( எனது புதிய கவிதைத்
தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை
க்ரியா பதிப்பகம்
சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதிய
முன்னுரை இது.
‘தொலைந்தவற்றின் தோட்டம்’ என்ற தலைப்பில் புத்தகத்தில்
உள்ளது.இதற்கு
அட்டைப்பட ஓவியத்தை
வரைந்திருப்பவர் பெனிட்டா பெர்சியாள்.)
பழைய
குற்றாலம் அருவியை ஒரு சாயங்கால வேளையில், வெளிச்சத்திலேயே பார்த்து அனுபவித்து குளித்துவர நானும் எனது மருமகனும் தென்காசியிலிருந்து வேகமாக பைக்கில் கிளம்பினோம். போகும்போதே ஒரு சுற்றுலா வேனைக் கடக்கும்போது, ஒரு கன்றுக்குட்டியை உரசிச் சென்றோம். அது பரபரப்பை உடலில் ஏற்படுத்தியிருந்தது.
அவன்
ஒரு குளியலை முடித்துவிட்டுப் பத்திரமாகத் திரும்பிய பிறகு, பத்திரம் பத்திரம் என்று நினைத்துக் கொண்டே தான் அவனிடம் எனது மணிபர்சையும் பைக் சாவியையும் என் சட்டையில் பொதிந்து கொடுத்தேன். ஆனால் அருவிக்குள் போகும்போதே, ஏதோ பதற்றம் இருந்தது. சிமிண்ட் மேடையில் ஈரத்தில் நிற்கும் அவனைப் பார்த்தபடியே தான் குளித்தேன். நிதானமாக மனம் இல்லை. திரும்பிவந்து, பத்திரமாக இருக்கிறதா என்று கேட்டேன். அவன், இருக்கு மாமா என்று சொல்லியபடி பொதிந்த என் சட்டையைக் கொடுத்தான். ஆனால் மணிபர்ஸ் மட்டும்தான் இருந்தது. குட்டிப் பையன் மேல் கோபமும் வன்முறையும் எழுந்தது. மணிபர்ஸைத் தரையில் வைத்துவிட்டுச் சட்டையை உதறிப் பார்த்தேன். ஒரு அடி இடைவெளியில் சில்லிட்டபடி கீழே ஓடிக்கொண்டிருக்கும் நீரைப் பார்த்தேன். ஒரு கணத்தில் மூச்சையிழுத்து
நிதானித்துக் கொண்டேன். வேகவேகமாக வெளிச்சம் கவிழத் தொடங்கியது. வாகனம் நிறுத்திமிடத்தில் இருந்த பைக்கைப் போய் பார்த்தோம். சாவி இல்லை. எப்படிப் போச்சுன்னு தெரியவேயில்லை மாமா! என்றான். நான் அவன் தலையைத் தடவிக் கொண்டேன். எத்தனையோ பொருட்களைத் தொலைத்த அனுபவம் உள்ள இந்தப் பெரியவனின் குட்டிப் பிரதி என்ற வாஞ்சையை அவன் மேல் உணர்ந்தேன். சாவியைத் தொலைத்த உணர்வையும் சாட்சியாகக் கொண்டு பழைய குற்றால மலை தன் மர்மத்தை, சில்லென்ற அழகை, பிரமாண்டத்தை எனக்குக் காண்பிக்கத் தொடங்கியது. பழைய குற்றால அருவிக்கு வலப்பக்கத்தில் வளைந்த சரிவில் வளர்ந்திருக்கும் குறு மரமொன்று கைகளை நீட்டிக் கொண்டு சித்திரம் போல நிற்பதைப் பார்த்தேன்.
தொலைந்து போவதற்குக் காரணம் தேடிப் போனால் கபாலம் மோதிச் சிதறும்; தொலைவதைச் சுற்றியுள்ள அந்த மர்மத்தை, பயங்கர இருட்டை இனி ஒருபோதும் விசாரிக்கக் கூடாது ஷங்கர் என்று அந்த மலையும் அந்த மரமும் எனக்குச் சொல்லித் தந்தது.
தொலைவதை ஏற்பதற்கு, தொலைவதின் ரகசியம் முன்னால் மண்டியிட்டு அதை ஏற்றுக் கடந்து செல்வதற்கு, நான் கற்றுக் கொண்டுவரும் பாடங்களின் தடயங்கள் தான் இந்தத் தொகுப்பில் உள்ள எனது கவிதைகள்.
தொலைந்த நிகழ்வுகள், தொலைந்த கணங்களை என் உடல் மேல் ஏவிக் குதறும் வேளையில் தற்கணங்களை, இவ்வேளையின் காட்சிகளை, நிலப்பரப்புகளை, விலங்குகளை, அழகை, நேசத்தை நோக்கிச் செல்ல விழையும் கவிதைகள் இவை. இந்த மூன்று ஆண்டுகளில் நான் கேட்ட இசையும் இப்பொழுதில் காலூன்றி நிற்பதற்கு உதவியுள்ளது.
வான்கோ ஓவியங்கள் பற்றி சொல்லப்படுவதைப் போல இயற்கையின் அதீதம், அதன் உபரியான அழகு, அது போடும் ஊளை, அதன் இந்திர ஜாலத்தை ஒரு சட்டகமாக ஆக்கித் தன்வயப்படுத்திக் கொள்வதற்கு இவ்வேளை உணர்வில் ஊன்றி நிற்பதுதான் ஒரே வழிமுறையாக உள்ளது. இலைகள், சதுப்பு நிலப்பகுதியில் நாணல், சிம்மாசனம் போல வீற்றிருக்கும் வெட்டப்பட்ட அடிமரம் ஒன்றைப் தெள்ளத் தெளிவாகப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் நீர்க்குட்டை, அரச மர இலைகள், அக்கணத்தில் ஆகாயத்தை நோக்கி அவை பிரசவித்துப் பறக்க விடும் பச்சைக் கிளிகள், மரங்கள் அடர்ந்த தெருவில் ஒளியும் நிழலும் மாற்றி மாற்றி வரையும் பெயர் தெரியாத பெண்ணின் முகம் எல்லாமும் எனக்கு இந்த வேளையின் உணர்வு விளைவிக்கும் கணநேரப் பறத்தலை, கடத்தலை, அபேத உணர்வைத் தந்திருக்கின்றன. அது எனக்கு அனுபவிக்கக் கிடைத்த தித்திப்பு.
மனம்
வெறிக்குரைப்பிட்டு என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்த ஒரு காலைவேளையில் பால்கனிக்கு வந்து நின்றபோது, பக்கத்துக் காம்பவுண்டில் உள்ள நாட்டுக் கருவேலமரத்தின் இலைகளினூடாக ஊசிகளாய் நுழைந்து கசியும் சூரிய ஒளியைப் பார்த்தேன். அப்போது தான் மொட்டை மாடிக்குப் போயிருந்த ப்ரவுனி(எங்களது வளர்ப்பு நாய்க்குட்டி), என்னைப் பார்த்து படிகளில் இறங்கிவரத் தொடங்கியது. அப்போது தோன்றியது. ப்ரவுனி சூரியனிலிருந்து இறங்கி வருகிறதென்று. ப்ரவுனியோடு எல்லாரும் சூரியனிலிருந்து வருபவர்கள் என்று. சூரியன் நம்மை ஒரு பிடிலை வைத்து இசைக்கருவியைப் போல மீட்டுகிறது. அதுதான் நமது வாழ்வு என்று தோன்றியது. இதற்கு முன்னர் ஒரு குட்டி ப்ரவுனியை நானும் எனது மகளும் தொலைத்தோம். அதைத் தேடி சில நாட்கள் அலைந்தோம். தொலைந்து போன தோட்டத்துக்குள் போன ப்ரவுனி திரும்பி வரவேயில்லை. இப்போது புதிய ப்ரவுனி.
ரகசியத்தின் தோட்டம் திரையால் மூடப்பட்டிருக்கிறது என்று நண்பர் சொன்னார். திரையிலிருந்து தோன்றுகிறது; திரைக்குள் போய் மறைகிறது. மரணத்தை ஏற்பதற்கு தேவதச்சனும் ஆனந்தும் இக்காலகட்டத்தில் துணையிருந்தவர்கள்.
நண்பர்களுடன் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சமீபத்தில் போயிருந்தேன். அறுபடை முருகன் கோயிலின் வாயில்புறத்து வழியாக கடற்கரை மேட்டில் ஏறியபோது, வலதுபக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப்பெண்ணை கருப்புத் துணியால் கழுத்துவரை மூடிப் படுக்கவைப்பதைப் பார்த்தோம். அவளின் வயிற்றில் ஒரு தட்டை வைத்துக் கற்பூரம் கொளுத்தினார்கள். திரும்பிப் பார்க்காமல் வேகவேகமாக அந்த நிகழ்வை, இடத்தைக் கடந்தோம். நாங்கள் திரும்பிய பிறகும் கடற்காற்றில் கற்பூரம் எரிந்துகொண்டிருந்தது.
இடது
பக்கம் மணலும் சூரியனும் கடலும் அந்தியும் சேர்ந்து பொன்னாக்கிய இரண்டு குதிரைகள் அந்தப் பொழுதையே தமது உயிர்ப்பால் மகத்துவமாக்கிக் கொண்டிருந்தன.
அந்தக் குதிரைகள் சொல்கின்றன; கடக்க வேண்டும்.
Comments