Skip to main content

திரௌபதி அம்மன் கோயில் ரேணுகா பரமேஸ்வரி


மழையும் வெள்ளமும்  பிசுபிசுக்க
வைத்திருந்த திரௌபதி அம்மன் கோயில் தெருவின்
குட்டிச்சுவரில் முந்தின நாள்
மரித்த விஸ்வநாத நாயக்கரின் சுவரொட்டிக்கு
முன்னர்
முகம் முழுக்க மஞ்சள் பூசிய ரேணுகா பரமேஸ்வரி
பதமாய் அவித்து வைத்த இட்லிகளை
நேற்று கழுவி உலரவைத்த
வெள்ளை டப்பாவில்
அடுக்கி வைத்தாள்
தெருவில் இன்னும்
சந்தடி பிறக்கவில்லை
செயற்கை நுண்ணறிவுத் திறனும்
அல்காரிதங்களும் இன்னும் பிறப்பிக்க இயலாத
அரியதும் எளியதும்
மருத்துவர்களால் இன்னும் பழிக்கவே முடியாததுமான
டப்பாவில் அடுக்கப்பட்ட இந்த இட்லிகளை
திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும்
மஞ்சள் பூசிய ரேணுகா பரமேஸ்வரியை
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
விசேஷ மலர்களாக ஆக்குகிறது
சூரியன்

அந்தக் காலை அவள் இடம் அவளது உள்ளங்கை
சின்னச் சின்னப் பாத்திரங்கள்
ஒளியின் தூய்மை
அரைத்த நுரை இன்னும் நீங்கவில்லை
எண்ணெய் மின்னும்
கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிசத்தை
இனிமேல்தான் சட்னியின் தலையில் கொட்ட வேண்டும்.

Comments