Skip to main content

பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி



ஷங்கர்ராமசுப்ரமணியன்  

தமிழ் சினிமாவில் நடக்கும் மரணங்களும்,கொலைகளும் எதார்த்த வாழ்வில் நிகழும் மரணநிகழ்வை நோக்கி  நெருங்கிச் செல்கிறதோ என்ற உணர்வு சமீபத்திய படங்களைப் பார்க்கும் போது வலுப்பட்டு வருகிறது. சிறுவயதிலிருந்து சினிமாவில் நடக்கும் சண்டைக்காட்சிகளையும், துப்பாக்கி மோதல்களையும் ரசித்து, அதனால் தற்காலிகமாக உணரும் உற்சாகத்தையும் ஆற்றலையும், சாகசபாவத்தையும் சில நாட்களாவது உடலில் அனுபவிப்பவன் நான். திரைப்படத்தில் வரும் காதல் மற்றும் சல்லாபக் காட்சிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம், துப்பாக்கி முழக்கங்களுக்கும் உண்டு என்று நான் நம்புகிறேன்.

சினிமாக் கதைக்குள் நடக்கும் துப்பாக்கி வெடிப்புகளும், துரத்தல் காட்சிகளும், நேரடியாக மோதும் சண்டைக் காட்சிகளும், பார்வையாளனின் எதார்த்தத்துக்குள் நேரடியான, ஒற்றைப்படையான விளைவை ஏற்படுத்துவதில்லை. அது பார்வையாளனுக்கு, நடைமுறை வாழ்க்கை சுமத்தியிருக்கும் உடல்-மன இறுக்கத்தை தளர்த்தி, அவனை மாயக்கனவு வெளியில் விடுவிக்கவே செய்கிறது.  சினிமாவில் நடக்கும் போலீஸ் என்கவுண்டர் காட்சிகள் கூட, எதார்த்தத்தில் காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டர் கொலைகளை நியாயப்படுத்துகின்றன என்ற விமர்சனங்கள் இருந்தாலும், ஒருபுள்ளி வரை அவை சாகச உணர்வையும் பார்வையாளனுக்கு வழங்குபவையே. அந்த வகையில் சினிமாவில் வரும் துப்பாக்கியும், நிஜத்தில் கையாளப்படும் துப்பாக்கியும் பொம்மைக்கும், நிஜ உருவுக்குமான வித்தியாசத்தைக் கொண்டவை. அதனால் சினிமாவில் துப்பாக்கிகளும், வன்முறைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். ஆனால் சமீபத்தில் வரும் திரைப்படங்களில் காட்டப்படும் கொலைகளும், மரணங்களும் கற்பனையின் தொலைவிலிருந்தும், சாகசத்தின் உயரத்திலிருந்தும் எதார்த்தத்தின் கொடும்வெளியில், கால்பதிக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது. பனியில் உறைந்த சடலம், பார்வையாளனின் முகத்துக்கு நேராக வெறிக்கத் தொடங்கியுள்ளது. சினிமாவில் நடக்கும் மரணம் பார்வையாளனுக்கு, என்றோ தான் மரணிக்க இருக்கும் நபர் என்ற உணர்வை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. சினிமாவில் காண்பிக்கப்படும் ரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து வருகிறது.

தமிழ் படங்களைப் பொருத்தவரை கருப்பு-வெள்ளைப் படங்களில் மரணங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தன. அத்துடன் அவை சினிமா சட்டகத்துக்குள் தொலைவிலும் இருந்தன. வில்லனின் மரணம், தீமையென்னும் கற்பித பொம்மையின் வீழ்ச்சியாக இருந்தது. நாயகனின் மரணம் நன்மையின் தோல்வியாக, அன்பின் தோல்வியாக, நீதியின் தோல்வியாக, பார்வையாளர்களின் தனிப்பட்ட சோகங்களையும், தோல்விகளையும் கூட்டுச்சோகமாகத் திரட்டுவதாக அவர்களின் நல்லுணர்ச்சிகளைத் தற்காலிகமாகவேனும் தூண்டுவதாக இருந்தது. அந்த வகையில் அவை எதார்த்தத்தில் நடக்கும் மரணங்களை ஒருபோதும் ஞாபகப்படுத்துவதில்லை. பாசமலரை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அண்ணனாக வரும் சிவாஜியின் முடிவைக் கண்டு அழுவதற்காகவே திரும்பத் திரும்ப பெண்கள் பார்க்கின்றனர். தங்களின் தனிப்பட்ட ஏக்கங்களையும், அவலங்களையும் சிவாஜியின் வழியாக அவர்கள் தற்காலிமாகவேனும் கடக்கின்றனர்.

சிவாஜி-எம்ஜிஆர் காலத்திரைப்படங்களை அடுத்து வந்த கௌபாய் படங்களிலும், அதைத் தொடர்ந்து வந்த வண்ணப்படக் காலத்திலும் சண்டையும், சாவுகளும் ஒரு கார்டூன்  தன்மையுடனான, கற்பனையின் அதீத நிலப்பரப்புகளில் நிகழ்ந்து பார்வையாளனுக்கு ஒரு சாகச மகிழ்ச்சியை அளித்தன. இத்திரைப்படங்களிலும் பயன்படுத்தப்படும் ரத்தத்தின் அளவு அதிகம்.

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி சர்வதேச திரைப்படங்களிலும் வன்முறையும், கொலைகளும் நிகழ்த்தப்படும், பாவனை செய்யப்படும் முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கற்பனைப் படைப்பை எதார்த்தம் பிரதிபலிப்பதற்கு மாறாக, எதார்த்தத்தை கற்பனைப் படைப்பு பிரதிபலிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் அதிகாலையில் வாக்கிங் செல்லும்போது நடந்த ஒரு அரசியல் பிரமுகரின் படுகொலைப் பின்னணியை கதைக்களமாக கொண்ட சுப்ரமணியபுரம் படம் வந்தது. வன்முறையின்  குரூர எதார்த்தத்தை நெருங்கிச் சென்ற படங்களில் சுப்ரமணியபுரம் படத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. இவ்வகையில் பருத்தி வீரனையும் சொல்லவேண்டும். நாயகிக்கு நடக்கும் பாலியல் வல்லுறவும், கருணைக்கொலையும் கிட்டத்தட்ட நமது கண்ணுக்கு முன்னால் ‘அப்பட்டமாகநடந்தன என்றே சொல்லமுடியும்.   சுப்ரமணியபுரத்தில் காண்பிக்கப்பட்ட படுகொலையை மிஞ்சுவதாக,  திருச்சியில் அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, பிரமுகர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், சினிமாவின் கற்பனையைத் தாண்டிய பயங்கரமாக இருந்தது.

இந்தக் கொலையை தமிழ் சினிமா மிஞ்ச, அது இன்னும் உண்மையாக ஒரு கொலையை நிகழ்த்தவேண்டும்?

விஸ்வரூபம் படத்தில் நாயகிக்கு காதலனாக வரும் தீபக், வேர் ஹவுஸ் என்னும் இடத்தில் வைத்து கொலை செய்யப்படுகிறான். தீபக்கையே, ஒரு பாலித்தீன் தாளை போர்வை போல விரிக்கச் சொல்லி, அதன் நடுவில் அவனை நிற்கவைத்து, திடுக்கென்று, பாய்ண்ட் பிளாங்கில் பின்தலையில் சுட்டு வீழ்த்தப்படுகிறான். அதே பாலித்தீன் தாளைச் சுருட்டி தீபக்கின் பிணம், சுத்தமாக எடுத்துச் செல்லப்படும் யோசனை நிச்சயம் இயக்குனருக்கு புதுமையாக இருந்திருக்கும். ஆனால் அந்தக் காட்சியைப் பொருத்தவரை 'உண்மையாகவே' கொலை நிகழ்த்தப்பட்டு விடுகிறது என்பதுதான் அபாயகரமானது. அதேபோல், உடல் முழுவதும் சவரம் செய்துகொண்டு, வெடிகுண்டை வெடிக்குமுன் நாயகனால் சுடப்படும் நைஜீரியனின் தலையில் குண்டு துளைத்த இடம்,கங்கு போல சிகப்பாக சுடர்விடுவதை கவனித்திருக்கலாம். அந்தக் கங்கு, பார்வையாளனுக்கு எப்போதோ நிகழப்போகும் தன் சாவை ஞாபகப்படுத்தக் கூடியது. இதேபோல் சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியான, ஜீரோ டார்க் 30 திரைப்படத்தில் வரும் சித்திரவதைக் காட்சிகள் குறித்து சித்திரவதைக்கு ஆதரவான சித்தரிப்பு என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.  

விஸ்வரூபம் படத்தில் தீபக்கின் சடலத்துக்கு விரிக்கப்படும் பாலிதீன் தாளைப் போன்றே மரணங்கள் மறுசுழற்சி செய்யப்பட முடியாத குப்பைக்கழிவுகளாக மாறிவருகின்றன.

இதற்கு இணைய வழி மெய்க்காட்சிகளும், சிறுவர்கள் கையில் கூடப் புழங்கும் ஒளிப்படக் கருவி சாதனங்களும் காரணம். அத்துடன் உலகெங்கும் நடக்கும் போர்கள், தீவிரவாதச் சம்பவங்கள், சித்திரவதைகள், கொலைகள் மற்றும் தற்கொலைகளின் காட்சிகளை நேரடியாக வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சி மற்றும் இணையங்கள் வாயிலாக பார்க்கும் "சௌகரியங்களை" தகவமைத்துக் கொண்ட தலைமுறையினர் நாம். குவாண்டநாமா சித்திரவதைக் காட்சிகள் முதல் ஈழத்தில் நடந்த குரூரமான வன்முறை மற்றும் ஈவிரக்கமற்ற கொலைக்காட்சிகள் வரை கொத்துக் கொத்தாக இணையத்தில் கடைவிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சிகள் ஒருவகையில் நம்மை ஒரு பழக்கத்திற்கு ஆழ்த்தி, திடுக்கிடலே இல்லாத ஒரு மரத்த தன்மையை ஏற்படுத்தியிருக்கின்றன. சமீபத்தில்  பிள்ளைப் பருவத்தில் உள்ள பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் கொலைக்காட்சி புகைப்படங்களாக வெளியாகியானது. தமிழ் அகராதியில் எத்தனை புதிய வார்த்தைகளை ஈழப்போர் கொடையாக வழங்கியுள்ளது என்பதை இனிதான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்த மெய்க்காட்சிகள்தான், சினிமாவில் வன்முறைகளையும், கொலைகளையும் எதார்த்தத்துக்கு மிக அருகில் நிகழ்த்திப் பார்க்கும் சவாலை இயக்குனர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில்  கற்பனையை விட எதார்த்தம் மிக கொடிதாகி வரும் காலத்தில் வாழ்கிறோம். விஸ்வரூபம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ரத்தம், உண்மையான ரத்தம் என்றும், பார்ப்பவருக்கு மயக்கத்தை வரவழைக்கும் என்று கமல்ஹாசன் டிவியில் பெருமையாகவே சொன்னார்.

இங்கேயுள்ள சமய மரபுகளிலும், சடங்குகளிலும் கடவுளுக்கு, வழிபடுபவர் தன்னையே கொடுப்பதாகப் பாவிக்கும் சடங்குகள் இதை விட அற்புதமான கற்பனைகளுடன் இருக்கின்றன. வெள்ளைப்பூசணிக்காய்கள் குங்கும ரத்தம் சிதற உடைக்கப்படுவதும், தேங்காய் உடைக்கப்படுவதும், எலுமிச்சம் பழம் குங்குமம் தேய்த்து வெட்டி எறியப்படுவதும் நரபலியை ஒருவிதமாக பாவிக்கும் சடங்குகள் தானே?


சினிமா தனது பொய்யுரைக்கும் திறனை, கற்பனை செய்யும் ஆற்றலை படிப்படியாக இழந்துவருகிறதோ என்ற சந்தேகத்தை இந்த 'மெய் மரணங்கள்' உருவாக்குகின்றன. திரைக்கதை நிகழ்வுகளின் மெய்த்தன்மையை நிரூபிப்பதற்காக, துல்லியத்தன்மைக்கு மேலதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த மூர்க்கத்தில் சினிமாவில் கொலை, பாவிக்கப்படாமல் மெய்யாகவே நிகழ்த்தப்பட்டு விடுகிறது. அதன்மூலம் அக்காட்சிகள், கற்பனையின் எதேச்சை, ஆன்மீகத்தன்மை மற்றும் இளமையை இழந்து கச்சாவாகத் திகழ்கின்றன. இது  சினிமா என்னும் கலைசாதனத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

இந்தக் கட்டுரையை எழுதும்போதுதான் பரதேசி படத்தின் டீசர் வீடியோவை யூட்யூப்பில் பார்க்க நேர்ந்தது. இயக்குனர் பாலா, தனது நடிகர்களை வன்முறைக் காட்சிகளில் தத்ரூபமாக நடிக்க வைப்பதற்காக ‘உண்மையாகவே அடியெடியென்று துவைத்து எடுக்கிறார். டீசரின் முடிவில் தேயிலை எஸ்டேட்டில் உள்ள கங்காணி போலவே சிரிக்கிறார். பரதேசி படத்தில் பணியாற்றுவதை விட, தேயிலை எஸ்டேட் வேலை பரவாயில்லை என்று நினைக்க வைக்கும் டீசர் அது.   

சமூகத்தில்,அரசியல்வாதிகளிடம்,ழுத்தாளர்களிடம், சினிமா படைப்பாளிகளிடம் கற்பனைத்திறன் குறைந்துவருவதின், எதார்த்தத்தின் நுகத்தடி அவர்கள் மேல் செலுத்தும் அழுத்தத்தின் அடையாளம் தான் சினிமாவில் நடக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிஜமரணங்கள். பார்வையாளனின் கற்பனைத் திறனையும் இந்த ‘நிஜமரணங்கள்‘அவமானப்படுத்துகின்றன. இதைத்தான் ஆஸ்கர் ஒயில்ட், பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி என்று மதிப்பிடுகிறார். நவயுகத்தீமை என்றும் விமர்சிக்கிறார்.  

(காட்சிப்பிழை  திரை
ஏப்ரல் மாத இதழில் வெளியானது)  

Comments