Skip to main content

புரோட்டா-ஒரு பண்பாட்டுக் குறிப்பு




ஷங்கர்ராமசுப்ரமணியன்




(சிறுவயதிலிருந்து எனது கனவு உணவாகவும், நிறைவேறாத எத்தனையோ ஆசைகளின் எளிய வடிகாலாகவும் இன்றும் இருக்கும் புரோட்டா குறித்த சில குறிப்புகள் இவை. புரோட்டா குறித்து விரிவான ஆய்வைச் செய்யவேண்டும் என்பதும், புரோட்டா குறித்த ஒரு ஆவணப்படத்தை எடுக்கவேண்டும் என்பதும் எனது நிறைவேறாத திட்டங்கள். நான் தான் தமிழ் புரோட்டா என்ற என்னுடைய கவிதையில், புரோட்டா எனது ஆசைப்படி ஒரு படிமமாக மாற்றப்பட்டது. இந்தக் கட்டுரையின் சற்று பெரிய வடிவம், 2000 ஆவது ஆண்டில் குமுதம் இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது. அதன் பிரதி என்னிடம் தொலைந்து போய்விட்டது. 2009 ஆம் ஆண்டு பேராசிரியர் பக்தவத்சல பாரதி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஞாபகத்திலிருந்து மீண்டும் எழுதப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விரிவான ஆய்வுக்கட்டுரையாக அமையவில்லை. அதற்குப் பின்னர் இது என்னிடமே தங்கிவிட்டது. இப்போது இங்கே வெளியாகிறது. என் அப்பா குறித்து  எத்தனையோ புகார்கள் உண்டு. ஆனால் புரோட்டாவையும், பிரியாணியையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால் எனது வாழ்க்கையில் அவற்றின் ருசி தெரியாமலேயே போயிருக்க வாய்ப்புண்டு. தூத்துக்குடியில் கிளியோபாட்ரா திரையரங்கு அருகே ட்யூப்லைட்களின் அதீத ஒளியில் முதல் முறை புரோட்டா சாப்பிட ஒரு நைட் கிளப்புக்கு அவர் அழைத்துச் சென்ற நாள் எனக்கு இன்றும் ஞாபகத்தில் உள்ளது.)

தமிழகத்தில் புரோட்டாவின் உருவாக்கமும்,அதன் தனித்துவமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. சமையலறை வெளிப்படையான காட்சி அரங்க வெளியாக மாற்றம் அடைந்தது, தமிழகத்தில் முதலில் பரோட்டாக் கடைகளில் தான். வேறு வேறு பேச்சு வழக்குகள், பழக்கங்கள்,பண்பாட்டுக் கூறுகளால் ஆன தமிழகத்தின் ஒவ்வொரு ஊரின் விளிம்பையும் தன்  வசீகரத்தால் இணைப்பது புரோட்டாக் கடைகள் தான்.
உயர் வர்க்கத்தினர் மட்டுமே புழங்கிய இடமாக இருந்த காபி கிளப்களில் சமையலறை கண்ணுக்கு தெரியாத ரகசிய வெளியாக இருந்தபோது, சமையலறையை தெருவுக்கு இழுத்து வந்து  ஜனநாயகப்படுத்தியது புரோட்டாக் கடைகள்.
காட்சி மற்றும் செவிவழி இன்பமாக, வெகுமக்களை ஈர்க்கத் தொடங்கிய திராவிட அரசியல் எழுச்சி பெற்ற காலத்தில் தான் புரோட்டாவின்  செல்வாக்கும் இங்கே தொடங்கியது.
வெகுமக்கள் திரளாக பங்கேற்க சாத்தியப்படும் இடங்களான நாடகக் கூடங்கள்,சினிமா அரங்குகள், உணவுக் கூடங்கள்  ஆகியவை உருவாகும் போதெல்லாம் பழமைவாதிகளும் மதவாதிகளும் அமைப்புகளும் அவற்றை எதிர்த்தது சரித்திரம்.
 மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது பழைய சம்பிரதாயங்களை குலைத்து விடும். இறுக்கங்கள் தளர்ந்து காலாவதியாகிப் போன விதிமுறைகள் சந்தோஷமான மனிதர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிடும்.
சந்தோஷம் மனிதனைப் புதிதாக்குவது. அது அவனை இளைஞனாக்குகிறது.  எல்லாப் பழமைவாத அமைப்புகளும்  இளைஞன் அல்லது  யுவதியையே தங்களை வெடி வைக்கக் காத்திருக்கும் சக்தியாகப் பார்க்கின்றன.
ஊரில் வேறு வேறு சாதிகளாக இருந்த தமிழக மாணவர்களிடையே இறுக்கத்தை தளர்த்தி பள்ளி மற்றும் கோவில்களுக்கு வெளியே ஒரு பொதுவெளியை சாத்தியப்படுத்தியதில் திரையரங்குகள், தேனீர்கடைகள்,முடிதிருத்தகங்களோடு  புரோட்டாக் கடைக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.
தமிழகத்தில் 50 களின் இறுதியில் அரிசிக்குப் பஞ்சம் வந்த போது வடநாடுகளில் இருந்து கோதுமையும்,மைதாவும்  இறக்குமதி செய்யப்பட்ட போது புரோட்டா இங்கு உருவாகியிருக்க வேண்டும்.
புதிய பொருளான மைதா மாவிலிருந்து ஒரு உணவுப் பொருளை உருவாக்குவது தமிழ் கைகளுக்கு ஒரு சவாலாக இருந்திருக்க வேண்டும். பின் வெயில் அடிக்கும் கடைத்திண்ணையில் மைதா மாவைக் கொட்டி ,முட்டை உடைத்து ஊற்றி ,தண்ணீர் கலந்து, ஒரு ஜோடிக் கைகள் அதை முதல் முதலாக பிசைந்துப் பார்த்திருக்கும். அது இன்று அடைந்திருக்கும் நெகிழ்வுக்குப் பின்னணியில் பல கைகள் உண்டு.
இலங்கை,சிங்கப்பூர் நாடுகளில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்துவிட்டு திரும்பிய நம் தொழிலாளர்களுடன், புரோட்டாவின் முன்வடிவு  இங்கு வந்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. பல்வேறு கலாச்சாரங்களின் குறுக்கு நெடுக்கான கிளைச்சாலைகளில் பயணம் செய்து வந்திருக்கும் புரோட்டா, இன்றும்  சாலைவழி காட்சி, ஒலி,மணத்தின் படிமமாகவே ஆகிவிட்டது. 
 இன்று காலத்தின் சிறந்த வடிவமாக நிலைபெற்று விட்டது புரோட்டா.வீச்சு ரொட்டி,புரோட்டா,பொறித்த புரோட்டா,சிலோன் புரோட்டா,கொத்து புரோட்டா என அதற்குப் பல வடிவங்கள்...மதுரை,திருநெல்வேலி,செங்கோட்டை,நாகர்கோவில்,விழுப்புரம்,உளுந்தூர்பேட்டை என வெவ்வேறு ஊர்களின் நில மன இயல்பும்,  குழம்புகளின் நிறம்,வண்ணங்களின் பன்முக தன்மையும் சேர இன்று புரோட்டா , தமிழ் மக்களின் எளிய கொண்டாட்ட வழிமுறையாகவே ஆகிவிட்டது.  
சைவ அசைவ உணவு சார்ந்து இருந்த பெரும்  சமூகப் பிரிவினைக்குள் நெகிழ்ச்சியை உருவாக்கியது புரோட்டா தான். பிறன்விழைவின் வசீகரத்தைப் போல சால்னா என்று அழைக்கப்படும் குழம்பின் மணம் அக்கிரகாரங்களிலும் சைவ வீடுகளிலும் பெரும் உடைப்பையே ஏற்படுத்தியது. இன்று சைவ வீடுகளில் , அசைவ உணவு ஏற்பை உருவாக்கியதில் புரோட்டா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
கூடி உண்பது, சந்தைப்பகுதியின் வேறுபட்ட ஒளி இரைச்சல்கள் முயங்க, இரவு ஒளியில் புரோட்டா மாவைப் பிசைபவரின் முதுகு வியர்வையைப் பார்த்த படியே,பரிசாகரால் பிய்க்கப்பட்ட புரோட்டாவில் சிகப்பு நிறக் குழம்பை ஊற்றி அளைந்தபடி உண்பதிலிருந்து தொடங்குகிறது புரோட்டா என்னும் அனுபவம்.  இந்த ருசியை வீடுகளில் பெறமுடியாத  நிலையே இன்னமும் நீடிக்கிறது. வீட்டில் செய்யப்படும் புரோட்டா, கடை புரோட்டாவின் ருசியை எட்டாத மாயக்கவர்ச்சி தான் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் தெவிட்டாத மர்மம்.  அதன் வசிகரமும் அது தான்.
புரோட்டா, கலாச்சாரத்தின் நுண்மடிப்புகளாலான ஒரு வெகுசனக்கதையும் கூட...

 

Comments