றன. இவை அனைத்தின் தடயங்களையும் அவை ஏற்படுத்திய கனிந்த புரிதலையும்பசித்த மானிடம்படைப்பில் பார்க்க முடிகிறது.



எல்லா தத்துவங்களையும் எல்லாக் கருதுகோள்களையும் தோற்கடித்துச் சுழித்தபடி சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையைஎதிர்கொள்வதற்கு, அது கொடுக்கும் அனைத்து வியர்த்தங்களிலும் நீந்தி நிலைப்பதற்குச் செயலும் பொருளுமாக கணேசனையும்கிட்டாவையும் படைத்துள்ளார் கரிச்சான்குஞ்சு; அதனாலேயே காமத்தையும் குரோதத்தையும் பயத்தையும் பரிவோடு பார்க்க முடிகிறதுஅவருக்கு.



கரிச்சான்குஞ்சு, தன் சக எழுத்தாளரான தி.ஜானகிராமனின் பட்டுப் பூஜிதையான யமுனா போன்ற ஒரு உன்னதப் பெண் கதாபாத்திரத்தைக் கூடப் படைக்கவில்லை. பசித்த மானிடத்தைப் பொறுத்தவரை, ஆண்களும் பெண்களும் வேட்கையின் விலங்கு தளங்களில் புழங்குபவர்கள். நல்ல, புடம்போட்டமனிதர்கள் நாவலில் அரிது என்றோ அவர்கள் மையக் கதாபாத்திரங்கள் அல்ல என்றோ சொல்லிவிடலாம். சந்தர்ப்பங்கள் அவர்களைஅழகாகவும் குரூரர்களாகவும் ஆக்குகின்றன. அந்த வகையில் கரிச்சான்குஞ்சு படைத்த சங்கரி மாமி, நீலா, மாச்சி, அம்மு, பூமா தொடங்கி, பார்வையற்ற கோதை வரை தருணங்களின் மனுஷிகளாக தமிழ் நாவல் சரித்திரத்தில் நினைவில் நிற்பவர்கள். ‘தாவோ தே ஜிங்சொல்வதுபோல பெண்கள், அத்தனை இயற்கையாக காமத்தை திறந்து மூடுகிறவர்களாக இருக்கிறார்கள். கணவனைக் கிட்டாவோடுபங்குதாரர் ஆக்கும் எண்ணத்தில் அவனோடு நெருங்கிப் பழகும் பூமா, ஒருகட்டத்தில் அவனது மனைவிக்குத் தாயாகவே விஸ்தீரணம்அடைகிறாள். கணேசனுக்கும் சுந்தரிக்குமான குறுகிய கால தாம்பத்யம் நாவலில் அழகிய தீவு.



மனிதன் செய்யும் குற்ற, பாவங்களுக்கானகுறிப்பாக மட்டுமீறிய பாலுறவுக்கு- தண்டனையாக தொழுநோயைப் பார்க்கும் பார்வை, சென்ற நூற்றாண்டில் வெகுமக்களிடையே இருந்துள்ளது. ரத்தக் கண்ணீர் நாடகத்தை அதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். பசித்த மானிடத்தில் தொழுநோயால் பாதிக்கப்படும் கணேசனை அந்தப் பார்வையின் நீட்சியாகவும் பார்க்க முடியும். கணேசனும், கிட்டாவும் வழுக்கிச் செல்லும் பாலுறவுகளின் வேட்கையில் குற்ற நிழலை ஓரமாகப் படர விடும் ஆசிரியர், அதே நாவலில் பெண்கள் ஈடுபடும்பிறழ்வுறவுகளில் குற்றத்தின் சிறுகீற்று கூட இல்லாத விடுதலைத் தன்மையைக் காணமுடிகிறது.     



உபநிடதங்களின் செல்வாக்கும் புலமையும் கொண்ட கரிச்சான்குஞ்சு, இந்தப் படைப்பில் தனது அறிவுசார்ந்த ஏற்கெனவே சமைக்கப்பட்டதீர்வுகள் எதையும் நாவல் வழியாகத் தர முயலவில்லை. தொழுநோய் வந்து ஒதுக்குதலுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகியும் வாழ்வதற்கானவேட்கையும் காமத்துக்கான விழைவும் கொண்டு அலையும் கணேசன், அத்தனை துயர இருட்டுக்குள்ளும் கைவிளக்கைத்தொலைத்தவனாகவே குழம்பி நடக்கிறான். செயலால் உடல் எத்தனை முதுமையையும் களங்கத்தையும் அடைந்தாலும் களங்கம்இல்லாததாக ஆத்மா உள்ளதென்பதை இந்த நாவலில் ஸ்தாபிக்கிறார். அதே நேரத்தில், எத்தனை விகாரமடைந்த பின்னரும் எத்தனைமுதுமையடைந்த பின்னரும் மனிதத்தைச் செலுத்தும் இழுவிசைகளான ஆசையும் குரோதமும் இழைந்து விளை யாடும் நாடகத்தையும்அவற்றின் களங்கமற்ற பளபளக்கும் விலங்குக் கண்களையும் இந்த நாவலில் நமக்கு அத்தனை இருட்டிலும் ஒளிரக் காட்டுகிறார்கரிச்சான்குஞ்சு.



பசித்த மானிடம் நாவலில் காலனிய காலத்தின் இறுதியில் படிப்படியாக மாற்றம் கொண்டு, நாடு சுதந்திரம் பெற்றபிறகு ஒரு சிறுநகரம் மெதுவாக அசைந்து மாறுவதை இந்த நாவலில் சத்தமேயில்லாமல் காணமுடியும். வேளாண்மையிலிருந்து நீங்கி வணிகம், அரசு வேலை, புதிய தொழில்களை நோக்கி பிராமணர்களும் முக்குலத்தோர்களும் பிற இடைநிலைச் சாதியினரும் நகரும் சித்திரங்களும் துலக்கம் பெறுவதைக் காணமுடியும்.  



பந்தங்களையும் பூர்வ வாசனைகளையும் படிப்படியாக விட்டு, துயரங்கள் அத்தனையையும் முழு உடலால் எதிர்கொண்டு, பொறுப்புகளையும்சரிவர நிறைவேற்றி கணேசனுக்கு நிஷ்டையும் முக்தியும் கூடும் நிலையிலும் அந்த நிலை குறித்த குழப்பம் இருக்கிறது. அவனைக் குருவாகப்பாவித்துப் போற்றி போஷிக்கும் போலீஸ்காரன் பசுபதிதான் உண்மையான குருவாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ஏனெனில், கணேசன் தன் அன்றாடத்தின் வலிமிகுந்த அனுபவங்களிலிருந்து சொல்லும் வார்த்தைகள் அனைத்தையும் பசுபதி ஆன்மிகமொழிகளாக மொழிமாற்றிவிடுகிறான்.



சித்தார்த்தன்நாவலில், கோவிந்தனின் தலையில் சித்தார்த்தன் முத்தமிட்டதைப் போல கணேசன், கிட்டாவை முத்தமிடவில்லை. ஆனால், இரண்டு மூன்று வாக்கியங்களைச் சொல்கிறான். “தானும் எதையும் சாப்பிடாமை, தன்னை எதுவுமே சாப்பிடவிடாமைஇந்த உலகம்அத்தனையிலும் பரவி ஊடுருவி இருக்கிறதுதான் நாமாம். போலீஸ்காரர் சொல்வார் இப்படி…” என்கிறான்.



சித்தார்த்தன் பேசாததும் கணேசன் பேசுவதும் ஒருவகையில் ஒன்றுதான். ஏனெனில், ஞானமும் விடுதலையும் அவரவர் செயல்வழி. இதையேபசித்த மானிடம்சன்னமாக, ஆனால் அழுத்தமாகச் சொல்கிறது.



செயல்வழியே பயன், பயனின்மை, வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், குற்றம், களங்கம், சிறை, விடுதலை, மீட்பு என மனிதர்கள் காம, குரோதங்களோடு அலையும் இந்த நாவலைப் படைத்தவர் ஒரு வேதாந்தி; அதே நேரத்தில் அவர்தான் பொருள்முதல்வாதத்தை வலியுறுத்தும்தேவி பிரசாத் சட்டோபாத்யாயா எழுதியஇந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்புத்தகத்தைத் தன் வாழ்நாளின்இறுதியில் மொழிபெயர்த்தவர்.



நூற்றாண்டைக் கடந்த தமிழ் நாவல் சரித்திரத்தில் கலை ஓர்மையும் படைப்பு ஒருமையும் கொண்ட தலைசிறந்த நாவல்களில் ஒன்றல்லபசித்த மானிடம். தனக்குத் தெரிந்த கதையை நெருக்கடியாகச் சொல்லி முடித்துவிடும் கதைசொல்லியின் கதை இது. கணேசனின் கதையைசொல்லும்போது மொழி அடையும் உயிர்ப்பு இரண்டாவது பகுதியில் கிட்டாவின் கதையில் வாசகனுக்குக் குறையும். வாசிப்புக்கு உத்வேகமேஇல்லாத வறண்ட தன்மையும் இந்த நாவலில் உண்டு. ஆனால், மனித இயல்பின் இருண்ட, அறிந்திராத அம்சங்களை மனத்தடையின்றிஆதுரத்துடன் பரிசீலித்த பொருளாம்சம் கொண்ட நாவலாக வரும் காலத்திலும் கூடுதலாக நிலைத்து நிற்கப்போகும் படைப்புதான்பசித்தமானிடம்’.





Comments