Skip to main content

பத்திரிகையாளர் மார்க்வெஸ்


உலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடுதல் பெருமையாகக் கருதிய காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய இதழியல் கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு ‘தி ஸ்காண்டல் ஆஃப் தி செஞ்சுரி அண்டு அதர் ரைடிங்க்ஸ்’.

1982-ல் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்காக நோபல் பரிசை வாங்கி மாய யதார்த்தம் என்பதை உலகம் முழுக்கப் பிரபலமாக்கிய மார்க்வெஸ், அற்புதமான விஷயங்களையும் சாதாரண தொனியில் சொல்லக்கூடிய புனைகதைத் திறனை அவரது பாட்டியிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்பவர். இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது அந்தத் திறனை அவருடைய பத்திரிகைப் பணியும் சேர்ந்தே அவரிடம் மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு செய்திக் கட்டுரையும் ஒரு சிறுகதையும் எந்த இடத்தில் பிரிகின்றன என்பதையும் பத்திரிகையாளராக மறுவரையறை செய்திருக்கிறார் மார்க்வெஸ்.
எண்கள், துல்லியமான அவதானிப்பு, விவரங்கள், அன்றாட எதார்த்தத்தினூடான இயல்பான ஊடாட்டம், நகைச்சுவை, மனத்தடையின்மையோடு தன் பத்திரிகை கட்டுரைகளைச் சிறந்த இலக்கிய அனுபவமாக்குகிறார். ஒரு விஷயத்தைச் சொல்லும்போது சற்று உயர்வுநவிற்சியோடு கூடுதலாக நேர்த்திப்படுத்திச் சொல்லும்போது கதைசொல்லியின் சுதந்திரத்தை மார்க்வெஸ் எடுத்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. எல்லாப் பெரிய ஆளுமைகளையும் போலவே மார்க்வெஸும் மார்க்வெஸ் என்ற ஆளுமையை, அவர்தான் முதலில் கண்டுபிடிக்கிறார்; அதைச் செம்மையாகவும் உறுதியாகவும் உருவாக்கிய பிறகு, அந்த ஆளுமை மீதே சவாரியும் செய்கிறார்.

‘அமெரிக்கப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட முதல் நாள் இரவில், க்யூபாவில் 4,82,560 வாகனங்கள், 3,43,300 குளிர்சாதனப் பெட்டிகள், 5,49,700 ரேடியோக்கள், 3,03,500 தொலைக்காட்சிகள், 3,52,900 மின்சார இஸ்திரிப்பெட்டிகள், 2,86,400 மின்விசிறிகள், 41,800 சலவை எந்திரங்கள், 35,10,000 கைக்கடிகாரங்கள், 63 ரயில் எஞ்சின்கள், 12 வர்த்தகக் கப்பல்கள் இருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் கைக்கடிகாரங்களைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை’ என்று ஒரு கட்டுரையைத் தொடங்குகிறார் மார்க்வெஸ். புரட்சிக்குப் பிறகு நுகர்வு என்பது அன்றாடத்தின் அலுப்பைக் குறைத்த நிலையில், அமெரிக்கப் பொருளாதாரத் தடை ஏற்படுத்திய விளைவுகளைப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களிலிருந்து மதிப்பிடுகிறார்.
மக்களின் புரட்சி ஒடுக்கப்பட்ட ஹங்கேரிக்குப் பத்திரிகையாளராகச் செல்லும் பயணத்தில் தொடர்ந்த அரசு கண்காணிப்பிலிருந்து தப்பி, புதாபெஸ்ட் நகரத்தினூடாகப் பயணிப்பதன் வழியாக மக்களின் மனநிலையை அவரால் பிடிக்க முடிகிறது. எதிர்ப்பு மற்றும் அத்துமீறல் மனநிலைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கழிப்பறைச் சுவர்களின் எழுத்துகள் வழியாக ஹங்கேரியச் சூழ்நிலையை மக்களின் வாக்குமூலமாக நம்மிடம் கடத்துகிறார்.
சாதாரண மனிதர்கள், கொலையாளிகள், மந்திரவாதிகள், சர்வாதிகாரிகள், அதிபர்கள், பிரதமர்கள், உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், அற்புதங்களைப் பற்றிய செய்திகளைத் தன் கட்டுரைகளில் மார்க்வெஸ் எழுதும்போது ஒரு பிரத்யேக அம்சத்தைக் கடைப்பிடிக்கிறார். தனிப்பட்ட சாதாரணன் ஒருவனின் அன்றாடத்தை எழுதும்போது அவனை நெடிய, அரசியல், வரலாற்று, கலாச்சாரப் பின்னணியில் வைத்துவிடுகிறார். போப்பைப் பற்றி எழுதும்போதோ, இங்கிலாந்து பிரதமரைப் பற்றி எழுதும்போதோ அவர்களது பிரத்யேகமான அன்றாட நடவடிக்கைகள், பழக்கங்களின் பின்னணியில் கூர்மையான சாதாரண விவரங்களின் வழியாக தனது செய்தியை அதாரணத்தன்மைக்குள் கொண்டுசென்று விடுகிறார்.
சோவியத் ஒன்றியத்தின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் நிகிதா குருசேவ், அமெரிக்க தொலைக்காட்சியில் தோன்றி, தங்களிடம் பூமியின் எந்த நாட்டின் மீதும் ஏவக்கூடிய ராக்கெட் இருப்பதை அறிவிக்கும் செய்தியைப் பற்றி எழுதுகிறார். அப்போதுதான், ஐரோப்பிய ஆண்களின் கனவுக்கன்னியான நடிகை ஜினா லொல்லோபிரிஜிடாவுக்கு முதல் குழந்தை பிறக்கிறது. நிகிதா குருசேவின் அச்சுறுத்தலை மேற்கு நாடுகள் சற்று மறந்திருக்க ஆறு பவுண்ட்கள் 99 கிராம் எடைகொண்ட அந்தப் புதிய பெண்சிசு உதவியது என்று சொல்லி முடிக்கிறார்.
‘அன் அண்டர்ஸ்டேன்டபிள் மிஸ்டேக்’ (ஒரு புரிந்துகொள்ளக்கூடிய தவறு) கட்டுரையில் வார இறுதியில் குடிக்கத் தொடங்கி தொடர்ந்து குடித்து செவ்வாய்கிழமை காலையில் விழிக்கும் ஒரு இளைஞன், தன் அறையின் நடுவில் மீன் ஒன்று துள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்து, தொடர் குடியின் பீடிப்பால் பதற்றத்துக்குள்ளாகி மாடியிலிருந்து குதித்து விபத்துக்குள்ளாகிறான். அந்தச் செய்தியை மறுநாள் மருத்துவமனைக் கட்டிலில் ஒரு தினசரியில் படிக்கிறான். அவன் கண்ட மீன் பிரமையா, உண்மையா என்று அவனுக்கு விடுபடாத நிலையில், அதே தினசரியில் இன்னொரு பக்கத்தில், ஊருக்கு நடுவில் நூற்றுக்கணக்கான வெள்ளிநிற மீன்களை நகரத்தெருவின் நடுவில் பார்த்ததாக வந்த செய்தியையும் படிக்கிறான். தனிநபருக்கு ஒரு அற்புதம் நடக்கும்போது அது எப்படி புனைவாகிறது என்பதையும், கூட்டத்துக்கு நடக்கும்போது எப்படி செய்தியாகிறது என்பதையும் மார்க்வெஸ் இங்கே புரியவைத்துவிடுகிறார். விமானம் ஏறியதிலிருந்து இறங்கும் வரை, பக்கத்து இருக்கையில் உறங்கும் அழகியைப் பார்த்துக்கொண்டிருந்த கட்டுரை, ஒரு நேர்த்தியான சிறுகதையாகவே தமிழில் ஏற்கெனவே மொழிபெயர்ப்பாகியுள்ளது.
கொலம்பியாவில் உள்ள பொகோடா நகரில், மக்கள் கூடும் முனையில், 1930-களில் ‘எல் எஸ்பெக்டடோர்’ மாலை தினசரிச் செய்தித்தாள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட ஒரு செய்திப் பலகையையும் அதில் 12 வயதில் செய்தி எழுத ஆரம்பித்த சிறுவனின் கதையையும் சொல்கிறது ஒரு கட்டுரை.
சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் மதியம் 12 மணிக்கும் ஐந்து மணிக்கும் இரண்டு செய்திகள் அந்தப் பிரம்மாண்ட பலகையில் எழுதப்படும். அங்கேயுள்ள மக்களின் மனநிலையை உடனடியாகப் பிரதிபலிக்கச் செய்யும் அந்தச் செய்திகளைக் கையால் எழுதிய சிறுவன் ஜோஸ் சல்காரின் ஐம்பதாண்டு பத்திரிகை வாழ்க்கை ஒரு கட்டுரையில் நினைவுகூரப்படுகிறது. புதுமைப்பித்தன் கதைகளைத் தான் வேலைபார்த்த அச்சகத்தில் அச்சு கோர்க்கும்போது படித்து நமது மொழியின் மகத்தான சிறுகதைகளைப் பின்னர் எழுதிய ஜெயகாந்தனின் குழந்தைப் பருவத்தை அந்தப் பன்னிரெண்டு வயதுச் சிறுவன், அதேபோல  ஞாபகப்படுத்துகிறான்.
உண்மையான செய்திகள், பொய்யான செய்திகளுக்கிடையிலான எல்லைகள் தகர்க்கப்பட்டுவரும் காலத்தில், சாகசம் மிகுந்த செய்தியாளர்களின் பணிக்கு முக்கியத்துவமும் முதலீடுகளும் குறைந்துவரும் சூழலில் இதழியலின் ஒரு பொற்காலத்தை இந்தக் கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன. எந்தச் செய்தியிலும் மனித அம்சத்தைக் கண்டுவிட முடியும் என்பதைச் சொல்லும் ஊடகப் பாடநூலாகவும் இது திகழ்கிறது!

Comments