Skip to main content

தீராக்காதல்

ஷங்கர்ராமசுப்ரமணியன்



உன் இசையில் வனம் அதிர்கையில்
பசுக்களுடன்
அருவியின் பின்னணியில்
குழலோசை கேட்டவள் நான்
மரங்கள் சூழ்ந்திருக்கும்
என் வீட்டில்
பகல் ஒளி படரும்போது
சில நாட்களில் என் அம்மா சொல்வாள்
நீ வரக்கூடும் என்று
உன் நீலமேனி அழகையும்
உன் குறும்புகளையும்
பிராயத்தில் கதையாய்
சொன்னவள் அவள்
தோழிகளுடன் உற்சவம் முடிந்து
திரும்புகையில்
தெருமுனையில் உன்னை விளையாட்டு
தோழனென அடையாளம் கண்டேன்
கூட்டத்திற்குள் விரைந்துவிட்டாய்
ரவிக்கை அணிந்த வயதில்
மார்கழிக் குளிர் பொதிந்த ஆற்றில்
மூழ்கிக் குளிக்கையில்
மரணபயம் அற்றுப்போனது
மறுகரையில் நின்று என்னை அழைத்து
செல்வாயென
உன்னைப் பற்றி என் அம்மா சொன்ன
கதைகளைத் தொடர்கிறேன் நானும்
கிருஷ்ணா
நம் நந்தவனங்கள் கடலில்
அமிழ்ந்துவிட்டன.

(மிதக்கும் இருக்கைகளின் நகரம்-2001 தொகுதியிலிருந்து)

Comments