Skip to main content

செர்னோபில்: சினிமாவின் அடுத்த யுகம் ஷங்கர்ராமசுப்ரமணியன்எச்பிஓ தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியானசெர்னோபில்’,முட்டாள்பெட்டி என்ற அடைமொழியிலிருந்தும், அதன் எல்லையற்ற விடலைத்தனத்திலிருந்தும் அகன்று, தொலைக்காட்சி முதிர்ச்சியடைந்துள்ளதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது; அந்த ஊடகத்தின் வரையறைகள், எல்லைகளை அநாயாசமாக விஸ்தரிக்க இயலுமென்ற அடையாளமாக மாறியுள்ளது. சினிமாவின் அடுத்த பரிணாமம் என்ன என்ற கேள்விக்கான பதிலை அளித்துள்ளது. மனித குல வரலாற்றிலேயே பெரும் சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்திய செர்னோபில் அணு உலை விபத்துக்குக் காரணமாக அரசும், அதிகாரிகளும், அதிகாரத்துவமும் உண்மைகள் என்ற பெயரில் ஒவ்வொரு நிலையிலும் தெரிவித்த பொய்களைப் பற்றி செர்னோபில் குறுந்தொடர் பேசுகிறது. மனித குலம் சந்தித்த ஒரு பேரழிவு விபத்தைக் களனாகக் கொண்டு இயக்குநர் ஜோஹன் ரென்க் நிகழ்த்தியிருக்கும் மாபெரும் மனித நாடகம் இது.

உண்மையைக் குறைத்துச் சொல்வது, உண்மையை நீர்க்கச் சொல்வது, உண்மையைத் தள்ளிப்போடுவது, உண்மையைக் கிடப்பில் போடுவது, உண்மையை ரகசியங்களென்று பதுக்குவது, வேறு வழியே இல்லாதபோது உண்மையைக் கொல்வது, உண்மைக்கு மாறான பொய்களைச் சொல்வது என எத்தனையோ நிலைகளில் அமைப்புகளும் அதிகாரத்துவமும் உண்மையைக் கையாள்கின்றன. ஆனால், உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் மட்டும் வருவதேயில்லை. நம் அமைப்புகளுக்கு உண்மையை நேரடியாகச் சந்திக்கும் திராணி இருந்திருந்தால், செர்னோபில் போன்ற மாபெரும் துயரமும், அதையொட்டி நடந்த மேலதிகமான கவனக்குறைவால் ஏற்பட்ட அழிவுகளும் நடந்திருக்கவே நடந்திருக்காது என்பதை இந்த ஐந்து மணி நேரத் தொடர் துல்லியமாக உணர்த்துகிறது.


3 லட்சம் மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து அகதிகளாக வெளியேற்றிய, அணு உலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கசிவால், பின்னர் லட்சக்கணக்கான மனிதர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்த செர்னோபில் அணு உலை விபத்தை நேரடியாக நடத்தியவர்கள் வெறுமனே ஒரு கைவிரல்களுக்குள் அடங்கக்கூடியவர்கள். செர்னோபில் விபத்து தொடர்பாக சோவியத் அரசாங்கம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்த மரணங்களின் எண்ணிக்கை இதுவரை வெறும் 31. இதுதான் அதிகாரபூர்வமான உண்மையின் கணக்கு எப்போதும். ஆனால், தவறுகளும் பொய்களும் இங்கே தொடங்கவுமில்லை, இங்கே முடியவும் இல்லை.

விபத்து என்று சொல்லப்படும் அந்த நிகழ்ச்சி நடந்த 1986 ஏப்ரல் 26 இரவில், செர்னோபில் அணு மின் நிலையத்தில் பணிக்கு இருந்தவர்கள் வெறுமனே 160 பேர். நிலையத்தின் நான்காவது அணு உலையில் ஒரு பரிசோதனை ஓட்டத்தை அன்றே நடத்தி முடிக்க தலைநகர் மாஸ்கோவிலிருந்து உத்தரவு வர, இரவுப் பணியில் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இல்லாத சூழ்நிலையில், அவசரக் கோலத்தில் அந்தச் சோதனை ஓட்டம் தொடங்குகிறது.

அணு உலை சோதனை ஓட்டத்தின் தொடக்கத்திலேயே பொய்கள் தொடங்கிவிடுகின்றன. சோதனை ஓட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய முன் நடைமுறைகளில் பாதி செய்யப்படாமலேயே, உதவியாளர்கள் கொடுக்கும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளித்தான், அதிகாரி டியட்லோவ் சோதனை ஓட்டத்தைத் தொடங்குகிறார்.

மின்சாரம் திடீரென்று நின்றுபோகும்போது, அணு உலைச் செயல்பாட்டில் நடக்கும் தாக்கங்களைத் தெரிந்துகொள்ள நடத்தப்பட்ட சோதனை அது. சோதனை நடத்தப்பட்டதற்கு முந்தின நாளே, அணு உலையின் மையப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு நிலைகுலைவு தொடங்கியிருந்தது. மின்சாரம் இல்லாத சூழலில், அணு உலையைக் குளிர்ச்சியாக்குவதற்காகக் குளிர்ந்த நீரைச் செலுத்தும் டர்பைன்களின் இயக்கமும் மெதுவாகிறது. இருந்த நீரெல்லாம் நீராவியாக, அணு உலைக்குள் அழுத்தம் பெருகத் தொடங்குகிறது. இந்நிலையில் உதவியாளர்கள் மூன்று பேர், அணு உலையின் செயல்பாட்டை நிறுத்துமாறு கூறுகின்றனர். ஆனால், மேலிடத்துக்கு சோதனை முடிவை அறிவிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் அவர்களை டியட்லோவ் அச்சுறுத்தி தொடர்ந்து சோதனை ஓட்டத்தை நடத்தும் நிலையில் வெடித்த வெடிப்புதான் அது.

அணு உலை விபத்து தொடர்பான அவசரக் கூட்டம் அன்றைய சோவியத் ஒன்றிய அதிபர் மிக்கைல் கோர்பசேவ் தலைமையில் நடைபெறும்போது, சோவியத் அமைச்சரவையின் உதவித் தலைவரான போரிஸ் செர்பினா அதிபரிடம் சொல்கிறார், “அணு உலை விபத்தால் ஏற்பட்டிருக்கும் அணுக்கசிவு, 3.5 ரான்ட்ஜன் அளவுதான் இருக்கிறது; ஒரு இதயத்தை ஊடுருவும் எக்ஸ்ரே கதிர் ஏற்படுத்தும் தாக்கமே அங்கு இருக்கிறது.
உண்மை அதுவல்ல. விபத்தை அடுத்து அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் திட்டமிடுவதற்காக நியமிக்கப்பட்ட விஞ்ஞானி வேலரி லெகசோவ் பேசும்போது இது வெளியே வருகிறது. “கதிரியக்கத்தை அளக்கும் டோசிமீட்டர் குறைந்தபட்ச அளவுகளையே காட்டக்கூடியது; அதில் காட்டப்படும் அதிகபட்சமான எண்ணே 3.5தான். விபத்தில் உடனடியாகப் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களின் கைகள் அடைந்த பாதிப்பைப் பார்க்கும்போது 40 லட்சம் இதயங்களை ஊடுருவும் கதிரியக்கச் சக்தி அங்கே நிலவுவதை உணர முடிகிறது!” என்கிறார். அமைச்சரவையின் உதவித் தலைவராக, கட்சி ஆளாக, மேலிடத்தைப் பீதிக்குள்ளாக்க விரும்பாதவராக அங்கே நடந்துகொள்ளும் போரிஸ் செர்பினா, ‘அதிகாரபூர்வமான உண்மைஎப்படி இருக்கும் என்பதற்கான உருவகம்.


பார்வையாளர்களை அதிர்ச்சிப்படுத்துவதற்கென்றே திட்டமிடப்பட்டது என்று ஒரு காட்சியையும் வசனத்தையும் சொல்ல முடியாவிட்டாலும், அதன் இயற்கையான உள்ளடக்கமே போதுமான பயங்கர உணர்வை எழுப்பிவிடுவதாகும். அணுக்கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருக்கும் விலங்குகளைச் சுட்டுக் கொன்று புதைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞன் பாவல். இவன் சோவியத்-ஆப்கன் போரில் பங்குபெற்ற ராணுவ வீரன் பச்சோவுடன் சேர்கிறான். மனிதர்கள் முழுமையாக அகன்ற குடியிருப்புகளைக் கொண்ட, சுடுகாடுபோல தோற்றமளிக்கும் உணர்வைக் கொண்ட அந்த இடத்தில் தென்படும் நாய்களை இருவரும் சுட்டுக்கொல்லத் தொடங்குகின்றனர்.

பாவலுக்கு முதல் நாயைச் சுட்டுக்கொல்ல அத்தனை சங்கடம் இருக்கிறது. அவனைப் பார்த்து, ராணுவ வீரன் பச்சோ இப்படிச் சொல்கிறான்: “ஒரு மனிதனை முதலில் கொல்லும்போது இப்படித்தான் இருக்கும். ஒருவனைக் கொன்ற பிறகு அவன் அந்தக் கொலையைச் செய்வதற்கு  முன்பிருந்த நபர் அல்ல. ஆனால், கொலை செய்வதற்கு முன்னாலேயே அவனுக்குள் கொலை செய்தவனும் இருந்திருக்கிறான்.
அணுக்கசிவு பாதிக்காமல் இருக்க உலோகப் பட்டை ஒன்று கோவணம்போல கொடுக்கப்படுகிறது. ஒரு குடியிருப்பு வீட்டில், நாய்க்குட்டிகள் கேவும் சத்தம் கேட்க, பாவல் அந்த ஆளற்ற வீட்டுக்குள் நுழைகிறான். அதன் படுக்கையறை பீரோவின் கீழே அழகிய குட்டிகளுடன் தாய் நாய் பாவலைப் பார்க்கிறது. அதன் கனிந்த முகம் உலகத்தின் அத்தனை தாய்மார்களுக்கும் உரியது. பாவலைக் காணாமல் அவனைத் தேடிவரும் பச்சோ, பாவலைக் கீழே போகச் சொல்லிவிட்டு அவற்றின் கதையை முடிக்கிறான். அன்று மாலை, இலவசமாக அளவில்லாமல் அரசு கொடுக்கும் வோட்காவைக் குடித்துவிட்டுநமது இலக்கு மனித குலத்தின் மகிழ்ச்சிஎன்ற பெரிய பதாகை தொங்கும் கட்டிடத்தைப் பார்த்து, பாவல் உமிழ்கிறான்.

மனிதகுலத்துக்கான பெரும் மகிழ்ச்சியைத்தான் கம்யூனிசம் மட்டுமல்ல முதலாளித்துவமும் இன்று தலையாய நோக்கமாக வைத்து உலகெங்கும் கடைவிரித்து வருகிறது. ஆனால், அதன் விளைவுகளோ சாதாரண மனிதர்களை மகிழ்ச்சியூட்டவே இல்லை. அப்படி மகிழ்ச்சியூட்டாத நிலையில், சமத்துவம், வளர்ச்சி, மேம்பாடு எல்லாமே வெறும் பொய்களாக, பிரசாரமாக, கோஷங்களாக மனிதர்கள் வெளியேறிய கட்டிடங்களில் தொங்கும் பதாகைகளாக மட்டுமே இருக்கமுடியும்.


மனிதர்களின் அதிகாரத்துவம், பொய்களால் நடைபெற்ற இந்தப் பேரழிவின் கோரத்தன்மையை மட்டுமேசெர்னோபில்தொடர் சொல்லவில்லை. செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டு நான்கு மணி நேரத்தில் பணிக்கு வந்த தீயணைப்பு வீரர்களிலிருந்து, சுற்றியுள்ள 2 ஆயிரத்து 400 சதுர கிமீ பரப்பைக் காலிசெய்வதற்கும், மறுவாழ்வுப் பணிகளுக்கும் உதவிய முகமே தெரியாத 6 லட்சம் மனிதர்களின் கூட்டுப் பணியையும் சொல்கிறது. அதற்கான மகத்தான நன்றி அறிவித்தல் என்றும்கூட இத்தொடரைச் சொல்லலாம்.

தூய்மைப் பணிகளுக்காக செர்னோபிலுக்குச் செல்லும் உயர்மட்ட விஞ்ஞானியான வேலரி லெகசோவும், கட்சிப் பிரமுகர் போரிஸ் செர்பினாவும் சேர்ந்தேதான் கதிரியக்கத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். விபத்து நடந்த இடத்தில் பேரழிவின் பல்வேறு இடர்களை நேரில் கண்ட போரிஸ் செர்பினா படிப்படியாக, மிகப் பெரிய துயரத்துக்குத் தானும் சேர்ந்து பொறுப்பாகிவிட்ட குற்றவுணர்ச்சியை அடைகிறார். தொடரின் இறுதிப் பகுதியில், நீதிமன்ற விசாரணையின் நடுவில், இடைவெளியில் இருமிக்கொண்டே வெளியே வரும் அவர், விஞ்ஞானி லெகசோவிடம் தனது ரத்தம் தோய்ந்த கைக்குட்டையைக் காண்பிக்கிறார். அவரது கோட்டின் கைப்பகுதியில் மிகச் சிறிய கம்பளிப்பூச்சி ஒன்று ஊர்ந்து செல்கிறது. அதைத் தொட்டு விரலில் படரவிட்டு, ‘எத்தனை அழகு!’ என்று வியக்கிறார். அவர் தன் வாழ்நாளில் முதல்முறையாகச் சொல்லும் முழு அழகிய உண்மை அது. ஆனால், அவர் அந்த உண்மையைச் சொல்வதற்கும் உணர்வதற்கும், பூமி எத்தனை விலையை அளிக்க வேண்டியிருக்கிறது!

செர்னோபில் அணு உலை விபத்தில் இல்லாத புனைவுக் கதாபாத்திரமாக, சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உண்மைகளை அறிவதற்கும் உதவும் பெண் விஞ்ஞானியாக வருபவர் உலனா கோம்யுக். விபத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, அபாயங்களுக்கிடையிலும் அர்ப்பணிப்பு, தைரியத்தோடு பணியாற்றிய விஞ்ஞானிகளின் பிரதிநிதியாக இவர் வருகிறார். அரசின் தவறுகளைப் பாதுகாப்பவர்களாக ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு உடந்தையாளர்களாக இருந்த கேபிஜி உளவுத்துறையின் தொடர் வேட்டைக்கு உள்ளாகுபவராக உலனா கோம்யுக் காண்பிக்கப்படுகிறார். சொல்லும் உண்மைக்காக மரண தண்டனையே கிடைத்தாலும், அந்த உண்மை அடுத்து வரும் சந்ததியினரைக் காப்பாற்றும் என்று நம்புகிறார். செர்னோபில் விபத்துக்கு முன்னர் 1975-ம் ஆண்டில் லெனின்கிராட் அணுமின் உலையில் அதேபோன்ற ஒரு விபத்து நடந்து அது கேஜிபி உளவுத்துறையால் உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டதையும் லெகசோவிடம் வியன்னாவில் நடக்கும் சர்வதேச அணுசக்தி முகமையகம் நடத்தும் விசாரணையில் கூறுமாறு சொல்கிறார். ஆனால் கேஜிபி உளவுத்துறையினரின் அச்சுறுத்தலால் அது தடுக்கப்படுகிறது. ஆனாலும், சோவியத் அரசாங்கமே நடத்தும் விசாரணையில், உண்மைகளை முழுவதும் சொல்லி, அடையாளம் தெரியாமல் இரண்டாண்டுகளுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டு மரணமடைகிறார்.

இத்தனை கோரங்களுக்கும் பிறகுதான், சோவியத் ஒன்றியம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டஆர்பிஎம்கே மாதிரிஅணு உலைகள் பாதுகாப்பற்றவை என்பது தெரியவந்தது. தேசிய அளவிலேயே அணு உலைப் பாதுகாப்பு நடைமுறைகளில் அலட்சியம் காண்பிக்கப்பட்டது கண்டறியப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இல்லாத, மலிவான, உலையைச் செயல்படுத்தும் ஊழியர்களின் செயல்பாட்டையே அதிகம் நம்பி உருவாக்கப்பட்ட அணு உலைகள் அவை என்ற உண்மைகள் மொத்த உலகத்துக்கும் தெரியவருகின்றன.

இன்றும் 16 நாடுகளில் 54 அணு மின் நிலையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. உலகெங்கும் 454 அணு மின் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. எல்லா நாடுகளிலுமேநம் அணு உலைகள் பாதுகாப்பானவைஎன்று சொல்லப்படுகின்றன. அவை எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை; ஆட்சியாளர்களின் உண்மைகள் எந்த அளவுக்கு முழு உண்மைகள்?

Comments

Popular posts from this blog

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.

புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.
அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து
துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.

துறவியின் முன்னால் தாழ…

ஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்

ஒருபூனையைதொலைத்தல்!


தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.

உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சி:

நாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …

அருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை

உலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.
ஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.
எஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.
000
ஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…