Skip to main content

மகாநினைவு கொண்டது தோல்வி கண்டராதித்தன் அவர்களே

ஷங்கர்ராமசுப்ரமணியன்

இரண்டாயிரத்துக்குப் பிறகு தமிழ் நவீன கவிதை பெற்றிருக்கும் அலாதியான வகைமைகள், மொழிபுகள் மற்றும் பல்லுயிர்த் தன்மையைப் பார்க்கும் போது அவற்றைக் கற்பனை உயிரியான நவகுஞ்சரம் பறவையுடன் ஒப்பிட முடியும். தமிழின் தற்காலக் கவிதைகளை ஓருருவமாக வரைந்துப் பார்க்க நாம் முயன்றால், சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடுப்பு, பாம்பின் வால், யானை,மான் மற்றும் புலியின் கால் என அது வடிவு கொள்ளலாம்.
இப்பின்னணியில் தனியானத் த்வனி மற்றும் பருவங்களோடு இடிபாடுகளின் வசீகரத்தைக் கொண்ட தனிமொழி கண்டராதித்தனுடையது. உறவுகளின் இடிபாடுகள், ஆளுமைகளின் இடிபாடுகள், பால்நிலைகளின் இடிபாடுகள், காதல் மற்றும் காமத்தின் இடிபாடுகளைச் சிதைந்த மரபின் கோபுரத்திலிருந்து எழுதும் பிரக்ஞை கொண்டக் கவிதைகள் அவை. நவீனத்துக்கும் சமகாலத்துக்கும் முதுகுகாட்டுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன இவரது கவிதைகள்.
கண்டராதித்தன் என்ற பெயரையும் அவரது கவிதைகளையும் அனிச்சையாகப் பிரித்துபோட்டு வழக்கம்போலக் கடந்துவிட முடியாது- நகுலன் என்ற பெயரை வெறும் பெயர்தான் என்று கடக்க முடியாததைப் போல. பெயர் கொண்டிருக்கும் நினைவுகளையும், காலத்தையும், சிதைவுகளையும் சேர்த்தே தன் கவிதைகள் வழி மீட்டுகிறார் தற்போதைய கண்டராதித்தன். அவர் வாழும் கண்டாச்சிபுரம், கண்டராதித்த சோழபுரத்தின் மருவிய பெயர்.
கண்டராதித்த சோழன் காலத்தில்தான் சோழப் பேரரசு மிகப்பெரிய வீழ்ச்சியை அடைகிறது. போர் செய்து ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பதில் ஈடுபாடின்றி சமாதானம் நாடியவர் என்று இணையத் தகவல்கள் சொல்கின்றன. இவரது காலத்தில்தான் ராஷ்டிரகூடர்கள் பலம்பெற்று தஞ்சை வரை வந்து தாக்கி அழித்தனர். கண்டராதித்தரும், அவர் மனைவி செம்பியன் மாதேவியும் அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரத்தின் மீது கவனம் செலுத்துவதை விட சிவபக்தியில் ஈடுபட்டவர்கள். கண்டராதித்தர் சிவனுக்காகப் பாடிய ‘திருவிசைப்பா’ பதிகம் ஒன்பதாம் திருமறையில் உள்ளது. அரசன் என்ற முகமூடிக்குள் தில்லை அம்பலவாணனின் பாதங்களைத் தேடி அலைந்திருக்கிறார். அவரது நிலையில் எதிரிகளே இல்லை.
கண்டராதித்தன் கவிதைகளிலும் எதிரிகள் வருகிறார்கள். அவர்களுக்கு விரோதியென்றோ வைரியெனவோ பெயர் சூட்டக்கூடாது என்கிறார். அவர்களை அதிரூபங்களாகப் பார்க்கிறார். காலத்தின் நல்லெண்ணத் தூதுவர்கள் என்கிறார் ‘நீண்டகால எதிரிகள்’ கவிதையில். சாமர்த்தியம், அதிகாரம், அற்பத்தனம், தற்புகழ்ச்சி மற்றும் பெருமிதங்களைக் கண்டு விமரிசிக்கும்போது கண்டராதித்தனின் முகமூடியைத் தாண்டி கண்கள் வெடிமருந்தின் பளபளப்புடன் மின்னுகின்றன. சமகால இலக்கிய அரசியல் அகங்காரங்கள் மற்றும் டாம்பீகங்கள் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இழுத்துச் செல்லப்பட்டு நையப்புடைக்கப்படுகின்றன.
கண்டராதித்தனின் கவிதைகளைக் காதால் வாசிக்கமுடியும். கண்டராதித்தன் கவிதைகளுக்கு குரல் இருக்கிறது. காலம் பிறழ்ந்த இடத்திற்கு வந்துநிற்கும் தோற்றுப்போன வீரனின் அடங்கிய சமத்காரம், பயம், தயக்கம், பொருமல், அங்கதம் எல்லாம் உண்டு. காதல் கவிதைகளில் பெண் வேடமிடுகிறார் கண்டராதித்தன். கண்டராதித்தன் கவிதைகளுக்குத் தமிழ் புதுக்கவிதையில் மரபு இருக்கிறதா? உண்டு. நகுலன், கலாப்ரியா, ந.ஜயபாஸ்கரன் என்று தொடரும் மரபில் கண்டராதித்தன் பழங்கவிதைகள் மற்றும் புராணிகங்கள் மீது சாய்வையோ எதிர்வினையையோ புரிவதில்லை.
மகாபாரதம், கம்ப ராமாயணம், திருவாசகம், தலபுராணங்கள், திருத்தலங்களின் பெயர்கள் மற்றும் புராணங்களின் மொழி-நினைவுகளைத் தூண்டியபடி, கிள்ளி, மழவன் போன்ற கதாபாத்திரங்கள் வழியாக கண்டராதித்தன் தன் கவிதைகளைப் பழங்கதைகள் மற்றும் விடுபுதிர்களின் இருட்டிலும் இசைமையிலும் நீலப்புரவியில் ஏற்றுகிறார். அவர் கவிதைகளில் இன்று நிகழ்வதைத் தொன்மையான அன்றின் பாதாளத்துக்குள் அநாயசமாக எறிந்துவிடுகிறார். அந்த வகையில் கண்டராதித்தன், புராதனத்தன்மையை ஒரு திரைச்சீலைப் போலக் கையாள்கிறார் எனலாம். மனதை இங்குள்ளது போல அங்கும் மிக நேர்த்தியாக அலையவிடும் திறன் கண்டராதித்தனின் கவிதைகளில் சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் கண்டராதித்தனின் கவியுலகம் தனித்த உயிர்ப்பைக் கொண்டது. அவரது கவிதை சொல்வது போலவே இறந்தகாலத்தை நோக்கி அவர் செல்வது முன்னோக்கியது.
ஆணிடமிருந்து பெண்ணுக்கும், அழகிலிருந்து துயரத்துக்கும் சமத்காரத்திலிருந்து மென்மைக்கும் காதலிலிருந்து இறைமைக்கும் கீழ் உலகத்திலிருந்து மேலுலகத்திற்கும் இடையில் ஆடும் இயல்பான ஊஞ்சலாக இவரது கவிதையுலகம் இருக்கிறது. அங்கேதான் ‘அம்சம்’ போன்ற ஒரு கவிதை சாத்தியமாகிறது.
தேவதைகளைக் காவியமாக்கும் பெண்ணொருத்தி
நிழலுருவாய் அருகில் நின்று
அய்யா சற்றுத் தள்ளிச் செல்லுங்கள்
இது பெண்கள் செல்லும் பாதையல்லவா
என்றழைக்கவும் நகர்ந்தான்
பிறகு பிருஷ்டத்தில்பட்டு ஆடிய கூந்தலை
வலக்கையால் அள்ளி வரப்புகளைத் தாண்டி
வயல்களை விட்டு மட்டைவழிச் சிதறிய
கதிர்களைப்பற்றி வானம்வரைச் சென்று
வளர்மதியானாள்.

சௌந்தர்யமும், காதலும், மானுடத்தின் மீதான அன்பும் துரதிர்ஷ்டத்தை நோக்கி, துயரத்தை நோக்கி, பைத்தியத்தை நோக்கிச் செல்லும் சரிந்த பாதை கண்டராதித்தனுடையது. அவரது உலகில் எல்லாமே பிரிக்கவியலாத ஞாபகத்தின் பிரக்ஞையில் பிணைந்து கிடக்கிறது. அந்தவுலகிலேயே உழலும் கண்டராதித்தனின் கவிதைத் தன்னிலை பல உருமாற்றங்களை அனுபவிக்கிறது. அங்கே சந்தோஷமும் துக்கமும் பயங்கரமும் வசீகரமும் நல்லூழும் துரதிர்ஷ்டமும் வேறு வேறு உயிர்நிலைகள் அல்ல.
கவிதைக்கும் வரலாற்றுக்கும் ஞாபகம்தான் பிரச்சினை. நகுலனுக்குப் பிறகு தன் மரபில் தோய்ந்து ஞாபகத்தின் பிரச்சினைகளை அழகிய கவிதைகளாக மாற்றியுள்ளார் கண்டராதித்தன்.

‘நான்குகட்டு ஓடுவேய்ந்த
ஏகாம்பரம் இல்லாத வீட்டில்
ஏகாம்பரம் ஏகாம்பரம் என்றேன்
ஏகாம்பரம் இல்லாத
வீட்டிலெல்லாம் மூதேவி
உன் கட்டைக் குரல்தான் முட்டுகிறது
கேடு ஏகாம்பரத்திற்காக ஏகாந்தத்திற்கா
என்றது உள்ளிருந்து ஒரு குரல்’நகுலனின் ராமச்சந்திரன் கவிதையின் எதிரொலியை கண்டராதித்தனின் இக்கவிதையில் உணரமுடியும்.

கண்டராதித்தன் கவிதைகளில் துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்களைக் காண இயலாது. மழு மற்றும் சில்லாக்கோல் தான். கண்டராதித்தன் கவிதைகளைத் தவிர வேறெங்கும் பழைய ஆயுதங்கள் பாவிக்கப்படுவதேயில்லையென்று, இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில், இப்போதைய ஜனநாயக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில், கண்டராதித்தன் வாழ்ந்துவரும் வடமாவட்டம் ஒன்றிலிருந்து சொல்லிவிடமுடியுமா?இத்தொகுப்பில் ‘மகளின் கண்ணீர்’, ‘பந்துகள் இல்லாதவன்’, ‘வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பெண்ணிற்கு நான்கைந்து பிள்ளைகள்’ போன்ற கவிதைகள் எனது மன உலகத்திற்கு நெருக்கமானவை. என்னைப் போல அடிக்கடி குழந்தைகளைத் தொலைக்கும் வாய்ப்புள்ளவனே இக்கவிதைகளை எழுதமுடியும்.
கண்டராதித்தனின் கவிதைகள் புதிர்களையும் ரகசிய மொழிகளையும் சங்கேதங்களையும் கொண்டவை. மரபில் பரிச்சயமில்லாத எனக்கு கண்டராதித்தனின் கவிதைகளைத் திறப்பதில் போதாமையையே உணர்கிறேன். பழங்கவிதைகளில் பயிற்சியுள்ள ந.ஜயபாஸ்கரன், விக்ரமாதித்யன், ஸ்ரீநேசன் யாராவது முயன்றால் கண்டராதித்தன் கவிதைகளை தமிழ் வாசகர்களுக்கு மேலும் அணுக்கமாகத் துலக்கப்படுத்த முடியும்.

போதாமைகளை உணர்ந்தாலும் கண்டராதித்தனின் கவிதைகளை நெருக்கமாக வாசிப்பதற்கு இந்த முன்னுரை எழுதும் காரியம் உதவியிருக்கிறது. அந்த வகையில் ஒரு தீவிரமான கவிதை வாசகனாக, கவிதை எழுதுபவனாகச் சொல்கிறேன்; கண்டராதித்தன் கவிதைகள் எளிமையாகக் கடந்துவிட முடியாதவை. ஈடுபடுதலையும் காத்திருப்பையும் வேண்டி நிற்பவை.
மரபும் நவீனமும் தீவிரமாய் விளையாடி உரையாடும் திருச்சாழலுக்கு உங்களை என் போதாமைகளுடன் நெறிப்படுத்துவதில் நிறைவை அடைகிறேன். கண்டராதித்தனுக்கும் அவரது கவியுலகத்திற்கும் எனது வணக்கங்கள்.நன்றி.

(கண்டராதித்தனின் ”திருச்சாழல்” கவிதைத் தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை)

Comments