Skip to main content

முல்லாவின் தொடர்ச்சி பஷீர்


ஷங்கர்ராமசுப்ரமணியன்

இன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும்கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர்முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன் 1208-ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து 1284ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில்ஜூலை 5 முதல் 10 வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர் பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம்பெறுகின்றன. சில முக்கியமான அனுபவங்கள் நிகழும்போது சரியான சூழ்நிலையில் முல்லா கதைகளைச் சொல்லும் பழக்கமும் அவர்களிடம் நிலவுகிறது.

முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை. மனிதனின் அடிப்படை இயல்புகளில் இருக்கும் முரண்பாடுகள் அநீதி,  சுயநலம்,கோழைத்தனம்சோம்பேறித்தனம்அறியாமைகுறுகிய புத்தி இவை எல்லாவற்றையும் முல்லாவின் கதைகள் பரிசீலனை செய்கின்றன. 13ம் நூற்றாண்டின் பின்னணியில் தேநீரகங்களிலும் பொதுக்குளியலறைகளிலும் சந்தைகளிலும் இக்கதைகள் பொதுவாய் நிகழ்கின்றன. இக்கதைகளிலுள்ள மனித இயல்பைப் பற்றிய முல்லாவின் அவதானிப்புகள் தரிசனத் தன்மையுடையவை. நூற்றாண்டுகள் கழிந்தபின்னும் நம்மைப்பற்றி ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்டவையாக அவை இருக்கின்றன.

வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள். யாசகர்மன்னர்அரசியல்வாதிகுமாஸ்தா,அறிஞர்வியாபாரி... முல்லாவின் மனைவியும் கழுதையும் அவருடைய நிரந்தரமான உதவியாளர்கள். முல்லா கதைகளில் முல்லா முட்டாள்போல் தோற்றமளித்தாலும் அவை தந்திரமாக மற்றவர்களின் முட்டாள்தனத்தை அவிழ்த்து சிதறவிடுவதாகவே இருக்கின்றன. வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரப்பப்பட்ட முல்லாவின் கதைகள் கீழைத்தேய நாட்டுப்புறவியல் கதை மரபில் மிகப் புகழ்பெற்ற அங்கத நகைச்சுவைக் கதைகள். முல்லா நஸ்ருதீன் தன் சமாதியிலிருந்து கூட நகைச்சுவையை எழுப்புபவர்.

முல்லா தனது உயிலில் தன் சமாதி மீது பூட்டிய கதவு ஒன்றைத் தவிர வேறெதுவும் இடம்பெறக் கூடாதென்றும்பூட்டிய பின்பு சாவிகளை சமுத்திரத்தில் எறிந்து விட வேண்டுமென்றும் விருப்பப்பட்டார். ஏன் அவர் அப்படிச் சொன்னார்இன்னமும் மக்கள் அவர் சமாதியைப் பார்க்கின்றனர். கதவைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். அங்கே சுவர்கள் இல்லாமல் ஒரு கதவு மட்டும் பூட்டப்பட்டு நிற்கிறது. முல்லா நஸ்ருதீன் சமாதிக்குள்நிச்சயமாய் சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலகட்டத்திற்குள் வாழ்ந்து மடிந்து போகும் மனிதன்தன் வாழ்வை நகர்த்த எத்தனையெத்தனை அல்பமான காரியங்களில் ஈடுபடவேண்டியிருக்கிறது.  முல்லாவின் கதைகளில் முல்லாவும் எல்லா மனிதர்களைப் போல்தான் தன் கதைகளில் நகையாடப்படுகிறார். சில அபத்தத் தருணங்கள்முரண்களில் எளிய உண்மைகளை சத்தமின்றி சொல்லிப் போகிறது முல்லாவின் கதைகள்.



முல்லாவின் நவீன தொடர்ச்சியெனப் பார்த்தால் வைக்கம் முகம்மது பஷீரிடம் அந்த இயல்புகளைக் காண முடியும். பஷீரின் கதை சொல்லி உடலும்சாதாரண மனிதர்களின் அல்பத் தனங்களோடும்சிறிய எண்ணற்ற தந்திரங்கள் மற்றும் மனத்தடைகளில் திளைப்பவையே. ஆனால் கதைக்குப் பின்னால் உள்ள பஷீரின் கண்கள்உடல் ஏந்தியிருக்கும் களங்கம் எதையும் ஏற்காதவை. எக்காலத்திலும் நடந்து கொண்டிருக்கும் மனித நாடகத்தை ரசிப்பவை. அதன் மேல் ஒரு புன்னகையைப் பரவவிடுவதன் மூலம் உலகை எல்லா காலங்களோடும் ஏற்றுக்கொண்டு,ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவை. பஷீரின் இப்புன்னகைதான் அவரின் விமர்சனமும். அவரது 'பாத்துமாவின் ஆடுகதைசொல்லி எல்லோரையும் ஏமாற்ற முயல்கிறார். ஏமாற்றப்படுகிறார். நடுவில் உலவும் ஆடு  சமன் செய்யும் உயிரியாக பஷீரின் வீட்டுக்குள் அலைந்து கொண்டிருக்கிறது. அது அபோதத்தில் அவர் எழுதிய சில புத்தகங்களையும் தின்றுவிடுகிறது. பஷீரின் புன்னகை எல்லாவற்றின் மீதும் படர்ந்திருக்கிறது. உடலின் மரணத்துக்குப் பின்னும் இமை திறந்தால் உயிர்த்திருக்கும் விழிகள் போன்றது பஷீரின் அப்புன்னகை.

ஓஷோமுல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் வண்ணமயமான சித்திரங்களும் ஓஷோவின் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளன. "முல்லா நஸ்ருதீனின் மேல் எனக்கிருக்கும் விருப்பம்இந்த உலகின் யார் மீதும் இல்லை" என்கிறார் ஓஷோ. அவரது பேச்சுகளிலும் முல்லா நஸ்ருதீன் இடம்பெறுகிறார். ஓஷோ முல்லாவைப் பற்றிப் பேசும்போது, "மதத்தையும்,சிரிப்பையும் ஒருங்கிணைத்தவர் முல்லா நஸ்ருதீன். அதுவரை மதமும்நகைச்சுவையும் ஒன்றுக்கு எதிரான ஒன்றாகவே இருந்தன. அதன் பழைய பகைமை மறந்து மதத்தையும்நகைச்சுவையையும் சேர்த்து நண்பர்களாக்கியவர் சூஃபி முல்லா நஸ்ருதீன். மதமும் சிரிப்பும் சந்திக்கும்போதுதியானம் சிரிக்கும்போது சிரிப்பு  தியானமாகும்போது அற்புதங்களுக்கு மேலான அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தியர்கள்கடவுள் மற்றும் பிற விஷயங்களில் மிகத்தீவிரமாக இருப்பவர்கள். அங்கு சிரிக்கும் கௌதம புத்தாவைப் பற்றி யோசிக்க இயலாது. சங்கராச்சாரியார் சிரிப்பதோமகாவீரர் சிரிப்பதோ அசாத்தியமான காரியம்" என்கிறார்.

கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம் அது. அது களைப்பாற்றும் செயல்முறை மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்தியர்களின் நகைச்சுவை பற்றிப் பேசும் குஷ்வந்த் சிங், "இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பார்த்து நன்கு சிரிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் மட்டுமே தன்னையே பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள். இதனாலேயே இந்தியர்களிடமிருந்து மகத்தான நகைச்சுவையாளர்கள் யாரும் உருவாகவில்லை. உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவையாளர்கள் என்றால் யூதர்களைத் தான் சொல்வேன். ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்த கொடுமையான நிலைகளில்கூட ஹிட்லருக்கு எதிரான நகைச்சுவைக் கதைகளை உருவாக்க அவர்களால் முடிந்திருக்கிறது.

வாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால்அது அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல என்று நமக்குத் தெரியும். சிரிப்பதற்காகவே எஞ்சியிருப்பது தான் அது. எதையும் வெற்றிக்கொள்ளவில்லையே என்ற கேள்வி எழலாம். ஆனால் வெற்றி என்பதன் அர்த்தம் என்னஒருவன் வெற்றி பெற்றவனாகி விட்டாலும் எதை அவன் அடைகிறான்ஓஷோவின் கேள்வியிலும் புன்னகையே மிஞ்சி நிற்கிறது.

(தீராநதி)

Comments